எம் ஜி ஆர் தாத்தா

எம் ஜி ஆர் தாத்தா 



சிறுகதை                                                                 

எம் ஜி ஆர்  தாத்தா

‘எம் ஜி ஆர் தாத்தா செத்துப் போயிட்டாருப்பு..’

தூணுக்குப் பின்னால் ஒளிந்துக் கொண்டு, சற்றும் எதிர்ப்பாராத நேரத்தில், ‘ப்பே..’ என்று கத்தித் திடுக்கிட வைத்ததுபோல் அவரின் மரணம், மணிமாறனை நிலைக்குழைய வைத்திருந்தது.

“ஐயோ, எம் ஜி ஆர் தாத்தாஆ…” என்ற அவனுடைய கதறல், அழுகையில் கரைந்து வாயிலிருந்து எச்சிலாய் ஒழுகி வடிந்தது. திடீரென்று கால்கள் பலமிழந்து துவண்டுப் போயின. அவனைத் தாங்கிக்கொள்ள தரை மட்டுமே போதாதுபோல் உணர்ந்தான். உடனடியாக நாற்காலியை பிடித்திழுத்து குருடனைப்போல் அதைத் தவிப் பார்த்து. அதில் உட்கார்ந்து கொண்டான். அந்தச் செய்தி, ஒரு சரீர   தாக்குதலுக்கு ஆளானவனைப்போல் அவனைத் தளர்ந்து போக வைத்திருந்தது.

                                                                                    * * *

எம் ஜி ஆர் தாத்தா ஒரு பிரம்மச்சாரி என்பதை விட யாருமற்ற அநாதை என்ற விஷயத்தாலேயே எஸ்டேட் ஜனங்களின் பிரியத்திற்கும், பரிவுக்கும் உரியவராக ஆகிப்போனார். ஆனால், அதற்கும் மேல் யாருக்குமே அவரைப் பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை. இறந்து போன ‘மயிரு மொளச்சான் கங்காணி’ சொன்னதாக நிலவிய சில தகவல்களே அவரைப் பற்றிய ஊர்ஜிதமற்ற செய்திகளாக உலாவி வந்தன.

எம் ஜி ஆர் தாத்தா கேரித்தீவு பக்கத்திலிருந்து வந்ததாகக் கேள்வி!. அவர், முப்பது வயது இளைஞனாக டிவிஷன் இரண்டில் வேலைச் செய்துக் கொண்டிருந்தபோது, ‘சங்கிலிக் கிராணி’ என்ற ஒரு மலையாளக் கிராணியின் அடாவடித்தனம், லாலாங் புல்லைப்போல் பொருத்துக் கொள்ளமுடியாத அளவிற்கு சனங்களை துன்புறுத்தியது. தாய்மொழியால் மலையாளியாகவும், படித்தது ஆங்கிலமாகவும் இருந்ததில் ஒரு திமிர் தெரிந்தது. தெருநாயைப்போல் வார்த்தைகளால் சனங்களை  துரத்தி அடித்தார்!. பெண்களை ‘எந்தா, சிறுக்கி வேசா…’ என்றும்; ஆண்களை ‘எடோ பட்டி..’ என்றும் ஏகவசனத்தில் பேசினார். தொழிலாளர்கள் எல்லோருமே தமிழர்களாய் இருந்ததால் ‘வேசா, பட்டி..’ என்ற வார்த்தைகளின் அர்த்தம் அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.

ஒரு நாள், புதிதாக வெட்டுக்குத் திறந்திருந்த ‘ஒட்டுக்கன்னு’ மரங்களுக்கு காயம் போட்டுவிட்டாளென்று மூன்று மாதக் கர்ப்பிணி என்றும் பாராமல் ஆவடையை வெட்டிலேயே சங்கிலி கிராணி அறைந்துவிட்டார். விஷயம் சனங்களுக்குத் எட்டிய போது, ‘என்ன செய்றது? எல்லாம் நம்ம தலையெழுத்து..’ என்று தலையைக் குனிந்துக் கொண்டனர். அவள் புருஷனோ, ‘என்னா புள்ள, பாத்து வெட்றதில்ல?..’ என்று கல்லைக் கண்ட நாயைபோல் ஒதுங்கிப் போனான். ஆனால், எம் ஜி ஆரின் தீவிர ரசிகனாக இருந்த ‘மையிலக்கா’ என்ற மையழகனால் பொறுக்கமுடியவில்லை. ‘ஒரு தவறு செய்தால், அதைத் தெரிந்து செய்தால், அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்..’ என்ற எம் ஜி ஆரின் பாடல் வரி அவனை உசுப்பேற்றிவிட்டது. அவன் ஒரு முடிவுக்கு வந்திருந்தான்.

அன்று மாலை சங்கிலிக் கிராணி, பங்களாவில் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்த நேரம், வேலியருகில் ஒளிந்திருந்த மைலக்கா, ரப்பர் கட்டையால் அவர் தலையில் தாக்கி,  ஆவடையை அடித்தக் கையின் எழும்பை ஒடித்துப் போட்டுவிட்டு,  இரவோவு இரவாக லங்காட்  ஆற்றை நீந்திக் கடந்து, கிள்ளானுக்கு ஓடிப் போனான். மூன்று மாதங்களுக்கு ரவுப் பக்கம் தலைமறைவாகித் திரிந்து கடைசியில், செமினி எஸ்டேட்டிற்கு வந்து சேர்ந்தபோது, ‘மயிருமொளச்சான் கங்காணி’யின் உதவியால் முதலில் வெளிக்காட்டு வேலை கிடைத்தது.

