காவு
நள்ளிரவிலிருந்தே கமலாவின் வேதனைக் கசியும்
மனதைப் போல், தூறிக்கொண்டே இருந்தது! சுகமான நித்திரைக்குத் தோதான இரவு! ஆனால், தூக்கம்
துக்கத்தில் தொலைந்து போனது. பொழுது, மந்தாரமான
மேகத்துடனேயே மெல்ல விடிந்தது.
மழைக்குச்
சனியன் பிடித்துவிட்டதென்று சலித்துக்கொண்டே எரியும் கண்களைக் கசக்கியபடி கமலா எழுந்தாள்!.
கோப்புகள் சில அன்றையக் கெடுவில் இருப்பது நினைவிலேயே இருந்தது. வேலைக்குப் போயே ஆகவேண்டிய
நிர்பந்தம்!. கவலைகள் நிரம்பிய மனத்தின் பாரம் தலையில் கனக்க,‘கோடாளி சாப்’ தைலத்தை
நெற்றிப் பொட்டுகளில் தேய்த்துக் கொண்டாள்.
நேற்று,
பிள்ளைகளின் கண்ணெதிரிலேயே ‘அம்மா’ என்ற ஸ்தானத்தை அசிங்கமாய்ச் சிதைத்துக்கொண்டதில்
அவளுக்கு ஒரு தெளிவு பிறந்திருந்தது. கோபி, வன்மத்துடன் ஆபாசமாய்க் கத்திய வார்த்தைகள் அப்படியே நெஞ்சில் குத்திக்கொண்டு துருத்தின. வலி,
பொறுக்கத் தக்கதாய் இல்லை. பிள்ளைகள் பாழ்பட்டுப் போவார்கள் என்ற பயம் பிடித்துக் கொண்டது.
ஒரே முடிவு!. அது ஒன்றே முடிவாக இரவெல்லாம் யோசித்து தீர்மானித்திருந்தாள்.
கோபியைக்
காணவில்லை!. அவன் எப்போது போனானென்றே தெரியவில்லை!. இப்போதெல்லாம் முடி உதிரும் ரகசியத்தைப்போல்
தனது நடவடிக்கைகளைச் செய்யத் தெரிந்துகொண்டிருந்தான்.
கமலா,
வழக்கம் போல் பெரியவர்கள் இருவரையும் பள்ளியில் இறக்கி விட்டு, மூன்றாவது மகளை ‘பேபி
சிட்டர்’ வீட்டில் விட்டுவிட்டு வேலைக்குப் புறப்பட்டாள்.
தோழி,
கல்யாணியைப் பார்க்க மனசு ஏங்கித் துடித்தது!. அவளின் ஆலோசனையும்; ஆறுதலும் இவளுக்கு உடனடியாகத் தேவைப்பட்டது.
கமலா, பார்க்கத்தான் மிகவும் தைரியமாகவும் ஒரு முடிவுடனும் இருப்பதுபோல் தோன்றினாலும்
உண்மையில், மிகவும் குழம்பியே போயிருந்தாள். எதிர்காலத்தை நினைத்துப் பார்க்கவே அஞ்சியவளாய்ச்
சிந்தைச் சிதறிக் கிடந்தாள்.
‘அம்மாவின்
அனுபவத்தில் அவனிடம் எதைக் கண்டாளோ! அவனைப் பார்த்த மாத்திரத்திலேயே பிடிவாதமாக வேண்டாமென்று
எச்சரித்தாளே!..’
காதலிக்கும்போது
தாய் எச்சரித்தது இப்போது, மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்து அவளை வாட்டியது. தாயைப்
பகைத்துக்கொண்டு, அவனைக் கைப் பிடித்ததற்குத் தண்டனையா இது? அம்மா, ஆத்திரத்தில் அவசரப்பட்டு,
‘நீ நாசமா போவ!..’ என்று ஏதும் சபித்துவிட்டாளோ?..
* *
*
முதலில், ஒரு சந்தேகமாகவே கணவனின் நடவடிக்கைகளைக்
கமலா கவனிக்கத் தொடங்கினாள். பாவி, அவனே அதற்கான சமிக்ஞையைக் காட்டினான்!. கொஞ்ச நாட்களாகவே அடிக்கடி தனிமையை நாடினான். குழந்தைகளின்
நினைப்பே அற்றவன்போல் கைப்பேசியின் திரையிலேயே கண்கள் ஒட்டிக் கிடந்தான். உள்ளங்கையில்
உலகம் தெரிந்ததோ!.
அன்று,
சமையலினூடே கண்ணாடியில் தெரிந்த கணவனை கமலா ரகசியமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவனும், அடிக்கடி சமையலறைப் பக்கமாய்ப் பார்த்து, எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றிக்கொண்டிருந்தான்.
