சிறுகதை

 அஞ்ஜடிக்கார நாய்        

சில வாரங்களாகவே எங்கெல்லாமோ அலைந்து திரிந்த அஞ்ஜடிக்கார நாய், அந்த இடத்திற்கு வந்து சேர்ந்த போது, தனது பிறப்பின் வீச்சத்தை முகர்ந்ததுபோல் தலையைக் குனிந்து அங்கும் இங்குமாக மோப்பம் பிடித்துக்கொண்டே ஓடித் திரிந்தது.  இடையிடையே, உடன்பிறப்புகளுக்குக் குரல் கொடுத்துச் சன்னமாய்க் குரைத்தும் கொண்டது. மோப்பத்தில் அவ்வப்போது ஏதோ தடங்கலை உணர்ந்ததுபோல் அடிக்கடி தும்மி, தலையைச் சிலிப்பிக்கொண்டது. சில இடங்களில் பின்னங்கால்களை மடக்கி, மூத்திரத்துளிகளைப் பெய்து, மண்ணைக் கிளறியடித்தது.

எப்போதென்று தெரியாத ஒரு நாள், அது அடைக்கலம் கொண்டிருந்த கோவில் நொறுங்கிக் கிடந்ததைக் கண்ட பயத்தில் அங்கிருந்து ஓடிப்போன போது, அவ்வளவு அட்டூழியத்திற்கும் சாட்சியாய் வேப்பமரம் அங்கேதான் இருந்தது. ஆனால் இப்போதோ, அவ்வளவு பெரிய மரமே அடியோடு வெட்டப்பட்டு, எங்கே மீண்டும் துளிர்த்துவிடப் போகிறதோ என்ற ஐயத்தில் வெட்டுவாயில், டீசல் எண்ணெயைப் பூசி அதன் உயிர்ப்பையே சூறையாடியிருந்தனர். நல்ல வேளை, சாலைக்கு மறு பக்கம் ஓடிய அல்லூர் இன்னும் அப்படியேதான் ஓடிக்கொண்டிருந்தது.

மறக்கக்கூடிய அல்லூரா அது?.

அந்த அல்லூரில் தானே அதன் உடன்பிறப்பொன்று விழுந்து, காணாமலேயே போனது! உயிரச்சத்தில் அக்குட்டி, அங்கும் இங்கும் ஓடியபடி, ‘என்னைக் காப்பாற்றுங்கள்..’ என்பதுபோல் பரிதாபமாய்க் குரைத்துக்கொண்டு எழுப்பிய அபயக் குரல், இப்போதும் இதன் காதுகளில் கேட்டதோ என்னவோ அஞ்ஜடிக்கார நாய் தன் தலையை ஒரு முறைச் சிலிப்பி, உதறிக்கொள்கிறதே!.

‘பெரும் வெள்ளப் பேரிடர் வந்து அழியக் கடவது..!’ என்று, ஸ்ரீமகா மாரியம்மனின் ஆக்ரோசமான ஆக்ஞைக்குப் பலியானதுபோல் அந்த இடம், திடீர் வெள்ளம் வந்து போனதின் அடையாளமாய்ச் சேறும்; சகதியும் காய்ந்து, சாபத்தின் எச்சம் படிந்து காணப்பட்டது. கோயில் இருந்த இடத்தில் இப்போது இரண்டு மாடி மட்ராசா ஒன்று எழுப்பப்பட்டிருந்தது.

வேப்பமரம் மற்றும் மாரியம்மனின் வயிற்றெரிச்சலைப்போல் செம்மண் புழுதி, அந்த ஸ்தலமெங்கும் சுழன்றெழுந்து நிரந்தரமாய்க் காற்றில் கலந்திருந்தது. புழுதியின் ஓலம் காற்றில் கேட்டதோ என்னவோ, அஞ்ஜடிக்கார நாயின்  காதுகள் பின்னோக்கி மடங்கிக் கிடந்தன. பிறந்த மண்ணை நக்கி, ருசிக்க விரும்புவதுபோல் வெளியே தொங்கிய நாக்கிலிருந்து உமிழ்நீர் சொட்டிக்கொண்டிருந்தது.

 அஞ்ஜடிக்கார நாயா அது?..

பார்க்கவே பரிதாபமாய் இருந்தது!. மேனி மினுமினுப்பு உலர்ந்து, ரோமமெல்லாம் கொட்டிப்போய்,  விலா எழும்புகள் துருத்திக்கொண்டு ஒரு தெரு நாயைப்போல் தளர்ந்து கிடந்தது. கண்களின் ஒளி மங்கிப்போனதால் பார்வை சோகைத் தட்டியது. ஒரு நாள், திறந்து கிடந்த வாசலில் யதார்த்தமாய் நுழையப்போய், அசூயையுடனும் ஆக்ரோஷத்துடனும் மனிதர்கள் அதனை விரட்டிக்கொண்டு வந்து, கொதிக்கும் நீரை வீசியடித்ததில் தோல் தீய்ந்து, கருத்துப் போனது.  மனிதர்களால் இப்படியெல்லாம்கூட ஆபத்திருப்பதை உணர்ந்த பயத்தில் பாதுகாப்புத் தேடி எங்கெல்லாமோ அலைந்து, திரிந்து, சோர்ந்து போனது. ஒரு வேளை உணவிற்காக கண்ட தெருநாய்களுடனெல்லாம் மல்லுக்கு நிற்கவேண்டிய தேவையில் உடல் காயம்பட்டுப் போனது. பல வேளைகளில், வெறும் வயிற்றுடன் திரும்பி விடுவதே உயிருக்கு உத்திரவாதமாக இருந்ததால் அஞ்சடிக்கார நாய், உருக்குழைந்து கொண்டிருந்தது.