மைலக்காவிற்கு பால் ஸ்டோரில் வேலை கிடைத்த வருடம், தோட்ட முதலாளியான சீன தவுக்கை மாரியம்மன் கோவில் என்ற பழைய பலகைக் கொட்டாயை உடைத்து, முழுவதும் சிமெண்டால் ஆன கோயிலாக விமானமெல்லாம் வைத்துக் கட்டிக் கொடுத்தார். ஊர் சனங்களுக்கு ஒரே சந்தோஷம்! இவ்வளவு வருஷங்களாக தைப்பூசத்திற்கு காவடி எடுத்து கொண்டாடி வந்தவர்கள், அந்த வருஷத்திலிருந்து தீமிதி திருவிழாவிற்கும் காவடியெடுத்து கொண்டாடத் தொடங்கினர்.

கும்பாபிஷேகம் செய்து தீமிதி கொண்டாட தீர்வான கோயில் கூட்டத்தில் ‘ திருவிழாவிற்கு என்ன படம் காட்டுவது?’ என்பதில் பலத்த சர்ச்சை எழுந்தது. ஊர் பெரியவர்கள் சிலர், சிவாஜி நடித்த சாமிப் படத்தையே காட்ட வேண்டுமென்று அபிப்பிராயம் வைத்தனர். ‘ மைலக்காவின்’ பின்னால் நின்ற இளைஞர் கூட்டமோ எம் ஜி ஆர் படம்தான் வேண்டுமென்று மல்லுக்கு நின்றனர். பலத்த வாக்குவாதத்தின் உச்சத்தில் மைலக்கா, ‘அந்தச் சூத்துகாட்டி படத்துல என்னா இருக்கு? நம்ம கோயில் அண்டா கணக்குல அவன் சூத்துதான் இருக்கு!..’ என்று சொன்னபோது எல்லோரும் சிரித்துவிட்டனர். கடைசியில், மாவிளக்கன்று சிவாஜி படமும் தீமிதியன்று எம் ஜி ஆர் படமும் காட்டுவதென்று முடிவானதோடு அன்றிலிருந்து மைலக்காவை எல்லோரும் எம் ஜி ஆர் என்று கூப்பிட ஆரம்பித்தனர். அவனுக்கும் அது மிகவும் பிடித்துப் போனது. அவனும் அன்றிலிருந்து தன்னை எம் ஜி ஆர் ஆகவே நினத்துக்கொண்டான். ஏற்கனவே எம் ஜி ஆர் படங்கள் பார்த்து சிகரெட், மதுவெல்லாம் தொட்டதேயில்லை. கோவிலுக்கும் போவதில்லை. வீட்டில் தாய் தந்தையரின் படங்களை வைத்தே தெய்வமாக வணங்கி வந்தான்.  

மாவிளக்கன்று, தேரை இழுத்துக்கொண்டு வந்தவர்கள் சிரமபரிகாரத்திற்கு தெரு முச்சந்திகளில் நின்றபோது, கூட்டத்தை மகிழ்விக்க முதன்முதலாக எம் ஜி ஆரின் சிலம்பாட்டமும், சுருள்கத்தியும் அரங்கேறின. ஊர்ச்சிறுவர்களுக்கு கொண்டாட்டம் தாங்கவில்லை. பெரியவர்களும், இளைஞர்களும் எம் ஜி ஆரின் திறமையைக் கண்டு ஆச்சரியப்பட்டுப் போயினர். கோவில் நிர்வாகம், உடனே அந்தக் கலையை எஸ்டேட்டிலிருந்த மற்ற வாலிபர்களுக்கும் கற்றுத் தரும்படி எம் ஜி ஆரைக் கேட்டுக் கொண்டது. அவனும் சந்தோஷத்துடன்,

“என் கடமை” ங்க என்று ஊர் பெரியவர்களை வணங்கி, ஆர்வத்துடன் ஏற்றுக் கொண்டான்.

                                                                        * * *

றுமாதமே சிலம்பப் பயிற்சி ஆரம்பமானது. மாணவர்களை தேர்வு செய்வதற்கு முன்னர், அவர்களின் ஆரோக்கியம், எடை, சுறுசுறுப்பு, பழக்கவழக்கங்கள் போன்றவை தெரிந்து கொள்ளப்பட்டன. அப்படி எம் ஜி ஆரின் சிலம்பப் பயிற்சியில் முதலாவதாக தேர்வானவன்தான் மணிமாறன். மொத்தம் 6 பேர் தேர்வாகியிருந்தனர். அந்தச் சிலம்பக் கழகத்திற்கு எம் ஜி ஆர் சிலம்பக் கழகம் என்ற பெயரை வைத்து, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலை மணி பத்திலிருந்து பதினோரு வரை ‘ஒன்னாம் நம்பர்’ கித்தா காட்டிலிருந்த பொட்டல் வெளியில் பயிற்சியை ஆரம்பித்தான். பயிற்சி செய்யும்போது யாராவது பார்த்துக்கொண்டிருந்தால் கவனம் சிதறிப்போகுமென்பதால் எம் ஜி ஆர் அந்தக் காட்டுப் பகுதியை தேர்வு செய்திருந்தான். பயிற்சி முடிந்த கையோடு கோவிலுக்குப் பின்னாலிருந்த தன்னுடைய லயத்திற்கு கூட்டிக் கொண்டுபோய், சுடச் சுட வரக்கோப்பி தயாரித்து, அதில் கொஞ்சம் எழுமிச்சை ரசத்தை கலந்து எல்லோருக்கும் குடிக்கக் கொடுப்பான். அப்படியான சமயங்களில், சிலம்பம் பற்றிய நுட்பங்கள், சிறப்புகள் மற்றும் எம் ஜி ஆர் பற்றிய அதிசயக் கதைகளைச் சொல்லி மாய்ந்து போவது அவனுடைய வழக்கம். அவர்கள் எல்லோரும் பயிற்சிக்குப் போன முதல் நாள் நினைவு, பால் மங்கில் கெட்டியாகிக் கிடக்கும் ஒட்டுப் பாலைப்போல்  இப்போதும் மணிமாறனின்  நினைவில் அப்படியே உறைந்து கிடந்தது.

எம் ஜி ஆர் கேட்டார்.