இரண்டு கைகளின் கட்டை விரல்களோ ஆச்சரியம் படத்தக்க வேகத்தில் கைப்பேசியின் திரையைக்
குத்திக் கொண்டிருந்தன. உதடுகளில் அவ்வப்போது நெளிந்த புன்முறுவலோ, நெருப்பைக் கிளறி
விட்டுக்கொண்டிருந்தது. புன்னகைத்துக்கொள்ளும் போதெல்லாம் அவன், சமையலறைப் பக்கம் பார்த்துக்கொண்டான்.
கொதித்துக்கொண்டிருந்த உலை பொங்கி வழிந்தது!.
“யாரது
போன்ல?. எங்க, கொண்டாங்க பாப்பம்!.” என்று கத்தி, கைப்பேசியைப் பறிக்கப் போனாள் கமலா.
“ஏய்,
ஓனக்கென்னா கீலாவா புடிச்சிரிச்சி?.. கையில இருக்குற போன புடுங்குற!.”
“ஆமா,
எனக்கு கீலாதான் !.. இருக்கட்டும்!.. போன்ல யாரு? மொத அத சொல்லுங்க..”
“கூட்டாளி!..”
“கூட்டாளின்னா?..
ஆம்பளயா.. பொம்பளயா?...” – கமலாவுக்குச் சந்தேகமெல்லாம் இல்லை! அதனாலேயே பொறாமையில்
தகித்துக் கொண்டிருந்தாள்.
“ஆம்பளதான்!..
அதுக்கின்னா இப்ப?” உண்மையை நிலைநாட்ட வேண்டுமென்றால் உரக்கக் கத்த வேண்டுமோ!.
அந்த
அபத்தத்தைக் கமலாவால் தாங்கமுடியவில்லை!. அவனை அவமதித்து வன்மையாகப் புண்படுத்தும்
ஆத்திரத்தில் வாய், வரம்பை மீறியது.
“ஓ,
நீங்க எப்ப பொண்டானா மாறினீங்க?..”
அந்த
ஏளனத்தில் கணவன் என்ற அகங்காரம் வீறுகொண்டெழுந்தது.
“என்னடீ
சொன்ன?. அஞ்ஜடிக்கார நாயே..” என்று, அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.
அறை
தம்மேல் விழுந்ததுபோல் பிள்ளைகள் மூவரும் ‘அம்மா..’ என்று அலறிக்கொண்டு ஓடி வந்து,
தாயைச் சூழ்ந்து கொண்டனர். கடைசி மகள் தேம்பிக்கொண்டிருந்தாள். கமலா, பொறி கலங்கிப்
போனாள். கன்னத்தில் பதிந்திருந்த விரல்களின் தடயத்தைத் தடவ, கண்ணீர்ப் பெருகியது. இந்த பதிமூன்று வருட திருமண வாழ்க்கையில்
இப்படியொரு வன்முறைக்கு அவள் ஆளானதில்லை!. மிகவும் வலித்தது. அவனை அவமதித்துச் சொன்ன
வார்த்தையாலேயே அவன் நிதானமிழந்து போனான் என்று சமாதானம் அடைந்தாலும், ‘இவ்வளவுக்கும்
காரணமே அவன் தானே!.’ என்ற ஆத்திரம் நெஞ்சை அடைத்தது. அது, வெறும் சபலத்தில் ஏற்பட்ட உறவாய் அவளுக்குத்
தோன்றவில்லை. இப்போதெல்லாம் இரவில், அது அப்பட்டமாகவே தெரிந்ததே!.
* *
*
இருவரும் பேசியே ஐந்து நாட்கள் ஆகிவிட்டன!. சிறு, சிறு உரசல்களையும்,
கோபதாபங்களையும் கடந்து வந்த வாழ்க்கைதான்!.
என்றுமே அவை, அவர்களின் திருமணப் பந்தத்தையே அசைத்துப் பார்க்கும் உக்கிரத்தைக் கொண்டிருந்ததில்லை!.
ஆனால் இது, அப்படிப்பட்ட ஒன்று இல்லையோ என்று
அவளுக்கு அச்சமாய் இருந்தது. அவள், தணிந்து போகத் தயாராகவே இருந்தாள்.
கமலா,
இரங்கி வந்தாள்!
“சாப்பிடறிங்கலா?..”
பதிலில்லை!.
அவள் இன்னும் இரங்கினாள்.
“உங்களதான்
சாயாங்!. சாப்பாடு எடுத்து வெக்கிட்டா?.”
அவன்,
அவளைச் சட்டைச் செய்யவே இல்லை!. வேண்டுமென்றே குறுஞ்செய்தியைக் குத்திச் சிரித்துக்கொண்டிருந்தான்.
அவளால் அந்த அவமதிப்பைத் தாங்க முடியவில்லை. கொந்தளித்துப் போனாள்!. சமரசத்திற்கு வரமுடியாத
தூரத்திற்கு அவன், விலகிப் போவது தெரிந்தது.
அன்று
ஞாயிற்றுக்கிழமை!. காலையிலேயே சொல்லாமல் கொள்ளாமல் வெளியே கிளம்பிப் போனான். இருவருக்கிடையே
பேச்சு வார்த்தை இல்லாதது அவனுக்கு இன்னும் சாதகமாய்ப் போனது.