உடன்பிறந்த எல்லா குட்டிகளையும் இழந்து, ஒற்றைக் குட்டியாய்க் கோவில் வாசலிலேயே எப்போதும் படுத்துக் கிடந்ததால்தானே இதற்கு  தெருநாய் என்ற அவமானம் அண்டாமல், அஞ்ஜடிக்கார நாய் என்ற சிறப்பு வந்து சேர்ந்தது! ஒரு துர்த்தினத்தில், அங்கிருந்து ஓடிப்போன நாள் வரை வாழ்க்கைதான் அங்கே எவ்வளவு பாதுகாப்பாகவும், பசியறியாமலும் இருந்தது!.

வேப்பமரம், அஞ்ஜடிக்கார நாயின் எத்தனைத் தலைமுறைகளைக் கண்டுவிட்ட  விருட்சமோ அங்கிருந்த மாரியம்மனுக்கே வெளிச்சம்! தாய் பொட்டச்சி, பிறந்து கண்கள் திறந்து பார்த்த முதல் காட்சியே அந்தக் கோவிலும் அந்த வேப்பமரமும்தான்!

வேப்பமரக் கோவில் வெறும் ஒரு தகரக் கொட்டாய்தான்! முகப்பில் தொங்கியப் பலகையில், ‘ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், ஸ்ரீ கெம்பாங்கான்’ என்று சிகப்பு பெயிண்டில், கோணல் மாணலாக எழுதப்பட்ட பெயரே அதன் பணிவான அடையாளமாக  இருந்தது.  அருள் வந்து ஆடுபவர்களுக்கு மத்தியில், வெறும் உடுக்கையை அடித்துக்கொண்டே, ‘தாயே மாரியாத்தா..’ என்று தீக்குழியில் நடந்து போகும் மீசைக்காரக் கோணாரிடம் ஆத்தாளின் சக்தியை ஊர் மக்கள் கண்டனர். அதோடு, அபூர்வமானச் சம்பவம் ஒன்றையும் கேள்விப்பட்டு, சுற்று வட்டாரமே பிரமித்துப் போனது.

பொதுவாகவே மலாய்க்காரர்கள் இந்து கோவில்களுக்குள் வரமாட்டார்கள். அந்த மலாய்த் தம்பதியின் மகளுக்கு ஒருவித தோல் வியாதி கண்டிருக்கிறது. அவர்களும், (1)‘பகார் கூலிட்’; (2)‘போமோ’ என்று யாரையெல்லாமோ பார்த்துவிட்டனர். ஒன்றும் குணமாகவில்லை! எப்படியோ, இந்த வேப்பமரக் கோவிலைப் பற்றித் தெரிந்துகொண்டு ஒரு வெள்ளி இரவு, சந்தடியில்லாமல் வந்திருக்கின்றனர். அரசாங்கத்திற்கு தெரிந்தால், ஒரு முஸ்லீம் குடும்பத்தை மதமாற்றம் செய்ய முயன்றதாக குற்றம் சொல்லி, அந்தக் கோவிலே அடித்து நொறுக்கப்பட்டு, நிர்வாகத்தினர் கைது செய்யப்படலாம். அதோடு, அந்த மலாய்க்காரக் குடும்பமும் ‘ஹராம்’ என்று ஒதுக்கப்பட்ட இடத்திற்குள் நுழைந்ததற்காகத் தண்டிக்கப்படலாம். அதனால், இரவின் நிழலைப் போல், நள்ளிரவு நேரமே அங்கு வந்தனர். பூசாரி, அச்சிறுமியைப் பார்த்தார். அவளின் சிவந்த உடலெங்கும் சிறு சிறு கொப்புளங்கள்! சில வெடித்து, நீர் வடிந்து கொண்டிருந்தன.  பாவம் சிறுமி!. வேதனையில் துடித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு அக்கி வந்திருப்பது பூசாரிக்கு உறுதியானது. மறுநாளே கோலாசிலாங்கூர் பக்கமிருந்து ஒரு குயவனை ரகசியமாக வரச்செய்து, ‘வாராஹி அம்மன் வாராயோ... வந்திருக்கும் தீங்கை, தீராயோ அம்மன், தீராயோ…’ என்று வேண்டி, மண்சட்டிக்குப் பூசும் செங்குழம்பை அச்சிறுமியின் உடம்பெல்லாம் பூசி, அக்கியெழுத வைத்தார்.  தினமும் இரண்டு வேளை, வேப்பிலைகள் பறித்துப் போட்ட மஞ்சள் கரைச்சலில் குளிப்பாட்டி விடச் சொல்ல, இரண்டே வாரத்தில் நோய் தணிந்து குணமானது. அவ்வட்டார இந்து மக்கள், அம்மனின் பராக்கிரமத்தை எண்ணி மெய்ச்சிலிர்த்துப் போயினர். அன்றிலிருந்து, ஒவ்வொரு வெள்ளிக் கிழமைகளிலும் மக்கள் எங்கிருந்தெல்லாமோ அங்கு சாமிப் பார்க்க வந்ததோடு, மருத்துவ ஆலோசனையும் கேட்டுக்கொள்ளத் தொடங்கினர்..

