டைகர்

 


டைகர்

சாந்தி, இந்த வார ஞாயிற்றுக்கிழமையும் குருக்களின் சமய உரையைக் கேட்க வாரமலிருந்தது பாக்கியத்திற்கு மிகுந்த வேதனையைத் தந்தது. குற்ற உணர்வில் நெஞ்சு பதைபதைத்தது. ‘எல்லாம் இந்த சனியம் புடிச்ச டைகர்னால வந்தது..’என்று முணுமுணுத்துக்கொண்டாள். இன்று, வீட்டிற்கு போகும் வழியில் தவறாமல் போய்ச் சாந்தியைப் பார்க்க வேண்டும்..’ என்று தீர்மானித்துக்கொண்டாள். 

கடந்த வாரம் டைகர் செய்தக் காரியத்தை நினைக்க, நினைக்க பாக்கியத்திற்கு இப்போதும் ஒரே அருவருப்பாகவும் அசிங்கமாகவும் இருந்தது. சாந்தி, பாவம் அன்றுதான் முதல் முதலாக இவர்களின் வீட்டிற்கு வந்திருந்தாள். அப்போது, மாதவன் மற்றும் மாலாவிற்கு மத்தியில் அரைத் தூக்கத்தில் சொக்கிக் கிடந்த டைகர், - என்ன மோப்பம் பிடித்ததோ - உடனே கீழே குதித்து, வீட்டிற்கு வரும் விருந்தாளியை வரவேற்பதுபோல் வாலையும், சூத்தையும் ஆட்டிக்கொண்டே சாந்தியிடம் ஓடிப்போய், காலிலிருந்து தொடைவரை மோந்துப் பார்த்தது. அவள், பயத்தில் ஒடுங்கிப் போய், ‘யம்மாடீ..’ என்று பாக்கியத்தின் கையைப் பிடித்துக்கொண்டாள்.

பயப்படாத சாந்தி!. இப்படிதான் கொஞ்ச நேரம் வெளயாட்டு காட்டும். அப்பறம் தானாவே அடங்கி போயிரும்.” என்று பாக்கியம் தைரியம் சொன்னாள்.

டைகர், அதே ஆர்வத்துடன் மாதவனிடம் ஓடிப் போய் அவனை மோப்பம் பிடித்தது. பின்னர், மாலாவிடம் ஓடி வந்து, அவளை மோந்து பார்த்தது. மாலா, அதைப் பிடித்துக் கொஞ்சுவதற்குக் குனிந்தபோது, பாய்ச்சல் காட்டித் தப்பித்துவிட்டு, அம்மாவிடம் ஓடிப்போனது. சில விணாடிகள் அதற்கு இருப்புக் கொள்ளவில்லை. வந்த விருந்தாளிக்கு வீட்டுக்காரர்கள் காட்டாதக் குதூகலத்தை அது காட்டிக் கொண்டாடுவதுபோல், அங்கும் இங்கும் ஓடியது.

டைகர், சிட் தேர்..” என்று அம்மா அதட்டினாள்.  

டைகரோ, தனக்கு வேறொரு கட்டளையிடப்பட்டதுபோல் மீண்டும் சாந்தியிடம் ஓடிப் போய், ஒரு முறை அவளைச் சுற்றி வந்து மோந்து பார்த்துவிட்டு, உடனே தாவி, அவளின் இடது கெண்டைக்காலைத் தனது முன்னங்கால்கள் இரண்டாலும் இறுகப் பற்றிக்கொண்டு, பின்னங்கால்களால் புணரும் பாவனைக் காட்டி, பிருஸ்டத்தை வேகமாய் ஆட்டி, இயங்கத் தொடங்கியது.

சாந்தி, ‘ஐய்யே..’ என்று கூச்சல் போட்டுகண்களை இறுக முடிக்கொண்டாள். ‘ச்சீ..  கால உடு, கருமம்..என்று உதறியபோது, டைகர் இன்னும் வலுவாகக் காலைப் பிடித்துக்கொண்டு தொங்கியது. ஹாலிலே இருந்த பாக்கியத்தின் பிள்ளைகளின் நினைவு அவளுக்கு மேலும் அவமானத்தைச் சேர்த்தது

மாலா, ‘ஐயே, கண்றாவீ...’ என்று வாயைப் பொத்திக்கொண்டு அறைக்குள் ஓடிப் போனாள்.