மாலையில்,
அவன் வீட்டிற்கு வந்தபோது கமலா கைப்பேசியின் கண்ணாடித் திரையைத் தேய்த்தபடி, தேநீர் குடித்துக் கொண்டிருந்தாள். பிள்ளைகள் மூவரும்
ஹாலில் டெலிவிஷன் பார்த்துக்கொண்டிருந்தனர். நேராகக் குளிக்கப் போனவன் மேல் வீசிய ‘அத்தரின்’
வாசம், புதிதாக இருந்தது! ஆரம்பத்தில், முகம் சுழிக்க வைத்த வியர்வை நாற்றத்தையே நாளடைவில் அவனுடைய அடையாளமாய்ப் பூண்டு, அவளைக் கிறங்கடித்தவன்!.
கமலா உடனே, ‘அந்த ‘பிட்ச்’ வாங்கி குடுத்திருப்பா போல..’ என்று பொறாமையில் பொருமினாள்.
வாசம் நாசிக்கு இதமாக இருந்ததால் நெஞ்சில் நஞ்சைத் தூவியது. இப்படியெல்லாம் தானும்
காதலைப் பரிமாறிக்கொண்டக் காலம், குழந்தைகள்
பிறந்ததோடு முடிந்து போனதைக் கழிவிரக்கத்துடன் நினைத்துக்கொண்டாள்.
கோபம்
பாரிய உணர்ச்சிகள், கொதி நிலையில் தளும்பிக்கொண்டிருந்தன. நடந்ததையெல்லாம் மறந்து பணிந்து
போகலாமென்றால் அவன், நடந்ததை மறக்க மாட்டான் போலிருந்தது.. நீண்ட குளியலுக்குப் பின்னர்,
கைலியை மட்டும் கட்டிக்கொண்டு வெற்றுடம்புடன் டெலிவிஷன் பார்க்க உட்கார்ந்தவன், பிள்ளைகள்
பார்த்துக்கொண்டிருந்த கார்ட்டூன் சேனலை மாற்றினான். பிள்ளைகள் சலிப்புடன் எழுந்து
தாயிடம் வந்தனர். ஒவ்வொரு சேனலாக மாற்றிக்கொண்டிருந்தவன், ‘ஆஸ்ட்ரோ அவானி’ சேனலில்,
உள்நாட்டு சிறுமிகள் இருவரின் மேல்முறையீட்டு வழக்கொன்றிற்கு உச்ச நீதிமன்றம் அளித்தப்
பரபரப்பு தீர்ப்பு, அவன் ஆர்வத்தை ஈர்த்தது. கும்பல் ஒன்று பதாகைகள் ஏந்தி, உச்ச நீதிமன்றத்
தீர்ப்பிற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. அந்தப் பிள்ளைகளின் தாயோ
பாவம், சாலையில் உருண்டுப் புரண்டு தலையிலும்; வயிற்றிலும் அடித்து அழுதுக்கொண்டிருந்தாள்.
அவளுடைய வழக்குரைஞர்கள் அவளைச் ஆசுவாசப்படுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருந்தனர்.
கமலா, அத்தாயின் புலம்பலைப் பார்க்கச் சகிக்காமல் பார்வையைத் திருப்பிக்கொண்டு, கோபியையே
வெறிக்கப் பார்த்தாள். அவனோ, அந்த தாயின் புலம்பலில் மிகுந்த பரவசம் அடைந்தவன் போல்
பார்வை லயித்துக் கிடந்தான்.
அப்போதுதான்,
கமலா அந்த அசிங்கத்தைப் பார்த்தாள்! ‘அவனுடைய சிவந்த மார்பு மற்றும் கழுத்தில் சிவந்து
கன்றிப் போய்த் தெரிந்தவை என்ன, முத்த அடையாளங்களா?. தனக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகவா
அவன் வெற்றுடம்புடன் வந்து உட்கார்ந்திருக்கிறான்?.’ அவள் நிதானத்தை இழந்தாள். அந்தப்
பற்குறியில் யாரோ ஒருத்தி, தன் தாம்பத்தியத்தில் அத்துமீறி நுழைந்திருந்த அசிங்கத்தைப்
பார்த்து கொந்தளித்துப் போனாள்!. அந்த அசிங்கத்திற்கு
இடங்கொடுத்ததும் இல்லாமல் அதை வலிந்து காட்டிக்கொண்டு
நின்ற அராஜகம், அவளை வெகுண்டெழச் செய்தது. சற்று முன்னர், பணிந்துபோக நினைத்த எண்ணமெல்லாம்
பாழாய்ப் போனது.
நேராக
அவனெதிரே போய் நின்று, அவன் கழுத்தைக் காட்டிக் கத்தினாள்.
“ஏய்,
இதெல்லாம் என்ன அசிங்கம்?..” வேறு எப்படியும் அவனை அழைக்க அவளுக்குத் தோன்றவில்லை.
