‘Sapphire Anniversary’
Memory Lane – 101
45 வருடங்களுக்கு முன்னர் இன்றைய தேதியில் நாங்கள் திருமணம் செய்துக்கொண்டோம்!.
ஆங்கிலத்தில் இன்று எங்களுக்கு,
‘Sapphire Anniversary’
கண்டவுடன் காதல் வயப்பட்டவர்கள் காதலர்கள் நாங்கள். ஒரு சில வருடங்கள் கூடி வாழ்ந்து, ஒருவரை மற்றொருவர் நன்கு புரிந்துக்கொண்டு, பின்னர் கல்யாணம் செய்துக்கொள்ளும் பரீட்சார்த்த ஏற்பாடெல்லாம் ஒரு ஐடியாவாகக்கூட யாருக்குமே உதித்திராத ஒரு ‘கற்காலம்’ அது!. ஆயினும், ‘கூடி வாழ்தலின்’ பிரிமிடீவ் வேர்ஷனான ‘day use’ அப்போதே நடைமுறைக்கு வந்து விட்டதால் அது எங்களுக்கு போதுமானதாய் இருந்தது.
சங்க காலம் அதைக் ‘களவொழுக்கம்’ என்று சொன்னது.
எவ்வளவு காலத்திற்குதான் ‘silent movie’ கணக்கில் முத்தங்களைப் பரிமாறிக்கொள்வது. பின்னர், அந்த முத்தங்களின் ஓசை நயத்தை தொலைப்பேசி உரையாடல்களில் மீட்டெடுத்துக்கொள்ளத் தொடங்கியதும் நேரில் பார்த்துக்கொள்ளாமல் எங்களால் இருக்க முடியவில்லை!.
காதலுக்கு அது அழகாகுமோ?
இருவருக்குமே, பெற்றோர், உடன் பிறந்தவர்கள் என்ற ஆதரவைத் தவிர வேறெந்த வசதியும் இல்லாத அன்றாடங்காய்ச்சிகள்தாம்.
குடித்தனம் போக வீடுகூட இல்லாத நிராதரவான நிலை. ஆயினும், நினைவில் இருந்ததெல்லாம், நமக்கென ஒரு வீடு, குழந்தைகள், வாழ்க்கை அவ்வளவுதான்!. விவாகரத்து என்ற சொல் எத்தகைய சந்தர்ப்பத்திலும் ஒரு தீர்வாய் தோன்றியதேயில்லை!. எதையுமே சமாளித்து மீளுவதற்கான அன்பும், நம்பிக்கையும் இருவருக்குமே இருந்தது.
பெற்றோரிடமிருந்து சீதனமாய் நாங்கள் பெற்றதெல்லாம் அவர்களின் அன்பும், ஆதரவும்தான். இரண்டு பக்கமும் எங்களுடன் பகிர்ந்துக்கொள்ள அவர்களின் ஏழ்மையைத் தவிர வேறு வசதியில்லை.
கான்வெண்ட் பள்ளியில் படித்தும் கணவனை விட தான் அதிகம் படித்துவிடக்கூடாது என்று அவர் தீர்மானித்திருந்ததுபோல் இருவருக்குமே ஒரே கல்வித் தகுதி!. ‘Lower secondary drop-out’. (ஒன்பதாம் வகுப்பு). நல்ல கல்வி இல்லாததால் வாழ்க்கையில் முன்னேற கடினமாய் உழைப்பதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை.
நான், இரவில் ஹோட்ட ஒன்றில் ‘night Auditor’ என்றும், பகலில், ‘Transport’ கம்பேனி ஒன்றில் ‘Accounts Clerk’ என்றும் இரண்டு வேலைகள் தேடிக்கொண்டேன். இரவு 11.00pm – 7.00am ஹோட்டல் வேலையென்றால், 9.00am – 5.00pm கிளார்க் வேலை. இடைப்பட்ட நேரத்தில்தான் உறக்கத்தைத் தேடிக்கொள்ள வேண்டும்.
மனைவி, ‘Texas Instruments’-ல் புரோடக்க்ஷன் ஆப்பரேட்டராக இருந்தார். 7.00am – 3.00pm. வேலை நேரம். காலை 6.00 மணிக்கெல்லாம் தொழிற்சாலை பஸ் வந்துவிடும். அதிகாலை 4.00 மணிக்கே எழுந்து, துணி துவைத்து, சமையல் செய்து மற்றும் இன்ன பிற வீட்டு வேலைகளையும் செய்து முடித்தால்தான் 6.00 மணி பஸ்சை பிடிக்க முடியும். பிள்ளைகள் இருவரும் படித்துக்கொண்டிருந்தனர். தினமும், ஓவர் டைம் வேறு இருக்கும். அதையும் செய்துவிட்டு வீட்டிற்கு வந்தால் இரவு மணி 8.00!. ஒவ்வொரு வாரமும் காலை, மதியம், இரவு என்று ஷிப்ட் மாறும்போது அதற்கு ஏற்றவாறு தனது கடமைகளை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும். 50 வயதில் அவர் விருப்ப பணி ஓய்வு பெறும்வரை இப்படித்தான் உழைத்தார்.