“ஏங்கப்பு பசங்களா, மொதல்ல நீங்க எதுக்கு செலம்பம் கத்துக்க ஆச படுறீங்கன்னு சொல்லுங்கப்பூ கேப்போம்..”

“யாராவது எங்கள அடிக்க வந்தா அவுங்கள அடிச்சி வெரட்றதுக்கு எம் ஜி ஆர் அண்ணெ!” – எல்லோரும் ஒரே பதிலையே சொல்லி வைத்தனர்.

எம் ஜி ஆருக்கு சிரிப்பு வந்தது.

“இங்க பாருங்கப்பு!. யாரும் சும்மா ஏம்பூ நம்மள அடிக்க வருவாங்க?. செலம்பம், குந்தா, கைவரிசன்னு எந்த கலையோட நோக்கமும் நம்பளுக்கோ, நம்பள சுத்தி இருக்கறவங்களுக்கோ ஏதாவது ஆபத்துன்னா அதுலேர்ந்து நம்மள, மத்தவங்கள காப்பாத்துறதுதான். அதனாலதான் அத தற்காப்பு கலன்னு சொல்றோம். காரணம் இல்லாம எதிராலிய காயம் படுத்துறது நம்ம நோக்கமா  இருக்கவேகூடாதேப்பு. இத எப்பவுமே நீங்க மறந்துறக்கூடாது.. அது சரி, கம்பு சுத்தறதப் பத்தி யாருக்கு என்ன தெரியுன்னு கொஞ்சம் சொல்லுங்களேன் கேப்போம்?..

யாருக்குமே ஒன்றுமே தெரிந்திருக்கவில்லை!

“சரி, அடிப்படையான விஷயம் சிலத மொத உங்களுக்கு சொல்லீர்றம்பூ. செலம்பம் சுத்தறதுக்கு கத்துக்கறதுக்கு முன்னாடி மெய்பாடம், ஒடம்புகட்டு பாடம், மூச்சுபாடம், குத்துவரிச, தட்டுவரிச, பிடிவரிச, அடிவரிசன்னு ஏழு பாடங்க இருக்குப்பூ. இதையெல்லாம் கத்துக்கிட்ட பெறவுதான்  உங்களூக்கு செலம்பாட்டம் ஆரம்பமாவும். ஏன்னா, இந்த பயற்சிக எல்லாந்தான் ஒருத்தர செலம்பம் சுத்த தயார் பன்னும். எடுத்த ஒடனேயே கம்பு சுத்த கத்துக்க நெனச்சிங்கன்னா, மொத சுத்துலியே தல சுத்தி மண்ண கவ்வீர்விங்க தெரிஞ்சிக்கிங்க. எந்த வித்தையையுமே குறுக்குவழீல கத்துக்க முடியாதுப்பூ. அத மொத ஞாவகம் வெச்சிக்கிங்க..”

சிலம்பம் கற்றுக்கொள்வதில் இவ்வளவு விஷயங்கள் இருப்பதை கேட்டு மலைத்துப்போய் மாணவர்கள்  எம் ஜி ஆரையே பார்த்துக் கிடந்தனர்.

“மொதல்ல மெய்ப்பாடம். ஒடம்பு பெலத்த ஏத்தறத்துக்காவ பயற்சி செங்சி ஒடம்ப தயாரா வெச்சிகிறது. ரெண்டாவது ஒடற்கட்டுப் பாடம். தேவையான பெலத்த ஒடம்புக்கு ஏத்தி, கைகால லூசாக்கி வெச்சிக்கிற பயிற்சி. மூனாவது மூச்சிப்பாடம். இன்னும் சிக்கலான பயிற்சியெல்லாம் பின்னாடி செய்றதுக்கு இப்பியே பிராணயாமம் செஞ்சி மூச்ச திடப்படுத்திக்கிறது. இதெல்லாம் எதுக்குன்னா ஒருத்தன் எந்தளவுக்கு கலைய கத்துகிறதுல கண்ணும் கருத்துமா இருக்கான்றத தெரிஞ்சிக்கதான். “

தொடர்ந்து மற்ற பயிற்சிகளைப் பற்றியும் மேலோட்டமாக விளக்கிவிட்டு மேலும் சொன்னார்.

“தம்பீங்களா, எம் ஜி ஆர் மாரியான மகான்ங்க கத்துக்கிட்ட கலைய கத்துக்கிற கொடுப்பன உங்களுக்கு வாச்சிருக்குப்பூ. அந்த நெனப்ப எப்போதுமே மனசுல வெச்சுக்கிட்டு அதுக்கு ஏத்தமாரி உங்க பழக்க வழக்கங்கள வெச்சுக்கனும். சிகரெட் குடிக்காதிங்க. தண்ணி அடிகாதிங்க. ஒடம்பு ஆரோக்கியந்தான் இதுல பிரதானம்பூ. கடசியா ஒன்னு. நீங்க இங்க செலம்பம் கத்துக்குற காலம் பூரா என்னோட வசதிக்காவ உங்களுக்கெல்லாம் எம் ஜி ஆருக்கு படத்துல இருந்த பேரையே உங்களுக்கும் வெச்சி கூப்புடலாம்னு நெனைக்கிறேன். நீங்க என்ன நெனக்கிறீங்க?”

அவர்கள் யாருக்குமே ஆட்சேபனை இருக்கவில்லை.

கரிகாலன், வீரன், மார்த்தாண்டன், மணிவண்னன், இளங்கோ, மணிமாறன் என்ற பெயர்களை அவர்களுக்கு சூட்டினார். அவர்களுக்கும் அது பிடித்தே இருந்தது. உடனே ஒருத்தருக்கொருத்தர் அந்தப் பெயரிலேயே கூப்பிட்டுச் சிரித்துக்கொண்டனர்.

“நா மறுபடியும் சொல்றேம்பூ!. இந்தக் கலையோட நோக்கமே நம்மளயும் சுத்தி இருக்குறவங்களையும் ஆபத்துலேர்ந்து காப்பாத்திகிறதுக்குதான். அதனால, எப்போதுமே நீங்கல்லாம்,

‘ நீதிக்கு தலைவணங்கு’றவங்களாத்தான் இருக்கனும்பூ.”  