பாக்கியம், அதிர்ச்சியில் உறைந்துபோய் செய்வதறியாது திண்டாடினாள். ஆத்திரத்தில் முகமெல்லாம் சிவந்து போனது. பிள்ளையைப்போல் வளர்த்த நாய்! பிரம்பால் ரெண்டு வைக்கவும் மனசு வரவில்லை

ஐயோ,மாதவா!. இந்தக் கருமத்தப் பாருடா. இதென்னடா இது, புது சேட்டையா இருக்கு?..” - அம்மா அபயக் குரல் கொடுத்துக் கத்தினாள்.

மாதவன், ‘டைகர், கம் ஹியர்!.’ என்று அதட்டினான். ஆனால், அந்தக் குரல் அதனை மேலும் ஊக்குவித்ததுபோல் தோன்றியது!.

அவன், ரோத்தானுடன் ஓடி வந்து, பின்னங்கால் தொடையில் ஒன்று வைத்து, டைகரைத்  தூக்கிக்கொண்டுப் போனான்.

மாதவன், நாயைத் தூக்கிக்கொண்டு போகும்போது, வெளியில் நீட்டிப் பளபளத்துக்கொண்டிருந்த அதன் குறியைப் பார்த்ததும், அருவருப்பில் பாக்கியத்திற்கு உடல் உதறிச் சிலிர்த்தது. வாய், அசிங்கமாய்க் கோணி நெளிந்தது.. அவசரமாக சமயலறைக்குப் போய், வாயில் சுரந்த எச்சிலைப் பேசினில் துப்பினாள். சாந்தியும் அந்தக் காட்சியைப் பார்த்தது இன்னும் தர்மசங்கடத்தைத் தந்தது.

பாவம் சாந்தி! பயத்தில் வெலவெலத்துப் போனாள். முகம், வெளிறி இருண்டுப் போனது. வல்லுறவுக்கு ஆளானவள்போல் உடல் பதறி நடுங்கினாள். துடைத்தெடுக்க முடியாதக் கறையொன்று பட்டுவிட்டதுப் போன்ற உணர்வால் அடிக்கடி இடது கெண்டைக்காலை வலது பாத விரல்களால் தேய்த்துவிட்டுக் கொண்டாள். ரொம்பக் காலமாகவே கெண்டைக்கால் சதையில் நீலம் பாரித்துக்கிடந்தவெரிகோஸ்’ நரம்புகளில் புதிதாக ஏதோ அறுவுவதுபோல் உணர்ந்ததால், அசூயையில் உடல் உதறிச் சிலிர்த்தது.

இதுக்கு முன்னடி இப்படியெல்லாம் நடந்ததே இல்ல.” என்று சாந்திக்குச் சமாதானம் சொல்லுவதுபோல் பாக்கியம் முணுமுணுத்தபோது, அதைச் செவிமடுக்கும் மனநிலையில் அவள் இருக்கவில்லை.

அவள், நினைத்துப் பார்க்கமுடியாத அவமானத்திற்கு ஆளானவள்போல் முகம் வாடி, வதங்கிப் போனாள்யாரிடமும் தனது கோபத்தைக் காட்ட முடியாத தர்மசங்கடம் வேறு!. சாந்திக்கு இருப்புக் கொள்ளவில்லை. தனது வீட்டின் பாதுகாப்பிற்குள் புகுந்துகொள்ளத் துடித்து,தனக்கு நேரமாவதாகச் சொல்லி.’ உடனே அங்கிருந்து புறப்பட்டுப் போனாள். ‘பாவம், எதற்கு வந்தாளோ?.’ என்று பாக்கியம், அவளுக்கு நடந்துவிட்ட அசிங்கத்தை நினைத்து, வேதனையில் தவித்தாள்.

மாதவா, இதென்னடாம் இது ஒரே கண்றாவியா இருக்கு?. நாளிக்கி நீங்க ரெண்டு பேரும் வேலைக்கி போனப்பறம் இந்தக் கருமத்துகூட ஒண்டியா இருக்குறத நெனச்சாலே எனக்கு இப்பவே வயித்த கலக்குது..” என்று அம்மா மகனிடம் புலம்பினாள்.  

