நாக தரிசனம்
நாக தரிசனம்
“ஆங்கிள், பெரிய பாம்பு ஒன்னு உங்க கார்டன் உள்ளார பூந்திரிச்சாம்! கிங் கோப்ராவாம்!. எதுத்த வீட்டுக்கு ‘டோமினோ’ஸ் டெலிவரி செய்ய வந்த (1)‘அடேக் மாட்’தான் பாம்ப பாத்துட்டு, நாயுடு அங்கிள்கிட்ட காட்டியிருக்கான். எல்லோரும் தேடிப்பாத்துட்டோம். எங்க போச்சினே தெரியில..” என்று, சக குடியிருப்புவாசிதான் செய்தியைச் சொன்னான். பாவி, அவ்வளவு பதற்றத்துடன்
அதைச் சொல்லியிருக்க வேண்டாமே என்று மகேந்திரனுக்குத் தோன்றியது. அவ்வளவு பதற்றமும் இப்போது இவனைப் பற்றிக்கொண்டது.
மகேந்திரன், கலவரத்துடன் கும்பலுக்குள் நிழைந்தான். கும்பல், தமது அனுபவத்தில் கண்ட சில பாம்புக் கதைகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தது. அந்தக் கும்பலில் ஒருவர், மலேசியாவில் ‘கிங் கோப்ரா’க்களைப் பிடிப்பதில் பிரசித்திப் பெற்ற அபு ஜாரீன் ஹுசைன் என்ற பிடாரன், ஒரு ராஜநாகம் தீண்டியே இறந்து போனச் செய்தியை அவனுக்குக் காட்டும் ஒரு நினைவாஞ்சலியைப் போல் சொல்லி, பீதியைக் கிளப்பி விட்டுக் கொண்டிருந்தார். இறுதியாக, ‘எதுக்கும் கொஞ்சம் பத்திரமாவே இருங்க.. முடிஞ்சா, வேலீல ஓடற கொடிங்கள கொஞ்சம் (2)கவாத்து பண்ணி உட்றுங்க..’ என்று ஆலோசனையைக் கொடுத்துவிட்டுக் கும்பல் கலைந்தது.
மகேந்திரன் குடியிருந்தது 3300 சதுர அடிகளைக்கொண்ட ‘செமி-டி’ வீடு!. பத்தடி அகலமும் என்பதடி அகளமும் கொண்ட புல்வெளி, வீட்டின் இடதுபக்கம் நீண்டிருந்தது. இடையிடையே பழ மரங்களும்; வேலியில் அடர்ந்து, படர்ந்திருந்த ரங்கூன்மல்லி கொடியும் பாம்பிற்கு நல்ல பாதுகாப்பைத் தரக்கூடியவையாகவே
தோன்றின. அது, மழைக்காலமாகவேறு இருந்ததால் சில வாரங்களாகவே வெட்டப்படாமல் புற்கள், பாதம் மறைந்து போகும் அளவிற்கு ‘காடு மண்டிப் போயிருந்தன’. போதாததற்கு, பாம்பு நுழைந்தால் பதுங்கிக்கொள்வதற்கு வசதியாய் பூச்சாடிகளும்; தண்ணீர்த் தோம்புகளும்; பெயிண்ட் டின்களும் வேறு, வேலியோரமாய்க் குவிந்து கிடந்தன.
பாம்பை வலிய பால் வைத்து அழைத்ததுபோல் அந்த இடம் இருப்பதாக அவனுக்குத் தோன்றியது!.
மகேந்திரன் மெல்ல வீட்டிற்குள் நுழைந்தான். பீதியே அவனை வரவேற்பதுபோல் வீடு, அச்சான்யமான அமைதியில் ஆழ்ந்திருந்தது!. வழக்கமாய்ப் பாடிக்கொண்டிருக்கும் வானொலிகூட வாயடைத்துக் கிடந்தது. மனைவி பார்ப்பதற்குள் குளிக்கப் போய்விடவேண்டும்மென்றுத் தீர்மானித்து, காற்றில் கால் பதிக்கும் பாவனையில் நடந்தான். ஆனால், எதிர்ப்பாராமல் தோட்டத்திற்குள் நுழைந்த பாம்பைப் போல் குசினியிலிருந்து வெளியே வந்த மனைவி, உடனே படமெடுத்து ஆட ஆரம்பித்து விட்டாள்.
“உங்க போனு என்னா ஆச்சி? எத்தன தடவ உங்களுக்கு போன் பன்றது? பாக்கறப்பல்லாம் போனும் கையுமாவே இருப்பீங்க!. ஆனா, ஆபத்து அவசரத்துக்கு நாம அடிச்சா மட்டும் போனு கெடைக்காது? நா எத்தன
நாளா சொல்லியிருப்பேன்? காசு போனா போவு!. பக்கத்து வூட்டுக்கு பர்மாகாரனுங்க புல்லு வெட்ட வர்றப்ப, நம்ம வூட்லியும் கொஞ்சம் வெட்டீற சொல்லுங்கன்னு!. எங்க கேட்டீங்க?.. அவுனுங்களுக்கு ஏண்டி வீணா 200 வெள்ளிய அழுவனூன்னு கேட்டீங்க. இப்ப என்னா ஆச்சி?.. எந்த பொந்துல எந்த ‘ஸ்’சு இருக்கோ தெரியிலியே?. வெளிய போறத நெனச்சாலே வயித்த கலக்குது.
நீங்க பரவால்ல.. வீட்டுக்கு வந்தோமா.. சாப்புட்டோமா.. தூங்குனோமா.. மறுபடியும் வேலக்கி போனோமான்னு இருப்பீங்க! பொழுதன்னிக்கும் வீட்ல இருக்கப் போறது நாங்கில்ல!.. தெனந்தோரும் துணிய காயப் போடனும்.. காஞ்சதுக்கப்பறம் அத போய் எடுக்கனும்.. சாயந்தரத்துல சாமிக்கு பூ பறிக்கனும்ன்னு எத்தன தடவ தோட்டத்துக்கு போவேண்டியிருக்கு! ஐயோ, நெனச்சு பாக்கவே எனக்கு ஒடம்பெல்லாம் ஒதறுது. ஒடனே ஏதாவது செஞ்சி, ஒன்னு அந்த ‘ஸ்’ச கொல்லப் பாருங்க. இல்ல, உசுரோட புடிச்சி எங்கியாவது காட்ல போய் உட்டுட்டு வந்துருங்க!..”
நாகலட்சுமி என்று, பெயரிலேயே ‘பாம்பை’ வைத்துக்கொண்டு, ‘பாம்பு’ என்ற வார்த்தையை உச்சரிக்கவே அவள் நடுங்கிச் செத்தாள். அப்படி உச்சரித்தால், அடுத்தக் கணமே உச்சரித்த இடத்தை நோக்கி பாம்பு வந்துவிடக்கூடுமென்று பாமரத்தனமாக நம்பினாள். அதனாலேயே பாம்பு சீறும் ‘ஸ்’ சத்தத்தைக்கொண்டே அதை அடையாளப்படுத்தி பாதுகாப்பு தேடிக்கொண்டாள்.
‘இருடீ!.
இப்பதான வந்தேன். கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்க உடேன்..’ என்று சொல்ல நினைத்ததை சொல்லாமலேயே
நிறுத்திக்கொண்டான். வீட்டில், தன் பேச்சுக்கிருந்த மரியாதையை அவன் அறிவான். சொன்னால்,
‘ஆமா,
பெரிய வேல!.. அப்பிடியே வெட்டி முறிச்சீட்டீங்க பாருங்க..’ என்று கேலி பேசுவாள்.