                                                                                   * * *

மெய்ப்பாடம் ஆரம்பத்திருந்த முதல் வாரம். தேகப் பயிற்சி, மேடு பள்ளங்களில் ஓடுதல், மலையேறுதல் எல்லாம் முடிந்து எம் ஜி ஆரின் வீட்டிற்கு வந்திருந்தனர். அன்று எல்லோரையுமே வீட்டிற்குள்ளே வந்து உட்காரச் சொல்லியிருந்தார். உள்ளே நுழைந்த உடனேயே வாசலை ஒட்டிய வலதுபுற சுவரில், எம் ஜி ஆர் அண்ணனின் பெற்றோர்களின் வரைப்படம் கருப்பு வெள்ளையில் கணகாம்பர மாலைத் தரித்து தொங்கிக்கொண்டிருந்ததை பார்த்து வீரர்கள் எல்லோரும் நின்றனர். முதன்முதலாக அவரின் பெற்றோரின் முகங்களைப் பார்க்கின்றனர். அப்பா தலைப்பாகை அணிந்து, முரட்டு மீசையுடன் கம்பீரமாகப் பார்த்தார். அம்மா, லட்சுமீகரத்தை முகத்தில் ஏந்தி, நெற்றியில் தெரிந்த பொட்டைப்போல் நிறைந்து காட்சியளித்தார். தந்தையின் கம்பீரத்தையும், தாயின் சாயலையும் எம் ஜி ஆர் அண்ணனிடம் கண்பதாக அவர்கள் நினைத்துக்கொண்டனர். சிரத்தை தாழ்த்தி அவர்களுக்கு அஞ்சலி செய்துக்கொண்டனர். வாசலுக்கு நேர் எதிர் சுவரில், அவர்கள் எங்கேயும் பார்த்திராத அதிசயத்தைப் பார்த்தனர். இருபதுக்கு நாற்பது என்ற கணக்கில் இருந்த பலகைச் சுவர் முழுக்க எம் ஜி ஆர் பட சுவரொட்டிகளே சிவப்பு, நீலம், மஞ்சள் நிற வர்ணங்களில் நிறைந்திருந்தன. இடையிடையே இந்தியன் மூவி நியூஸ் பெயர் தாங்கிய இரண்டு பக்க வர்ணப்பட போஸ்டர்கள் வேறு! அதில் ஒன்றில், எம் ஜி ஆர் சரோஜா தேவிக்கு காமிரா பெட்டியில் படம் பிடிப்பதை கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார். மற்றொன்றில், அதே நடிகைக்கு சைக்கிள் கற்றுக் கொடுத்தார். வியப்புடன் ஒவ்வொரு பட போஸ்டராக அவர்கள் பார்த்துக்கொண்டு வந்தனர். எங்கே, எப்படி அவ்வளவு பட போஸ்டர்கள் கிடைத்தன என்ற ஆச்சரியத்தில் அவர்களுக்கு கண்கள் விரிந்தன.  

“எம் ஜி ஆர் அண்ண, இந்த பட போஸ்டரெல்லாம் ஏதுண்ண? எப்படி கடச்சிச்சி?. இப்பல்லாம் இந்த மாரி போஸ்டர்ங்கள நாங்க பாத்ததே இல்லியே“ மணிமாறன் கேட்டான்.

“ஓ, அதா மணிமாறா? அந்த கதயெல்லாம் உங்க வயசு புள்ளிங்களுக்கு தெரிய லாய்க்கில்லப்பூ. அந்தக் காலத்துலெல்லாம் கோலா டவுன்ல இருந்த ரெக்ஸ், கெத்தே தீயேட்டர்கள்ல புது படங்க ஒடுனிச்சின்னா எஸ்டேட்டுக்கு வர்ற பஸ்சு மூலமாதான் இந்த போஸ்டர்ங்கள சடக்கெல்லாம் வீசிப் போட்டு வெளம்பரம் படுத்துவாங்க. நா, பஸ்சு பின்னாடியே ஓடி, ஓடி பொறுக்குனதுதாம்பூ இவ்வளவும்.“

“அது சரி எம் ஜி ஆர் அண்ண. உங்களுக்கு ஏன்ண்ணா எம் ஜி ஆர் மேல அவ்ளோ வெறி?..”

“என்னா வார்த்தப்பூ சொல்லிப்புட்ட?. அது வெறி இல்லப்பூ! அவ்வளவும் அபிமானம்! எம் ஜி ஆர என்னா வெறும் நடிகர்ன்னா நெனச்சிக்கிட்டு இருக்க? இல்லப்பூ.. அவுரு ஒரு மகான். ஏழைங்களுக்கு வாரி வாரி கொடுத்த வள்ளலு. நா சிகரெட்டு, தண்ணி எல்லாம் தொட்டதே இல்ல. அது எப்படி வந்துச்சின்னு நெனக்கறீங்க? அவ்வுளவும் படத்துல எம் ஜி ஆர் சொன்ன கருத்துனால வந்ததுப்பூ. எம் ஜி ஆர் படங்கெல்லாம் வெறும் படங்க இல்ல. ஒவ்வொன்னும் ஒரு பாடாம்பூ. எப்பிடீன்னு கேக்குறீங்களா? சொல்றேன் கேளுங்கப்பூ!. பெத்த தாய்க்கு அப்பாலதான் தாரம்ன்னு சொல்றதுக்கு ‘தாய்க்கு பின் தாரம்!’. எம் ஜி ஆர் ராஜாவானா ஜனங்களுக்கு என்னான்னா நல்லதெல்லாம் செய்வாருன்றதுக்கு ‘நாடோடி மன்னன்’. பொய், திருட்டெல்லாம் செய்யக்கூடாதுன்றதுக்கு ‘ திருடாதே!’. நல்லவன் எப்பியுமே நல்லா இருப்பான்றதுக்கு ‘ நல்லவன் வாழ்வான்..’. தாய் சொல்ல எப்பியுமே மதிச்சி நடக்கனூன்னு சொன்ன, ‘தாய் சொல்லைத் தட்டாதே..’. ஒன்னா ரெண்டா? எவ்ளோதான் எடுத்து சொல்றதுப்பூ?.” என்று சொன்னபோது, எம் ஜி ஆரின் முகம் உதயசூரியனைப்போல் பிரகாசித்து.