இந்த பக்திக்கும், சிகிச்சைக்கும் ஒரு மௌன சாட்சியாய் பொட்டச்சி, வேப்பமரத்தடியில் படுத்துக் கிடந்தது!.

பொட்டச்சிக்கு குட்டிகள் பிறந்து பத்து நாட்கள் ஆகியிருந்தன. எங்கும் ஒரே இருட்டு!. பசி!. முனகல்!. குட்டிகள் யாவும் முண்டியடித்துக்கொண்டு பால் குடிப்பதும்; ஒன்றுடன் மற்றொன்று உரசியபடி சுகமாகத் தூங்குவதும் என்று பொழுதுகள் போய்க்கொண்டிருந்தன. அன்று, வயிறு புடைக்கத் தாயின் முலைப்பால் குடித்துவிட்டு உடன்பிறப்புகளின் மத்தியில் கடைக்குட்டி, கால்களைப் பரப்பிப் போட்டு மல்லாந்து படுத்திருந்தது.  ஒட்டிக் கிடந்த இமைகளைத் திறக்க அது,  மிகுந்த பிரயத்தனம் படுவது தெரிந்தது. விழிகள், இமைகளுக்குள் சுழன்று, சுருங்கி நெளிந்து, சட்டென விலகின! ‘அப்பா, என்ன வெளிச்சம்!.’ இது, வெடுக்கென இமைகளை மூடிக்கொண்டது. பிறகு மெல்லக் கண்களைத் திறந்தது! மீண்டும் மூடிக்கொண்டது! மயிரிழைக் கணக்கில் கொஞ்சம் கொஞ்சமாக இமைகளைத் திறந்து பார்த்தது. மேலே தெரியும் காட்சிப் புரியாமல் நெற்றி சுருங்க, கொஞ்ச நேரம் அதையே பார்த்துக் கிடந்தது. கண்கள் வலித்தன. இமைகளை மூடிக்கொண்டது. மீண்டும் மெல்லத் திறந்தபோது முதலில் புரிந்த காட்சி, பரந்த மரம்!.. அடர்ந்த இலைகள்!.. பக்கத்தில், ஏற்கெனவே பார்வை வந்த குட்டிகள் நெளிந்துகொண்டிருந்தன.  

அன்று, கோவிலில் ஒரு விசேஷம்!. நிறைய ஜனங்கள் கூடியிருந்தனர். பொட்டச்சி வெளியே போயிருந்தது. குட்டிகள் எல்லாம் எப்போதும் போல் ஒன்றின்மேல் மற்றொன்று ஏறித் தாவி, முட்டி மோதி, விளையாடிக் கொண்டிருந்தன. முனகலும், சிணுங்களுமாக ஒரே கொண்டாட்டந்தான்!. இவற்றின் முனகலைக் கேட்ட இருவர்,  மரத்தடிப் பக்கம் வந்தனர். அவர்களில் ஒருவன், பொசு பொசுவென்று பஞ்சுப் பொதியைப் போலிருந்த குட்டிகளில், நெற்றியில் கரும்புள்ளி இருந்த குட்டியைத் தூக்கி கால்களுக்கிடையே பார்த்தான். பிறகு முகத்தருகே வைத்துக் கொஞ்சினான். அதற்கு சந்தோஷம் பிடிபடவில்லை. வாலையும் சூத்தையும் ஆட்டிக்கொண்டு அவனுடைய முகத்தை நக்கி வைத்தது.

“ம்ம்.. ஆம்ள குட்டிதான் புரோ..” என்று  சொல்லி, பாவி! அதன் காதைப் பிடித்துத் தூக்கினான்.

‘ ஐயோ வலிக்கிறது.. வலிக்கிறது.. ஆ,,’ - கால்களை உதறிக்கொண்டு அக்குட்டி கத்தியது.  

“சரியான ரோசக்காரந்தான் புரோ.. “ என்று அவர்கள் அதைத் தூக்கிக்கொண்டு போயினர்.