ஐயோ அம்மா!. இது, நீங்க நெனக்கிர மாரியெல்லாம் ஒன்னுமே கெடையாதும்மா. நாம, வீட்டுக்கு வந்தவொன்ன அது நம்ம மேல தாவி விசுவாசத்த காமிக்கிறது இல்லியா, அது மாரிதாம்மா இதுவும். புதுசா ஆண்டி வீட்டுக்கு வந்த சந்தோஷத்துல அது அப்படி நடந்துக்கிச்சி. அவ்ளோதான். அதுக்கும்மேல அந்த சேட்டைக்கு வேற அர்த்தம் கெடையாதும்மா. நீங்கதான் அத அசிங்கமா புரிஞ்சிக்கிட்டு என்னென்னமோ நெனச்சிச்கிறீங்க. அது மிருகம்மா!.. மனுசாளு மாரியெல்லாம் யோசிக்குமா என்ன?. வீணா மனச போட்டு கொழப்பிக்காதிங்கம்மா..” என்று மாதவன் அம்மாவிற்கு ஆறுதல் சொன்னான்.

பாக்கியத்திற்கு அந்த விளக்கமெல்லாம் ஒன்றுமே புரியவில்லை. எஸ்டேட்டில் தன் தந்தை வளர்த்த நாய், இப்படியெல்லாம் செய்து தான் பார்த்ததில்லையே என்பதே அவளின் குழப்பமாக இருந்தது.   

நீங்க என்ன கருமத்த வேணுமின்னாலும் சொல்லிகிட்டுப் போங்க. வூட்டுக்கு தெரிஞ்சவங்க வந்த நேரத்துலியா இது இப்படி செஞ்சி நம்ம மானத்த வாங்கனும்?. பாவம் சாந்தி ஆண்டி!. மொத தடவியா வீட்டுக்கு வந்தாங்க. இது செஞ்ச அசிங்கத்துல எப்படா வூட்டுக்கு போவோம்ன்றமாரி புடிங்கி அடிச்சிக்கிட்டு ஓடீட்டாங்க. அவுங்க மொகத்த பாக்கவே சகிக்கல. எல்லாம் இந்த சனியன் புடிச்ச நாயினால வந்த வென..” என்று அம்மா பொருமித் தள்ளினாள்.

ஐயோ பிளீஸ்ம்மா!. நாய்களோட சேட்டைங்கல மனுசாளுங்க அர்த்தத்துல புரிஞ்சுக்கிட்டீங்கன்னா அதுக்கு, அந்த வாயில்லா ஜீவன்  என்னம்மா செய்யும்?.” என்று அவன், தாயிடம் மீண்டும் மன்றாடினான்.

பாக்கியத்திற்கு இப்போதே பயம் பிடித்துக்கொண்டது. நாளை பிள்ளைகள் இருவருமே வேலைக்குப் போய் விடுவார்கள். டைகரைக் கட்டிப் போட்டும் பழக்கமில்லாததால் கட்டி வைக்கவும் முடியாது. குரைத்தே பிராணனையை வாங்கிவிடும்.

அந்தப் பயத்துடனேயே திங்கட்கிழமை விடிந்தது. பாக்கியம், மிகுந்த எச்சரிக்கையுடனேயே வீட்டு வேலைகளைச் செய்யத் தொடங்கினாள். ஒரு கண், டைகரின் மேலேயே இருந்தது. முன்பு போலவே அது, அவள் போகும் இடமெல்லாம் வந்து, ஓர் ஓரமாக படுத்துக் கிடந்து, அவளையே பார்த்துக்கொண்டும்; அரைத் தூக்கத்தில் சொக்கிக்கொண்டும் இருந்தது. முன்பானால் அந்த விசுவாசத்திற்கு அதை அணைத்துக் கொஞ்ச நேரம் கொஞ்சுவாள். டைகர், விசுவாசத்துடன் வாலை ஆட்டிக்கொண்டு அவளை நெருங்கிய போதெல்லாம், ‘டைகர், கோ தேர்..’ என்று  அதட்டி, விலகிப் போனாள். சமைக்கும்போது சமயலறைக் கதவைச் சாத்திக்கொண்டாள். சாப்பாட்டைக்கூட தட்டில் போட்டு காலால் தள்ளி விட்டாள். சோபாவிற்கு பதில், நாற்காலியில் உட்கார்ந்து டெலிவிஷன் பார்க்க ஆரம்பித்ததால் டைகர், பாக்கியத்தின் காலடியிலேயே சோகமாய் ஆனால், அவளுக்குக் காவல் இருப்பதுபோல் படுத்துக் கிடந்தது.

