கரூர் விவகாரம் - என் பார்வை
பேசாப் பொருள் பேசினேன் – 42
கரூர் விவகாரம் – ஓர் அந்நிய நாட்டானின் (மலேசியா) பார்வை.
கடந்த ஜூலையில் தமிழகம் வந்தபோது நான் சென்னை ஸ்டெர்லிங் சாலையிலிருந்த பாரோஸ் ஹோட்டலில் தங்கியிருந்தேன்.
அன்று, காலைச் சிற்றுண்டிக்காக ‘Hard Rock Café’ கீதார் சின்னத்தை ஒட்டியிருந்த நடைப் பாதைக்கு வந்தபோது அதிர்ச்சி காத்திருந்தது!. பாதசாரிகளுக்கான நடைப்பாதை டூ விலர் ஓட்டுனர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. எல்லோருமே எங்கோ போக வேண்டிய அவசரத்தில் இருப்பது தெரிந்தது. இளைஞர்களே அதிகம் இருந்தனர்.
குறித்த நேரத்தில் வேலைக்கோ, ‘appointment’-ற்கோ போய்விட துடிக்கும் கடமையுணர்ச்சி தலை வணங்கத்தக்கதுதான். ஆனால், அதற்காக எதையும் ஆக்கிரமிப்பேன்; எந்த விதிகளை மீறவும் தயங்க மாட்டேன் என்ற அவர்களின் கிரிமினல் மனப்பான்மை அவமானப்படத்தக்கது, தண்டனைக்குரியது.
நடைப் பாதை பாதசாரிகளுக்கானது. ஆனால், அதிலும் டூ வீலரை விடும் அராஜகம் ஏன் அவர்களுக்கு உறுத்தவில்லை!. இது ஓர் அடிப்படை பண்பாயிற்றே!. இதைப் புரிந்துக்கொள்வதில் அவர்களுக்கு இருக்கும் சிக்கல்தான் என்ன?.
எனது வீட்டில் அத்துமீறி புகுந்து அராஜகம் செய்வதும் இதுவும் வேறா?. கல்வியென்பது வெறும் வயிற்றுக்குச் சோற்றைத் தேடும் சமாச்சாரம் மட்டுந்தானா?.
சாலையின் வாகன நெரிசலில், அதன் vicinity-யில் இருந்த டிராஃபிக் அதிகாரிகள் அந்த அத்துமீறலை ஒரு குற்றமாகவே எடுத்துக்கொள்ளவில்லை!. ஒருகால், அது அவர்களின் ‘jurisdiction’ இல்லை போல. ஒவ்வொரு மூலையிலும் ஒரு அதிகாரியை வைத்து கண்காணிக்க முடியுமா என்ன?.
எங்கே எனது சுயமரியாதை?. மற்றவரின் உரிமைகளை மதிக்க வேண்டியது என் சுயமரியாதையின் கீழ் வராதோ?.
நடைப் பாதையின் குறுக்காக சில தடுப்புகளைப் போட்டு அந்த துஷ்பிரயோகத்தை கர்ப்பரேஷன் தடுக்கலாம். பட்ஜட் இல்லையோ என்னவோ?.
கதிட்ரல் சாலை!.
டிரஃபிக் விளக்குகள் இருக்கின்றனவே என்று என்னைப் போன்ற அந்நிய தேசத்தவர்கள் அவ்வளவு ‘அசால்ட்டாக’ சாலையைக் கடந்துவிட முடியாது. 360 டிகிரியிலிருந்து எந்த நேரத்திலும் யாரும் காடியிலும், டூ வீலரிலும் வரலாம்!. இதற்கு மத்தியில் ‘never-ending’ சீரமைப்புப் பணியில் சாலைகள் வேறு.
வாகனங்களுக்கிடையே கிடைக்கும் எவ்வளவு சிறிய இடைவெளியும் ஆக்கிரமித்துகொண்டு முன்னேறும் வாய்ப்பாகவே பிற வாகன ஓட்டிகளால் பார்க்கப்படுகிறது. இதற்கிடையே பாதசாரி நான், எப்படி புகுந்து வெளியாவது?