கொஞ்ச நேரத்திலேயே பெண்ணோருத்தி வந்தாள். வந்தவள், கடைக்குட்டியைத்தான் முதலில் தூக்கி, கால்களுக்கிடையே பார்த்தாள். தன் மார்போடு அணைத்துக்கொண்டு தலையைத் தடவிக் கொஞ்சினாள். இது, சந்தோஷத்தில் நாக்கைத் துருத்தி, வாலை ஆட்டி, விசுவாசத்தைக் காட்டியது. அதற்குள் வால் கருத்தக் குட்டிக்குப் பொறுக்கவில்லைப் போல!. வாலையும் சூத்தையும் ஆட்டிக்கொண்டே அவளை நோக்கி வந்து, அவள் காலை முகர்ந்து நக்கி, உரசிக்கொண்டு நின்றது. உடனே அவள், இதைக் கீழே விட்டு விட்டு, அக்குட்டியைத் தூக்கி கால்களுக்கிடையே பார்த்தாள்.

“பரவால்ல, ஆம்பள குட்டிதான்!.  சோ, க்கியூ….ட்.” என்று முனகி, அதைத் தூக்கிக்கொண்டுப் போனாள்.

‘போ..போ.. எங்களைப் போலில்லாமல் வீட்டுச் சுவர், தூணெல்லாம் மூத்திரத்தை பெய்து நாறடிக்கும்போது தெரியும் உங்களுக்கு...’ என்பதுபோல் கீச்சுக் குரல் கொடுத்து, கடைக்குட்டி முனகியது..

ஒரே நாளில் இரண்டு குட்டிகள் குறைந்து போனதைத் தாய் வந்தவுடன் அதனிடம் முறையிடுவதுபோல் மற்ற குட்டிகளெல்லாம் அதனைச் சுற்றி சன்னக் குரலில்  குரைத்துக்கொண்டு வளைய வந்தன. 

‘ஓ, அப்படியா? சந்தோஷம்!.’ - எல்லா குட்டிகளையும் உச்சி முகர்ந்து, நக்கித் தேற்றிபடி, பொட்டச்சி, ஒருக்களித்துப் படுத்தது.

கடைக்குட்டி, ‘இரண்டு குட்டிகளைத்  தூக்கிக்கொண்டு போய்விட்டார்களே என்பதற்காக வருத்தப்படாதே அம்மா!. உனக்கு நான் இருக்கிறேன்!..’ என்பதுபோல் தாயின் தலைமாட்டில் போய் படுத்துக்கொண்டது. தாய் இதனை ஓரக்கண்ணால் பார்த்தது,

‘செல்லமே!, கௌரமான ஒரு பெயருடன் நேரத்திற்கு சாப்பிட்டுக்கொண்டும், அவர்களுடனேயே விளையாடிக்கொண்டும், அவர்கள் வீட்டிலேயே இருக்கிற ராஜ வாழ்க்கை வாய்த்திருக்கிறது அதுகளுக்கு. நம்மைப் போன்ற தெரு நாய்களின் கஷ்டம் சொல்லி மாளாது!. நேரத்திற்கு சாப்பாடு, தூங்குவதற்கு ஒழுங்கான இடம், பயமில்லாத வாழ்க்கை என்று எதற்குமே நிச்சமில்லாத நரக வாழ்க்கை நம்முடையது. மனிதர்கள் நமது நல்ல நண்பர்கள்தான். ஆனால், அவர்களே நமது பயங்கரமான எதிரிகளும்கூட!.. அவர்களிடம் ஒரு பழமொழி இருக்கிறது. ‘கல்லைக் கண்டால் நாயைக் காணோம், நாயைக் கண்டால் கல்லைக் காணோம்.. ‘ என்று! அதுதான் அவர்களின் பொது குணம்.  நம்மைப் போன்ற தெரு நாய்களுக்கு அவர்களால் எப்போதுமே ஆபத்துதான். பத்தரம்!..’ என்று பொட்டச்சி அன்பொழுக எச்சரிக்கை செய்தது.

கொஞ்ச நாட்களாகவே  வேப்பமரத்தடியையும் தாண்டி, சுற்றித் திரிய குட்டிகள் ஆரம்பித்திருந்தன. எங்கு போனாலும் ஒன்றாகவே போக வேண்டுமென்று தாய் சொல்லியிருந்ததால் அவை கூட்டமாகவே அலைந்தன. பொட்டச்சி, வழக்கம்போல் பாலூட்டிவிட்டு வெளியே போயிருந்தது. அப்போது, பூனையொன்று எங்கிருந்தோ ஓடிவந்து, சவடாலுடன் நடந்துப் போவதை அக்குட்டிகள் பார்த்தன. அதில் ஓர் ஆண்குட்டி, தாய் இல்லாத நேரங்களில் மற்ற குட்டிகளுக்கு அதுதான் பாதுகாப்பு என்று நினைத்துக் கொண்டதுபோல், அந்தப் பூனையை விரட்டிக்கொண்டு ஓட ஆரம்பித்துவிட்டது.

‘ஐயோ, வேண்டாம்..! நாம் ரொம்ப தூரம் வந்துவிட்டோம். திரும்பி வந்துவிடு..’ -மற்ற குட்டிகள் குரைத்துக்கொண்டே அதன் பின்னால் ஓடின. அது கேட்பதாய் இல்லை. ‘ஏய், நில்!..’ -குரைத்துக்கொண்டே பூனையை விரட்டிக்கொண்டு ஓடியது!. பூனை, ஒரு அல்லூரைத் தாண்டுவதைப் பார்த்து, அதுவும் தாண்டப் போய்,  அல்லூரில் விழுந்து தொலைத்தது.