‘அதுக்குள்ளியும்
அந்த ‘ஸ்’சு வூட்டுக்குள்ளார வந்துருசின்னா? இல்ல, (யாரையாவது என்று சொல்லாமல்) உங்களீயே
கொத்திரிச்சின்னா?..’ என்று வில்லங்கமாய்க்
கேட்பாள். அதற்கு அவனிடம் பதிலில்லை!.
மகேந்திரன்,
வெளியே வந்து தோட்டத்தைப் பார்த்தான். கூடவே மனைவியும் வந்தாள். பாதுகாப்பிற்கு கையில்
பிளாஸ்டிக் துடைப்பத்தை வைத்திருந்தாள். ‘அதனைக் கொண்டு பாம்பை அடித்தால், அதற்கு வலிக்குமா? இல்லை சாமரம் வீசியதுபோல் இருக்குமா?’ என்று அவனுக்குக்
குதர்க்கமாய் எண்ணத் தோன்றியது. அந்த யோசனையை அவளிடமே கேட்கப் போனால், அவன் மேலேயே
அதைப் பரீட்சித்தும் பார்த்துவிடுவாள். அக்கம் பக்கத்தார் பாம்பைத் தேடிய ஆர்ப்பாட்டத்தில்
தோட்டம், அலங்கோலமாய்க் கிடந்தது.
“என்னங்க,
பேசாம பாத்துகிட்டு இருக்கீங்க?.. ஏதாவது செய்யுங்க!. இன்னும் கொஞ்ச நேரத்துல இருட்டீர்சின்னா
ஒன்னுமே செய்ய முடியாது.”
“என்ன
இன்னாடீ செய்யச் சொல்ற? எனக்கு மட்டும் அந்தப் பாம்பு எங்க இருக்குன்னு தெரியுமா என்ன?.”
“ஐயோ
சிவ.. சிவ..!.. எம் முன்னால அந்த சனியன் புடிச்ச வார்த்தைய சொல்லாதீங்க!.. எனக்கு பயமா
இருக்கு. ஒன்னு ‘ஸ்’சுனு சொல்லுங்க.. இல்ல, கைய இப்படி காமீங்க, புரிஞ்சுக்குவேன்.”
என்று பாம்பு படமெடுத்து ஆடும் சைகையைக் காட்டிப் பதறினாள்.
‘வெறுமனே
பார்த்துக்கொண்டிருந்தால் அவள், பிராணனையை வாங்காமல் விடமாட்டாள்!. அவள் பார்க்க ஏதாவது
செய்தே ஆகவேண்டும்.’ மாமியார்க்காரி வேறு, ‘குத்திக் கொடுக்க’ வந்தவள் போல் மனைவியின்
பின்னாலேயே நின்றுக்கொண்டிருந்தாள்’
மகேந்திரன்,
தன் நண்பன் லூர்துசாமியைக் கைப்பேசியில் அழைத்தான்.
“லூர்து,
எங்கப்பா இருக்க? ம்.. நல்லா இருக்கேன். லூர்து, ஒரு சின்ன புராப்லம்ப்பா..” என்று
மகேந்திரன் முடிக்கவில்லை, அதற்குள் நாகலட்சுமி குறுக்கிட்டு, கத்த ஆரம்பித்தாள்.
“என்ன,
சின்ன புராப்லம்மா? உங்களுக்கென்னா (4)கீலாவா புடிச்சிரிச்சீ? (பாம்பு படமெடுத்து
ஆடும் சைகையைக் காட்டி) தோட்டத்துக்குள்ளார பூந்திரிச்சீ. சனியன், எங்க இருக்குதுன்னே
தெரியில.. நீங்க என்னடான்னா சின்ன புராப்லம்னு சாதாரணமா சொல்றீங்க?..”
அவன்
மனைவியிடம், ‘கொஞ்ச நேரம் பேசாமல் இரேன்..’ என்று கெஞ்சுவதுபோல் விரல்களை உதடுகளில்
வைத்து சைகைக் காட்டிவிட்டு, அவளிடமிருந்து சற்று தூரமாய் விலகிச் சென்று, சம்பாஷணையைத்
தொடர்ந்தான்.
“ம்..
சொல்லு லூர்து!. ஆமாம்ப்பா, எம் பொண்டாட்டிதான்!.. அந்த ஹிம்சையை ஏன் கேக்கற?. தோட்டத்துல
‘கிங் கோப்ரா’ பூந்துருச்சின்னு வீட்ல இருக்குற இந்த ‘மலப்பாம்பு’ ஒரேடியா சீறுது..”
என்று கைப்பேசியின் ‘ஸ்பீக்கர்’ அடியில் உள்ளங்கையைக் குவித்து ரகசியமாய்ச் சொல்லிவிட்டு,
பின் தொடர்ந்த சம்பாஷணையை மனைவி கேட்க, சத்தமாய்ச் சொன்னான்.
“என்னப்பா?..
வீட்ட சுத்தி ‘சல்ஃபர்’ தெளிக்குனுமா? ஓ, எல்லா ஹாட்வேர் கடையிலியும் கெடக்குமா!..
ரொம்ப தேங்ஸ்ப்பா!.” என்று நன்றி சொல்லி, கைப்பேசிக் காட்டிய மணியைப் பார்த்தான். கடைகள்
மூடப்படுவதற்கு இன்னும் அரைமணி நேரம் இருந்தது.
உடனே,
காரை எடுத்துக்கொண்டு அருகிலிருந்த ஹார்ட்வேர் கடைக்கு விரைந்தான். கடைக்காரனிடம்
‘சல்ஃபர்’ வேண்டுமென்று கேட்ட உடனேயே, அவனுக்கு விஷயம் புரிந்துவிட்டது.
“எதுக்கு
அங்கிள்?.. பாம்பு வந்துரிச்சா?..’ என்று மலாய் மொழியில் கேட்டுவிட்டு அவனே தொடர்ந்தான்.
“அங்கிள்,
பாம்ப பாத்தாக்கா உயிரோட புடிக்கப் போறீங்களா?.. இல்ல, அடிச்சி கொல்ல போறீங்களா?..
“
“என்ன,
உயிரோட புடிக்கிறதா?. விளாடுறீங்களா (5)தவுக்கே?. உயிரோட புடிக்கப் போயி, அது
கொத்தி கித்தி தொலைச்சீர்ச்சின்னா ?..” என்று படபடப்போடு கேட்டு, பதறினான் மகேந்திரன்.
“அதுக்குதான்
‘ஸ்நேக் தோங்’ இருக்குதே அங்கிள்..” என்று ‘கேட்லாக்’ ஒன்றை எடுத்து, பாம்பு
பிடிக்கும் கிடுக்கியைக் காட்டியவன் அதோடு, அந்தக் கிடுக்கியைப் பாவித்துப் பாம்பு
பிடிக்கும் ‘யூ டியூப்’ பையும் போட்டுக் காட்டினான்.
மகேந்திரனால்
நம்பவே முடியவில்லை!. ‘அட!. பாம்பு புடிக்கிறதுக்கு இப்படியெல்லாம்கூட சாமாங்க வந்துரிச்சா!
இதால வீட்ல இருக்குற எம் மாமியா கெழவியாலகூட எந்த பாம்பியும் புடிச்சிற முடியுமே!..’