“சிவாஜி அந்த மாரி படமெல்லாம் நடிக்கிலியா எம் ஜி ஆர் அண்ண?..”

“அட நீ ஒன்னுப்பூ!. அந்த சூத்தாட்டியொட படங்க பேர சொல்றன் கேளுப்பூ. பாகப்பிரிவினை; முரடன் முத்து; கலாட்டா கல்யாணம்; திருடன்; தர்மம் எங்கே; பட்டாக்கத்தி பைரவன்; யமனுக்கு யமன்; படிக்காதவன். தெரியிதாப்பு வித்தியாசம்? பொறந்த மவன பாத்து, ‘ ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோன்னு?’ கேக்குற சிவாஜி எங்க?; ‘நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி, இந்த நாடே இருக்குது தம்பி..’ ன்னு பாடுன எம் ஜி ஆர் எங்க?. கஷ்டங்கள பாத்து, ‘ எங்கே நிம்மதின்னு’ சிவாஜி ஒப்பாரி வெச்சிக்கிட்டு இருந்தப்ப, ‘ நெஞ்சமுண்டு.. நேர்மையுண்டு.. ஓடு ராஜா..’ ன்னு எம் ஜி ஆர் தெகிரியத்த ஊட்டுனாருப்பூ.

அப்போது, இளங்கோ என்ற காசி, ஒரு போஸ்டரைக் காட்டி கேட்டான்.

“எம் ஜி ஆர் அண்ண, அது யாருண்ண?.. தலயில குள்ளா போட்டுக்கிட்டு, தேள் கொடுக்கு மாரி மீச வெச்சிக்கிட்டு கையில பறையோட எம் ஜி ஆருக்கு எதிரா நின்னுக்கிட்டு?”

“இளங்கோ, நல்லா கேட்டப்பூ? அவுருதான் நம்ம கலைவாணரு என் எஸ் கெ. தானம், தர்மம் செய்யிறதுல எம் ஜி ஆரோட குரு. மகா பரோபகாரி. ஒரு தடவ பொண்டாட்டி மதுரத்துகிட்ட சொன்னாராம். ஒதவி கேட்டு யாராச்சும் வந்துட்டா, ஒதவுறதுக்கு நம்ம கையில ஒன்னும் இல்லாம போச்சுன்னா அந்த நிமிஷமே நா உசுரோட இருக்கக்கூடாது.. பாருங்கப்பூ மனுசாள!.. ஒரு கத சொல்றன் கேளுங்கப்பூ. அன்னிக்கி என் எஸ் கெ வோட பொறந்த நாளு. எம் ஜி ஆர் சில மந்திரிகளோட அவுரு செலைக்கு மால போட்டு மருவாத செய்யப் போயிருக்காரு. அப்படி மருவாத செஞ்சிட்டு திரும்புன கையோட பாத்தாக்கா ஒருத்தன் அந்த மாலைய திருடிகிட்டு ஓடறான். எம் ஜி ஆருக்கு வந்ததே கோவம். அவன தொரத்தி புடிச்சி ‘ஏன்டா மாலைய திருடீட்டு ஓடறே?’ன்னு கேட்டாக்கா, ஓ..ன்னு அழுவ ஆரம்பிச்சிட்டான். கடசீல, எம் ஜி ஆர மட்டும் அவன் பின்னாலியே வந்தாக்கா உண்மிய சொல்றதா அடம் புடிக்கிறான் . அமச்சர்ல்லாம் வேணான்னு சொல்லியும் கேக்காம்ம எம் ஜி ஆர் மட்டும் அவன் பின்னாடியே போறாரு. வழியல்லாம் ஒரே சேரும் சகதியுமா சாக்கட தண்ணி ஓடற சேரி! அவன் ஒரு குடிச முன்னாடி போய் நிக்கறான். எதுத்தாப்ல பாத்தாக்கா, ஒரு குடிச முன்னாடி நடு ரோட்ல ஒரு பாட கெடக்குது. அதுல ஒரு பொணம்!. சின்ன புள்ள கணக்கா தேம்பி அழுதுகிட்டே அவன் சொல்றான்.

“சாமி, காலில எங்க ஆத்தா செத்துப் போச்சி!. சவத்த அடக்கம் பன்னனும். பெத்த தாய்க்கு ஒரு மால வாங்கிப்போட்டு அடக்கம் பன்னக்கூட வக்கில்லாத புள்ளயா இருக்கறனேன்னு நெனச்சி பாத்தேன். துக்கம் தாங்கல. ஆத்தாவோட கட்ட வேவுனுமே சாமீ?.. அதான் ஆபத்துக்கு பாவமிலேன்னு மாலய திருடுனன். என்ன மன்னிச்சிருங்க சாமீ” ன்னு எம் ஜி ஆர் கால்ல வுழுந்துடான். எம் ஜி ஆருக்கு எப்பவுமே அம்மா சென்டிமெண்ட் ரொம்ப ஜாஸ்தி. கதய கேட்டதும் எம் ஜி ஆரே அழுதுடாப்ல. அவன ஒடனே கட்டிப் புடிச்சி, அவனோட அம்மா பாசத்த மெச்சி, ஆன திருனது தப்புதான்னு கண்டிச்சி கையிலிருந்த காசெல்லாம் எடுத்து அவன் கையில கொடுத்து, ஆத்தால நல்ல விதமா அடக்கம் செய்யச் சொல்லிட்டு அமச்சர்ங்ககிட்ட வந்து என் எஸ் கெ செலய பாத்து அழுதுகிட்டே எம் ஜி ஆர் சொன்னாரு...