பிள்ளைகளுக்கு எந்தத் தயக்கமும் இருக்கவில்லை. அவர்கள், எப்போதும் போலவே அதனுடன் கொஞ்சி விளையாடி மகிழ்ந்தனர். வீசுவாசத்தைத் தவிர வேறெதையும் காட்டத் தெரியாத டைகராய் அது, அவளை ஏக்கத்துடன் பார்த்தபடி, பின்னாலேயே சுற்றித் திரிந்தது.

மூன்று நாட்கள் ஆயின!.

பாக்கியத்திற்கு மனசு கேட்கவில்லை!. பழைய டைகராய் பதிவிசாய் இருப்பதுபோல் தோன்றியது. அதன்மேல் மீண்டும் பிரியத்தைக் காட்ட ஆசைச் சுரந்தது. பிள்ளைகள் அருகில் இருக்கும்போது எச்சரிக்கையுடன் அதனுடன் கொஞ்சி விளையாடத் தொடங்கினாள். டைகரின் காதுகள், கழுத்து மற்றும் தலையைச் சொறிந்துவிட்டு, கண்கள் கிறங்கிப் போகச் செய்தாள். டெலிவிஷன் பார்க்கும் போது, முன்புபோல் பக்கத்தில் படுக்க வைத்து, அதன் தலையையும் உடலையும் கோதி விட்டாள். நெற்றியில் முத்தமிட்டாள். டைகரோ, ‘இது என் மடி’ என்பதுபோல் உரிமையுடன்  அவள் மடியில் தலையை வைத்துச் சொக்கிப் போனது.  

ன்று, கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி!.

சுவாமிகள் அந்தத் தினத்தின் விசேஷத்தைச் சொல்லி உரையைத் தொடங்கியதுமே பாக்கியத்திற்கு, உடனே கணவனின் நினைவுதான் மீண்டது..

அவரும் ஒரு கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமியன்றே பிறந்திருந்ததால் தீவிர கால பைரவ பக்தராக இருந்தார். ஒவ்வொரு தேய்பிறை மற்றும் வளர்பிறை அஷ்டமிக்கும் இவளையும் கையோடு அழைத்துக்கொண்டு கோவிலுக்குப் போய், கால பைரவப் பூஜை செய்யத் தவறியதேயில்லை. அதில் அவர் மிகவும் பிடிவாதமாக இருந்தார். விடுமுறைக் கிடைக்காத நாட்களில் மருத்துவ விடுப்பு எடுக்கவும் தயங்கியதில்லை. ஆனால், அந்த வழிப்பாடெல்லாம் கணவன் இருந்தவரைதான்!. அவர் இறந்த கையோடு எல்லாமே பழங்கதைகளாகிப் போயின. மாதவன் பிறந்த மூன்றாவது மாதம், அவளுடைய சிநேகிதியுடன் புருஷனுக்கு இருந்த கள்ளத் தொடர்பு தெரிந்ததும், மூட்டைச் பூச்சி மருந்தைக் குடித்து, ஒரு வாரம் ஆஸ்பத்திரியில் சாகக் கிடந்த ரணம், பாக்கியத்திற்கு இன்னும்கூட வலித்தது. 

ஆகவே, புருஷனின் நினைவு நாள் மற்றும் பிறந்த நாட்களெல்லாம் இப்போது, காலண்டரில் சில நாட்கள் கழித்தே கிழிக்கப் பட்டன.            

சுவாமிகள், ஜென்ம அஷ்டமியன்று பக்தர்கள் பைரவருக்கு விரதம் காத்து, பஞ்ச தீபம் ஏற்றி வணங்கி வந்தால் தீராதத் தொல்லைகளும் தீர்ந்து போகும் ஐதீகத்தைச் சொன்னார். செவ்வரளி மாலைச் சாற்றி வணங்கினால் இன்னும் சிரேஸ்டமென்றும், பகவானின் முழுக் கடாட்சமும் கிட்டுமென்றும் விதந்தோதினார்.