போக்குவரத்து விதிமுறைகளை நான் அனுசரித்து நடப்பதால் மட்டுமே எனது உயிருக்கு எந்த ஆபத்துமில்லையென்று நான் இறுமாந்திருந்துவிட முடியாது!. எனது பாதுகாப்பு, பிற வாகன ஓட்டிகளின் கைகளிலும்கூட!. ஒரு வழிச் சாலையில்கூட எதிர்ப்புறமிருந்து எந்த வாகனமும் வரலாம்.
‘Noise Pollution’ பற்றி கேள்வியே பட்டிராததுபோல் இடைவிடாது ஒலிக்கும் ஹாரன் ஒலிகள்!. விநாயகர் சதுர்த்தி காலங்களில் தெருவோரங்களில் அதிரும் 1008 கணபதி துதி போற்றி வேறு!.
வருடத்தின் 365 நாட்களூம் சினிமா!. வருடத்தின் 365 நாட்களூம் அரசியல்!.
பிற நாடுகளைப்போல் தேர்தலின் போது மட்டுமே அரசியல் பேசும் நாடு கிடையாது இந்தியா!.
அதே போல் சினிமா!. பார்க்கும் இடமெல்லாம் சினிமா விளம்பரங்கள். எந்தக் காலியிடமும் யாராவது ஒருவர் முந்திக்கொண்டு எதையாவது எழுதி ஒட்டுவதற்கான இடமே!. தனிமனித பிறப்பு, கல்யாணம், இறப்பும்கூட இங்கே சமூகத்திற்கான செய்தி என்பதுபோல் எங்கும் சுவரொட்டிகள்!. சென்னை ஒரு சுவரொட்டிகள் நகரம்.
ஆக, தினமும் இப்படிப்பட்ட விதி அத்துமீறல்களை, அராஜகத்தை, ஒழுகின்மையைப் பார்த்துக்கொண்டே ‘formative years’-லிருந்து பள்ளிக்குப் போகும் சிறுவனுக்கும் சிறுமிக்கும் இந்தச் சமூகம் போதித்து வைக்கும் பாடம்தான் என்ன?.
விதிகள் என்பன மீறப்படுவதற்கானவை!. உனக்கு தேவையெனில் நீ எந்த விதிகளையும், எப்படியும் மீறலாம், பாதகமில்லை என்பதையா?.
‘பின்னாளில், நீ ஏன் மரங்களிலும், டிரான்ஸ்பார்மர் செட்டுகளிலும் எறி, ‘spot out’ ஆக மாட்டாய்?.’
உனது கொண்டாட்டம், அதீத இரைச்சல் பிறருக்கு இடைஞ்சலாய் இருப்பதைப் பற்றியெல்லாம் உனக்கென்ன கவலை?.
சினிமா!.
உனது பொழுதுபோக்கு இன்னொருவனுக்கு பிழைப்பு!. முதலில் தன் பிழைப்பைப் பார்த்து, தன்னை ஸ்திரப்படுத்திக்கொண்டவன் அவன். நீயோ, அவனுக்குத் தொண்டனாகிப் போனாய் சரி!. எப்போது நீ உனது பிழைப்பைப் பார்த்து உன்னை ஸ்திரப்படுத்திக்கொள்ளப் போகிறாய்?. உன்னை நம்பி ஒரு குடும்பம் இருக்கிறதே?.
ஒரு தாய், தன் குழந்தையின் அடிப்படைத் தேவைகளைகூட அறியாதவள் போல், மணிக்கணக்கில் ஒரு நடிகனுக்காக காத்திருக்கிறாள். பசிக்கு அழும் குழத்தையை காட்டிலும் வரப் போகின்ற நடிகனைப் பார்ப்பதே அவளின் பிரதான தேர்வாக இருக்கிறது. அவள் செய்வது சிசு வன்கொடுமை என்பது தெரியாத அளவிற்கு சினிமா பைத்தியம் பிடித்துக் கிடக்கிறாள். அவளை சிசு வதைக்கீழ் தண்டிக்க வேண்டாமோ?.
வெறும் ‘3 hour’ சினிமா வெளிச்சத்தை வைத்துக்கொண்டு ஒரு கட்சியை தோற்றுவித்துத் தலைவனான ஒரு ‘recalcitrant’, கூடியிருக்கும் மக்கள்மேல் கொஞ்சமும் மரியாதையில்லாமல் அடாவடியாக அவ்வளவு தாமதமாக வருகிறான். ஆனால், யாருமே ‘அட ச்சீ!. எனக்கு வேற வேல இருக்குது..’ என்று தனது நேரத்தை பிரதானப் படுத்தி அகலவில்லை!.
