அஞ்சலி!.
அஞ்சலி!.
திரிஷீ.
ஒரு காலத்தில் ஆடு, மாடு, குரங்கு, கோழி, வாத்து, பறவை, மீன் மற்றும் நாய்கள் வளர்க்கப்பட்ட எஸ்டேட் பின்னணியைக் கொண்டவன் நான். எங்கள் வீட்டில் ஆடு, மாடு, கோழி மற்றும் நாய் வளர்க்கப்பட்டன. அதனாலோ எனக்கும் ஆடு, மாடு, கோழி, நாய் வளர்க்கும் ஆசை இருக்கிறது. ஆனால், எனது பட்டண வாழ்க்கை அதற்கு இடம் கொடாது என்பதால் நான் நாயோடு நிறுத்திக்கொண்டேன்.
நான், நாயின் சாகசங்களை S. S. கொக்கோ, ரஞ்சன் போன்றோர் நடித்த சினிமா படங்களிலும், ‘Lassie’ என்ற தொலைக்காட்சி தொடரிலும் கண்டு களித்திருக்கிறேன். அதன் விசுவாசத்தையும், பாசத்தையும் எஸ்டேட்டில் வளர்த்த நாய் எனக்குக் காட்டியது.
அப்போது, எனது பிள்ளைகள் நால்வரும் பள்ளிப் பிராயத்தினர். நாய்களை நடைப் பாதையில் பார்த்திருக்கின்றனர். சில, குரைத்ததோடு நிறுத்திக்கொள்ள, இன்னும் சில, விரட்டிய பீதியும் அவர்களுக்கிருந்தன. ஆயினும், ஒரு நாயின் அப்பழுக்கற்ற விசுவாசத்தை, அன்பை அவர்களுக்கு அறிமுகப்படுத்த விரும்பினேன்.
தீபெத் நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட ‘Shih Tzu’ இன நாய்க் குட்டி ஒன்றை வாங்கினோம். அதனுடைய தோலினுள் வைத்துத் தைக்கப்பட்டிருந்த ‘சிப்’ -பில் அதன் மூதாதையரின் மற்றும் அதன் எசமானர்களின் தகவல்கள் இருந்தன!. முழுக்க முழுக்க வெளிநாட்டினரை எசமாங்களாகக் கொண்ட மிகவும் ராயலான லைனேஜ்!.
அதன் பெயர், திரிஷீ!. எனது மூத்த மகள்தான் அந்தச் பெயரைச் சூட்டினாள். நடிகை திரிஷா ஒரு நாய் வளர்த்தால் அதன் பெயர் என்னவாக இருக்கும் என்று யோசித்து அந்தப் பெயரை வைத்தாளோ என்னவோ?.
அது ஒரு ‘Bundle of Joy’. நான், வேலையிலிருந்து வீட்டிற்கு வரும் ஒவ்வொரு முறையும் வீட்டிலிருந்தவர்கள் காட்டாதச் சந்தோஷத்தையும், அன்பையும் அது காட்டி நெகிழ்வூட்டியது. எல்லோரையும் தனது விளையாட்டுத்தனம், பேரன்பு, அறிவால் கட்டிப் போட்டது. பக்கத்தில் போட்டுப் படுத்துக்கொள்ள பிள்ளைகள் நால்வருமே போட்டிப் போட்டுக்கொண்டனர்.
தட்டில் வைக்கும் சாப்பாட்டை அது தானாகவே கவ்விச் சாப்பிடும் சிரமத்தைக்கூட அதற்குக் கொடுக்கக்கூடாது என்று பாசம் பொங்க கரண்டியில் ஊட்டிவிடத் தொடங்கினர். ஓடியாடி விளையாடி அது களைத்துப் போகாமலிருக்க, ஆள் மாறி ஆள் அதனை தூக்கி மடியிலேயே வைத்துக்கொண்டனர்.