சுவாமிகள், தொடர்ந்து சொன்னார்..

“நம் கர்மாவிற்கு ஏற்பவே பிறவி லபிக்கிறது. இப்பிறவியில் தீர்க்க முடியாத கர்மா, சஞ்ஞித கர்மாவாகி, அடுத்தப் பிறவியில் தீர்க்கப்பட வேண்டியது விதி!. சஞ்ஞித கர்மபலன் முடிந்தால்தான் இந்தப் பூலோகப் பிறவி முக்தியடையும்”.

“இதைத்தான் ஆதிசங்கரர் தனது பஜ கோவிந்தத்தில்,

‘புனரபி ஜனனம்.. புனரபி மரணம்..’ என்று சொல்கிறார். அதாவது,

‘செய்தக் கர்மப் பலன்களை அனுபவித்துத் தீர்க்கும்வரை, மீண்டும் மீண்டும் பிறக்க வேண்டும்… மீண்டும் மீண்டும் இறக்க வேண்டும்..’

‘மறுபிறவியில் என்னவாகப் பிறந்தாலும், முன்பிறவிப் பயனை அனுபவித்தே ஆக வேண்டும்! அதை மாற்றமுடியாது. ஆயினும், கால பைரவர் நினைத்தால், ஒருவரின் பாபங்களை நீக்கி, உடனே அவருக்கு முக்தி நிலையை அருளச் செய்ய முடியும். ஏனென்றால், காலத்தை இயக்கும் விஷேச சக்திக்கு அதிபதியே அவர் தான்!.’   

‘ஆதலால், கால பைரவரைத் தினமும் வழிபட்டு, அவரின் கடாட்ஷம் பெற்று, மீண்டும் பிறவா முக்தியை  அடைவீர்களாக..’

‘கால பைரவா நமஹ..”  என்று சுவாமிகள் தனது உரையை முடித்தார்.

சுவாமிகள், கால பைரவரைப்பற்றிச் சொன்ன பல தகவல்கள் பாக்கியத்திற்குப் புதியதாய் இருந்தன. மிகவும் லயித்துக் கேட்டாள். ‘பைரவருக்கு இப்படியொரு சக்தியா?..’ என்று அதிசயித்தாள். கணவரின் தீவிர கால பைரவப் பக்திக்கு ‘மீண்டும் பிறாவா வரம் வேண்டி’ யாசித்துக்கொண்டதுதான் காரணமோ என்று எண்ணிக்கொண்டாள்.

‘புனரபி ஜனனம்.. புனரபி மரணம்..’ ஸ்லோகத்தை முதல் தடவையாகக் கேட்டாள். அதன் விளக்கம் அவளை மிகவும் தொந்தரவு செய்தது. அடுத்தப் பிறவியின் நிச்சயமற்ற அடையாளம் அச்சமூட்டியது. இறந்தவுடன் இரண்டில் ஒன்று, சொர்க்கமோ நரகமோ என்று நம்பிக்கொண்டிருந்தவளுக்கு இது பெரும் குழப்பத்தைத் தந்தது.

‘செய்த பாவங்கள் தீரும்வரை மீண்டும் மீண்டும் பிறவியா?. யாருக்கு எந்தப் பிறவி?’

நினைத்துப் பார்க்கவே பீதியாய் இருந்தது.

‘புனரபி ஜனனம்.. புனரபி மரணம்..’

அன்றைய உரை அவளை எதையெல்லாமோ எண்ண வைத்துக் கலங்கடித்தது. தான் செய்தப் பாபங்களின் கணக்கு ஒன்று நினைவுக்கு வர, தலைக்கு ஏதோ புதிய பாரம் வந்து சேர்ந்ததுபோல் கனத்து, வலித்தது. மிகுந்த மனக் கிலேசத்துடன் சுரத்தே இல்லாமல் வீட்டிற்கு வந்தாள். வழியில், சாந்தி வீட்டிற்கு போக எண்ணியதை முற்றாக மறந்து போனாள்.