நெஞ்சு படபடத்துத் துடித்தது. அந்த அலறலைக் கேட்டு பிள்ளைகள் மூவரும் திகைத்துப் போயினர்.
‘அம்மா..’ என்று, அழுதுக்கொண்டே அவளை அணுக
முடியாமல் ஒதுங்கி நின்றனர்.
“அசிங்கமா?..
பழசெல்லாம் மறந்து போச்சா?.. இதெல்லாம் இப்ப அசிங்கமா போனது தாண்டி உன்னோட பிரச்சின..”
“அப்படின்னா,
இதுக்கெல்லா என்ன அர்த்தமாம்?..”
“தெரியாது?..
வாய் இருக்குறது உன்ன மாரி நேரத்துக்கு கொட்டிகிறதுக்கும், இப்படி கீலா மாரி காத்தறதுக்கும்
மட்டுமே இல்ல!..”
அந்த
அவமானம் அவளை நிதானம் இழக்க வைத்தது. பிள்ளைகளை ஒரு கணம் மறந்தாள்.
“எந்த
தேவடியாவப் …. .. ….. வரிங்க?. அஞ்ஜடிக்கார
நாயே!...த்தூ..” என்று கையிலிருந்த தேநீரை அவன் முகத்தில் வீசியடித்து,
அவன் மேல் காறித் துப்பினாள்!..
கோபி
அதைக் கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவில்லை!.. இப்போது வெறி, ஆள் மாறியது! அவன், பாய்ந்து
அவள் தலை முடியைப் பிடித்திழுத்து,
“இந்த
மாரி வேலையெல்லாம் எங்கிட்ட வெச்சுக்காதடி பேப் …” என்று கத்தி, அவளின் பிடறியில் ஓங்கி
அறைந்து, வன்மத்துடன் பிடித்துத் தள்ளினான். அவள், சுவரில் மோதி தரையில் விழுந்தாள்.
பிள்ளைகள் மூவரும் தாயைச் சூழ்ந்து, கைகளை உதறிக்கொண்டு ‘அம்மா.. அம்மா…’ என அழுதுத்
துடித்தனர்.
பிள்ளைகளை
கட்டியணைத்துக்கொண்டாள்.. தான் பேசிய ஆபாசமான வார்த்தைகளை நினைத்து கூசிக் குறுகிப் போனாள். மூத்தவளின் முகத்தைப் பார்க்க
வெட்கமாய் இருந்தது!.
* *
*
கமலா, ஆபீசிற்குள் நுழைவதற்கு முன்பே காண்டீனில்
தோழி கல்யாணியைப் பார்த்தது மிகுந்த ஆறுதலைத் தந்தது.
சுவர்
ஓரமாய் மறைந்துகொண்டு, கைகுட்டையால் அழுகையை வாயிற்குள்ளேயே பொத்திக்கொள்ளப் பார்த்தாள்.
அது, கண்களில் பொத்துக்கொண்டு தாரைத் தாரையாய்
வழிய ஆரம்பித்தது. நடந்ததைக் கேட்டு தோழி, பதைபதைத்துப் போனாள். கமலாவின் கஷ்டம் இப்போது,
கல்யாணியையும் பற்றிக் கொண்டது. கமலா, பரிதாபமாய் தோழியைப் பார்த்தாள்.
எல்லாவற்றையும்
அந்த விநாடியே முடித்துக்கொள்ள, தான் ஒன்றும் தனியாளில்லையே என்று தோழி சொன்ன நிதர்சனம்
அவளைக் கலங்கடித்தது.
‘ஆத்தரத்துல
நாந்தான் ரொம்ப அவசரப்பட்டுட்டேனோ?.. கெட்ட வார்த்தையெல்லாம் பேசி மொகத்துல வேற காறித்துப்பிட்டேனே?..
அதுவும் சொந்த பிள்ளிங்க முன்னாடியே!..’
கோபியின்
துரோகத்தை நினைத்து மனம் கொந்தளித்தாலும் தனது அநாகரிகமான செயலால் அவன் மேல் இப்போது,
இரக்கமே சுரந்தது. கொஞ்சம் நிதானமாக இருந்திருக்கலாமே என்று மனசு உறுத்தியது.
உடனே
கணவனின் கைபேசிக்கு அழைத்தாள். அழைப்பு கிடைக்கவில்லை. மன்னிப்பு கேட்டு குறுஞ்செய்தி
ஒன்றை அனுப்பிவைத்தாள். பட்டுவாடா ஆகாமல் அந்தரத்திலேயே இருந்தது.
கமலாவால்
வேலையில் கவனம் செலுத்தவே முடியவில்லை! வீட்டிற்குப் போகத் துடித்தாள். கணவனிடம் நயமாய்ப்
பேசி, மன்னிப்பு கேட்கத் தவித்தாள். ஏதோ ஒரு சபலத்தில் அவன் செய்துவிட்ட துரோகத்தை
மன்னித்துவிடவும் அவள் தயாராகியிருந்தாள்.
