Slowing Down (Spanish Story)

 


மூலம் - லத்தீன்
Writer - Samanta Schweblin. (Argentinian writer)
English – Megan McDowell
Title – Slowing Down
புகழ் பெற்ற ‘Granta’ இதழும், ‘Bogota39’ என்ற லத்தின் அமெரிக்க சிறுகதைத் தொகுப்பும் தேர்ந்தெடுத்திருக்கும் முறையே 22 மற்றும் 39 சிறந்த புதிய தலைமுறை லத்தின் அமெரிக்க எழுத்தாளர்கள் பட்டியலில் இடம் பெற்றிருப்பவர்.
Winner of The National Book Award.
படித்த உடனேயே மொழிப்பெயர்க்கத் தூண்டிய கதை.
சின்ன கதைதான். தவறாமல் படித்துப் பாருங்கள்.
மொழிப்பெயர்ப்பு – ஸ்ரீகாந்தன், மலேசியா
மெல்ல சிதைந்துகொண்டிருக்கிறேன்
தேகோ தனக்குக் கொஞ்சம் பொடிமாஸ் செய்துக்கொண்டு, ஆனால், மேசையில் உட்கார்ந்து தட்டையே பார்த்துக்கொண்டிருந்தபோது, தன்னால் அதைச் சாப்பிட முடியாமல் இருப்பதை உணர்ந்தான்.
“ஏன், என்ன ஆச்சி?” என்று அவனைக் கேட்டேன்.
அவனுடைய கண்கள் பொடிமாஸையே பார்த்திருந்தன.
“எனக்கு கவலையாக இருக்கிறது,” என்று சொன்னான். “நான் நினைக்கிறேன், நான் மெல்ல சிதைந்து கொண்டிருக்கிறேன்.”
அவன், எரிச்சலுடன் தனது கரங்களை பக்கவாட்டில் மெதுவாக வேண்டுமென்றே ஆட்டிபடி, எனது தீர்ப்புக்காக காத்திருப்பவன்போல் என்னையே பார்த்திருந்தான்.
“நீ என்ன சொல்கிறாய் என்று எனக்கு ஒன்றுமே புரியவில்லை.” என்று சொன்னேன். “நான் இன்னும் தூக்க கலக்கத்தில் இருக்கிறேன்.”
“நான், தொலைப்பேசியை எடுத்து பதில் சொல்ல எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறேன் என்பதை நீ பார்க்கவில்லையா?. அதோடு, வாசல் கதவிற்கு போக, ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்க, எனது பற்களைத் தேய்க்க?. நரக வேதனை.”
ஓரு காலத்தில் தேகோ, காற்றினூடே மணிக்கு முப்பது மைல் வேகத்தில் பறந்தான். சர்க்கஸ்சின் கூரையே அவனுக்கு வானம்!.
நான் பீரங்கியை இழுத்துக்கொண்டு வளையத்தின் நடுவிற்குச் செல்வேன். விளக்குகள், பார்வையாளர்களை மறைத்துவிடும் ஆனால் அவர்களின் ஆரவாரம் மட்டும் கேட்டுக்கொண்டிருக்கும். வெல்வெட் திரைச் சீலை விலக தேகோ, வெள்ளித் தலைகவசமணிந்து தோன்றினான். கைகளைத் தூக்கி பார்வையாளர்களின் கைத்தட்டல்களைப் பெற்றுக்கொண்டான்.
அவனுடைய சிவப்பு உடை வளையத்தைச் சுற்றியிருந்த மணலில் பட்டு மின்னியது. நான், புகைப்படலத் தோற்றுவிக்கும் பவுடரை உள்ளே தடவி விட, அவன் மேலே ஏறி வந்து, பீரங்கிக்குள் தனது ஒல்லியான உடம்பை நுழைத்துக்கொண்டான். இசைக்குழு பேரிகையை முழங்கி அமைதியைக் கோரியது. இனி, எல்லாம் எனது கையில்!. நிசப்தத்திற்கு இடைஞ்சலாக கேட்டதெல்லாம் பாக்கெட்டிலிருந்த சோளப்பொறியின் குலுங்கலும் அவ்வப்போது தயக்கத்துடன் கேட்ட இருமலும்!. நான் இன்றும் வைத்திருக்கும் அந்த வெள்ளிப் பெட்டியில் அவற்றை வைத்து ஏந்தி சென்றேன். சின்ன பெட்டி, ஆனால் உச்சியிலிருக்கும் இருக்கைகளிலிருந்தும் நன்றாகப் பார்க்கத்தக்க பிரகாசமிக்கது.