என்று வியந்து, கந்தகத்தை மட்டுமே வாங்க வந்தவன், கையோடு கிடுக்கியையும்; பிடித்தப்
பாம்பைப் போட்டு அடைக்க, கூடவே விற்கப்பட்ட
மூடியுள்ள தகர வாளியையும் வாங்கிக்கொண்டான். பாம்பைப் பிடித்தேவிட்ட பெருமிதத்துடன்
உடனடியாக வீட்டிற்குத் திரும்பினான்.
வீட்டிற்கு
வந்ததும், கந்தகத்தூளை முதல் அடுக்குப் பாதுகாப்பாய் வேலியோரமாகவும், இரண்டாம் அடுக்குப்
பாதுகாப்பாக வீட்டுச் சுவரை ஒட்டியும் தூவி, கந்தக அரணை அமைத்தான் மகேந்திரன்.
“இந்தப்
பவுடரு என்னங்க செய்யும்?” - மனைவியால் ஆர்வத்தை அடக்க முடியவில்லை.
‘பாம்பு’
என்ற வார்த்தையுடன் தன் பதிலைச் சொல்ல வந்தவன், நாகலட்சுமி காட்டிய சைகையைப் பார்த்ததும்
நாக்கைக் கடித்துக்கொண்டு, பிறகு சொன்னான்.
“’ஸ்’சுக்கு
நாக்குதான்டீ மூக்கு! முன்னுக்கு என்னா இருக்குதுன்னு தெரிஞ்சிக்கிறதுக்காவதான் அது
அடிக்கடி நாக்க வெளிய வெளிய நீட்டும். அப்படி நாக்க வெளிய நீட்றப்ப ‘சல்பர்’ நாக்குல
பட்டதுன்னு வெச்சிக்கோயேன். அவ்ளோதான்! அந்த
ருசி புடிக்காம உடனே கம்பிய நீட்டிரும்..”
அவர்கள்
இருவருமே மகேந்திரனின் பதிலால் ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டனர். ஆனால், அந்த
நிம்மதி கொஞ்ச நேரமே நீடித்தது. மாமியார், மகளிடம் எதையோ சொல்லி, அந்த நிம்மதியைக்
கெடுத்தாள்.
“ஆமாங்க,
இது மழ காலமா இல்ல இருக்கு!. மழ வந்தக்கா கந்தகம் எல்லாம் கரைஞ்சு போயிருமே?..”
“அதுக்கு
நா இன்னாடீ செய்ய முடியும்? மழ பெய்யாத வரிக்கும் பாதுகாப்புன்னு நெனச்சிக்க வேண்டியதுதான்.
ஆ.. மறந்தே போயிட்டேனே!. அதுக்குதான், எதுக்கும் நல்லதுன்னு இந்த கிடுக்கியையும் கையோட
வாங்கிட்டு வந்துட்டேன்.!” என்று கிடுக்கியை அவர்களிடம் கொடுத்து, கடைக்காரன் வாட்ஸ்
ஆப்பில் அனுப்பிவைத்த வீடியோவை அவர்களுக்குப் போட்டுக் காட்டினான்.
நாகலட்சுமிக்கு
ஒரே திருப்தி! இரண்டு கிடுக்கிகளாக வாங்கியிருக்கலாமே என்று குறைப்பட்டுக் கொண்டாள். அப்போதுதான், மகேந்திரனுக்கும் அது ஒரு நல்ல யோசனையாகப்
பட்டது. தான் வேலைக்குப் போய்விட்ட நேரங்களில் பாம்பு வந்தால் மாமியாரும் அதைப் பிடிக்க
மகளுக்கு உதவக்கூடும் என்றும்; தான் இருக்கும் போது வந்தால், மனைவியையும் இன்னொரு பக்கம்
நிற்கச் சொல்லலாமே என்றும் குயுக்தியுடன் நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டான்.
மாமியார்,
மகேந்திரனிடமிருந்து கைப்பேசியை வாங்கி, மீண்டும் ஒரு முறை அந்த வீடியோவைக் கூர்ந்து
பார்க்கலானாள். ‘என்னவோ, வரப்போகின்ற பாம்பை அவள்தான் பிடிக்கப் போகிறாள்..’ என்பதுபோல்
அவ்வளவு ஆர்வமாகவும், உண்ணிப்பாகவும் கவனிக்கலானாள். அவளுக்கு என்னவோ தட்டுப்பட்டது
போல! உடனே, சற்று முன்னர் தணிந்து போயிருந்த அச்சத்தில் விஷத்தைக் கக்கினாள்!
“ஆமாங்க
மாப்ள, வீடியோல ரூம்ல இருக்குற ‘ஸ்’ச புடிக்கிற மாதிரியில்ல காட்றாங்க!.. சிமெண்ட்
தரையில அதால வேகமா ஊர முடியாது!. அதனாலதான் இந்த கிடுக்கியால (6)‘சின்னாங்கா’
புடிக்க முடியுது. ஆனா, தோட்டத்துல அப்படி இல்லியே!.. சும்மா, ரயிலு கணக்கா ஓடிப் போயிருமே?..”
மகேந்திரன்,
தயக்கத்துடன் மாமியாரையும்; மனைவியையும் பார்த்தான்.
மாமியார் சொன்னதிலிருந்த நியாயம், அவனுக்குப்
புரிந்தது.
‘கிழவிக்கு
வயதாகிவிட்டாலும் புத்தி கூர்மைக்குக் கொஞ்சமும் குறைச்சலில்லை!.’ என்று மகேந்திரன்
வெறுப்புடன் நினைத்துக்கொண்டான்.
தாயும்
மகளும் அர்த்தப்புஷ்டியுடன் பார்த்துக்கொண்டு உதட்டைப் பிதுக்கியதை மகேந்திரன் கவனிக்கத்
தவறவில்லை!. அதற்கு அர்த்தம், ‘க்கும்.. அதான் பார்த்தாலே தெரியிதே இளிச்சவாயன்னு!. அதான், ஏமாத்திட்டான்..’
மாமியாரின் குதர்க்கப் புத்திக்கு இன்னும்கூட ஏதோ புரிந்தது.
“ஆமாங்க
மாப்ள, வேலிய சுத்தி ஒரு சந்து உடாம கந்தகத்த தெளிச்சிச்சிட்டீங்களே இப்ப, அதால வெளியவும்
போக முடியாதே!. அப்படீன்னா அந்த ‘கருமம்’ இனி, தோட்டத்துக்குள்ளாரியே இல்ல சுத்திக்கிட்டு
இருக்கும்!..”
மகேந்திரன்
வாயடைத்துப் போனான்!. ‘இந்தக் கெழவி வேற? சனியன் புடிச்சது!..’ என்று வாயிற்குள் முணுமுணுத்துக்
கொண்டான்.
“அடக்
கடவுளே!.. என்னங்க இது? கெணறு வெட்டப் போறேன்னு சொல்லி, பூதத்த கெளப்பி உட்டுடீங்க..?”
என்று மனைவி பதற ஆரம்பித்தாள்.
மீண்டும்
பழைய பீதியிலேயே பொழுது, மெல்ல சாய்ந்தது. இரவோ, அதை இன்னும் இரட்டிப்பாக்கிக் கொண்டு
இருண்டது.
