பேசாப் பொருள் பேசினேன் – 43
மதம் என்பது ஆயுதமாகிப் போனால்?..
இளைய மகளை தனது முன்னால் கணவனிடமிருந்து மீட்க ஓர் இந்துத் தாய் நடத்தும் 16 வருட போராட்டம்.
திருமதி எம். இந்திரா காந்தி!.
‘Interfaith Custody’ வழக்கால் மலேசியாவில் பிரபலமடைந்த ஒரு பெயர். பத்தாண்டுகளுக்கும் மேலாக சிவில் நீதிமன்றத்திற்கும் ஷரியா நீதிமன்றத்திற்கும் இடையே இருந்த இழுபறியில் ஈப்போ உயர் நீதிமன்றத்தால் புரட்சிகரமான, மற்றும் நியாமான, ‘Ground-breaking’ தீர்ப்பொன்று வழங்கப்பட காரணமானவர்.
1993-ல் எம். இந்திரா காந்தியும் கெ. பத்மநாபனும் சிவில் சட்டத்தில் கீழ் திருமணம் செய்துக் கொள்கின்றனர். அவர்களுக்கு முறையே தேவி தர்ஷினி, கரன் தினேஷ் மற்றும் பிரசன்ன திக்க்ஷா என இரண்டு பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளையும் பிறக்கின்றனர்.
10 வருட திருமண வாழ்க்கை 2009-ல் சகித்துக்கொள்ள முடியாதபடிக்கு பிரச்சினைக்குள்ளாகிறது. இருவரும் பரம எதிரிகளைப் போல் சண்டையிட்டுக்கொள்கின்றனர்.
கணவன், மனைவியை விட்டுப் பிரிய தீர்மானிக்கிறான். அந்தப் பிரிவு ஒரு தீர்வாக இல்லாமல், மனைவிக்கு காலத்திற்கும் மறக்க முடியாத ஒரு தண்டனையாக இருக்கவேண்மென்ற வன்மம் கொள்கிறான்.
31-3-2009-ம் நாள், 11 வயதுக் குழந்தையான மூன்றாவது பிள்ளை மகள் பிரசன்னா திக்க்ஷாவைத் தாய்க்குத் தெரியாமல் தூக்கிக்கொண்டுத் தலைமறைவாகிறான். மனைவியை வேதனைக்குள்ளாக்க அந்த ஆட்கொணர்வு அவனுக்குப் போதவில்லை.
08-04-2009-ல் கெ. பத்மநாபன் என்ற அந்தக் கணவன்/தகப்பன் இஸ்லாத்திற்கு மதம் மாறி, ரிட்டுவான் அப்துல்லா என்ற பெயரைத் தரிப்பதோடு, தாயிற்குத் தெரியாமலும் அவளின் ஒப்புதல் இல்லாமலும் மூன்று பிள்ளைகளையும்கூட இஸ்லாத்திற்கு மதம் மாற்றுகிறான். கூடவே, பேராக் மாகாண ஷரியா நீதிமன்றத்தில் மூன்று பிள்ளைகளையும் தனது பாதுகாப்பில் வைத்துக்கொள்ளும் தடை உத்தரவையும் பெறுகிறான்.
29–9–2009-ல் ஷரியா நீதிமன்றம் அந்த மூன்று பிள்ளைகளும் தந்தையின் நிரந்தர பாதுகாப்பில் இருக்க அனுமதியும் வழங்குகிறது.
திருமணம் என்ற ஏற்பாடு பொய்த்துப்போனால் அது காட்டும் முகம்தான் எவ்வளவு கொடூரமிக்கது?.
11–3–2010-ல் ஈப்போ உயர் நீதிமன்றம் எல்லா தரப்பு வாதங்களையும் செவிமடுத்தப் பின்னர், மகள் பிரசன்னா திக்க்ஷாவை உடனடியாக தாயிடம் ஒப்படைக்கச் சொல்லித் தீர்பளிக்கிறது. ஆனால், ரிட்டுவான் அப்துல்லா (கெ. பத்மநாபன்) உயர் நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும்படியாக மகளை தாயிடம் ஒப்படைக்க மறுக்கிறான்.
