Inspiration-க்கு இருவர்

 


Memory Lane – 23

Inspiration-க்கு இருவர்
சம்பவம் ஒன்று.
கைப்பேசி இன்னும் பொது பயன்பாட்டிற்கு வந்திராத ‘ஆதி காலம்’ அது. தொலைவில், அங்கொன்றும் இங்கொன்றுமாக ‘பப்ளிக் பூத்’துகள் இருந்தன! ஆனால், ‘ஆபத்து அவசரத்திற்கு’ உதவும் உத்திரவாதம் எல்லா ‘பூத்’துகளுக்கும் இருந்ததில்லை. நான், அப்போதுதான் புதிதாக ‘Night Auditor’ ஆகியிருந்தேன்.
நான், வாகனத்தை ஓட்டிக்கொண்டு சென்ட்ரல் ரயில் நிலையத்தைக் கடந்து போய்க்கொண்டிருக்கையில் ‘போனட்’டிலிருந்து புகை கிளம்ப ஆரம்பித்துவிட்டது. இப்போது, என் பிள்ளைகள் இருவரைப் போல் வாகனம் எங்கேயும் நிற்காமல் ஓடினால் சரி. அவ்வப்போது ‘ரெடியேட்டர்’ தண்ணீர், ‘இஞ்ஜின் கருப்பெண்ணை’ அளவு கண்காணிக்கப்படுவதெல்லாம் அவசியமற்ற வேலை என்ற லட்சணத்திலேயே அப்போது நானும் இருந்திருக்கிறேன். உடனே, ‘Double signal’ போட்டு, வாகனத்தை சாலையோரமாக நிறுத்தினேன். பக்கத்திலேயே தேசிய பள்ளி வாசல். மணி இரவு 10.30 இருக்கும். வேலைக்கு நேரம் ஆகிக்கொண்டிருந்த பதற்றத்தில் நிதானமாக யோசிக்கும் நிலையில் நான் இருக்கவில்லை. ‘என்ன செய்றதுன்னே தெரியிலியே!..’ என்பதில் நான் தெளிவாக இருந்தேன். சாலையோரத்தில் நின்று தவித்துக்கொண்டிருந்தேன்.
அப்போது, வாகனம் ஒன்று என் வாகனத்தைக் கடந்து போய் எதிரே நின்றது. அதிலிருந்து மலாய் அன்பர் ஒருவர் என்னை நோக்கி நடந்து வந்தார். நான் உஷாரானேன்!. எந்த நேரத்திலும் எந்த அசம்பாவிதமும் நடக்கக்கூடிய பட்டண வாழ்க்கை. நான், மனிதாபிமானத்தில் நம்பிக்கை வைத்து வரட்டு துணிச்சலுடன் அங்கேயே நின்றேன்.
“அடேக், (தம்பி) ஏன்? என்னாச்சி?.” என்றார்.
நான், ‘போனட்’டிலிருந்து புகை கிளம்பிய கதையைச் சொன்னேன். அவர், ரெடியேட்டரை சோதித்துப் பார்த்து தண்ணீர் இல்லாததைச் சொல்லி, ‘Boot’-யில் தண்ணீர் இருக்கிறதா என்று கேட்டார். நான், இல்லையென்று கையை விரித்தேன். எனக்குதான் வாகனம் ஓடினால் போதும் ஆயிற்றே!
அவரே தன் வாகனத்திற்கு சென்று 5 லிட்டர் பிளாஸ்டிக் டிரம் ஒன்றை எடுத்துக்கொண்டு தேசியப் பள்ளிவாசலுக்குள் சென்று தண்ணீர் பிடித்துக்கொண்டு வந்து, ரெடியேட்டரில் ஊற்ற, வாகனம் புத்துயிர் பெற்று அதிர்ந்தது.
நான், ஸ்தம்பித்துப் போய் நின்றேன்!. யார் அவர்?. நான், உதவி கேட்டு யாரையும் நிறுத்தக்கூட இல்லையே!. அவர் எங்கிருந்து வந்தார்?. அவர் எப்படி ஒரு மலாய்க்காரராக இருந்தார்? நான், வாகனத்தை சரியாக தேசியப் பள்ளிவாசல் முன் ஏன் நிறுத்தினேன்?. உதவிக்கு வந்தவர் இந்தியராகவோ, சீனராகவோ இருந்தால் பள்ளிவாசலுக்குள் போக முடிந்திருக்குமா?. எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
அவர், ஒர் உயர் அதிகாரியாக; செல்வந்தராக; துறைசார் வல்லுனராக; சாமானியராக என்று யாராகவும் இருக்கலாம். ஆனால், அந்த எதுவுமே குறுக்கே வராமல் சகமனிதருக்கு கேட்காமலேயே உதவிக்கு வந்த அந்தச் செயல், எனக்கு ஒரு போதனை! அடுத்தவருக்கு உதவிட பரிச்சயம் இருக்க வேண்டியது அவசியமே இல்லை என்று எவ்வளவு பணிவுடன் அவர் அந்த உதவியைச் செய்திருந்தார். அந்தப் பணிவன்றோ நான் பேணவேண்டிய பண்பு. அவர் விடைப்பெற்று போகும்போது, நான் வற்புறுத்தி அவரின் வங்கி எண்ணை பெற்றுக்கொண்டேன். இரண்டு நாட்களுக்குப் பிறகு, அந்த எண்ணிற்கு ஒரு தொகையை வரவு வைக்கப் போனபோது, அப்படியான வங்கி எண்ணே பயன்பாட்டில் இல்லையென்று தகவல் தந்தனர், வங்கி ஊழியர்கள்!