* *
*
வேலை முடிந்து வீட்டிற்கு வந்த மகள்கள், வழக்கதிற்கு
மாறாக ஏழு மணிக்கெல்லாம் வாயிற் கதவும், குசினிக் கதவும் சாத்தப்பட்டிருப்பதைப் பார்த்து
எரிச்சலுற்றனர். எப்போதும் இரவு பத்து மணிக்கே அவை மூடப்படும். கதவின் அடிப்பாகத்திலிருந்த
இடைவெளியில் நீண்ட சாக்குகள் திணிக்கப்பட்டிருப்பதைப் பார்த்து,
“என்னம்மா
இதெல்லாம்?..” என்று பெரியவள்தான் பொறுமையிழந்து கேட்டாள்.
“அந்த
கூத்த ஏண்டி கேக்கற?. சாயந்திரம் ‘ஸ்’ ஒன்னு தோட்டத்துக்குள்ளார பூந்திருச்சுடி!. எங்க
போச்சுன்னே தெரியில!. அதான், வீட்டுக்குள்ளார ஏதும் வந்துருமோன்னு கதவெல்லாம் சாத்தி
வெச்சுட்டோம்..” என்று அழாத குறையாக அம்மா சொன்னாள்.
“அய்யோ,
அம்மாடீ!..” என்று கூவி, இருவரும் துள்ளிக் குதித்தனர். பாம்பைக் கைப்பேசியிலும்; டெலிவிஷன்
நாடகங்களிலும் மட்டுமே பார்த்திருந்த பாக்கியசாலிகள் அவர்கள்!. அதிலும், நாடகத்தில் பார்த்தப் பாம்போ, அடிக்கடி
பெண்ணாக வேறு உருவத்தை மாற்றி, குடும்பத்திற்குள்ளேயே உறவாடிக்கொண்டிருந்தது. பிள்ளைகள்
இருவருமே தின்பதை மறந்து வாயைப் பிளந்துகொண்டுப் பார்க்கும் நாடகத் தொடர் அது!. உடனே,
பெரியவளுக்கு ஏனோ எதிரிலிருந்த பாட்டியைக் கூர்ந்து பார்க்கத் தோன்றியது. ஏற்கெனவே,
பாட்டிக்கு அடிக்கடி நாக்கை வெளியில் நீட்டி, மேலுதட்டை நனைத்துக்கொள்ளும் பழக்கம்
வேறு இருந்தது, இப்போது கலவரத்தைத் தந்தது.
இரவு,
சாப்பாட்டு மேசையில் மீண்டும் பாம்பைப் பற்றிய பேச்சே எழுந்தது. பிள்ளைகள், எதார்த்தமாய்
‘பாம்பு’ என்ற வார்த்தையை உச்சரித்த அடுத்த விநாடியே நாகலட்சுமி, பதற்றத்திற்குள்ளாகிக்
கத்தினாள்.
“ஐயோ
சிவ.. சிவா!.. மொதல்ல அந்த சனியன் புடிச்ச வார்த்தைய சொல்றத ஒடனே நிப்பாட்றீங்களா!.
ஒன்னு ‘ஸ்’சுன்னு சொல்லுங்க.. இல்ல, இப்பிடி சைகைய காட்டி பேசுங்க..” என்று சொல்லி,
காதைப் பொத்திக்கொண்டாள்.
இரண்டு
மகள்களும் தாயின் பதற்றத்தைப் பார்த்து மிரண்டுப் போயினர். சாப்பிட்டுக்கொண்டே பாம்பைப் பற்றிக் கைப்பேசியில்
படித்தச் செய்திகளைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினர். பெரியவள், ஒவ்வொரு வருஷமும் ‘ஸ்’
கடித்து இறப்பவர்களின் எண்ணிக்கையைச் சொல்லி, அம்மா; பாட்டி இருவரின் வாயையும் பிளக்க
வைத்ததோடு, அவர்களின் முகங்களிலிருந்த கொஞ்ச மலர்ச்சியையும் மறையச் செய்தாள். ‘ஸ்’களின்
பெண் பாம்புகளே மிகவும் ஆக்ரோஷமானவை என்றும் அவளே தொடர்ந்து சொன்னபோது, ‘அட ராமா!.
அத வேற எப்பிடி தெரிஞ்சிக்கிறது?.’ என்று அம்மா வாய்விட்டே புலம்பினாள். இளையவளோ, வீட்டைச்
சுற்றிக் கந்தகத்தைத் தூவினால் ‘ஸ்’ வராது என்று சொல்வதெல்லாம் சுத்தப் பொய் என்று,
கூகுலில் படித்தச் செய்தியைச் சொன்னாள். மகேந்திரன், அப்போதுதான் சாப்பிட ஆரம்பித்திருந்தான்.
சற்று முன்னர்தான் அவனும் அந்தச் செய்தியைப் படித்துத் தெரிந்து கொண்டிருந்தான். அவனுக்கு
மிகவும் தர்மசங்கடமாய் இருந்தது. மனைவி மற்றும் மாமியாரின் பக்கமே பார்க்க முடியாமல்
தலையைக் குனிந்து கொண்டான்.
* *
*
நள்ளிரவு மணி பன்னிரண்டு!.. பெரியவளுக்குத்
தூக்கம் பிடிக்கவில்லை. சற்று முன்னர், பாட்டி சொன்ன பாம்பு கதை, அப்படியே அவள் நினைவில்
நெளிந்து கொண்டிருந்தது.
“’ஸ்’சுங்க
நடுச் சாமத்துலதான் வந்து இரைய தேடும்டீ. அதுங்க வாயில நாகரத்தினக் கல்லூன்னு ஒரு கல்லு
இருக்குமாம். அம்மாடியோ!. அப்படியே பளபளன்னு நட்சத்திரம் கணக்கா ஜொலிக்குமாண்டி!..
அது வெறும் கல்லுலில்ல!.. அவ்வளவும் விஷம்!. யாரையுமே கொத்தாத ‘ஸ்’சோட விஷந்தான் நாளாவ
நாளாவ இப்படி நாகரத்தினக் கல்லா கெட்டி தட்டிப் போயிருமாம். அத வெளிய கக்கிப் போட்டுதான்,
‘ஸ்’சுங்க ராத்திரீல இரைய தேடித் தின்னுட்டு, மறுபடியும் கவ்வி முழுங்கிருமாம். அது
ரொம்ப அதிஸ்டமான கல்லாந் தெரியுமா. யாராலியும் அவ்ளோ லேசுல அத எடுக்க முடியாது. அத எடுக்குறதுக்கும் ஒரே வழிதான்
இருக்கு. கல்லோட வெளிச்சத்துல அதுங்க இரைய தேடிக்கிட்டு இருக்குறப்ப, ரெண்டு கை நெறையா
சாணிய அள்ளி அந்தக் கல்லுமேல போட்டுறனும்!. இருட்டுல கண்ணு தெரியாம போன ‘ஸ்’சு, ஆத்துரத்துல
தலைய மண்ணுல போட்டு அடிச்சிகிட்டே செத்துப் போயிரும். அப்பறமா அந்த கல்ல கொண்டாந்து வீட்ல வெச்சிகிட்டவங்களுக்கு
ஒரே அதிஷ்டந்தான் போ!. நாகதோஷமெல்லாம் அவுங்கள ஒன்னுமே செய்யாது தெரியுமா!. ஆனா ஒன்னு!..
‘ஸ்’சுங்க, ஒரு நாளைக்கி சாப்புட்டா ரெண்டு மூனு நாளைக்கி சாப்புடாதுங்க. அதுனால, அது
என்னிக்கு சாப்புட வரும்னு நமக்கு எப்பிடி தெரியும்?..”