மனசு
எதையெல்லாமோ நினத்து சஞ்சலப்பட்டுக்கொண்டிருந்தது. அந்த அவமதிப்பு, அவளைத் தன்னிரக்கம்
கொண்டு மறுக வைத்தது. மூன்று பிள்ளைகளைப் பெற்றெடுத்ததால் தன்னிடம் ஏற்பட்டுப் போன
மாற்றந்தான் என்ன?. கமலா, கழிவறைக்குப் போனாள்! ஆளுயரக் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக்கொண்டாள்.
முதுமையின் தடயத்தைத் தேடினாள்!. நாற்பத்தைந்து வயதிலேயே ஒருத்தி முதுமை ஏய்திவிடுவாளா
என்ன?. கூந்தலில் ஆங்காங்கே எட்டிப்பார்த்த வெள்ளை முடிக்கு ‘டாய்’ அடித்திருந்ததால்,
அது கவர்ச்சியையே காட்டியது!. முகம், முலைகள், வயிறு என்று அங்க வாரியாகப் பார்த்துக்கொண்டு
நின்றாள். இன்னொரு பெண்ணை அவன் தேடிப் போவதற்கு தான் இழந்துவிட்ட கவர்ச்சியைத் தேடினாள்.
முகம் சற்றுத் தளர்ந்து பூசியிருந்தாலும் அழகாகவே இருந்தது. பிற ஆண்களின் திருட்டுப்
பார்வையே அதற்கு சாட்சி! ஆனால், மூன்று பிரசவங்களைக்
கண்ட தடயம் மட்டும் வயிற்றுப் பகுதியில் விகாரமாய்ச் சரிந்து கிடந்தது. உடல் சற்று
பருமனாகிப் போனதில் முலைகளின் மதர்ப்பு இப்போது எடுபடவில்லைதான்!. ஆயினும், மூன்றாவது
பிரசவம் வரையிலும்கூட அம்மணத்தில் அவனின் ஆர்வத்தை முதலில் தூண்டியவை அவையாகத்தானே
இருந்தன!.
அப்போதுதான்,
கைகளைக் கழுவக் குழாயைத் திறந்தபோது பீய்த்தடித்தத் தண்ணீர், முகத்தில் தெரித்ததுபோல்
அந்த எண்ணம், அவளுடையக் கருத்தில் தெரித்து, சிந்தனையைத் தூண்டியது.
-மூன்றாவது
பிரசவத்தோடு கமலா கர்ப்பப்பையை நீக்கியிருந்தாள். குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டியதால்
குழந்தையுடனேயே படுக்கை!. உடல் வேறு தேற வேண்டியிருந்தது! கோபி, இன்னொரு அறையில் தனியாளாகப் படுத்துக்கொண்டிருந்தான்.
‘அப்போதுதான்
கோபி, வேறொரு உறவைத் தேடிக்கொண்டானோ!..’ கமலாவிற்கு
‘பகீர்’ என்றது. ‘நானே அதற்குக் காரணமாகிப் போனேனோ’ என்று பதற்றமடைந்தாள். பிள்ளை பராமரிப்பு;
உத்தியோக களைப்பு மற்றும் வீட்டு வேலைகளுக்கு மத்தியில், தாம்பத்திய உறவைப் பற்றி நினைக்க
எங்கே முடிந்தது? உடல் தேறியப் பின்னரும் அதுவே
வழக்கமானதே பிழையாகிப் போனதோ! பிள்ளைகள் மூவரும் தூங்கியப் பின்னரும்கூட கணவனின் நினைப்பே
இல்லாது போனதே!. பாவி! அவனும்கூட ஒரு சமிக்ஞையும் காட்டாமல் அடங்கிப் போனானே? ‘அடங்கிப் போனானா?.’ முதுமையை எங்கோ
தோற்றத்தில் தேடியது அவளுக்கு ஞாபகம் வந்தது.
‘எல்லாமே
என்னால் தானோ!.’
கணவனை
உடனடியாகப் பார்க்க வேண்டும் போல் ஏக்கமாய் இருந்தது. அவனுடைய பஹீனத்தை அவள் நன்றாகவே
அறிவாள். தேவை, பிள்ளைகள் அயர்ந்து தூங்கிப்போகும் ஒரு தருணம். ‘உனக்கு வாய் இருப்பது
கொட்டிக்க மட்டுந்தான்..’ என்று அவன் செய்த அவமானம், இன்னும்கூட வலித்தது. அது உண்மையில்லை
என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும்!. முன்பெல்லாம் அவன், அவளிடம் வேண்டிய ஆரம்ப சரசமே
அதுவாகத்தானே இருந்தது!.
* *
*
சிந்தை முழுக்க கோபியே நிறைந்திருந்தான்.