மகன், ஹாலில் கைப்பேசியைப் பார்த்துக்கொண்டிருந்தான். வந்தவுடன் விசுவாசத்தைக் காட்டிக் குதூகளிக்கும் டைகரைக் காணவில்லை!.

“டைகர எங்க கானோம்..?”

மகன், கைப்பேசியில் லயித்தப் பார்வையுடன், ‘இவ்ளோ நேரமா இங்கதான் படுத்திருஞ்சி..’ என்றான்.

தாயின் குரல் கேட்டு மாலா வெளியே வந்தாள்.  வீடெங்கும் தேடியும் டைகரைக் காணவில்லை !.

‘அன்னிக்கிமாரி எங்கியாவுது ஓடி கீடி போச்சா?..’ பாக்கியம் கலவரம் கொண்டாள். முன்பொருமுறை அப்படித்தான் எல்லோரையும் பதறவைத்துக்கொண்டு எங்கோ ஓடிப்போய், இரண்டு நாட்களுக்குப் பிறகே வீடு வந்து சேர்ந்தது.  

டைகர், அவளுடைய 50 -வது பிறந்தநாளுக்கு மகன் பரிசாகக் கொடுத்த நாய். அவள்தான் தனக்குத் துணையாக இருப்பதற்கு நாய்க் குட்டி ஒன்றைக் கேட்டிருந்தாள்.  அது, ஜாதி நாய்க்கும் தெரு நாய்க்கும் பிறந்த ஒரு கலப்பு நாய்!. அந்தக் கலப்பினாலோ என்னவோ அவ்வளவு அழகாய் இருந்தது. மகன், ‘மாஸ்டர்’ என்றும்  மகள், ‘ரோமியோ’ என்றும் புதுமையானப் பெயராக  வைக்கத் துடித்தனர், பாக்கியம்தான், ‘எஸ்டேட்டில், அப்பா வளர்த்த நாயின் பெயர்!’ என்று சொல்லி, பலவந்தமாக ‘டைகர்’ என்ற பெயரையே வைத்தாள்.

பாக்கியத்தின்மேல் டைகருக்கிருந்த விசுவாசம் சொல்லி மாளாது. அவளின் உடல் அசௌகரியத்தையெல்லாம் அது எப்படித்தான் அறிந்துக்கொள்ளுமோ!. அவளுக்காகத் துக்கப்படுவதுபோல் சாப்பாட்டை அண்டாது. அவளின் உடல் உபாதையைப் பங்கிட்டுக்கொள்வதுபோல் கட்டிலுக்குப் பக்கத்திலேயே சோசகமாய்ப் படுத்துக் கிடக்கும். பிள்ளை இல்லாத நேரத்தில் பாக்கியத்தின் பாதுகாப்பு தனது பொறுப்பு என்று நினைத்துக்கொள்ளுமோ என்னவோ, அவளையே சுற்றித் திரியும்.      

இரவில் தனது பக்கத்தில் போட்டுக்கொண்டு தூங்குவதற்கு மகனோ, மகளோ ஆசையுடன் அதைத் தூக்கிக்கொண்டு போனாலும், நள்ளிரவில் எத்தனை மணிக்குத்தான் அறைக்குள் வருமோ தெரியாது? காலையில் பார்த்தால் அவளின் மடியின் கதகதப்பில் சுருண்டுக் கிடக்குமே!.

‘இந்த டைகர்?...’

‘இந்தப் பாசத்திற்கு என்ன கைமாறு செய்தால் ஈடாகுமோ?.’ என்று பாக்கியம் நெகிழ்ந்து போனாள்.

மாதவனும் நாயைத் தேடும் சத்தம் கேட்டது.

“டைகர்!..”

அப்போது, ‘சட்’டென்று மின்னல் கீற்றாய் ஓர் எண்ணம், பாக்கியத்தின் நினைவுகளிலிருந்து மீண்டெழுந்தது!.

‘அந்த மனுஷன் உயிரோட இருந்தபோது, முதுகிற்குப் பின்னால் பிள்ளைகள்கூட அப்பாவை ‘டைகர்’ என்றல்லவா குறிப்பிட்டனர்! அட, இத்தனை நாளாக இது எப்படி எனக்கு ஞாபகமே இல்லாமல் போனது?. ஆமாம், அவர் இறந்து 8 வருடங்களுக்குமேல் ஆகிவிட்டதால் நானும்கூட அதை மறந்தே விட்டேனே!.’