‘ ஐயோ என்னைக் காப்பாற்றுங்கள். என்னால் மேலே ஏற முடியவில்லை.. மிகவும் உயரமாக இருக்கிறது.. ’ குரைத்துக்கொண்டே, முன்னும் பின்னும் ஓடத் தொடங்கியது. எல்லா குட்டிகளும் அருகில் போய்ப் பார்த்தன. அல்லூர், பெரிய பள்ளத்தாக்கைப்போல் தோன்றியிருக்க வேண்டும். பயந்து, நடுங்கிக்கொண்டே வேப்ப மரத்தடிக்குத் திரும்பிப் போய், நீட்டிப் போட்ட முன்னங்கால்களில் தலையை வைத்துத் தாயை எதிர் நோக்கிக் கலக்கத்துடன் காத்திருந்தன.

கொஞ்ச நேரத்திலேயே, ‘நான் வந்துவிட்டேனே..’ -குரைத்துக்கொண்டே பொட்டச்சி வேப்ப மரத்தடிக்கு வந்து சேர்ந்தது. மூன்று குட்டிகளும் சிணுங்கியபடி நடந்த அசம்பாவிதத்தைத் தாயிடம் சொன்னதோ!.. தாய், தலையை உயர்த்தி, காதுகளை நிமிர்த்தி அல்லூர் ஓடியத் திசையைப் பார்த்தது. 

‘ அவ்வளவு தூரத்திற்கு நீங்கள் ஏன் போனீர்கள்?..’ -அதன் குரைப்பில் கடுமை தொனித்தது!

‘அவன்தான் என்ன சொல்லியும் கேட்காமல் பூனையைத் துரத்திக்கொண்டு போய் அல்லூரில் விழுந்து தொலைத்தான்.’ -கடைக்குட்டி, வாய்க்குள்ளேயே சிணுங்கியது .

‘ உங்களுக்கெல்லாம் ரொம்பத்தான் கொழுப்பு வைத்துவிட்டது.. அதனால்தான் இந்த மனிதர்களெல்லாம் நம்மைப் பார்த்து, ‘ நாய் வாலை நிமிர்த்த முடியாது..’ என்று இளக்காரமாக பேசுவார்கள். சரி, இங்கேயே இருங்கள். நான் போய் பார்த்துவிட்டு வருகிறேன்.’ - பொட்டச்சி, குட்டிகளைப் பார்த்துக் குரைத்துவிட்டு அல்லூர் பக்கம் ஓடியது.

கொஞ்ச நேரத்தில் முகத்தைத் தொங்கப் போட்டுக்கோண்டே வந்த பொட்டச்சி, ஒருக்களித்துப் படுத்தது.

ன்று, சிறுமி ஒருத்தியின் பிறந்த நாள்! அவள் கோவிலுக்கு வருவோரிடமெல்லாம்  சாப்பாட்டுப் பொட்டலங்களைக் கொடுத்துக் கொண்டிருந்தாள். நாய்க் குட்டிகள் மூன்றும் மரத்தடியை விட்டு வெளியே வந்து, தமக்கு ஏதும் உணவு கிடைக்குமா என்று பார்க்கலாயின.

“ ஆய், நாய் குட்டி!.. அப்பா எனக்கு பொறந்த நாள் பரிசா அந்த வெள்ள நாய் குட்டி வேணும்பா!” என்று  பஞ்சு முடிகொண்ட குட்டியைக் காட்டி, சிறுமி  குதித்தாள். அவளின் அப்பா, ‘த்தொ.. த்தொ..’ என்று விரல்களைச் சொடுக்கிக்கொண்டே அதனிடம் போனார். அக்குட்டியோ அவரை ரொம்ப நாட்களாகவே தெரியும் என்பதுபோல் தலையைக் குனிந்து, வாலை ஆட்டிக்கொண்டே அருகில் போனது.

“ம்ம்.. பரவால்ல ஆம்ள குட்டிதான்..” என்று அதைத் தூக்கிப் பார்த்து, மகளிடம் கொடுத்தார். அவள், அதை தன் மார்போடு அணைத்துக்கொண்டு கொஞ்ச ஆரம்பித்தாள். கடைக்குட்டியும் மற்றொன்றும், ‘நாங்களும் இருக்கிறோம்..’ என்பதுபோல் மெல்ல குரைத்து, நட்புடன் வாலை ஆட்டின. அவர்கள், பஞ்சு முடி இல்லாத அக்குட்டிகளைப் பார்த்ததாகவே தெரியவில்லை. அவை, தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டே கோவில் அஞ்ஜடியில் போய் படுத்துக் கொண்டன.  