அவள் அனுப்பிவைத்த குறுஞ்செய்தியைப் பார்த்திருந்தான். ஆனால், பதில் சொல்லாதது கவலையைக்
கொடுத்தது. அகங்காரம் பார்க்காமல் இன்று முதல் நகர்வை தானே செய்வதென்று தீர்மானித்துக்கொண்டாள்.
‘எனக்கு
வாய் இருப்பது கொட்டிக்க மட்டுந்தானா?.. பார்ப்போமே இன்றைக்கு!.’ நினைக்கவே கமலாவிற்குக்
கிளர்ச்சியாய் இருந்தது.
வழக்கம்போல்
பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள ‘பேபி சிட்டர்’ வீட்டிற்குப் போனாள். அங்கே, ஆச்சரியம் காத்துக்
கிடந்தது.
“வாம்மா!..
புள்ளிய மொதல்லியே உம் புருஷன் கூட்டிக்கிட்டுப் போயிடாரேம்மா!..”
கமலாவிற்கு
சந்தோஷம் பிடி படவில்லை!
‘நடந்த
சண்டைக்கு அவனும் வருந்தியிருக்க வேண்டும்! என்ன இருந்தாலும் அதற்குக் காரணமே அவன்தானே?
அவன் நல்லவன்தான்!. என்ன, என் படுக்கையைப் பங்கு போட்டுக்கொள்ள எந்த நாய்க்கோ இடங்கொடுத்ததால்
எனக்கு வெறி பிடித்துக்கொண்டது.’
கமலா,
அவசரமாக வீட்டிற்குப் போனாள். இருவருக்கிடையே அவ்வப்போது மனஸ்தாபம் ஏற்படும் போதெல்லாம்
கோபி, இப்படித்தான் பிள்ளையை அழைத்துக்கொண்டு சமாதானத்திற்கு தூது விடுவான். அவள் மிகவும்
மனம் நெகிழ்ந்து போனாள்.
வீட்டை
அடைந்தாள்!
“அம்மா..”
என்று பெரிய பிள்ளைகள் இருவரும் கதவைத் திறந்துகொண்டு ஓடி வந்தனர். அவர்களைத் தன்னோடு
அணைத்துக்கொண்டு ஆவல் பொங்க,
“அப்பா
எங்கடீ?..” என்றாள்.
“தெரியிலியேம்மா!.
ஆமா, நீங்க பாப்பாவ கூட்டிட்டு வர்லியாம்மா?.” பெரியவள் கேட்டாள்.
வெளியில்
மழை மட்டுமே பெய்தது. இடிக்காத இடியொன்று அவள் தலையில் விழுந்ததுபோல் அவள் நிலைக்குழைந்து
போனாள். உடனே கோபியின் கைப்பேசியைத் தொடர்பு கொண்டாள். அது, ‘ஸ்விட்ச் ஆஃப்’ ஆகியிருந்தது!.
அவளுக்கு உடலெல்லாம் பதறத் தொடங்கியது. சிந்தை மரத்துப் போனதுபோல் ஒரு கணம், செய்வதறியாது
குழம்பி நின்றாள். அறைக்குச் சென்று அலமாரியைத் திறந்து பார்த்தாள். அவளின் பயம், அலமாரிக்குள்
அலங்கோலமாய் அப்பிக் கிடந்தது. மாலதியின் உடைகள் சிலவற்றைக் காணவில்லை! நின்றுக்கொண்டிருப்பது
கீழே விழுந்துவிடும் பயத்தைக் கொடுத்தது. விரைந்து சென்று சோபாவில் உட்கார்ந்து கொண்டாள்.
அம்மாவின் முகத்தைப் பார்த்துக் கலவரம் அடைந்த பிள்ளைகள், அவளை அணைத்துக்கொண்டு ஆளுக்கொரு
பக்கம் அழுவதற்குத் தயாராய் நின்றனர்.
திடீரென்று,
உயிர்த்தோழி கல்யாணிதான் நினைவிற்கு வந்தாள். உடனே கைபேசியில் அழைத்தாள்!
“கல்யாணி,
நான் மோசம் போயிட்டேண்டி!. எங் கடைசி மவ மாலதிய காணோம்டீ!.. அந்த நாயி மொதல்லியே பேபி
சிட்டர் வீட்லேர்ந்து புள்ளைய கூட்டிக்கிட்டாராண்டி!. ஆனா, வீட்ல ரெண்டு பேருமே இல்லை.
எனக்கு பயமா இருக்குடீ!.”
அப்போது,
‘மக்ரிப்’ தொழுகையின் அழைப்பு கம்பீரமாய் ஒலிக்க,
வீட்டில் இருள் கெட்டித் தட்டிக் கொண்டிருந்தது.
கொஞ்ச
நேரத்திலேயே கல்யாணி வந்து சேர்ந்தது கமலாவிற்கு மிகுந்த ஆறுதலைத் தந்தது. அவள், இவளை
அணைத்துக்கொண்ட மறுகணமே இவள் மீண்டும் அழுகையில் உடைந்து தேம்பினாள்.