பெரியவள்,
திரைச்சீலையை மெல்ல விலக்கி, தோட்டத்தைப் பார்த்தாள். பனியைப் போர்த்திக்கொண்ட இரவு,
இருட்டில் சில்லிட்டுக் கிடந்தது. பரவியடிக்கப்போகும் நாகரத்தினக்கல் வெளிச்சத்துக்காக
அரைமணி நேரமாக அச்சத்துடன் காத்திருந்தாள். ஆனால், அப்படி எதுவுமே நிகழாமல் இரவு, ஸ்தம்பித்து
நின்றது. இரவு பூச்சிகளும் நித்திரைப் பிடிக்காமல் ‘கிர்’ரென்று இருட்டைப் பிராண்டிக்
கொண்டிருந்தன. அன்றிரவு, உணவு தேடுவதற்கான இரவு அல்ல போலும் என்று பெரியவள் முடிவு
செய்துக்கொண்டு ஏமாற்றத்துடன் படுக்கப் போனாள். பாட்டி, பக்கத்தில் வாய் பிளந்து அயர்ந்து
தூங்கிக்கொண்டிருந்ததாள். திடீரென்று அவளுக்கு ஒருவித பயம் வந்தது. ஒரு முறை பாட்டியின்
முகத்தருகே குனிந்து, திறந்து கிடந்த வாயிற்குள் நன்றாகப் பார்த்தாள். நல்ல வேளையாக
பாட்டியின் நாக்கு, தன் வழக்கத்தை மறந்து, ஓய்ந்திருந்தது. ஆனால், வாயோரத்தில் ஒழுகிக்
கிடந்த எச்சில் மட்டும் அவளுக்கு எதையோ ஞாபகப்படுத்தி உடலை சிலிர்க்க வைத்தது. உடனே,
போர்வையால் தலையோடுப் போர்த்திப் படுத்துக்கொண்டாள்.
பக்கத்து
அறையில், பாம்பைப் பற்றிய நினைப்பிலேயே தூங்க முடியாமல் நாகலட்சுமி புரண்டுக்கொண்டிருந்தாள்.
பின்னிரவில், அசதியில் தூக்கம் தழுவியபோதோ பகலில் கண்ணில் படாத பாம்பு, கனவில் பிரசன்னமானது.
‘அவள்
தோட்டத்தில் துணிகளைக் காயப் போட்டுவிட்டு திரும்புகிறாள். கைலியொன்று கீழே விழுந்து
கிடக்கிறது. அதை கையில் எடுத்த மறுகணம், அது
பாம்பாக மாறி, படமெடுத்து ஆடுகிறது!. அவள், உதவி கோரி கத்துகிறாள். வாயிலிருந்து சத்தம்
எழவில்லை!.. கால்களை உதறி கணவனை எழுப்புகிறாள். ஆனால், பக்கவாதத்திற்கு உட்பட்ட கால்களைப்
போல் அவைச் செயலிழந்து கிடக்கின்றன. கணவனின் பக்கம் திரும்புகிறாள். அவனோ, அவளைப் பார்த்து
சிரித்துக்கொண்டிருக்கிறான். உடனே, கையிலிருந்த பாம்பை கணவன் மேல் வீசுகிறாள்!. அவன்,
‘ஆ, பாம்பு!.. ‘ என்று துள்ளிக் குதித்தெழ, அவளுக்கு ‘டப்’பென்று முழிப்பு வந்துவிடுகிறது..’
நாகலட்சுமி
வெலவெலத்துப் போனாள். காலையில், கனவை அம்மாவிடம் சொன்னபோது,
“ஐயோ!
கனவுல வந்த பாம்பு கொத்தாம போயிட்டா நல்லதில்லயேம்மா..” என்று அம்மா பதறிப் போனாள்!.
* * *
மறுநாள், பசியாறியக் கையோடு மகேந்திரனின்
பாம்பு வேட்டை ஆரம்பமானது. முட்டிக்கால் வரை
உள்ள ரப்பர் பூட்ஸ்சுகளை அணிந்துகொண்டு தைரியமாய் வெளியில் வந்தான். கிடுக்கியை எடுத்துக்கொண்டு
எச்சரிக்கையுடன், வேலியோரமாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்த டின்களையும்; பூச்சாடிகளையும்
மெதுவாக நகர்த்திப் பார்க்கலானான். பாம்பு எங்கெல்லாம் மறைந்திருக்கக்கூடிய வாய்ப்பு
இருப்பதாக அவன் கருதினானோ அங்கெல்லாம் தேடிப் பார்த்தான். மாமியாரும், மனைவியும் தூரத்தில்
நின்றுக்கொண்டே, ‘அங்க பாருங்க!.. இங்க?..’ என்று அதிகாரம் செய்துக்கொண்டிருந்தனர்.
இடையில் மறக்காமல் மனைவி, ‘நேத்து தூவுன கந்தகம் என்னாச்சிங்க..? ராத்திரி பேய்ஞ்ச
மழைக்கி, அம்போதானா?.’ என்று கேலி செய்ய மறக்கவில்லை.
மகேந்திரனுக்குச் சட்டென்று கோபம் தலைக்கேறியது. எங்கேயுமே பாம்பைக்
காணாத குழப்பம் வேறு!. உடனே, அவனுக்கு அவர்களைக் கலவரத்திற்குள்ளாக்கிப் பலிவாங்க வேண்டுமென்ற
ஆசை வந்தது!
“ஒரு
வேள, வீட்டுக்குள்ளார ஏதும் பூந்துருச்சோ!..”
தனக்குள் பேசிக்கொள்வதுபோல் அவர்களும் கேட்க திரியைக் கொளுத்திப் போட்டான்.
“என்னாது?..
வீட்டுக்குள்ளாரியா?.. அடக் கடவுளே..” என்று இருவரும் துள்ளிக் குதித்தனர்.
வெளியில்
போகப் பயந்துக்கொண்டிருந்த மாமியாரும் மனைவியும் மகேந்திரனின் சதியால் இப்போது வீட்டிற்குள்
இருக்கவும் நடுங்க ஆரம்பித்தனர். மனைவி கிடுக்கியையும், மாமியார் ஒரு கட்டையையும் தயாராய் வைத்துக்கொண்டே வீடெங்கும் வலம் வந்தனர்.
வீட்டிற்குள்
இருப்பதும் இப்போது நிம்மதி இல்லாமல் போனது.
முன்போல், ஆர்வத்துடன் டெலிவிஷன் பார்ப்பதைக்கூட நிறுத்திக்கொண்டாள் . மாலையில், பிள்ளைகளும்
மகேந்திரனும் வரும்வரை, எந்த நேரத்திலும் பாம்பைப் பார்க்கும் பதற்றத்திலேயே பொழுதெல்லாம்
கழிக்க வேண்டியதாயிற்று!.
இடையில்
ஒரு நாள் வந்த தீயணைப்புப் படையினராலும் அந்தப் பாம்பைக் கண்டுபிடிக்க முடியாதது இன்னும்
பதற்றத்தைத் தந்தது.
* *
*
பத்து நாட்கள் கடந்திருந்தன!.. அசம்பாவிதம்
ஏதும் நிகழாததால் பீதி, பயமாய் தணிந்து பழக்கத்திற்கு வந்துகொண்டிருந்தது.