பேரப்பிள்ளைகள் பிறந்ததும் அது அவர்களின் பாயின் அருகிலேயே காவல் காத்துக் கிடந்தது. அவர்கள் தவழத் தொடங்கியதும் அவர்களின் விளையாட்டு பொம்மையானது.
நாட்கள் கடந்தன!. அது தானாக சாப்பிட மறந்தது. யாராவது ஊட்டிவிட்டாலே சாப்பிட்டது. தனது விளையாட்டுத்தனத்தை இழந்து எங்களின் காலடியிலேயே படுத்துக் கிடந்தது.
பிள்ளைகளுக்கு விசுவாசத்தையும், பேரன்பையும் போதித்துக்கொண்டிருந்த நாய், பின்னாளில் மானிட சகவாசத்தால் தனது சுய சார்பை இழந்து, ஒரு நாள் மூன்று தலைமுறையினரையும் சோகத்தில் ஆழ்த்தி, செத்தும் போனது.
தோற்றம் – 02 ஆகஸ்ட் 2002
மறைவு – 05 டிசம்பர் 2016
வீனஸ்
எனது உறவினர் வீட்டு நாய் ஒன்று 5 குட்டிகள் ஈன்றது. அது ஒரு ‘Husky’ கலப்பின நாய். கலப்பின நாய் என்பதாலோ அதன் குட்டிகள் அவ்வளவு அழகாக இருந்தன. வரும்போதே வீனஸ் என்று பிறந்த வீட்டில் வைத்தப் பெயருடனே வந்த நாய் குட்டி!. என் மகன் சித்தார்த்தாதான் அதன் இமீடியட் எசமான்!. நாங்கலெல்லாம் அவனுக்கு அடுத்துதான்!.
திரிஷீ உடன் ஒப்பிடுகையில் இது ஒரு ‘Plus Size’ நாய் குட்டி!. இதுவும் விளையாட்டு குணமுடைய, அறிவான, நட்புணர்வு மிக்க ஒரு இனம்தான். ஆனால், மடியில் தூக்கி வைத்து கொஞ்சவெல்லாம் அதன் ‘சைஸ்’ இடங்கொடுக்காது. அதனாலேயே வீட்டிற்குப் பின்னால், சமயலறைக்குப் பக்கத்திலேயே கட்டிப் போட்டு வளர்த்தோம்.
பெரியவர்களான எங்களுக்குத்தான் அது விளையாட்டுத் தோழி. என் பேத்தி, எப்போதும் அதன் அருகில் போக பயந்தாள். அதனால் திரிஷீயுடன் இருந்த ஒரு நெருக்கம் இதனிடம் இல்லை!. பேரப் பிள்ளைகள், தூரத்திலிருந்தே அதனுடன் நட்பு பாராட்டினர். நடைப் பயிற்சிக்கெல்லாம் அதை அழைத்துக்கொண்டு செல்ல முடியாது. அதன் ‘Brute Strength’ -திற்கு அவர்களால் ஈடுகொடுக்க முடியாது.
எனது சம்பந்தி, எனது மகன், நான் மூவரால் மட்டுமே வீனஸை வெளியில் கொண்டுபோக முடியும்.
வீட்டு முன்னாலிருக்கும் கேட் திறக்கும் சத்தம் கேட்டால் உடனே குரைக்கும். எனது மகன்தான் அதனுடைய எசமான் என்பதாலோ, அவனுடைய வாகனத்தின் சத்தத்தைக் கேட்ட உடனேயே அவனுக்கு ஒரு குரல் கொடுத்துவிடும். அவன், போய் அதனைக் கொஞ்ச வேண்டும். இல்லாவிட்டால், ஒரு குறிப்பிட்ட இடைவெளிவிட்டு அவனுக்கு மீண்டும் குரல் கொடுக்கும்.