கமலாவிற்கு
ஆறுதல் சொல்ல கல்யாணிக்கு வார்த்தைகளில்லை! அவளும் எதையெல்லாமோ நினைத்துப் பயம் கொள்ளலானாள்.
மாமியாருக்குப் போன் போடச் சொல்லி ஆலோசனைத் தந்தாள். கமலாவிற்கு உடனே நம்பிக்கைப் பிறந்தது.
மாமியாருக்குப் போன் செய்து விஷயத்தைச் சொன்னாள்.
மகன்
மேல் ஏதோ அபாண்டத்தைச் சுமத்திவிட்டதுபோல் மாமியார் மௌனமாகிப் போய், ’சட்’டென்று முகத்தைத்
திருப்பிக்கொண்டதுபோல், ‘படக்’கென்று தொடர்பைத் துண்டித்தாள்..
ஏதேதோ
விபரீதத்தையெல்லாம் நினைத்து கமலா நிம்மதி கெட்டாள். கல்யாணி, இரண்டு நாட்களுக்கு இருந்துவிட்டு,
‘தைரியமா இருடீ..’ என்று சொல்லிவிட்டு பாவி, தைரியத்தைத் தன்னோடே எடுத்துக் போனாள்.
நல்ல
வேளையாக அடுத்த நாளே, தோழியோடு போன தைரியத்தை கமலாவின் தாய், கையோடு கொண்டுவந்து சேர்த்தாள்.
அம்மாவின்
பங்கிற்கு அவள் மூன்று நாட்கள் இருந்துவிட்டு புறப்பட்டுப் போனாள்.
* *
*
காலம், காயத்தை ஆற்றாவிட்டாலும் நெருப்பை
மறைத்த நீறாய் அதன் மேல் பூத்துப் படிந்தது.
போலீசில் செய்த புகாருக்கும் இதுவரை எந்த தகவலும் இல்லை. அவநம்பிக்கையில் கமலா, நடைப்பிணமாகிப்
போனாள். தீராச் சோகத்தையே தனது வாழ்க்கையாய் வாழ்ந்து கொண்டிருக்க ஆரம்பித்தாள்.
‘மூனு
வயசுல சொந்த அப்பனாலியே கடத்திட்டு போவப்பட்ட மவ. இப்ப ஏழு வயசு இருக்குமே?. ஐயோ மவளே!.
நீ எங்க, எப்பிடிடீ இருக்க?. அம்மாவ உன்னும் ஞாவகம் இருக்குமாடி உனக்கு?.’
எந்நேரமும், மகள் ஏதேதோ இக்கட்டில் இருப்பதாக நினைத்துக்கொண்டு
அவளுக்காக இவளும் அந்த இன்னலை அனுபவித்துக் கொண்டிருக்கத் தலைப்பட்டாள். பாவி, இரண்டாவது
கல்யாணம் ஏதும் செய்திருந்தால் சித்தியின் கொடுமையில் மகள் செத்துக்கொண்டிருப்பாளே
என்று எண்ணம் எழுந்தபோது பீதிக்குள்ளாகித்
துவண்டாள். உயிர் மட்டுமே எஞ்சியிருந்த பிணமாகிப் போனாள்!.
வழக்கம்
போல் வேதனையில் தொலைந்து போன ஒரு மாலைப்பொழுது!.
வாசலில்
காமினி, “அம்மா..!” என்று கத்தி, அப்படியே ஸ்தம்பித்து நின்றாள். கமலாவிற்கு உடனே கோபியின்
ஞாபகந்தான் வந்தது. இவளையும் கடத்திப்போக வந்துவிட்டானோ என்று பதறிப் போனாள்.
“ஐயோ
காமினி, என்னம்மா ஆச்சி? சுருக்கா வீட்டுக்குள்ளார ஓடிவந்துருடீ..” என்று கதறிக்கொண்டே
வாசலுக்கு ஓடி, மகளை அணத்துக்கொண்டு சாலையைப் பார்த்தாள்.
‘யாரது!..’
பரிட்சயமில்லா
உடையில் தனது அடையாளத்தை இழந்து, எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் ஏதோ ஒரு பிராண அவஸ்தையை
உணர்ந்த வேதனை, நடையிலும் முகத்திலும் தெரிய,
நொண்டிக்கொண்டு வந்தவளை ஒரு கணம் கமலாவிற்கு யாரென்றே தெரியவில்லை!
“அம்மா,
பாப்பாம்மா!..” இரண்டாவது மகள்தான் கத்தினாள்.
“ஆ..