நான் பெட்டியை திறந்து, நெருப்பெட்டியை எடுத்து பெட்டியின் அடியிலிருந்த மணற்தாளின் (sandpaper) மேல் வைத்தேன். அந்தக் கணம் எல்லோருடைய பார்வையும் என் மேலேயே நிலைத்திருந்தன.
ஒரு திடீர் உரசல், நெருப்பு ஒளிர்ந்தது!.
நான் திரியில் பற்றவைத்தேன். தீப்பொறிகளின் சத்தம் எல்லா திசைகளிலும் கேட்டது.
நான் வியப்புடன் சில அடிகள் பின்னோக்கி நகர்ந்து, ஏதோ எதிர்ப்பாராத அசம்பாவிதம் நடந்துவிட்டதாக பாவனக் காட்ட, பார்வையாளர்களின் கவனமெல்லாம் எரிந்துகொண்டிருக்கும் திரியில் குவிய, திடீரென்று:
பூம்ம்!.
தேகோ, சிவப்பும் பிரகாசமும் மிக்க ஒரு வில்லாக, பயங்கர வேகத்தில் பீரங்கியிலிருந்து வெடித்துக் கிளம்பினான்.
* * *
தேகோ, பொடிமாஸை ஓரமாக ஒதுக்கிவிட்டு, சிரமப்பட்டு நாற்காலியிலிருந்து எழுந்தான். அவன் இப்போது பருத்தும் வயதாகியும் போயிருந்தான். அவனுடைய முதுகெழும்பு நுரையீரலின் எந்தப் பகுதியை அழுத்திக்கொண்டிருந்ததோ தெரியவில்லை, குறட்டையின் ஒலியில் சுவாசித்துக்கொண்டிருந்தான். நடக்கும்போது அடிக்கடி நின்று ஓய்வெடுத்தான் அல்லது சிந்தனையில் ஆழ்ந்து போனான். சமயங்களில் வெறும் பெருமூச்சைவிட்டு விட்டு நகர்ந்தான். அவன் அமைதியாக சமயலறைக் கதவுவரை நடந்து சென்று, நின்றான்.
“நான் சிதைந்துகொண்டிருக்கிறேன் என்றே நினைக்கிறேன்.” அவன் சொன்னான்.
பொடிமாஸைப் பார்த்தான்.
“நான் நினைக்கிறேன், நான் சாகப் போகிறேன்.”
நான் அவனுடைய தட்டை என் பக்கமாக நகர்த்திக்கொண்டேன். எனக்குத் தெரியும் என்னுடைய செயல் அவனை சினமூட்டுமென்று!.
“உன்னால் சிறப்பாக செய்ய முடிந்த காரியத்தை செய்ய முடியாமல் போகும்போது இதுதான் நடக்கும்.” என்றவன் தொடர்ந்து சொன்னான். “அதைத்தான் நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்: பிறகு நீ செத்துப் போவாய்.”
* * *
ஓர் உள்ளூர் பத்திரிக்கையாளர் சில நாட்களுக்குப் பின்னர் என்னை நேர்காணல் காண வந்தார். தேகோவும் நானும் பீரங்கியின் பக்கத்தில்!. அவன், தலைக்கவசமணிந்து சிகப்பு சீருடையிலும், நான் நீல உடையில் கையில் நெருப்பெட்டியுடன் இருக்கும் புகைப்படத்தைக் கையொப்பமிட்டு கட்டுரைக்குக் கொடுத்தேன். அந்தப் பெண், தேகோவைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள விரும்பினாள். அவனின் மரணத்தைப் பற்றி விசேஷமாக சொல்ல ஏதும் இருக்கிறதா என்று கேட்டாள். ஆனால், எனக்கோ அந்த மரணத்தைப் பற்றி பேச விருப்பமில்லாமலும், மேற்கொண்டு சொல்லத்தக்க தகவல் எதையும் நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை. அவள், அங்கிருந்து கிளம்பிப் போகாமல் இருக்கவே, அவளுக்கு குடிக்க ஏதாவது கொடுக்க எண்ணினேன்.
“காப்பி?” என்று அவளைக் கேட்டேன்.
“நிச்சயமாக!.” என்றாள்.
அவளைப் பார்க்க கதைக் கேட்க முடிவில்லாமல் காத்திருக்கத் தயாராக இருப்பவள்போல் தோன்றினாள். ஆனால், நான் அடுப்பைப் பற்ற வைக்க நெருப்புக் குச்சியை எடுத்து என்னுடைய வெள்ளிப் பெட்டியில் பலமுறை உரசிப் பார்த்துக் கொண்டிருந்தேன், எதுவுமே நடக்கவில்லை.
* * *






Comments

Popular Posts