மத்தியான நேரம்!. தூக்கக் கிறக்கத்தில் இமைகளைத் திறக்க முடியாமல் கிறங்கிக் கிடந்தன. அப்போது, திடீரென்று இடியைப்போல் பொட்டச்சி குரைக்கும் சத்தம் சாலையின் அந்தப் பக்கத்திலிருந்து கேட்டது.

குட்டிகள் இரண்டும் கேட்டறியாத அலறல் அது! ஒன்றும் புரியாமல் பதிலுக்குக் குரைத்துக்கொண்டே தாயை நோக்கி வேகமாக ஓடின. ஆனால், பொட்டச்சியோ ‘என்னிடம் வராதீர்கள்..’ என்பதுபோல் குரைத்துக்கொண்டே அவற்றிடமிருந்து விலகி, வேறுபக்கமாய்ப் பாய்ந்தோடியது.

தாயின் குரைப்பில் பதற்றத்தை உணர்ந்த குட்டிகள் இரண்டும் பீதியுற்று,  குட்டிக்கொரு திசையில் தலைத் தெறிக்க ஓடிப் போயின!.

எருமை மாடுகளைப் போன்று பருத்த உடம்புடன் சிவப்பு உடை உடுத்தி, கைகளில் கயிற்றுடன் கூடிய கம்புகளுடன் சிலர், பொட்டச்சியை சுற்றி வளைத்துக்கொண்டனர். அது, உறுமிக்கொண்டே தப்பித்துப் போக பாய்ச்சல் காட்டிபோது, ஒருவன் கையிலிருந்த கம்பால் ஓங்கி அதன் முதுகில் அடித்தான். அது, குரைக்கக்கூட முடியாமல் அப்படியே நான்கு கால்களையும் பரப்பிக்கொண்டு மண்ணில் சரிந்தது. உடனே இன்னொருவன் அந்தக் கம்பின் நுனிலியிலிருந்த கயிற்றைக் கைப் படாமல் அதன் கழுத்தில் மாட்டிச் சுருக்கி, தர தர வென்று இழுத்துக்கொண்டுபோய், அப்படியே தூக்கி லாரியில் வீசினான். லாரியில், ஏற்கெனவே நிறைய நாய்கள் பீதியில் நிற்கக்கூட முடியாமல் நடுங்கிக்கொண்டிருந்தன.

கடைக்குட்டி, ஒன்றும் புரியாமல் செடிகளுக்குள்ளேயே ஒளிந்துகொண்டது. தனது உடன்பிறப்பைக் காணவில்லை!. அந்த நிராதரவு பேரச்சத்தைக் கொடுத்தது. நிற்கக்கூட முடியாமல் கால்கள் உதறி, நடுங்கின.

 மாலையில், கோவிலில் பூசை ஆரம்பமாகி மக்கள் நடமாட்டத்தைப் பார்த்தப் பிறகே கடைக்குட்டி, சற்று தெம்புடன் மீண்டும் வேப்பமரத்தடிக்கு வந்தது. இப்போது, அநாதையாய்த் தனித்து நின்றதில் யாரைப் பார்க்கவும் பயமாய் இருந்தது. கால்களுக்கிடையே வாலைக் நுழைத்துக்கொண்டு, ஓரக்கண்ணால் மனிதர்களைப் பார்த்துக்கொண்டே எச்சரிக்கையுடன் ஒதுங்கிப் போனது.

கோவில் அஞ்ஜடியிலேயே சதா படுத்துக் கிடந்தது. அதனால் நாளடைவில் ‘அஞ்ஜடிக்கார நாய்’ என்ற பிரத்தியேகப் பெயரும்;  ஈயத்தட்டிலே   உணவு உண்ணும் அந்தஸ்தும்  கிட்டின.  

சில மாதங்களிலேயே எல்லாம் பழுகிப்போய், வாழ்க்கை சுவராசியமானது. பகலெல்லாம் கால்களும், மோப்பமும் கூட்டிக்கொண்டு போன இடமெல்லாம் சுதந்திரமாக அலைந்து திரிந்து, பொறுக்கித் தின்று, மத்தியானத்தில் கோவிலுக்கு வருவது சந்தோஷமாகத்தான் இருந்தது. உடல் முறுக்கேறிக்கொண்டு நிமிர்ந்தது.. குறும்புத்தனமெல்லாம் குறைந்து போயின. தெரியாதவர்களை முறைத்துப் பார்த்துக் குரைக்கும் தைரியம் வந்திருந்தது. இருக்க இடம் கொடுத்து, நேரத்திற்கு சாப்பாடும் போட்டதற்கு நன்றியைக் காட்டவேண்டிய பொறுப்பு வந்து சேர, கோவில் வளாகத்தை தனது எல்லையாக வரித்துக்கொண்டு இரவு நேரங்களில் அஞ்ஜடிக்கார நாய், பாதுகாப்பை ஆரம்பித்தது.  ‘ராத்திரீல கோவில் பக்கம் பாத்து போவனும்!. நாயி இருக்குது!..’ என்று, அதற்கு ஒரு புதிய மரியாதையும் வந்து சேர்ந்தது.

