‘induced coma’



Memory Lane – 98

செயற்கையாய் ஓர் உறக்கம்!.
எனது இளைமையில் நான் மெர்லின் ஹோட்டலில் வேலைச் செய்தபோது எனக்கு உற்ற நண்பர்களாய் இருந்த மிகச் சிலரில் முதன்மையானவன். ஏற்கெனவே அவனைப்பற்றி இரண்டு பதிவுகள் எழுதியாகிவிட்டது. முதலிரண்டு பதிவுகளை எழுதும்போது இருந்த மனநிலையில் இப்போது நானில்லை!. வேதனையில் நெஞ்சு தவிக்கிறது. ஆத்திரத்தை அடக்கமுடியாமல் கொந்தளிக்கிறேன். வார்த்தைகளில் அது வெளிப்பட்டுவிடலாகாது என்று மிகவும் கவனமாய் இருக்கிறேன்.
அவன், தான் கற்றுக்கொண்டிருந்த சமையல் கலையில் ஒரு விற்பன்னன். அந்தத் தேர்ச்சியால், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா என்று பல நாடுகளில் வேலை செய்த அனுபவம் உள்ளவன்.
சவுதி அரேபியாவில் பட்டத்து இளவரசருக்கு ‘personal chef‘ -ஆக இருந்தவன். ஆஸ்திரேலியாவில் வேலை செய்தபோது, ஒரே ஆண்டில் மொத்த குடும்பத்திற்கும் ‘PR’ -ஆகும் ஆப்ஷன் கொடுக்கப்பட்டது. ஆனால், கொஞ்சம் தூர நோக்குடன் முடிவெடுக்கத் தவறியதால் இன்னும் இந்த இனவாத நாட்டில் முடங்கிக் கிடக்கிறான். இவனைப் பார்த்து பெற்ற ‘இன்ஸ்பிரேஷனிலேயே’ எனது மூத்த மகன் ஒரு ‘chef’ -ஆக இப்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கிறான்.
‘Carcosa Seri Negara’ என்பது கோலாலம்பூர் ‘Perdana Botanical Garden’-ல் இருக்கும் இரண்டு சிறிய குன்றுகளுக்கிடையே அமைந்திருக்கும் அரச மாளிகைகளாகும். ஒன்று,’Carcosa’ காலணித்துவ காலத்தில் பிரித்தானிய ஹைகமிஷனரின் அதிகாரத்துவ இல்லமாகவும் ‘Seri Negara’ விருந்துபசரிப்பு மாளிகையாகவும் இருந்தன.
‘Carcosa’ 1898-லும், ‘Seri Negara’ 1913-லும் கட்டி முடிக்கப்பட்டன. மலாயாவின் சுதந்திர பேச்சுவார்த்தைகள் பலவும் அந்த மாளிகையிலேயே நடைப்பெற்றன. சுதந்திரத்திற்குப் பின்னர், நாட்டிற்கு விஜயம் செய்யும் அயல்நாட்டு பிரமுகர்கள் தங்கும் மாளிகையாக மாற்றப்பட்டன. பின்னர், 1989 -லிருந்து 2015 வரை ஆடம்பர ஹோட்டலாக மாற்றம் கண்டது. இந்தக் கால கட்டத்தில்தான் எனது நண்பன் அங்கே முதன்மை ‘Chef’-ஆக வேலை செய்தான். இப்போது, அம்மாளிகை ஒரு மியூசியமாக மாற்றப்பட்டுவிட்டது.
மனைவி, மக்களுக்கு ஒரு நல்வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க எங்கெல்லாமோ சுற்றித் திரிந்தவன் பாவி, தனக்காகவும் கொஞ்சம் வாழ்ந்தானா?. நண்பர்கள் நாங்கள், கால்பந்து, பூப்பந்து என்று ஏதேதோ புறப்பாட நடவடிக்கைகளிலெல்லாம் ஈடுபட்டபோது, அவன் எப்போதும் ஒரு பார்வையாளனாக மட்டுமே உட்கார்ந்திருந்தான். இன்று வரை எந்த வாகனத்தையும் ஓட்டிப் பழகவில்லை!
எங்கு போகவும் மனைவி, மக்களை நாடியிருக்க வேண்டும். சமயத்தில் அது, அவர்களுக்குச் சலிப்பைக் கொடுக்குமே?. அந்தச் சலிப்பு இப்போது, சில ‘stinging remarks’ -ஆகவும் வெளிப்படுமே!.
சில காலமாகவே ‘dementia’-ல் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறான். இரண்டு நாட்களுக்கு முன்னர், காலைச் சிற்றுண்டி சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது பக்கவாதத் தாக்குதலுக்கு ஆளாகி மேசையிலேயே சரிந்துவிட்டான்.
அவன், அடிக்கடி ஞாபகப்படுத்திக்கொண்டிருந்த இரண்டு நண்பர்களில் நான் ஒருவன்!.
ஐ சி யூ வார்டில் ‘induced coma’-ல் இருக்கிறான். பக்கவாதத்தின் தாக்கத்தை நாவும் முகமும் காட்டின. முடிந்தால் நான் பார்க்கத் தவிர்க்கும் தோற்றம். இளமையில் கமல்ஹாசனை நினைவூட்டும் தோற்றம் அவனுக்கு!. எல்லாமே இப்போது அழிந்து போனது.
வெளியில் வந்தேன். அவனுடைய மனைவி வந்து என்னிடம் நடந்ததை விவரித்தார். அதை நான் கேட்காமலேயே இருந்திருக்கலாம்.