அன்று,
நாகலட்சுமி பாம்பைப் பற்றிய நினைப்பே இல்லாதவளாய் முன்போல் சகஜமாய் தோட்டத்தில் துணிகளைக்
காயப் போட்டுக்கொண்டிருந்தாள். வானொலியில் ஒலித்த, ‘ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம், வாராய்
கண்ணா..’ பாடலை வாய் முணுமுணுத்துக் கொண்டிருந்தது. அப்போது, வேலியோரமாய் ஏதோ ‘ஸ்’சைப்
போலத் தெரிந்ததைப் பார்த்த உடனேயே உடல் சிலிர்த்துக்கொண்டது; முணுமுணுப்பு நின்றுப்போனது!.
‘ஸ்’சா அது!. செத்த ‘ஸ்’சு மாரியில்ல கெடக்குது?..’ பாதுகாப்பானத் தூரத்திலேயே நின்றுக்கொண்டு
கூர்ந்து பார்த்தாள். அவளுக்குக் கால்கள் உதறத் தொடங்கின!. பீதியில் உறைந்து போனாள்.
வேகமாக வீட்டிற்குள் வந்து, கணவனை எழுப்பினாள்!..
“ஏங்க,
இங்க வாங்களேன்!..”
“ஏன்டீ?
என்ன ஆச்சி?..”
“ஸ்..
சத்தம் போடாதீங்க!.. அந்த வேலியோரமா என்ன இருக்குன்னு போய் பாருங்களேன்!..” என்று குசினியிலேயே
நின்றுக்கொண்டு வேலியைக் காட்டினாள்.
மகேந்திரனுக்கு
உடனே கை, கால்கள் நடுங்க ஆரம்பித்தன. ‘நான் வீட்ல இருக்கறப்பியா இந்த கருமம் வரனும்!..’
என்று அவன் வாய்க்குள் சலித்துக்கொண்டே கிடுக்கியை
எடுத்துக்கொண்டு மெல்ல அடி மேல் அடி வைத்து, பக்கவாட்டமாக நடந்து சென்று, சற்று தூரத்திலேயே
நின்றுக்கொண்டு பதற்றத்துடன் வேலியோரமாய்ப் பார்த்தான்.
‘அய்யோ!.
பாம்பு மாரிதான் தெரியுது?.’
இன்னும்
சற்று அருகில் சென்றான்.
‘என்னது,
அசையவே காணோம்? செத்துகித்து போச்சா?..’
சற்று
தைரியத்துடன் அருகில் சென்று, கிடுக்கியால் அதைத் தூக்கிப் பார்த்தான்.
“ச்சே..
‘ஸ்’சோட தோலுடீ!..” என்று மனைவி பக்கம் திரும்பி,
ஏளனமாய்ச் சொன்னான்.
“ஆ!...
‘ஸ்’சோட தோலா?.. அப்படீன்னா, அந்த கருமம் இன்னும் இங்கதான் எங்கியோ சுத்திட்டு இருக்குதா?.
ஐயோ, கடவுளே?..” என்று மாமியார் பதறியடித்துக்கொண்டு வீட்டிற்குள் ஓடினாள். பேத்திகள்
இருவரும் உடனே மேல் மாடிக்கு ஓடிப் போயினர். மகேந்திரனுக்கு இப்போதுதான் அந்தத் தோலின்
அர்த்தம் உறைக்க ஆரம்பித்தது.
“அந்தச்
சனியன், தோட்டத்திலியே முட்ட கிட்ட ஏதும் வுட்டு தொலச்சீர்ச்சோ என்னமோ தெரியிலியே?..”
மாமியார் மேலும் பீதியைக் கிளப்பிவிட்டாள்.
“ஐயோ,என்னம்மா
சொல்றீங்க?” நாகலட்சுமி, மயக்கமே போட்டுவிடுவதுபோல் முகம் வெளிறிப் போனாள்.
“ஆமான்டி!..
அது உன்னும் இங்கதான் எங்கியோ சுத்திக்கிட்டு இருக்குதுன்னா, முட்ட ஏதும் உட்றுக்கோ
என்னமோ தெரியிலியே?. முட்ட போட்ட ‘ஸ்’சுன்னா ரொம்ப ஆக்ரோஷமா இல்ல இருக்கும்?..”
யாருடைய
பார்வைக்கும் படாமலேயே பாம்பு இப்போது, முட்டை போட்டது வரை அவர்களை யோசிக்க வைத்து,
பீதியுற வைத்தது.
தோட்டத்தில்
தேடுவதற்கு வேறு இடமே இல்லை! ஆனால், வேலிக்கு அருகே இப்போது, பாம்பு உரித்துப் போட்ட
சட்டை!. அவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர். மேற்கொண்டு செய்வது தெரியாமல் கலவரத்தில்
உறைந்து போயினர். அப்போது, மாமியார்தான் அந்த யோசனையைச் சொன்னாள்.
“ஏம்மா,
யாராவது சாமியார கூட்டிட்டு வந்து சாமி பாத்தாக்கா?..”
மகேந்திரனும்,
நாகலட்சுமியும் ஒருவரை மற்றொருவர் பார்த்துக்கொண்டனர். தோட்டத்திற்குள்ளேயே அவர்களின்
உயிருக்கு உத்திரவாதமில்லாத ஆபத்து!.. அந்த ஆபத்தை அழித்தொழிக்காதவரை நிரந்தர பீதியிலேயே
உறைந்து கிடக்க வேண்டிய சாபம்!.. பூஜைப் புனஸ்காரங்களில்
நம்பிக்கை மிகுந்த மாமியார், தனது எழுபதுகளில் இருப்பவள்! முக்கியமாக, மனைவியின் தாயார்!.
அவளின் யோசனையே அவர்களுக்குத் தீர்வாகப் பட்டது!.
அப்போது,
கிடுக்கியில் ஏந்திக்கொண்டிருந்த தோலை மகேந்திரன் அல்லூரில் வீசப் போனான்.
“ஐயோ
மாப்ள, அத வீசாதிங்க. சாமி பாக்க வர்றவங்களுக்கு அது தேவபடும்..” என்று மாமியார் பதறினாள்.
* *
*
வெள்ளிக்கிழமை மாலை!.. (7)‘டத்தோ’
வந்தார்!.. சிஷ்யப்பிள்ளைகள் அந்தச் சாமியாரை அப்படித்தான் அழைத்தனர். வந்தவர், முதலில்
வீட்டை ஒரு முறைச் சுற்றிப் பார்த்தார். வீட்டு வாசலிருந்த ரோஜாச் செடிகளைப் பார்த்து,
‘வாசல்ல முள்ளு செடிங்கள வெக்கக் கூடாதே’ என்று ஆலோசனைச் சொன்னார். மகேந்திரன், மாமியாரைப்
பார்த்தான். அவள், தலையைக் குனிந்து கொண்டாள்.
டத்தோ,
கடிகாரத்தைப் பார்த்து தன் சிஷ்யர்களிடம் தலை ஆட்டி சமிக்ஞை கொடுத்தார். அவர்கள் பூஜைக்குரிய
பொருட்களை எடுத்து வைத்தனர்!. அகல் விளக்கு ஏற்றப்பட்டது!. ஒரு வாழைப்பழத்தில் சில
ஊதுபத்திகள் குத்தி வைக்கப்பட, வீட்டிலிருந்தோரின் மனங்களைப் போல் அவை, புகைய ஆரம்பித்தன.