25–7–2013-ல் அதே உயர் நீதிமன்றம் மூன்று பிள்ளைகளின் கட்டாய மத மாற்றம் அரசியலமைப்பிற்கு எதிரானது என்று அறிவித்து, அந்த மத மாற்றத்தை ரத்து செய்து, முதல் இரண்டு பிள்ளைகளின் மூல மத அடையாளம் நிலைநிறுத்துகிறது.
18–10–2013-ல் ரிட்டுவான் அப்துல்லா நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிப்பதால், அவனைச் சிறையில் அடைக்கும்படி எம். இந்திரா காந்தி மேல் முறையீடு செய்கிறாள். ரிட்டுவான் அப்துல்லாவோ தனது ஷரியா மன்ற ஆணை உயர்நீதிமன்ற ஆணையிலிருந்து தன்னை விடுவிப்பதாக பதில் முறையீடு செய்கிறான்.
இரண்டு நபர்களுக்கிடையே ஏற்பட்ட பிளவு, இரண்டு மதங்களை உள்ளுக்கிழுத்து, இப்போது இரு வேறு நீதித்துறை அமைப்புகளின் (ஷரியா vs சிவில்) மோதலாக உருவெடுக்கிறது.
ஷரியா நீதிமன்றத்திற்கோ, ‘மலேசியா ஓர் இஸ்லாமிய நாடு’ என்ற அடையாளத்தை எந்த அமைப்பும் கேள்விகுட்படுத்தலாகாது என்ற ஆதிக்க மனப்பான்மை மேலெழுந்து நிற்கிறது.
‘குழந்தை பாதுகாப்பை சிவில் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் பெற்ற இந்துத் தாயின் உரிமையை இஸ்லாத்தைத் தழுவியதால், ஷரியா சட்டத்தின் மூலம் அக்குழந்தையின் பாதுகாப்பு உரிமையைப் பெற்ற முன்னால் கணவன் குழந்தையைத் தாயிடம் ஒப்படைக்காமல் சட்ட அவமதிப்பு செய்ய முடியுமா?.’
உயர் நீதிமன்றம், இருதரப்பினரோடு, ‘amicus curiae[‘ என்ற சில பொதுநல அமைப்புகளையும் ஒன்று கூட்டி, வழக்கை ஆராய்கிறது.
முடிவில், நீதிபதி கீழ்க்காணும் தீர்ப்ப வழங்குகிறார்.
“However one looks at the problem of custody whether with or without the change of one’s religion, the common ground must surely always be the welfare of the child. The maternal bond between a mother and child is irreplaceable.
There is no way to measure the misery of the lost years between a mother and her infant child, taken away from her when the suckling babe was hardly 11 months old and now with the passage of time, she would be 6 years old. Hope springs eternal in the darkest of nights and with the police being directed to execute the recovery order coupled with a warrant of committal, she may yet be able to see and hold her child in her embrace once again.”
30-05-2014-ல் உயர்நீதிமன்றம் ஜூன் 6-ம் தேதிக்குள் பிரசன்னா திக்க்ஷாவைத் தாயிடம் ஒப்படைக்கச் சொல்லி ஆணையிடுவதோடு, ரிட்டுவான் அப்துல்லாவை உடனடியாக கண்டு பிடிக்கும்படியும் காவல் துறைக்கும் ஆணையிடுகிறது. ரிட்டுவான் அப்துல்லா மீண்டும் நீதிமன்றக் கெடுவை புறக்கணிக்கின்றான்.
12-09-2014 உயர் நீதிமன்றம் ‘Mandamus order’-ஐ பிறப்பித்து, அவனைக் கைது செய்து, மகளைத் தாயிடம் சேர்ப்பிக்கச் சொல்கிறது.
15-09-2014 அட்டர்னி ஜெனரல் சேம்பர்ஸ் ஐ ஜி பி-க்காக ‘Mandamus order’-ஐ எதிர்ந்து மேல் முறையீடு செய்கிறது.
இதற்கு பின்னர் கீழ்க் காணும் பல சட்ட இழுபறிகள் நடந்தேறுகிறன.
- Court of Appeal ‘Mandamus order’-ஐ ரத்து செய்கிறது.
- நாட்டின் உச்ச நீதிமன்றம், ‘Mandamus order’ ரத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்ய எம். இந்திரா காந்திக்கு அனுமதி வழங்குகிறது.