சம்பவம் இரண்டு.
நான், சமீபத்தில் என் மகளின் ஆஸ்திரேலிய குடியுரிமை வைபவத்திற்கு ஆஸ்திரேலியா சென்றிருந்தேன். என்னிடம் அருமையான ‘Over sized’ கால்சட்டைகள் சில, பயன்படுத்த முடியாமலேயே இருந்தன. அதில் ஒன்று, சிங்கப்பூரில் வாங்கப்பட்ட ‘Brooks Brothers’ கால்சட்டை!. வாங்கியதிலிருந்து பல வருடங்களாகவே அணியப்படாமலேயே இருந்தது.
மலேசியாவில், தையற்காரர்கள் எல்லோருமே, ‘Resize’ செய்வது அதிக வேலை என்று சொல்லி மறுத்துவிட்டனர். மகள், ஒரு வியாட்நாமிய தையல்காரியிடம் என்னை அழைத்துச் சென்றாள். அவரைப் பற்றி நற்சான்றிதழ் ஒன்றையும் வாசித்து வைத்தாள். ‘Complete Resize’ செய்வதற்கு AUD25.00 கேட்டார். AUD 90.00 வெள்ளிக்கான துணிகள் சிலவற்றை அவரிடம் கொடுத்துவிட்டு வந்தேன். இரண்டாவது நாள், என் மகளின் கைப்பேசிக்கு ஒரு கால்!.
“உன் அப்பாவை என்னை வந்து பார்க்கச் சொல்ல முடியுமா?.” வியாட்நாமிய மாது.
“நான் வேலை முடிந்து அந்த வழியாகத்தான் போவேன். நான் வருகிறேனே..” மகள்.
“இல்லை!. நான் உன் அப்பாவைத்தான் பார்க்க வேண்டும்.” வியட்நாமிய மாது.
மறுநாள், நான் அவரைச் சென்று பார்த்தேன். அவர், எனது ‘Brooks Brother’ கால்சட்டையின் பின் பாக்கெட்டில் இந்தப் பணம் இருந்ததாக AUD 2,500.00 என்னிடம் நீட்டினாள். நான். பணத்தை அந்தக் கால்சட்டையில் வைத்திருந்ததை முற்றாகவே மறந்துப் போயிருந்தேன். வேறொரு கால்சட்டையில் வைத்திருந்ததாக எனக்கு ஞாபகம். அதிர்ச்சியில் உறைந்து போனேன். அந்தப் பணத்தை மட்டும் அவர் தராமல் இருந்திருந்தால் எனது ஆஸ்திரேலிய பயணமே மிகுந்த மன அழுத்தத்திற்குள்ளாகிப் போயிருக்கும். தேவையில்லாமல் யாரையெல்லாம் சந்தேக வட்டத்திற்குள் நிறுத்திப் பார்த்திருப்பேனோ?!.
மனப்பூர்வமான நன்றிகளைச் சொல்லி அவரின் நேர்மையை வணங்கினேன். வாய்வார்த்தைகள் போதாதென்று , அவருக்கு நான் ஏதாவது செய்தே ஆகவேண்டுமென்று வேண்டினேன். அவர், பலவந்தமாக எந்தப் பணமும் வேண்டாமென்று மறுப்பு சொன்னார். நான் விடாமல் வற்புறுத்தினேன். இறுதியில், ‘தான் அங்கம் வகிக்கும் ‘Church Group’, சில அநாதைப் பிள்ளைகளைப் பராமரித்து வருகிறது. வேண்டுமானால் நீங்கள் அவர்களுக்கு அந்த நன்கொடையை தந்துதவலாம்..’ என்று கேட்டுக்கொண்டார். அதன்படியே நானும் AUD 200.00 அவர்களுக்கு தந்துதவினேன்.
அவரின் தையல் தொழில் எவ்வளவு லாபகரமாக நடக்கிறதோ தெரியாது. ஆயினும், கண்டெடுக்கப்பட்ட அந்த AUD 2,500.00 அவளுக்கு மிகவும் உதவிகரமாய் இருக்கக்கூடிய தொகையாகவே இருக்கக்கூடும். தனக்காக எடுத்துக்கொள்ளாவிட்டாளும் அந்த அநாதைப் பிள்ளைகளுக்காகவாவது அதைப் பயன்படுத்தி தன் பாவத்திற்கு புண்ணியத்தைத் தேடிக்கொண்டிருக்கலாம்!. அந்தக் கால்சட்டையில் பணத்தை வைத்ததை நானே மறந்துவிட்டிருந்த நிலையில் அவர் ஏதும் சொல்லாமல் மறைத்திருந்தாலும் எனக்கு ஏதும் தெரிந்திருக்கப் போவதில்லை!. ஆனால், எந்தச் சபலத்திற்கும் இடம் கொடுக்காமல் உரியவரிடம் அந்தப் பணத்தைச் சேர்ப்பித்த நேர்மை, அவள் எனக்குப் போதித்த போதனை ஆனது.
எனக்கு மகான்கள் தேவையில்லை!.. மதங்களும் அவசியமில்லை!.. கடவுளும் வேண்டாம். இத்தகைய ‘Mere Mortals’ போதும் எனக்கு!.
1. வியாட்நாமிய தையல்கார மாது
2. 'Brooks Brothers' கால்சட்டை. Resize-கு பின்னர்



Comments

Popular Posts