எதிரே, அவர்கள் கொண்டுவந்திருந்த பாம்புத் தோலாலான கம்பளி விரிக்கப்பட்டது. டத்தோ, உதயம் எந்தப் பக்கம் என்று கேட்டு, கிழக்கே
பார்க்க உட்கார்ந்து கண்களை மூடினார். அவருக்கு எதிரே, வீட்டிலுள்ளோர், மடியில் கோர்த்தக்
கரங்களுடன் அரை வட்டம் போட்டு அமர்ந்து கொண்டனர். கொஞ்ச நேரத்தில் டத்தோ, உடம்பை முறுக்கிக்கொண்டு
சிலிர்த்து நெளிந்தார். சிஷ்யர்களில் ஒருவன், ‘சாமி’ வந்துவிட்டதென்று தலையாட்டி, சமிக்ஞைக்
கொடுத்தான். சாமி, வலது உள்ளங்கையை சிஷ்யன் பக்கம் நீட்டியது. ஒருவன், இரண்டு சூட விள்ளைகளை
ஏற்றி, சாமியின் உள்ளங்கையில் வைத்தான். சாமி, கொஞ்ச நேரம் அதைத் தன் உள்ளங்கையிலேயே
ஏந்தியிருந்துவிட்டு பின்னர், தன் நாக்கை நீட்டி அதன் மேல் கொட்டியது. சூட விள்ளைகள்
இப்போது நாக்கில் எரிந்துகொண்டிருந்தன. சாமி, ஒரு கனியை எடுத்து நீட்ட, சிஷ்யன் அதை
நான்காக வெட்டி, மஞ்சளையும் குங்குமத்தையும் தடவி, நான்கு திசைகளுக்கும் வீசிவிட்டு
வந்து, அமர்ந்தான். மகள்கள் இருவரும் நாக்கில் எரிந்துகொண்டிருந்த சுடத்தையே பயத்துடன்
பார்த்துக்கொண்டிருந்தனர்.
“சொல்லுங்க
தாயி!.. என்ன வேணும்!.. என்ன எதுக்கு கூப்பிட்டீங்க..” என்று தொடைகளை ஆட்டிக்கொண்டே
சாமி கேட்டது.
மாமியாரும்,
மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். யார் பேசுவதென்று தடுமாறிக் கிடந்தனர்.
பின்னர், நாகலட்சுமியே சுதாகரித்துக்கொண்டு பேசலானாள்.
“தோட்டத்துல,
(பாம்பின் சைகையைக் காட்டி) ஒன்னும் பூந்துரிச்சி சாமி!. எங்க தேடியும் கெடைக்கில.
வெளிய போவவே பயமா இருக்கு. நீங்கதான் ஏதாவது நல்ல வழிய காட்டனும் சாமி!” என்று பணிவுடன்
வேண்டினாள். சாமி, ஒருமுறை ‘களுக்’கென்று சிரித்துக்கொண்டது.
தான்
சொல்லியதில் இருந்த ஹாஸ்யம் என்னவென்று புரியாமல் நாகலிட்சுமி விழித்தாள்.
“என்ன
தாயி!.. பேருலியே தேவதைய வெச்சிகிட்டு தோட்டத்துக்குள்ளார வரவேண்டாம்னு சொன்னா எப்படி
தாயி?.. ம்..” சாமி கேட்டது.
அவள்,
ஒரு கணம் ஒன்றும் புரியாமல் சிஷ்யர்களைப் பார்த்தாள். ‘சாமி, ‘நாகலட்சுமி’ங்கற உங்க
பேர சொல்லுதும்மா..’ என்று கிசுகிசுத்தான். அவர்களிடம் தன் பெயரைச் சொன்ன ஞாபகம் அவளுக்கு
இல்லை! நெற்றியின் சுருக்கத்தில் யோசனைப் படர்ந்தது.
“வாஸ்தவந்தான்
சாமி!.. மனுசாளு பொழங்குற இடம். எக்குதப்பா வெக்கக்கூடாத எடத்துல கால வெச்சுட்டா, வில்லங்கமா
ஆயிருமே சாமி?..”
“ம்..
அதுவும் சரிதான் தாயி!.. இருந்தாலும் அதுங்க குடியிருந்த எடத்த அழிச்சி நாம வீட்ட கட்டிக்கிட்டு,
இப்ப அதுங்க பூந்துரிசின்னு வந்து புகார் வெக்கிறோமே!.. ஞாயமா தாயி?..”
ஏதோ
ஒரு நல்ல வழி சொல்வாரென்று அவரிடம் வந்தால், அவர் ஏதேதோ சொல்லி, இவர்களிடமே கேள்வியைத்
திருப்பியது தர்ம சங்கடமாய் இருந்தது. கவலையுடன் சாமியைப் பார்த்தனர்.
“சரி..
அது கெடக்கட்டும் தாயி. ஆமா, புள்ளிங்க ரெண்டும் வெள்ளிக்கிழம தவறாம கோவிலுக்கு போயி,
நெய் வெளக்க ஏத்தி வெச்சிட்டு வாராங்களே தாயி?..” என்று சாமி கேட்டது. இதெல்லாம் சாமிக்கு
எப்படித் தெரியும் என்று தாயும் மகளும் குழம்பிப் போயினர். நாகலட்சுமி, தன் கணவனைப்
பார்த்தாள். அவன், அப்போதுதான் தலையைக் குனிந்துக்கொண்டதுபோல் அவளுக்குத் தோன்றியது.
“வாஸ்தவந்தான்
சாமி!.. கல்யாணம் காட்சி ஒன்னும் சரியா கை கூடவே மாட்டுது. ஏதாவது தடங்களாவே நடந்துட்டு
இருக்குது. ஜாதகத்த பாத்தப்ப ரெண்டு பேத்துக்குமே நாக தோஷம் இருக்கிறதா சொன்னாங்க.
ஒவ்வொரு வெள்ளியும் நாக தேவதைக்கு நெய் விளக்கேத்தி வெச்சி, சுத்தி வந்தாக்கா தோஷம் கழியும்னு சொன்னாங்க. அதான்…”
சாமி,
கொஞ்ச நேரம் முன்னும் பின்னும் ஆடிக்கொண்டே கண்கள் மூடி கிடந்தது. எல்லோரும், சாமியையே
பார்த்துக் கிடந்தனர். திடீரென்று சாமி கேட்டது.
“தோஷம்
கழியிறதுன்னா இன்னா தாயி?” நாக லட்சுமி பதில் தெரியாமல் தன் தாயையும் கணவனையும் பார்த்தாள்.
மகேந்திரன், ‘இது பெண்கள் சமாச்சாரம்’ என்பதுபோல் அவள் பார்க்கவே தலையைக் குனிந்துகொண்டான்.
தாயோ, ஏதோ குழப்பத்தில் இருப்பதுபோல் முகம் வெளிறிக் கிடந்தாள்.
“சரி!
தோஷத்த, போட்டிருக்குற சட்டையா நெனச்சுக்கீங்களேன். அப்படீன்னா, சட்டைய கழட்டிப் போடறதுன்னா
தோஷத்த நீக்குற மாரிதானே தாயீ!..”
“வாஸ்தவந்தான்
சாமி…” இப்போது, தாயின் குரலும் நாகலட்சுமியின் குரலோடு சேர்ந்து ஒலித்தது.
“அப்படின்னா,
வாரந்தவறாம புள்ளிங்க வெளக்கேத்தி வெச்சி, சுத்தி வந்த நாகதேவதயே தோட்டத்துக்கு வந்து தன்னோட சட்டைய கழட்டி
போட்டதுன்னா, அதுக்கு என்ன தாயி அர்த்தம்?..” – சாமி இப்போது கண்களைத் திறந்து தாயையும்
மகளையும் நேரடியாகப் பார்த்துக் கேட்டது.