 அன்று, மாலைவரை எங்கெங்கோ சுற்றித் திரிந்துவிட்டு திரும்பிய அஞ்ஜடிக்கார நாய், அங்கே கோயில் உடைந்து கிடப்பதைப் பார்த்தது. ஒன்றுமே புரியவில்லை!. மனிதர்கள் சிலர் வாய்களைப் பொத்திக்கொண்டு  உடைந்து கிடக்கும் அம்மன் சிலையைப் பார்த்து, அழுதுக்கொண்டிருந்தனர்.  அந்த அழிப்பு அச்சத்தைத் தந்தது. அஞ்ஜடியே இல்லாமல் உடைந்து கிடந்த கோயிலைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் குரைத்துக்கொண்டே நாய் அங்கிருந்து ஓடிப் போனது.         

ழைய நினைவெல்லாம் ஒரு கணம் கண் முன்னே பச்சை ரணத்துடன் ஓடி மறைந்ததுபோல் அஞ்ஜடிக்கார நாய், அந்த பொட்டல் வெளியையே வெறிக்கப் பார்த்துக் கிடந்தது.  பசியில் கண்களும் வயிறும் எரிந்தன. ஆதரவான ஒர் இடத்தைத் தேடி இங்கிருந்து ஓடிப்போன நாளிலிருந்து அது, கண்டதெல்லாம் வெறும் அச்சுறுத்தல்தான்!. தலையைக் குனிந்துக்கொண்டு தன் போக்கில் போனால்கூட சிலர், கல்லை விட்டு அடித்தனர்.

பசியில் உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பித்தது. பிறந்த இடத்தை முகர்ந்த  பரவசம், போன இடம் தெரியவில்லை! தொங்கியத் தலையுடன் அங்கிருந்து விலகி நடக்கத் தொடங்கியது. போவதற்கு முன்னர், கடைசியாக ஒரு முறை அந்த இடத்தை அடையாளப்படுத்திக்கொள்ள ஆசை வந்ததுபோல் முத்திரத்தை அடித்து மூடி வைத்தது.

பசியில் இருண்டுப் போனக் கண்களுக்கு இலக்குத் தெரியாமல் போகவே, பாதையைக் கால்கள் தீர்மானிக்கத் தொடங்கின. மரங்களுக்கிடையேயும் கட்டிடங்களுக்கிடையேயும் பதுங்கித் திரிந்தது. சாலையோரத்தில் தேங்கிக் கிடந்த தண்ணீரைக் குடித்து, வயிற்றின் எரிச்சலைத் தணித்துக்கொண்டது. இன்னும் அதிக தூரம் நடக்க முடியாததுபோல் நடை தளர்ந்துகொண்டு வந்தது.

அஞ்ஜடிக்கார நாய், ஒரு புது இடத்திற்கு வந்திருந்தது. மேலே மேம்பாலம்!. கீழே கடைவீதி!. மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கவில்லை. ராத்திரியில் படுத்துக்கொள்வதற்கும்; மழைக்கும் நல்ல பாதுகாப்பான இடமாய் இருந்தது. கடைசி கடையாதலால் இடது பக்கம், கடையின் நீளத்திற்கு சிமெண்டு தரையும் மூன்று பெரிய தூண்களும் இருந்தன. மூன்றாவது தூணிற்கு பின்னால் மறைவாக ஒதுங்கிய அஞ்ஜடிக்கார நாய், கால்களை பரப்பிக்கொண்டு மல்லாந்துப் படுத்தது.  

மேம்பாலத்தில் ஓடிய லாரிகளின் பேரிரைச்சலில்  அது கண் விழித்தப் போது, விடிந்திருந்தது.

‘ஏய், அஞ்ஜடிக்கார நாயே!.. இங்கே வா!.. இந்தா, இதைச் சாப்புட்டுவிட்டு இரவில் இந்தக் கடையை கொஞ்சம்  காவல் பார்த்துக்கொள்!.’ என்று உரிமையுடன் அழைத்து,  மீந்ததைக் கொட்டி, அன்பு காட்டி, ஏவல் செய்யும் ஒர் எஜாமானுக்காக அது ஏங்கித் தவித்தது.   

காலையிலேயே ஒரு கடைக்கார எஜமான் கடைக்கு வந்ததைப் பார்க்க அஞ்ஜடிக்கார நாய்க்கு சந்தோஷமாய் இருந்தது!. தன் வாலை ஆட்டி அவரை வரவேற்று மகிழ்ந்தது. அவர், கதவின் மேல் தொங்கியப் போட்டோவைப் பார்த்து ஏதோ ஸ்லோகத்தை சொல்லி, நெஞ்சைத் தொட்டுக்கொண்டே கேட்டைத் திறந்தார். அஞ்ஜடிக்கார நாய், அவரைப் பார்த்தபடி சற்று தூரத்தில் நின்று, தன் வாலை ஆட்டி நட்பு பாராட்டியது. அவர், நாயைப் பார்த்துக்கொண்டே கடைக்குள் போனார். நெற்றி சுருங்கி அசூயைக் காட்டியது.    