- Court of Appeal ஷரியா மன்றம் 2009-ல் அனுமதித்த ரிட்டுவான் அப்துல்லாவின் கட்டாய மதமாற்றத்தை மீண்டும் நிலை நிறுத்துவதோடு, பிரசன்னா திக்க்ஷா 18 வயதை அடைந்ததும் தனது மதத்தை சுயமாகத் தீர்மானிக்கும் உரிமையையும் அவளுக்கு வழங்குகிறது. ஷரியா மன்றத்தின் ஆணையை கேள்வி கேட்கும் உரிமை உயர் நீதிமன்றத்திற்கு கிடையாது என்றும் தீர்ப்பளிக்கிறது.
- உச்ச நீதிமன்றம் (பெடரல் கோர்ட்) ‘Court of Appeal’-லின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய எம். இந்திரா காந்திக்கு அனுமதி வழங்குகிறது.
- உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றத்தின்’ mandamus order’-ஐ மறுவுறுதி செய்ததோடு, ரிட்டுவான் அப்துல்லாவை உடனடியாக கண்டுப் பிடித்து, குழந்தையை மீட்கும்படி போலீசுக்கு உத்தரவிடுகிறது.
-உச்ச நீதிமன்றம் ஏகமனதாக எம். இந்திரா காந்தியின் பக்கம் நின்று, கட்டாய மதமாற்றத்தை செல்லுபடியாகாமல் செய்ததோடு, எதிர்காலத்தில் மேஜர் ஆகாத பிள்ளைகளின் மதமாற்றத்திற்கு தாய், தந்தை இருவரின் சம்மதமும் இருக்க வேண்டுமென்ற ‘Landmark’ தீர்ப்பொன்றை அளிக்கிறது.மேலும், ‘Registrar of Muallafs’-க்களின் செயல்களை விசாரணைக்கு உட்படுத்தும் அதிகாரமும் உச்ச நீதிமன்றத்திற்கு இருப்பதாக உறுதி செய்கிறது.
- எம். இந்திரா காந்தி, ஐ ஜி பி மற்றும் வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற துறையினர் மீது உச்ச நீதிமன்றத்தின் ‘mandamus order’-ஐ வேண்மென்றே செயல்படுத்தத் தவறியதற்காக ரிங்கிட் 100 மில்லியன் நஷ்டஈடு கோரி வழக்கொன்றை பதிவு செய்கிறார்.
-உயர் நீதி மன்றம், காவல்துறை ரிட்டுவான் அப்துல்லாவை கண்டுபிடிக்க தன்னாலான அனைத்தையும் செய்துவிட்டதாகக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்கிறது.
- எம். இந்திரா காந்தி, காவல் துறையின் பொறுப்பற்ற செயலை ‘Court of Appeal’ -லிடம் முறையிடுகிறார்.
11-08-2025 The Court of Appeal எம். இந்திரா காந்தியின் நஷ்டஈடு வழக்கில் தீர்ப்பு ஏதும் சொல்லாமல் வழக்கைத் தள்ளி வைக்கிறது.
2020-ல் போலீசின் கையாலாகாதனத்தை குறித்து ஊடகம் கேள்வி எழுப்பியதுபோது, உள்துறை அமைச்சர் கொஞ்சமும் வெட்கமில்லாமல், குற்றவாளி மலேசியாவில் இல்லையென்றும், அண்டை நாட்டிற்குத் தப்பித்துப் போய், அடிக்கடி இடம் மாறிக்கொண்டே இருப்பதால் போலீசாரால் அவனைக் கண்டுப் பிடிக்க இயலவில்லையென்றும், ‘Lying through his teeth’.
ஆனால், அப்டுல் ஹமிட் படோர் என்ற முன்னால் ஐ ஜி பி பத்திரிக்கையாளகளிடம் சொன்ன இந்த அறிக்கையோ மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அவன் விட்ட அறிக்கை,
‘குற்றவாளி எங்கே இருக்கிறான் என்பது எனக்குத் தெரியும் என்பதோடு, மூத்த அரசியல்வாதிகளின் உதவியோடு குழந்தைக்கு நல்லது செய்ய கடத்தல்காரனின் மனதை மாற்ற முயன்றுக்கொண்டிருக்கிறேன்.’
சொன்னது யார்?. நாட்டின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸ்!.