‘காலையில் நண்பன் தனியாக பசியாறிக்கொண்டிருக்கிறான். மனைவி, சற்றுத் தள்ளி உலர்ந்த துணிகளை மடித்து வைத்துக்கொண்டிருக்கிறார். கணவன் திணரும் சத்தம் கேட்டு அருகில் சென்றுப் பார்த்தால், தாடையெல்லாம் பருக்கைகள் சிந்தி, சாப்பிட முடியாமல் வாந்தியெடுத்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு பிரஷர் வேறு இருந்ததாம்.
ஆஸ்பத்திரியில் நண்பனைப் பார்க்க வந்த உறவினரிடம் மனைவி சொன்னத் தகவல். அதற்கு உறவினர், தனக்கிருக்கும் நோய்ப் பட்டியல் ஒன்றைச் சொல்லி அவற்றைத் தான் கட்டுக்குள் வைத்திருக்கும் சூட்சுமத்தை பிரஸ்தாபித்தார். எனது நண்பனின் பிரஸ்ஷர் மாத்திரையின் அளவைக் கேட்டறிந்தார். காலையில் ஒரு வேளை மட்டும் 10mg போட்டுக்கொள்வதாக மனைவி சொன்னதும், ஒரு நாளைக்கு இரண்டு முறை மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று உறவினர் மருத்துவ ஆலோசனை சொல்லத் தவறவில்லை.’
நான், ஒரு நாளுக்கு எத்தனை முறை பிரஸ்ஷர் மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டுமென்று டாக்டர் அறிவுரை சொல்லியிருப்பாரே என்று மனைவியிடம் கேட்டேன். அவர் சொன்னார்.
‘ஐயோ ராம்லு, அத ஏன்லா கேக்குற?. நேத்து எதார்த்தமா டிராவர தொறந்து பாத்தாக்கா அவ்ளோ மாத்தரைங்கள ஊள்ளார ஒளிச்சி வெச்சிருக்காருலா!. மாத்திர சாப்பிட்டீங்களான்னு கேக்கறப்பல்லாம், ‘ஓ சாப்பிட்னேன்னு’ சொல்லுவாருலா.’
நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன்.
உறவினர், உடற்பயிற்ச்சியைப் பற்றிக் கேட்டபோது,
‘தெனந்தோறும் காலீல வாக்கிங் போவாரு. அவுருக்கு லாட்டரி சீட்டு வாங்கற பழக்கம் இருக்குது. அதனால பிள்ளிங்க எல்லோரும் தவறாம காசு குடுப்பாங்க. அத எடுத்துகிட்டு வீட்டுக்கிட்டியே இருக்குற கடைக்கு வாரத்துல மூனு நாளு லாட்டரி சீட்டு வாங்கப் போவாரு..’ என்று தானும் பிள்ளைகளும் என் நண்பன்பால் காட்டும் அக்கறையைப் பெருமையுடன் சொல்லிக்கொள்வதுபோல் சொன்னார்.
நான், சீக்கிரமாக அங்கிருந்து விலகிச் செல்ல விரும்புவதுபோல் விடைப்பெற்றுக்கொண்டு வாகனத்தை நோக்கி நடந்தேன்.
- நாற்பதிற்கும் மேலான ஆண்டுகளும் மூன்று பிள்ளைகளையும் பெற்று பேரப்பிள்ளைகளையும் கண்டுவிட்ட ஜோடி!. இப்போது, ‘மறதிநோய்’ப் பிடியில் கணவன். அவன் பசியாறும்போது அவன் கரத்தைப் பற்றிக்கொண்டும், ஏதாவது பேசிக்கொண்டும், அவ்வப்போது ஊட்டியும் விட்டு அவனுக்குத் துணையிருப்பதன்றோ எஞ்சி இருக்கும் வாழ்க்கைக்கான அர்த்தம். அதை விடுத்து, ‘ஏற்கெனவே எங்கோ தொலைந்து போன அவனை, இவர்களும் இப்படியா நிர்க்கதியாக விட்டுத் தொலைப்பார்கள்?.
- அவனே ‘மறதிநோயில்’ தொலைந்து கிடக்கிறான். ‘மாத்திர சாப்பிட்டீங்களா?’ என்ற ஒற்றைக் கேள்விக்கு அவன் தரும் பதிலில் எல்லாம் சுமூகமாகவே இருக்கின்றன என்று நினைத்துக்கொள்ளும்படிக்கா ஒரு குடும்பம் அசிரத்தையுடன் இருக்கும்?. அதுவே ஒரு உதாசினம் அல்லவா?. எத்தனை நாட்களாக அவன் மாத்திரைகளைச் சாப்பிடாமல் இருந்தானோ?. இந்தப் ‘பக்கவாதம்’ ஒரு விபத்தா?. இந்த ‘bedwridden’ யாருக்கான தண்டன?.
- வயது 73 ஆகிவிட்டது!. நினைவில் நிதானம் இல்லாமல் எங்கோ தொலைந்தும் போயாகிவிட்டது. நீ சம்பாதிக்காத பணமில்லை!. இப்போது, உனக்கென்று வேறு தேவைகளும் இல்லை!. புதிதாக இரண்டு சாலைகள் தள்ளி போய்விட்டால் மீண்டும் வீட்டிற்கு வரத் தெரியாத குழப்பத்தில் நீ!. இந்த லட்சணத்தில் நீ எடுப்பது யாருக்கான லாட்டரிச் சீட்டு? அதற்கு லட்சம் வெள்ளி விழுந்தால் அதைப் பெறும் நிதானம்கூட உனக்கில்லையே!. அந்தப் பணத்தைப் பெறகூட நீ அனுமதிக்கப்பட மாட்டாயே?.
நண்பா, நீ சம்பாதித்து கொடுத்ததெல்லாம் போதாதா?.

எனக்குப் புரியவில்லை!. என்ன வாழ்க்கையிது?. 

Comments

Popular Posts