அது ஒரு சாதுவான நாய்தான். யாரையும் பயமுறுத்தியது கிடையாது. பார்த்தவன் அதைக் கண்டு பயந்தால்தான் உண்டு!. அப்படியே எங்களின் பாதுகாப்பை இதுவரை ஒப்பேத்திவிட்டோம். அது யாரையும் பார்த்து குரைக்க வேண்டியதில்லை!. உறுமி பயமுறுத்தவும் வேண்டாம். அதன் இருப்பே ஒரு எச்சரிக்கைதான்!. பகலில் தனியாக இருக்கும் என் மனைவிyin பாதுகாப்பு அதிகாரி.
இரண்டு வாரங்களுக்கு முன்னர், திடீரென்று சாப்பிட மறுத்தது. அதற்குப் பிடித்த உணவையும் சாப்பிடாமல் புறக்கணித்தது. வழக்கமான நடைக்கு அழைத்துக்கொண்டு போனபோது, சில புற்களைத் தேர்ந்தெடுத்து தின்றது. தண்ணீரை மட்டுமே அருந்தியது. அதோடு ரத்தப் போக்கு வேறு!. ‘Estrous cycle’ போல என்று அசட்டையாக இருந்து விட்டோம். மிருக மருத்துவரை நாடுவது நல்லதென்று தோன்றியது.
நாடினோம்!.
வீனஸ்சிற்கு ‘Pyometra Infection’ ஏற்பட்டிருப்பதாகவும் உடனடியாக அதன் கர்ப்பப்பை நீக்கப்பட வேண்டுமென்றும் ஆலோசனை சொன்னார். பொறுப்பு துறப்பு கடிதத்தில் கையொப்பமிட்டோம்.
சனிக்கிழமை அறுவைச் சிகிச்சை செய்து, செவ்வாய்க் கிழமை வீட்டிற்கு அனுப்பிவைத்தார்.
வீனஸ்சின் உண்ணாவிரதம் இன்னும் தொடர்ந்தது. சுயமாக எழுந்து நிற்கும் சக்தியை இழந்து படுத்தே இருந்தது. அதனுடைய எசமான், (என் மகன், ‘July accounts closing’ -ஆல் சனி, ஞாயிறும் வேலையில் இருந்தான்) புதன் கிழமை காலையே வீட்டிற்கு வந்தான். புதன் மாலை, அவன் கண்ணெதிரிலேயே வீனஸ் உயிர் நீத்தது. அதன் இழப்பை அவனே அதிகம் உணர்ந்து கலங்கினான்.
அனுபவித்துக்கொண்டிருந்த வேதனையிலிருந்து அதற்கு ஒரு விடிவு கிடைத்ததாக அதன் மரணத்தை புரிந்துகொண்டு என்னைத் தேற்றிக்கொண்டேன்.
மருத்தவரிடம் தகவலைச் சொன்னேன். வழக்கம்போல் ‘Signature statement’ -ஐ சொன்னார்.
“நா அப்பியே சந்தேகப்பட்டன். கொஞ்சம் ‘early’-யா கொண்டு வந்திருந்தாலும் அத காப்பாத்தியிருக்கலாம்..”
நான் நினைத்துக்கொண்டேன்,
‘புதன் கிழமை முழுக்க அவருக்கு ஏன் வீனஸ்சின் நிலையைப் பற்றி கேட்கத் தோன்றவில்லை?.’
எல்லாருமே முதலில் வியாபாரிகள்!. பின்னர்தான் தொழில் சார்ந்த நிபுனர்கள்.
வீனஸ் உயிருடன் இருந்தபோது பெரிய ஆர்ப்பாட்டமெல்லாம் செய்து தனது இருப்பை எங்களுக்கு அது நினைவூட்ட யத்தனித்ததேயில்லை!.
அரவமற்ற அமைதியே அதன் இருப்பாக இருந்தது. ஆனால், இப்போதோ அதே அமைதியே அதன் இல்லாமையை நினைவூட்டிக்கொண்டிருக்கிறது.
தோற்றம் – 23 செப்டம்பர் 2017
மறைவு – 30 ஜுலை 2025
Trishee & Venus, We miss you Both!.

Comments
Post a Comment