'அஞ்ஜடியில்' ஒரு வாழ்க்கை.
கோலாலம்புர் குசும்பு – 91
நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் எஸ்டேட்டில்.
நான் வசித்த எஸ்டேட்டில் ஒவ்வொரு வீட்டு அஞ்ஜடியிலும், இரண்டு பேர் தாராளமாக படுக்கத்தக்க வசதியில் பலகையினாலான ‘மேசை’ ஒன்று இருக்கும். அதை, எல்லோரும் ‘வாங்கு’ என்று அழைத்தனர்.
இரண்டு அஞ்ஜடிகளுக்கும் மத்தியில் மூன்றடிப் பலகைச் சுவரே தடுப்பாக இருந்தது.
வீட்டிற்கு உள்ளே வாங்கைப் போலவே இருந்ததை 'பெரஞ்ஜா' என்றோம். அது, நான்கு பேர்கள் படுக்கத்தக்கதாய் இருந்தது. பிள்ளைகள், உள்ளே பெரஞ்ஜாவில் படுத்துக்கொள்ள, அம்மாவும் அப்பாவும் வெளியே வாங்கில் படுத்துக்கொள்வது வழக்கம்.
மின்சார விநியோகமெல்லாம் தொழிலாளர்களின் வீடுவரை இன்னும் வந்திருக்கவில்லை!.
அது ஒரு கோடைக் காலம்!.
இரவேயானாலும் வீட்டினுள்விட வெளியே திண்ணையிலுள்ள வாங்கில் படுப்பதே காற்றோட்டமாக இருந்தது.
பொழுதுபோக்க டெலிவிஷன் பெட்டிகூட இன்னும் வந்திருக்கவில்லை!. ஆனால், தினமும் இரவுகள் வந்தன.. கோடையோ, ‘ய்ப்பா, இன்னா காங்கயா இருக்கு?.’ என்று புருஷன் இடுப்பில் கட்டியிருந்த கைலியையும், பெண்ஜாதி மார்புவரை ஏற்றிக்கட்டியிருந்தக் கைலியையும் தளர்த்திவிட வைத்தது. கண்கள் தேவைப்படாத தருணம் அது.ஆயினும், அவை தாமாகவே மூடியும் கொண்டன.
தளர்த்திவிட்டப்பட்ட கைலிகள் தாமாகவா நழுவி விழுந்தன?. அவர்களுக்கு வேறு பொழுதுபோக்கும் இல்லை!. போதாதற்கு அந்த படுக்கைக்கு யாராவது ‘வாங்கு’ என்று பெயர் வைப்பார்களா?.. வாங்கு என்ற பெயர்ச் சொல், வினைச் சொல்லாகவும் அதிகாரம் செய்தது.
எங்கள் எஸ்டேட்டில் குறைந்த பட்சம் ஒரு குடும்பத்தில் நான்கு பிள்ளைகளாவது இருந்தனர். என் குடும்பம் உட்பட!.
எனது நண்பனின் தந்தைக்கு இரண்டு மனைவிகள். மனைவிகள் இருவரும் பக்கத்து பக்கத்து வீடுகளிலேயே வசித்தனர். வீட்டிற்கு ஒன்று என்று அஞ்ஜடியில் இரண்டு ‘வாங்குகள்’ இருந்தன. அவர்களுக்கு மொத்தம் 11 பிள்ளைகள்.எனது நன்பனின் தந்தையின் பெயர், தாண்டவன்!. அது, காரணப் பெயராக இருக்குமோ!..
- மாதிரி எஸ்டேட் வீடு அஞ்ஜடியில் திண்ணையுடன்
- செம்பனைக் குலையை வெட்டும் காட்சி
- 'உலகம் சுற்றும் வாலிபன்' படமெடுக்க மலேசியா வந்த தமிழ்த் திரையுலகின் ஒரிஜினல் சூப்பர் ஸ்டார்.

Comments
Post a Comment