‘அடக் கடவுளே!. அப்பா வளர்த்த நாயின் பெயரை வைக்கிறேனென்று, என்னுடைய வாயாலேயே இந்த மனுஷனின் பட்டப் பெயரை நாய்க்கு வைத்துத் தொலைத்தேனே?.’

‘டைகர்!.’

‘புனரபி ஜனனம்..’

இப்போது, டைகரை நினைக்க பாக்கியத்திற்கு பெரும் அவஸ்தையாய் இருந்தது. உடனே, அதை எப்படி எதிர்க்கொள்வதென்றே தெரியாமல் தவித்தாள். பழைய சம்பவங்கள் சில, புதிய அர்த்தங்களைக் கொடுத்துக் குழப்பின. ஏதேதோ எண்ணங்கள் தோன்றி அவளை அலைக்கழித்தன. தாம்பத்தியத்தில் அவள், மறுக்கமுடியாமல் முகம் சுளித்த அவரின் விபரீத இச்சையை இப்போது நினைத்துப் பார்த்தாள்.  முகமெல்லாம் வெளிரிப் போனது. 

‘டைகரின் வெள்ளை நெற்றியில் திலகத்தை வைத்ததுபோலிருந்த கருப்புப் புள்ளி இப்போது, அவருடைய நெற்றியில் இருந்ததே ஒரு தழும்பு, அதை ஞாபகப்படுத்தித் தொலைக்கிறதே!.’

 தெரு முனையில் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு தாயும் பிள்ளைகளும் வாசலுக்கு வந்தனர்.

மைதானத்தில் தெருநாய்களின் கூட்டம் ஒன்று!

இவர்களுக்குப் புறமுதுகைக் காட்டிக்கொண்டு, கொண்டாட்டத்தில் டைகர்!.

டைகருக்குக் கிடைத்த அதிர்ஸ்டத்தைக் கொண்டாடிக்கொண்டோ அல்லது வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்டோ மற்ற நாய்களெல்லாம் அந்த ஜோடியைச் சுற்றி வந்து குரைத்துக்கொண்டிருந்தன. டைகருக்கு மூச்சு இரைத்ததுபோல!. நாக்கு வெளியில் தள்ளி, எச்சில் வடிந்துகொண்டிருந்தது.

“ச்சீ.. மானம் போவுது..” என்று முகத்தைச் சுழித்துக்கொண்டே மாலா, அறைக்குள் ஓடிப் போனாள்.

ஊர்ச் சிறுவர்கள், அந்த நாய்களின் கூட்டத்தைப் பார்த்துச் சிரித்துபடி இவர்களின் வீட்டைக் காட்டிப் பேசிக்கொண்டிருந்தனர். அந்த வழியாக வந்த பெண்களோ,’ச்சீ.. இதுங்க வேற நடக்கற பாதைய நாரடிச்சிகிட்டு!.. த்தூ.. கருமம்!’ என்று இவர்களின் வீட்டுப் பக்கமாக துப்பிவிட்டு, முகத்தைச் சுழித்து. முந்தானையால் மூடிக்கொண்டு வேறு வழியாக விரைந்து சென்றனர்.

பாக்கியத்திற்கு முகமெல்லாம் ‘ஜிவ்’வென்று சிவந்து போனது. நெஞ்சமெல்லாம் ஒரே எரிச்சல்!. அந்த ஆபாசத்தைக் காணச் சகிக்காமல் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். டைகரைப் பார்க்கவே அருவருப்பாய் இருந்தது. இனம்புரியாத உணர்வு உள்ளமெல்லாம் படர்ந்து வதைத்தது. வாசலில் நிற்க முடியாமல் நெற்றியில் அடித்துக் கொண்டே விரைந்து வீட்டிற்குள் புகுந்து கொண்டாள்.  

சுவாமிகள், மந்திரமாய் உச்சரித்த பஜ கோவிந்த ஸ்லோகம் இப்போது, நாராம்சமாய் அவள் காதுகளில் ஒலித்தது.

‘புனரபி ஜனனம்.. புனரபி மரணம்..’

* * *

முற்றும்

 

Comments

Popular Posts