இப்படி உழைத்து சேர்ந்த இருவரின் ‘Employee Provident Fund’ -லிருந்து வாங்கப்பட்ட வீடுதான் இப்போது நாங்கள் குடியிருப்பது.
பரஸ்பரம் ஒருவரின்பால் மற்றொருவருக்கு இருந்த காதலால் நிலைப் பெற்றததுதான் இந்த நீண்ட தாம்பத்திய வாழ்க்கை!. உரசல்கள் இல்லாமல் இல்லை. ஆனால், அந்த உரசல்கள் தீரும்போது நெருக்கம் இன்னும் அதிகமாகிப் போகும் அதிசயம்தான் எப்படியென்று தெரியவில்லை?
உணலினும் உண்பது அறல் இனிது, காமம்
புணர்தலின் ஊடல் இனிது!.
குறள் சொல்வது அதைத்தானோ!.
எனது தோட்டத்தில் இருவர் உட்காரத்தக்க இரும்பு இருக்கை ஒன்று இருக்கிறது. சந்தர்ப்பம் வாய்க்கும் மாலைகளில் அருகருகே அமர்ந்து விரல்களால் ஸ்பரிசித்துக்கொண்டபடி சில நினைவுகளை நாங்கள் மீட்டெடுத்துக்கொள்வதுண்டு.
பூந்தோட்டத்தை சுற்றி வராத காதலும் உண்டோ!.
அத்தகைய தருணங்களில் எனது‘sense of humor’ என்னை சும்மா இருக்க விடாது. நான் கேட்பேன்.
“அன்பே, இப்போதெல்லாம் நான் உன் கனவில் வருவதுண்டா?.”
கேள்வியே அவரை சிரிப்பிற்குள்ளாக்கும்.
“இப்போதெல்லாம் நீங்க கனவில்கூட வருவதில்லையே?” என்பார்.
“ஆனால் நீயோ, இன்னும் கனவில் வந்து கொண்டுதான் இருக்கிறாய். சமயங்களில் ‘Eve’s costume’-ல் கூட வந்து தொந்தரவு செய்கிறாய் தெரியுமா?” என்று நான் உருட்ட ஆரம்பிதேனென்றால் அவரால் கரையாமல் இருக்க முடியாது!.
இதெல்லாம் வயது சம்பந்தப்பட்ட விஷயமன்று. மனதையும், உடலையும் ஆரோக்கியமாக வந்திருந்தால் நேரத்திற்கு நன்றாக பசி எடுக்குமாம். டாக்டர்கள் சொல்லுகின்றனர். 
இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்த நாளில் நாங்கள் ஆஸ்திரேலியாவில் இருந்தோம்!. அப்போது, என் மகளின் காதலனுடன் பேசிக்கொண்டிருக்கையில் ‘இந்த குளிர்க்காலத்திலும் அதிகாலையில் ஏனோ உஸ்ணமாக இருக்கிறது.’ என்று நான் சொன்னபோது, ‘உடல் முழுவதும் போர்த்திக்கொண்டு படுப்பதால் வெளிப்படாத உஸ்ணத்தால் அப்படி உணர்வது நார்மல்.’ என்று அவர் அபிப்பிராயப்பட்டார். அப்போது, என் மனைவி எங்களைக் கடந்து போனார்.
நான் சொன்னேன்.
“It means, if my wife starts disrobing herself in the wee hours, she is hot!.” என்றேன்.
காதலன் வெடித்துச் சிரித்தார். மனைவி, பேத்தியின் அறைக்குள் புகுந்துகொண்டார்.
ஆக, இப்படியாக வாழ்க்கை இப்போதும் சந்தோஷமாகவே போய்க்கொண்டிருக்கிறது. இல்லையாயின் வாழ்க்கைத் துணை என்பதின் அர்த்தம் என்ன?
இந்த வருடமோ மனைவி ஆஸ்திரேலியாவிலும் நான் மலேசியாவிலும் இருக்கிறோம்.
இந்தப் பிரிவு, யாருக்கான ஒத்திகை?.

Comments
Post a Comment