மாலதி!.. ஐயோ என் கண்ணே!. என்ன கோலம்டீ இது?..” என்று ஓடிப்போய் அவளை வாரி அணைத்துக்கொண்டு
முகத்தை முத்தத்தால் ஒத்தி எடுத்தாள். ஆனால், பெற்ற மகளேயானாலும், சுதந்திரமாக முகமெல்லாம்
முத்தமிட முடியாமல் தலையில் அணிந்திருந்த முக்காடு தாயைத்
தடுத்தது. அவளை ஒரு குழந்தையைப் போல்
தூக்கிக்கொண்டு வீட்டிற்குள் ஓடி வந்தாள். அக்காக்கள் இருவரும், ‘பாப்பா..’ என்று அவளைத்
தாயோடு சேர்த்து அணைத்துக்கொண்டு அழுத் தொடங்கினர். மாலதி, கண்களில் தெரிந்த சோகத்தை;
முகத்தில் உலர்ந்து கிடந்த வலியைச் சொல்ல வார்த்தைகள் அற்றவள்போல் தாரைத் தாரையாய்
கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தாள். கமலாவும்,
அவளின் நிலையைப் பார்க்கச் சகிக்காமல் வாயைப் பொத்திக்கொண்டு கண்ணீரில் உருகிக்கொண்டிருந்தாள்.
மகளிடம்
கேட்க ஓராயிரம் கேள்விகள் இருந்தன. ஆனால் அதற்கு முன், அழுது தீர்க்க வேண்டிய வேதனை
இருவரின் நெஞ்சங்களிலும் நிறைந்து கிடந்ததால் அழுதுக்கொண்டிருந்தனர்.
மாலதியின்
தோற்றம் ஒரு வேளையே சாப்பிட்டவள் போல் நரங்கிக் கிடப்பதைப் பார்க்கச் சகிக்காமல், தாய் கேட்டாள்.
“தாயே,
ஏதாவது சாப்புட்டியாடி?.. என்னாச்சு? ஏண்டீ இப்படி எளச்சி கெடக்குற?..”
“ம்மாக்,
சாயா சங்காட் லாபார்ம்மா!.“ மாலதி மலாய் மொழியில் கெஞ்சினாள்!
“அய்யோ
மவளே!.” என்று மகளை அணத்துக்கொண்ட கமலா,
“இப்ப
நான் என்னா செய்வேன்?” என்று தலையில் அடித்துக்கொண்டு அரற்றினாள். கோபியின் மேல் கொலை
வெறி கொண்டு கொந்தளித்தாள்.
ரொம்ப
நேரமாக நின்றுக்கொண்டிருந்ததில் தங்கவொண்ணா வலியையும், எரிச்சலையும் உணர்ந்தவள் போல்
மாலதி, கால்முட்டிகள் இரண்டிலும் கைகளை ஊன்றி மெல்ல குனிந்து, கால்கள் நடுங்க “சங்காட்
சக்கீட்ம்மாக்…” என்று தேம்பி அழுதுக்கொண்டே சோபாவில் சாய்ந்து உட்கார்ந்தாள்.
தாயின்
கழுத்தில் கைகளைக் கோர்த்துக்கொண்டு, உரக்கப் பேசினால் எங்கே வேதனைத் தாங்க முடியாது
போகுமோ என்பதுபோல், காதிற்குள் ரகசியமாய் வலியின் காரணத்தை அழுத்துக்கொண்டே சொன்னாள்.
அதைக் கேட்ட தாய், தலையில் இடி விழுந்ததுபோல்
அப்படியே உணர்ச்சிகள் உறைந்து போய் நின்றாள்.
“ஐயோ
என் தங்கமே!. என்ன கொடுமடீ இது?.” என்று மகளை ஆரத் தழுவிக்கொண்டுகொண்டு குலுங்கி குழுங்கி
அழுதாள். இரண்டு மகள்களும்கூட அம்மாவோடு சேர்ந்துக்கொண்டனர்.
அப்போது,
‘மக்ரீப்’
தொழுகைக்கான அழைப்பு, அருகிலிருந்த மசூதியிலிருந்து அதிகாரத்துடன் மிகக் கம்பீரமாய்
ஒலித்தது. தாயும், பிள்ளைகளும் பிறந்ததிலிருந்தே தினமும் தவறாமல் கேட்டுப் பழகிப்போன
அழைப்புதான்!. சமயங்களில், அழைப்பின் வாசகங்களை பெரிய மகள்கள் உடன்சேர்ந்து வாயிற்குள்
ஒப்புவித்துக்கொள்வதும் உண்டு. வீட்டில், பூஜை அறை விளக்குகூட தினமும் அந்த அழைப்பைக்
கேட்ட பின்னரே ஏற்றி வைக்கப்பட்டது. இப்போது, அந்த அழைப்பைக் கேட்ட மாத்திரத்திலேயே
மாலதி, மிகவும் பதற்றத்திற்குள்ளாகிப் பயந்து, ‘ம்மாக்… ம்மாக்..’ என்று பினாத்திக்கொண்டே
நடுங்கித் துடித்தவளாய், தாயின் பாதுகாப்பிற்குள் பதுங்குபவள்போல் கட்டிப்பிடித்து,
அவளுள் புகுந்து ஒளிந்துகொள்ள முனைந்தாள்.
* * *
முடிந்தது.
எழுத்து,
மலேசியா ஸ்ரீகாந்தன்

Comments
Post a Comment