Naya Barsha Ko Subhakamana (Happy New Year in Nepali)

 



Memory Lane – 58
Naya Barsha Ko Subhakamana (Happy New Year in Nepali)
1969-ல் L.C.E-ல் பெயில் ஆன கையோடு நான் பார்த்த முதல் வேலை ‘Security Guard’. மாதம் 80.00 வெள்ளி சம்பளம். அந்தச் சம்பளத்தில் எனது சாப்பாட்டுத் தேவையை நிவர்த்தி செய்தது ரூம் வாடகை 50.00 போக கையில் மீந்த 30.00 மட்டுமே!. அந்தக் காசில் அட்டவணைப் பிரகாரமெல்லாம் சாப்பிட சாத்தியமில்லை. சாப்பிட்டே ஆகவேண்டிய அத்தியாவசியமும், கையில் எஞ்சியிருந்த காசின் பரிவர்த்தனை மதிப்பு மட்டுமே அடுத்த வேளை ஆகாரத்தை தீர்மானிக்கும் காரணிகளாக இருந்தன. எனவே, இந்த வேலையின் கஷ்ட நஷ்டங்களை நான் நங்கு அறிவேன். அதனாலேயே அவர்களின்பால் எனக்கு ஒரு ‘Soft spot’ எப்போதுமே உண்டு.
நான் வசிக்கும் வீடமைப்பு பகுதியை நான்கு நேப்பாள்காரர்கள் ஷிப்டுக்கு இருவராக இரண்டு ஷிப்டுகள் காவல் காத்துவருகின்றனர்.. ஒரு ஷிப்டுக்கு 12 மணிநேர வேலை!. அடுத்த 12 மணிநேர ஓய்விலேயே அவர்களுடைய வார விடுமுறையும் அடக்கம். இந்தத் துஷ்பிரயோகத்திற்கு ஒத்துக்கொண்டாலே அவர்களுக்கு வேலை!. Maghe Sankranti, Mahashivaratri, Buddha Jayanti என்று எந்த பண்டிகையும் அவர்களுக்கு இன்னுமொரு வேலை நாளே!. சம்பளமில்லா விடுப்பு வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம். அதுவும், மாற்றுக்கு இன்னொரு ஆள் இருந்தால் மட்டுமே அதுவும் சாத்தியம்.
சூரியோதயமும், சூரிய அஸ்தமனமும்தான் அவர்களுக்கு புதிய நாளுக்கான அடையாளம். ச்சே, இயந்திர வாழ்க்கை!. இந்த நிலையில், ஒரு பண்டிகை என்பது இவர்களுக்கு என்னவாக இருக்கும்?. புத்தாண்டு தினமெல்லாம் இன்னும் ஒரு நாளாக மட்டுமே விடியும்?. புத்தாண்டு வாழ்த்தெல்லாம் இவர்களுக்கு சொல்லப்படுமா?. புத்தாண்டு என்று சொல்லி புதியதாக ஏதாவது சாப்பிட ஆசை வந்தாலும் கையில் எங்சியிருக்கும் காசு அதற்கெல்லாம் அனுமதிக்குமா?.. அவர்கள் யாவருமே வெறும் காவலாளி மட்டுமல்ல!. ஒரு மகன்!.. ஒரு கணவன்!.. ஒரு தந்தையும் கூட!.. அவர்களை நம்பி தொலைதூரக் கிராமத்தில் எத்தனை வாய்கள் காத்துக்கொண்டிருக்கின்றனவோ?.
குடியிருப்பில் தினமும் யாராவது ஒருவர் K F C, Dominos, Mac Donald மற்றும் Starbucks என்று ஏதாவது ஒன்றை ஆன் லைனில் ஆர்டர் செய்து, Home delivery செய்யப்பட்டு சாப்பிடவே செய்கின்றனர். அந்த டெலிவரி ஒவ்வொன்றும் அந்தக் காவலாளிகளிடம் பதிவு செய்துக்கொண்டே செல்ல வேண்டும். அந்தச் சாப்பாடெல்லாம் அவர்களின் வருமானத்திற்கு நினைத்துப் பார்க்கமுடியாத ஒர் ஆடம்பரச் செலவாகக்கூட இருக்கலாம்!. அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த டெலிவரிகள் அவர்களிடன் எத்தகைய ஆசைகளைத் தூண்டக்கூடும்.
இன்று, அவர்களுக்கு ஒரு Naya Barsha Ko Subhakamana வாழ்த்து சொல்லி, அந்த ‘ஆடம்பரத்தை’ அவர்களுக்கு வாங்கித் தந்து எனது கடனை நான் தீர்த்துக்கொண்டேன்.
இங்கே, எனது குடியிருப்பு என்பது ஒரு உதாரணமே!.. இப்படி, நாட்டில் எத்தனை ‘Gated and Guarded’ குடியிருப்புகளோ!. எத்தனை அந்நிய தேசத்து தொழிலாளர்களோ?..
மனசாட்சி கொஞ்சமும் இல்லாத தரகர்கள், இல்லாத வேலைகளை இருப்பதாகச் சொல்லி, அப்பாவி மக்களை லட்சங்களில் கடனை வாங்கி வரவழைத்துவிட்டு இப்போது நிர்க்கதியாக விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர். இது, சுங்கத்துறையின் பங்கேற்பு இல்லாமல் நடைப்பெற சாத்தியமே இல்லை. அந்நியத் தொழிலாளர்களை நாட்டிற்குள் தறுவிக்கும் ‘Foreign visa system contract’ ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதி, இப்போது நாட்டின் துணைப் பிரதமர்!.
நிர்க்கதியாக விடப்பட்டிருக்கும் அந்நிய நாட்டுத் தொழிலாளர்களின் துயரைச் சொல்லும் இணைப்பு, கீழே!.
- Security post
- ஓர் ஆடம்பரம்
- காவல்கார சகோதரர்



Comments

Popular Posts