“ஐயோ,
சிவ.. சிவா…! சாமி, எங்கள மன்னிசிடுங்க சாமி!. தெரியாத்தனமா என்னென்னமோ செஞ்சிட்டோம்..”
என்று கன்னத்தில் போட்டுக்கொண்டு இருவரும் கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்தனர்.
“உதவுன
கைக்கே உபத்திரவம் செய்யிறது மகா பாவமில்லியா?.. நாகதேவதைய கொன்னு போட்டு தீராத தோஷத்த
தேடிக்க பாத்தீங்களே தாயி?..”
தாயும்,
மகளும் இரண்டு கைகளாலும் வாயைப் பொத்திக்கொண்டு ஸ்தம்பித்துக் கிடந்தனர். பாம்பை அடித்துக்
கொல்ல தாம் இருவர் மட்டுமே மும்முரமாக இருந்ததை எண்ணி, கிலியில் உறைந்து போயினர். அதனால்,
தாம் ஏதும் பழிவாங்கப்படலாமோ என்று இருவரும் பீதியில் பதறத் தொடங்கினர். தாம் பார்க்காதபோது
அந்த ‘ஸ்’ படமெடுத்தாடி, அவர்களைப் படம் பிடித்திருக்குமோ என்ற அச்சம் கவ்விக்கொண்டது.
என்னதான் உதவி செய்ய வந்த தேவதையே ஆனாலும், பாம்பு ஆயிற்றே!.. அந்த நினைப்பே அவர்களை
வெல வெலத்துப் போக வைத்தது.
“என்ன
இருந்தாலும் நாக தேவதையாச்சே சாமி!. படையே நடுங்கறப்ப நாங்க எந்த மூலக்கி?.. நாங்க
பயத்துல புத்தி பேதலிச்சு போனத மன்னிச்சி நீங்கதான் சாமி ஏதாவது பரிகாரம் சொல்லனும்..”
என்று மனமுருகி, கண்ணீர் வடிய தாயும் மகளும் சாமியைக் கரங்கூப்பிக் கேட்டுக்கொண்டனர்.
சாமி,
கொஞ்ச நேரம் ஆழ்ந்த தியானத்தில் மூழ்கியது போல் கண்கள் மூடி, அசைவற்றுக் கிடந்தது.
சிஷ்யர்கள் சாமியின் சமிக்ஞைக்காகக் காத்திருந்தனர். சாமி, வலது உள்ளங்கையை நீட்டியது.
சிஷ்யன், மூன்று சூட விள்ளைகளை மீண்டும் அகல் விளக்கில் ஏற்றி, சாமியின் உள்ளங்கையில்
வைத்தான். சிறிது நேரத்தில் சாமி, எரியும் சூடத்தை தனது நாக்கில் கொட்டிக்கொண்டது.
தீ அணைந்தவுடன் சூடத்தைத் துப்பிவிட்டு, பரிகாரத்தைச் சொல்லத் தொடங்கியது.
நாகலட்சுமி,
திரும்பி தன் கணவனைப் பார்த்தாள். மகேந்திரன், சாமி சொன்னதைக் கவனமாய் எழுதிக்கொள்ளத்
தயாரானான். சாமி, பரிகாரத்தை நிதானமாகச் சொல்லி முடித்தது.
“தைரியமா
இருங்க தாயீ... சொன்ன பரிகாரத்த தப்பாம செஞ்சிருங்க.. எல்லாம் நல்லபடியாவே நடக்கும்…”
என்று எல்லோருடைய நெற்றியிலும் திருநீறு திலகமிட்டுவிட்டு, அவர்களின் உள்ளங்கைகளிலும்
கொஞ்சம் திருநீறை உதிர்த்து,
“தென்னாடுடைய
சிவனே போற்றி..” என்று சாமி கைகளைக் கூப்ப,
“எந்நாட்டவர்க்கும்
இறைவா போற்றி..” என்று கூடியிருந்த அனைவரும் பதிலுக்கு வணங்க, சாமி மலையேறியது.
* *
*
சாமி, பரிகாரத்தில் சொல்லியிருந்த மூன்றாவது
வெள்ளிக்கிழமை!.. மாலை நேரம்!..
தோட்டத்தில்
பாம்பின் தோல் கண்டெடுக்கப்பட்ட வேலியோரத்தில், நான்கடி உயரத்திற்கு மூன்றடி அகலம்
என்ற அளவில் புதியதாய், சின்ன கோயில் ஒன்று எழுப்பப்பட்டிருந்தது. கோவிலுக்குள்ளிருந்த
சிமெண்ட் மேடையில், படமெடுத்து நிற்கும் வெண்கலத்தாலான ராஜநாகமொன்று பதிக்கப்பட்டிருந்தது.
அதன் முன்னே, ஒரு பக்கத்தில் பாதி உடைக்கப்பட்ட முட்டையும்; இன்னொரு பக்கத்தில் சிறிய
கிண்ணத்தில் பாலும் படைக்கப்பட்டிருந்தன. தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட பாம்பின் தோல்,
கண்ணாடிப் பிரேம் போடப்பட்டு, சுவரில் மாட்டப்பட்டிருந்தது. தலைக்குமேல் தொங்கிய எல்
ஈ டி பல்பிலிருந்து வீசிய வெயில் நிறத்திலான ஒளி, வெண்கல நாகத்தில் பட்டு, நாகரத்தினக்
கல்லைப் போல் பளபளத்து, மின்னியது.
நாகலட்சுமி,
பக்தியின் சோபை முகத்தில் பிரகாசிக்க, நெய்விளக்கை ஏற்றி வைத்து, பிரார்த்தனையைத் தொடங்கினாள்.
பெண்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து, வெண்கல ஸர்பத்தை நோக்கி கைகள் கூப்பியபடி, சாமியார்
கொடுத்துவிட்டுப்போன ஸர்ப்ப தோஷ நிவர்த்தி மந்திரத்தை ஓதத் தொடங்கினர்.
‘நர்ம
தாயை நம ப்ராத
நர்ம
தாயை நமோ நிசி
நமோஸ்து
நர்மதே துப்யம்
த்ராஷிமாம்
விஷ ஸர்பத..’
மகேந்திரன்,
வெண்கல ஸர்பத்தில் நிலைத்தப் பார்வையுடன், நெஞ்சில் இடது கையைப் பதித்து, வலது கையால்
அவர்களின் மந்திர உச்சாடனத்திற்கு இணக்கமாய் மணி அடித்துக்கொண்டு நின்றான்.
* *
*
முற்றும்
வட்டாரச்
சொல் விளக்கம்
(1)
அடேக் மாட்
- தம்பி ‘மாட்’ (மலாய் பெயர்)
(3)
கவாத்து - ஒட்ட வெட்டி விடுவது
(4)
கீலாவா - பைத்தியமா (மலாய்)
(5)
தவுக்கே
- முதலாளி (சீனம்)
(6)
சின்னாங்கா
- எளிதாக
(7)
டத்தோ
- பெரியவர்களை அழைக்கும் மரியாதைக்குரிய
சொல் (மலாய்)


A brilliant mix of suspense, humor, and cultural depth. The dialogues, especially from the mother-in-law, were sharp and funny, and they added so much life to the scene. Personal favourite till date - Nagatharisanam!
ReplyDelete