அப்படியாயின் நீதிமன்றத்தில் இத்தனை வருடங்களாக போலீஸ் தரப்பு, ‘குற்றவாளி இருக்குமிடம் தெரியவில்லை..’ என்று சாட்சியமளித்ததின் பொருள்?.
‘இதுதாண்டா போலீஸ்..’
2025 அக்டோபர் தொடங்கி அரசாங்கம் இரண்டு உதவித் திட்டங்களை மக்களுக்கு அறிவிக்கிறது.
-‘Budi95’ (ஏரிபொருள் மானியம்)
-‘Rahmah Necessities Aid’ (அத்தியாவசியப் பொருட்கள் வாங்கும் மானியம்)
இந்த இரண்டு திட்டங்களுமே ஒருத்தரின் அடையாளக்கார்டைக் கொண்டு உதவி பெறும் மானியங்களாகும்.
சமீபத்தில் ‘Malaysiakini ‘ என்ற உள்ளூர் மின்னிதழ் நடத்திய சோதனையில் ரிட்டுவான் அப்துல்லா என்ற கடத்தல்காரன் இந்த இரண்டு மானியங்களையும் கொஞ்சமும் அச்சமின்றி அனுபவித்துக்கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.
இதற்கு மேலும் இந்தப் போலீசுக்கு என்ன ஆதாரம் வேண்டும்?.
இந்த லட்சணத்தில் எங்களின் போலீஸ் துறை தனது நெற்றியில் ஏந்தியிருக்கும் இலட்சிய வாசகம்…
Bersih-தூய்மை Cekap-திறமை Amanah-நேர்மை
Nazri Abdul Aziz என்ற முன்னால் அமைச்சர் இந்த வழக்கைக் குறித்து ஒரு முறை இப்படி சொன்னார்.
“As a Muslim, I am not proud of these things. Where is the fairness in this?”
Tengku Maimun என்ற நாட்டின் முன்னால் தலைமை நீதிபதி ஒரு அமர்வில் சொன்ன இந்த கருத்து, நேர்மையான எந்த முஸ்லீமையும் தலைக்குனிய வைக்கும். அது,
‘Authorities allegedly failed to enforce court rulings in Indira’s favour due to the mistaken belief that Islam requires special protection.’
‘Malaysiakini ‘-யின் பத்தியாளர்களில் ஒருவரான S. Thayaparan, ‘இந்த மான்ய புரட்டு’ தெரியவந்ததும் தனது அன்மைய கட்டுரையை இப்படி முடிக்கிறார்.
‘One last point on the religious dynamic of this kidnapping and the actions of the state. If you believe in a just almighty, God is watching.’
ஆக, ஓர் ஏழைத் தாய்க்கு எதிராக போலீஸ், உள்துறை அமைச்சு, அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்கம் என்று எல்லாருமே எதிர்த்து செயல்பட்டால், பாவம் ஏழைத் தாய் என்னதான் செய்வாள்?.
எம். இந்திரா காந்தி, சில சமூக ஆர்வல இயக்கங்களுடன் சேர்ந்து ‘சோகோ’ பேரங்காடியிலிருந்து ‘புக்கிட் ஆமான் போலீஸ் தலைமையகம்’ வரை, மகள் பிரசன்னா திக்க்ஷாவின் நடைவண்டியில் அவள் பாவித்த விளையாட்டுப் பொருட்கள் மற்றும் துணிமணிகளை அள்ளிப் போட்டு தள்ளிக்கொண்டு மனசாட்சியைத் தீண்டும் அறப் போர் ஒன்றை நவம்பர் 22-ம் திகதி நடத்த உள்ளார்.
நான், ஒரு சட்ட நிபுணர் கிடையாது. ஆயினும் காவல்துறையும் பிற கபடதாரிகளும் இத்தனை ஆண்டுகள் ஆடிவந்த கபட நாடகம் இப்படித்தான் முடியப் போகிறது.
பிரசன்னா திக்க்ஷாவிற்கு வயது 18 ஆகும்போது, அந்தக் கடத்தல்கார அப்பாவே மகளை பொதுவெளியில் நிறுத்தப் போகிறான். அவளும், இஸ்லாத்தைத் தவிர வேறு மார்க்கமில்லை; அல்லாவைத் தவிர வேறு கடவுளில்லை என்று சொல்லப் போகிறாள்.
‘Stockholm syndrome’.

Comments
Post a Comment