“என் எஸ் கெ, செத்தும் தானம் பன்னிக்கிட்டுதான் இருக்காரு.. அப்படிப்பட்டவர சாதாரண பெறவீன்னா நெனக்கிறீங்க?..ஹூஹும்..”     

“தனிப்பிறவி”ப்பு அவுரு.

                                                                             * * *     

மூன்றாவது மாதம் குத்துவரிசை பயிற்சி ஆரம்பமாகியிருந்தது. எம் ஜி ஆர் அண்ணன், எதிராளிய பார்த்துக்கொண்டே எப்படி கண்ணை சிமிட்டும் நேரத்திற்குள் நிற்கும் நிலைகளை இலகுவாக மற்றிக்கொள்வது என்பதை செய்துக் காட்டிக் கொண்டிருந்தார். பாம்பு, யானை, புலி போன்ற விலங்குகளிடமிருந்து கற்றுக்கொண்ட 60 - திற்கும் அதிகமான நிலைகளை மிகவும் நுட்பமாக சிலம்பத்தில் புகுத்தியிருந்த சாகசத்தை விளக்கினார். அன்று ஏனோ, வீரனின் கவனம் பயிற்சியில் இல்லாததுபோல் தோன்றியது.

“என்னா வீரா, இன்னிக்கி நெனப்பு பயிற்சீல இல்லாதமாரி தோனுதே? என்னாப்பூ சங்கதி?.ம்?..”

“மனசு கொஞ்சம் சரியில்ல எம் ஜி ஆர் அண்ணன். “

“ஏம்பூ, என்னா சங்கதி? கலைய கத்துக்கிறதுன்னூ வந்துட்டா மத்த கவலிங்கள எல்லாத்தியும் மூட்ட கட்டி வீட்லியே உட்டுட்டு வந்திர்னம்பூ. இல்லாட்டி வேலைக்காவாது. சரி, என்னா பெரச்சினப்பூ? சொன்னா நம்மால ஏதும் செய்ய முடியுமான்னு பாக்கலாம்?.”

“எல்லாம் எம் பொண்டாட்டி பெரச்சினை தாண்ணா. எங்கம்மாவ கண்டாலே அவளுக்கு ஆவமாட்டுதுண்ணா. எப்ப பாத்தாலும் ஏதாவது குத்தம் சொல்லிக்கிட்டே இருகா. தாங்க முடியில! எதுக்குடா கலியாணம் பன்னுனோன்னு இருக்குண்ணா! நானும் எவ்ளோ பதுவுசா சொல்லி பாத்துட்டேன். கேக்க மட்றா. சமயத்துல வர்ற வெறிக்கு ரெண்டு சாத்து சாத்தீர்லமான்னு இருக்குண்ண.”

“வீரா, ரொம்ப தப்புப்பூ! எவ்ளோதான் ஆத்தரம் வந்தாலும் பொண்டாட்டிய கை நீட்டி அடிக்கறது மகா பாவம்பூ. அத மட்டும் செஞ்சிறாத. மொத தடவ அடிகிற வரிக்குந்தான் தயக்கமா இருக்கும். ஒரு தடவ அடிக்க ஆரம்பிச்சிட்டியின்னா பெறவு சொல்லவே வேணா! கையி தானாவே நீளும். வேண்டாம்ப்பூ! நீ கலியாணம் பன்னி 5 வருஷம் இருக்குமில்ல? இன்னும் புள்ள இல்லியேன்ற கொறயா இருக்கலாம். சங்கடத்த யாருக்கிட்ட காட்றதுன்னு தெரியாம இப்படி நடந்துகிலாம். ஒரு கொழந்த பொறந்துச்சின்னா எல்லாம் சரியா போயிரும். பேசி தீக்கமுடியாத பெரச்சினன்னு ஒன்னுமே இல்லப்பூ. பொண்டாட்டிக்கு தெரிஞ்ச பெரியவங்கள வெச்சி பேசுப்பூ.. ரெண்டு பேருமே நமக்கு மிக்கியம்ப்பூ. நீயோ அவுங்களுக்கு ஒரே புள்ள வேற. உன்னியும் உட்டுட்டா அவுங்களுக்கோ உம் பொண்டாட்டிக்கோ வேற யாரு இருக்கா சொல்லு? எந்த காலத்திலியும் மறந்துறாதப்பூ!. அம்மா உயிரோட இருக்கிற வரிக்கும்,”

“தாய்க்குப் பின் தாரம்..” ப்பூ.

                                                                              * * *

எம் ஜி ஆர் அண்ணன், நீங்க எம் ஜி ஆர பத்தி சொல்றத கேட்டு கேட்டு உங்ககிட்ட ஒன்னு கேக்கனும்னு தோனுதண்ண…” என்று ஒரு நாள் மணிமாறன் பயிற்சி முடிந்தக் கையோடு கேட்டான். எம் ஜி ஆர் அண்ணன் அவனைப் பார்த்தார்.

“எம் ஜி ஆர் மேல இவ்ளோ அபிமானமா இருக்கீங்களே நீங்களும் அவுரு மாரியே மத்தவங்களுக்கு தான தர்மம் ஏதும் செஞ்சிருக்கீங்களாண்ண?.. “

“அட, உம்பொண்டாடிய நண்டு கடிக்க!. ஆட்ட கடிச்சி மாட்ட கடிச்சி கடசீல மனுசன கடிக்க வந்துட்ட பாத்தியா?.“ என்று சிரித்துக்கொண்டே எம் ஜி ஆர் தொடர்ந்தார்.