நேர விரயம், தலவனுக்கும் ஒரு பொருட்டல்ல!.. மக்களுக்கும் ஒரு பொருட்டல்ல!.
நீ ஒரு செய்தியை அறிய மாட்டாய். நீ செத்து, உன் தலைவனை அருகிலிருந்து பார்க்கும் அதிர்ஷ்டத்தை நீ கொடுத்துவிட்டுச் சென்றதாக உன் தாய் சொல்கிறாள். இதற்குப் பின்னாலிருக்கும் சுயநலத்தை நீ அறிவாயா?.
ச்சே!. உன் சினிமா மோகம் எப்படியெல்லாம் உன் குடும்பத்தைச் சீரழித்துவிட்டது என்பது உனக்குப் புரிகிறதா?. இங்கே சீரழிந்து போனது நீ மட்டுமா?.
உனது இழப்பை சில லட்சங்கள் இப்போது சமன் செய்துவிட்டது.
உனது சினிமா பைத்தியத்தால் நேர்ந்த இழப்பு, இப்போது குடும்பத்திற்காக நீ செய்த தியாகமாம். தனக்கொரு மகன் இருந்து அவனும் உன்னைப் போலவே செத்துத் தொலைந்திருந்தாலும் சம்மதமே என்ற இழிநிலையில் இந்தச் சமூகம்.
வருடந்தோரும் தைப்பூசத்திற்கு 18 லட்சம் மக்கள் கூடும் நாட்டைச் சேர்ந்தவன் நான். ‘Stampede’ -ஆல் அங்கே உயிரிழப்பு நேர்ந்ததாக எந்தத் தகவலும் படித்ததில்லை. இது, கோயில் நிர்வாகம், மக்கள், அரசாங்கம் ஆகிய மூன்று தரப்பின் ஒத்துழைப்பால் மட்டுமே சாத்தியமாகும் ஒரு விஷமாகும்.
அரசியல்.
உன் கட்சிக்காக எத்தனைத் தியாகங்களை நீ செய்திருந்தால்தான் என்ன?. உனது தலைமைத்துவத் திறமையால் எத்துனை உச்சங்களை நீ தொட்டிருந்தாலும் உனது வளர்ச்சி எனக்கு அச்சுறுத்தல்!.
அரசியலுக்கு அறிவாளிகள் தேவையில்லை!. எனக்குப் பின் எனது ரத்தம்!.
‘Nepotism’ ஊழலின் முதல் படி. ஆனால், அது ஓர் அறச்செயலை போல் கொஞ்சமும் உறுத்தலில்லாமல் / வெட்கப்படாமல் அவ்வளவு விமரிசையாய் செய்யப்படுகிறது. அது நெஞ்சுக்கு நீதியான செயலன்று என்று செய்தவனுக்கும் மனசாட்சி உறுத்தவில்லை!. ஏற்றுக்கொண்டவனுக்கும் மனசாட்சி உறுத்தவில்லை!.
‘ஒழுக்கம் உடைமை குடிமை; இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.’ – குறள் 133
ஒழுக்கம் உடையவராக வாழ்வதுதான் உயர்ந்த குடிப்பிறப்புக்கு எடுத்துக்காட்டாகும். ஒழுக்கம் தவறுகிறவர்கள் யாராயினும் அவர்கள் இழிந்த குடியில் பிறந்தவர்களாகவே கருதப்படுவர்.
- கலைஞர் மு. கருணாநிதிஉரை.
சினிமாவும் சரி, அரசியலும் சரி!. இந்த சுய நலம்/விதி மீறல்/அராஜகம்தான் உனக்கு போதிக்கப்படும் செய்தி.
நீ வெறும் அம்புதான்!.
உன்னை ஏய்தியது உன்னைச் சுற்றி 365 நாட்களும் நடக்கும் சினிமா!. அரசியல்!.
நீ, இந்தச் சமுதாயச் சீர்கேட்டின் விளைபொருள்!,


Comments

Popular Posts