நாய், கடைக்கார எஜமான் ஏதாவது தருவாரா என்று ஆவலுடன் காத்திருந்தது. கொஞ்ச நேரம் ஆனது. ஏதும் கிடைக்காது என்று தோன்றியதோ என்னவோ? தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டே திரும்பியபோது, கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது. அது, அஞ்ஜடியைப் பார்த்தது. கடைக்காரர், வெளியில் வந்து அதைப் பார்த்து விரல்களைச் சொடுக்கிக்கொண்டே  தட்டை நீட்டினார். முட்டை பிதுங்கி வழியும் ரொட்டித் துண்டுகள் கொண்ட தட்டை அதனிடம் தள்ளி விட்டார்.

‘ஆகா, நான் தேடித் தவித்த அன்பு கிடைத்துவிட்டது. எஜமான், நீங்க நல்லா இருக்கனும்!. எனக்கு இது போதும்! நான், இந்த அஞ்ஜடியிலேயே ஓர் ஓரமாக படுத்துக்கொள்வேன்.! கவலை வேண்டாம் எஜமான். உங்கள் கடைக்கு இனி நானே காவல்!.’ -இது அன்பாய்க் குரைத்துச் சொல்ல விரும்பியச் செய்தி அவருக்கு புரியாதென்பதால், அவருக்குப் புரியும் பாஷையில் தன் வாலையும் உடலையும் ஆட்டி, நன்றியைச் சொன்னது. உணர்ச்சியில் கண்கள் மின்னின. முட்டையின் வாசத்தால் நாக்கில் எச்சில் சொட்டியது.

‘அப்பாடா, இந்த மாதிரி முட்டை வைத்த ரொட்டித் துண்டுகளைச் சாப்பிட்டு எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டன!’

ஒரே பாய்ச்சலில் ரொட்டித் துண்டொன்றை கவ்வியெடுத்தது. ரொட்டியிலிருந்து பிதுங்கி நாக்கில் வடிந்த முட்டையில் எஜமானின் அன்பு சுரந்தது. இரண்டு துண்டுகள் தட்டில் எஞ்சியிருந்தன!  வேறு நாய்கள் ஏதும் வருகின்றனவா என்று பார்த்துக்கொண்டே அவசர அவசரமாய் முதல் துண்டை வாயிற்குள் கவ்வி கடிக்கத் தோடங்கியது. அவ்வளவுதான்! வாய், தொண்டையெல்லாம் ஊசிகளும் ஆணிகளும் குத்திக்கொள்ள, மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் உயிர் போகும் வேதனையில் குரைக்கக்கூட முடியாமல் அஞ்ஜடிக்கார நாய், தலையை உடலிலிருந்து பிய்த்தெறிவதுபோல் உதறித் துடித்தது. ஒக்கரித்து வாந்தியெடுக்க முயன்றது,  முடியவில்லை!.  ஆனால், நாக்கில் முதலில் பிதுங்கி வழிந்த முட்டைக்காக இதனால் நன்றியைக் காட்டாமல்  இருக்க இயலவில்லை!

“எங்கியாவது போய் சாவு அஞ்ஜடிக்கார நாயே!. படுத்து நாறடிக்க ஒனக்கு இந்த அஞ்ஜடிதான் கெடச்சிதா?…” என்று அவர் செய்தக் கொடுமைப் போதாதென்று ஒரு கட்டையை எடுத்து  இதன் மேல் வீசியடித்தார்.

அஞ்ஜடிக்கார நாய்க்கு வாயெல்லாம் ஒரே ரத்தக்களறி! பலவந்தமாக வாந்தியெடுக்க முயன்றதில் உயிரே உருவிக்கொண்டு வெளியில் வந்து விழுந்து விடுவதுபோல்  உடல், பதறி நடுங்கியது. வாயிலிருந்து எச்சிலுடன் கூடிய ரத்தம் வழிந்துக்கொண்டே இருந்தது.

‘ஐயோ எஜமான்! அட ச்சீ!.. ஓடிப் போ அஞ்ஜடிக்கார நாயே,  என்று விரட்டியிருந்தால் நானே போயிருப்பேனே?.’ என்று கேட்பதுபோல் இது, பரிதாபமாய் கடைக்காரனைத் திரும்பப் திரும்பப் பார்த்துக்கொண்டே தலையை உதறிச் சிலிர்த்தபடி அங்கிருந்து ஓடிப்போனது.  

மூன்றாவது நாள், திங்கட்கிழமை!..

எசமான், காலையில் கடையைத் திறக்க வந்தார்!.  

வாயிலிருந்து ஒழுகிய ரத்தமும், எச்சிலும் உறைந்து ஈக்கள் மொய்க்க, உடல் உப்பி, சகிக்க முடியாத துர்நாற்றத்துடன் அஞ்ஜடிக்கார நாய், அவர் கடையின் அஞ்ஜடியில் செத்துக் கிடந்தது!.                                                                        

* * *

எழுத்து,

மலேசியா ஸ்ரீகாந்தன்

வட்டாரச் சொல் விளக்கம்


Comments

Popular Posts