“இந்த ஒலகத்துல பேகன், பாரி, காரி, ஆய், அதியமான், நள்ளி, ஓரி -ன்னு ஏழு வள்ளலுங்க இருந்ததா சொல்லுவாங்க. அவுங்களுக்கு பெறவு ஒலகம் எத்தினியோ கோடீஸ்வரங்கள பாத்துருச்சி. ஆனானப்பட்ட அவுன்ங்களே ஒன்னும் செய்யாம இருக்குறப்ப நா வெறும் முன்னூறோ நானூறோ சம்பாரிக்கிற எஸ்டேட் தொழிலாளி. நா என்னத்த செஞ்சிற முடியும், சொல்லுப்பூ? அதுக்கெல்லாம் வெறும் மனசு இருந்தா மட்டும் போதாதுப்பூ.  வீட்டுக்கு பின்னால இந்த மாரி ஏதாவது மரம் இருக்கனும்ப்பூ ”

“என்னாண்ணா அது?

எம் ஜி அர்  சிரித்துக்கொண்டே சொன்னார்.

“மரத்துல காசு காய்க்கிற, ‘பணத்தோட்டம்’பூ!”

                                                                           * * *

 பிடிவரிசைப் பயிற்சி நடந்துக்கொண்டிருந்த நாள்! தாக்க வருகின்ற எதிரியை எப்படி நம் பிடிக்குள் கொண்டுவந்து தாக்குதலை முறியடிப்பது என்பதை எம் ஜி ஆர் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தார். இது யானையைப் பார்த்து தெரிந்துக்கொண்ட ஒரு தற்காப்பு முறையென்றும் இதில் கிட்ட தட்ட 200 வகையான பிடிவகைகள் இருப்பதாகவும் விளக்கினார். அன்று பயிற்சி கொஞ்சம் கடுமையாகவே இருந்தது. வேர்வையில் நனைந்து உடல்கள், உஸ்ணத்தை சமன் படுத்திக்கொண்டிருந்தன. தொண்டைகள் வறண்டு தண்ணீருக்கு ஏங்கித் தவித்தன. பயிற்சிக்குப் பின்னர் குளிர்ந்த நீரைக் குடிக்க எம் ஜி ஆர் தடை விதித்திருந்ததால் தண்ணீர் கொதிப்பதற்காக காத்துக்கொண்டிருந்தனர். அப்போது மணிவண்ணன் கேட்டான்.

“எம் ஜி ஆர் அண்ணன், நானும் கொஞ்சம் எம் ஜி ஆர் படங்கள பாத்திருக்கேன். அதுல எல்லாம் எப்போதுமே கதாநாயகிங்கதான் எம் ஜி ஆர நெனச்சி கனவுல பாட்டு பாடறதா இருக்குமே தவுர அவுரு யாரியும் நெனச்சி எம் ஜி ஆர் கனவு காணமாட்டாரே, அது ஏன்ணா? “

“சபாஸ், நல்ல கேள்வி கேட்டப்பூ!. அவன் விரும்புற பொண்ணு அவன காதலிக்காட்டி சில ஆம்பிளிங்க என்ன செய்ய நெனைக்கிறாங்க தெரியுமா? ஒன்னு அந்த பொண்ண கற்பழிக்கப் பாக்கறாங்க. இல்லாட்டி அவ மொகத்துல பாவம் அசீட் அடிக்க நெனைக்கிறாங்க. ஏன்னா, அவ வேணான்னு சொன்னத அவனால ஏத்துக்க முடியில. ஆம்பளன்ற திமிரு! அவளுக்கு புடிக்குதோ இல்லியோ அவனுக்கு புடிச்சிருக்குன்றதனால அவன அவ விரும்பியே ஆகனுமாம். எப்பிடி இருக்கு சங்கிதி பாத்தியா?.  இதுலேர்ந்து என்ன தெரியுது. ஒரு பொண்ணோட மனசு தெரியாமா அவனா அவள நெனச்சி கனவு காண்றது பலாத்காரம்ன்னு தெரியுதா இல்லியா!. அதனாலதான் எம் ஜி ஆர் அப்படிப்பட்ட காட்சியல்லாம் அவுரு படத்துல வெக்கிறதில்ல. அதே சமயத்துல ஒரு பொண்ணு ஒரு ஆண நெனச்சி கனவு காண்றது அவன் மேல அவளுக்கு இருக்குற காதல காட்டுது. ஏன்னா, அப்பிடியே அந்தக் காதல் கை கூடா௳ போயிட்டா அவ, அவன் மேல அசீட் எல்லாம் அடிக்கமாட்டா. அவன பத்தின ஏதாவது பாட்ட பாடிக்கிட்டே ‘நம்ம கொடுத்து வெச்சது அவ்ளோதான்னு..’ வேற வாழ்க்கைய தேடிக்குவா..”

“நீங்க சொல்றதும் செரிதாண்ணா. அது சரி, அப்படி என்னா பட்டண்ண பாடிப்பா?”

“எவ்வளவோ இருக்குப்பூ! தோ, இந்தப் பாட்டாக்கூட  இருக்கலாம்..”

“உன்னை நான் சந்தித்தேன்…

நீ, ஆயிரத்தில் ஒருவன்…”

                                                                                          * * *

னக்கு ஒன்னு புரியவே இல்ல எம் ஜி ஆர் அண்ண. சனங்களுக்கு அவ்ளோ நல்லது செஞ்ச எம் ஜி ஆருக்கு ஏன்ண்ண புள்ளிங்களே இல்லாம போச்சி? அது ஒரு சாபந்தானே?..”

அன்று அவர்கள் பயிற்சிக்கு கிளம்பிப் போகும் நேரம் கனத்த மழை பிடித்துக்கொண்டது. அவருடன் மனம்விட்டுப் பேச எல்லோருக்கும் நல்ல சந்தர்ப்பம் வாய்த்தது. அப்போது தயக்கத்துடனேயே மார்த்தாண்டன் கேட்டான்.

“அப்படி கேளுப்பு மார்த்தாண்டா!. அது ஒன்னும் சாபம் இல்லப்பூ சாபம் இல்ல! அவ்வளவும் ஆசிர்வாதம். நம்ப கங்காணி கண்ணாநிதி எப்பிடிபட்ட மனுசன்? அவர போல ஒரு உத்தமமான மனுஷன பாக்கமுடியுமா? ஆனா, அவுருக்கு பொறந்த அழகிரிசாமி எப்படிபட்ட போக்கிரியா இருக்கான் பாத்தியா!.. குடி, சண்ட, பொறுக்கித்தனம்ன்னு அவங்கிட்ட இல்லாத கெட்ட பழக்கம்ன்னு ஏதும் இருக்குதா என்னா? இதெல்லாம் யாருக்கு அவமானம்? கங்காணிக்குதானே? தோ, இப்ப நா சொல்றப்பகூட கண்ணாநிதி கங்காணி மவன்னுதானே சொன்னேன். அவுருக்கு பாவம் மனசுல எவ்ளோ வேதன இருக்கும்? அவ்ளோ ஏன். அப்படிப்பட்ட காந்தியோட மவன் ஹரிலாலே மகாத்மா, கூடவே கூடாதுன்னு சொன்ன குடிக்கு அடிமையாயி குடிகாரன் ஆயிடலியா!.. அதனாலதான் சொல்றேன். எம் ஜி ஆருக்கு புள்ளிங்க இல்லாதது அவ்ளவும் கொடுப்பன. தோ அங்க மூனாவது வரிசீல இருக்குற அஞ்ஜாவது போஸ்டர படி, பாப்பம்.”

மார்த்தாண்டன் படித்தான்.

“பெற்றால்தான் பிள்ளையா?..”

                                                                                * * *

கோவில் அரச மரத்தடியில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு எம் ஜி ஆர் தாத்தாவின் வீட்டை நோக்கி மணிமாறன் ஓடினான். வீட்டிற்கு முன்னே ஆயில் பால்ம் மட்டைகளால் பந்தல் போடப்பட்டிருந்தது. பந்தலில் அவ்வளவு கூட்டமில்லாதது அவனுக்கு வியப்பாய் இருந்தது. வந்தவர்கள் ஆங்காங்கே இரண்டு மூன்று பேர்களாக சிதறிப்போய் பேசிக்கொண்டிருந்தனர்.

மணிமாறன் மிகவும் உணர்ச்சி மயமாகிப் போயிருந்தான். தன் தந்தைக்கு ஒப்பான மரணத்தைப்போல் அது அவனுக்கு வலித்தது. முகத்தில் ஒரு நிரந்திர சோகம் அப்பிக் கிடந்தது.

பந்தலில் நின்றுக்கொண்டிருந்த கரிகாலன், அவனைப் பார்த்ததும் விரைந்து வந்து அவன் கரங்களைப் பற்றி விசும்பிக்கொண்டே கேட்டான்.

“ஏம்பூ, எம் ஜி ஆர் தாத்தாவுக்கு  ஒடம்பு ஏதும் சொகமில்லியாப்பூ? “

“அப்படியெல்லாம் ஒன்னும் இல்லப்பூ. நேத்துகூட நா பசங்களுக்கு பயற்சி கொடுத்துக்கிட்டு இருந்தத நல்லாதான் பத்துக்கிட்டு இருந்தாரு. பயற்சி முடிஞ்சி போறப்ப எப்பியும் போல ‘ எம் ஜி ஆர் நாமம் வாழ்க!’ ன்னு சொல்லி எல்லாரையும் சந்தோஷமாதான் வழியனுப்பி வெச்சாருங்கூட. இன்னிக்கி காலீலியே இன்னடான்னா இந்த தகவல் வருது! ஐயோ, எம் ஜி ஆர் தாத்தா, நா எப்பிடி இத தாங்குவேன்?..”ன்னு அழுதுக்கொண்டே கரிகாலனிடமிருந்து கைகளை விடுவித்துக்கொண்டு தாத்தாவின் வீட்டிற்குள் போக யத்தனித்தான்.

“எங்கப்பூ போற?.. அவுரு ஒடம்பு உள்ளார இல்லப்பூ..”

“என்னாப்பூ சொல்ற?.. அதுக்குள்ளியும் ஒடம்ப யார கேட்டு எடுத்துட்டுப் போனாங்க கமுலாட்டிங்க?.” – மணிமாறன் ஆத்திரத்தில் தன்னையும் மறந்து கத்தினான். வாய் நடுக்கத்தில் குழறியது. சிதறிக்கிடந்த எல்லோரும் அவனையே திரும்பிப் பார்த்தனர்.

கரிகாலன், மணிமாறனை தோளோடு அணைத்துக்கொண்டு தேற்றினான்.

“அப்படியெல்லாம் ஒன்னும் இல்லப்பூ. எம் ஜி ஆர் தாத்தா ரெண்டு மாசத்துக்கு முந்தி அவுரோட உறுப்புங்கள எல்லாம் தானம் பன்னிட்டாராம்பூ. அதான் நேரமாவுரத்துக்குள்ள உறுப்புங்கள வெட்டி எடுக்கனும்ன்னு ஓடம்ப காஜாங் ஆஸ்பத்திரிக்கி எடுத்துட்டுப் போயிருக்காங்க. சாவப்போறம்ன்னு அவுருக்கே தெரிஞ்சிரிச்சீ போலப்பூ. அவுரேதான் காலீல ஆஸ்பத்திரிக்கி போன் போட்டு தகவல் சொல்லியிருக்காப்ல..” 

மணிமாறன், அப்படியே கல்லாய் சமைந்து நின்றான். நெஞ்சில் முள் ஒன்று, ‘சுள்ளென்று’ தைத்து அறுவியது. அந்த வலியோடு எம் ஜி ஆர் தாத்தாவின் வீட்டைப் பார்த்தான். திரும்பி கோயிலைப் பார்த்தான். மீண்டும் வீட்டைப் பார்த்தான். இமைகள் பிரார்த்தனையில் மூடின..

‘குடியிருந்தக் கோயில்!..’

* * *

முற்றும்

CLICK HERE TO READ


Comments

Popular Posts