மலேசியாவிற்குப் பிடித்த ‘மதம்’.
பேசாப் பொருள் பேசினேன் – 25
நாடு சுதந்திரமடைந்து 67 ஆண்டுகள் ஆகிவிட்டன. என்ன, நாடு சுதந்திரம் அடைந்து என்றா சொன்னேன்?. மன்னிக்கவும்!. நாட்டிற்கு சுயாட்சி கிடைத்து 67 ஆண்டுகள் ஆகிவிட்டன என்று சொல்வதே சரியாக இருக்கும்.
காலணித்துவ ஆட்சியின் கீழ் நாடு ‘அந்நியரால் ஆட்சி செய்யப்பட்டது’ என்பதைத் தவிர, மற்ற எல்லா அரசு மற்றும் தனியார் துறைகளும் சுதந்திரமாகவே இயங்கின.
ஆட்சி செய்வதில் ஒரு நேர்மை இருந்தது.
தகுதி அடிப்படையில் துறைச்சார் நிபுனர்கள் அரசுதுறை நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதனால், ‘அரசாங்கத்தில் ஊழல்’ என்ற வார்த்தையே அநாமதேயமாக இருந்தது. ‘ஊழல் தடுப்பு ஆனையம்’ என்ற தனித் துறையின் தேவை 10 வருடங்களுக்கு இருக்கவேயில்லை. 1967-லிலேயே ‘ஊழல் தடுப்பு ஆனையம்’ தோற்றுவிக்கப்படுகிறது.
ஆட்சி செய்வது என்பது அரசியல் செய்வது அல்ல என்ற ஒழுக்கம் ‘அந்த அந்நியர்களிடம்’ இருந்தது.
நாட்டின் எதிர்க்காலத் தேவைக்கான தலைவர்களை, நிர்வாகிகளை, ஊழியர்களை உருவாக்கும் கல்வி துறைக்குள் ‘மதம்’ எனும் விஷத்தை கலக்கலாகாது என்ற உறுதியானத் தீர்மானமும் அவர்களிடம் இருந்தது.
இப்போது அரசியலிலும், ஆட்சியிலும் இருக்கும் தலைமுறையில் பெரும்பாலோர், காண்வெண்ட், செயிண்ட் ஜான், செயிண்ட் பால், செயிண்ட் சேவியர், செயிண்ட் ஃபிரான்சிஸ், செயிண்ட் ஜார்ஜ், செயிண்ட் மைக்கல், செயிண்ட் தெரெசா, செயிண்ட் அட்ன்ரு, செயிண்ட் பட்ரிக், செயிண்ட் அந்தோனி, ஸ்டெல்லா மேரீஸ், La Salle, மெட்தடீஸ் என்று ஒரு நீண்ட பட்டியலைக்கொண்ட கிருஸ்துவ மிஷனரி பள்ளிகளில், இன்ஸ்சிடியுஷனில் கல்வி கற்றவர்கள்தாம்.
அவர்களில் இஸ்லாமிய மாணவர்களும் தினமும் காலையில் அசம்பிலி ஹாலில் அணிவகுக்க வேண்டியிருந்தது. எதிரே சுவரில் சிலுவைச் சின்னம் இருந்தது. பாடம் போதித்த கன்னியாஸ்திரிகளும் வெள்ளை உடை தரித்து, கழுத்தில் சிலுவை அணிந்திருந்தனர். இப்படி, அம்மாணவர்கள் அப்போது தினமும் சிலுவையைப் பார்த்தபடியே கல்வி கற்றனர். அந்தச் சிலுவை இஸ்லாமிய மாணவர்களை உறுத்தவேயில்லை. தமது மதத்தைத் துறந்து கிருஸ்துவ மதத்தை தழுவும் எண்ணத்தையும் அவர்கள் பெறவில்லை. அம்மாணவர்களின் நோக்கம் கல்வி கற்பதாக மட்டுமே இருந்தது. இந்தப் புற அடையாளங்களால் தமது சுயத்தை இழந்துவிடும் பலஹீனம் தமக்கில்லை என்ற தெளிவை, தைரியத்தை அவர்கள் பெற்ற கல்வி அவர்களுக்குக் கொடுத்திருந்தது.
கிருஸ்துமஸ் காலங்களில் பள்ளிகளில் ‘Chrismas carols’ பாடப்பட்டன. பிறமதப் பண்டிகைகளின் போது, கைகள் குலுக்கி வாழ்த்துகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. ஒருவர் வீட்டு கொண்டாட்டங்களில் மற்றொருவர், தமது மதக் கட்டுப்பாடு ஏதுமின்றி சுதந்திரமாக கலந்துகொள்ள முடிந்தது. தடையேதும் இல்லை.
கல்விக்கூடங்களில் எல்லோருக்கும் ஒரே சீருடைதான். மதம் சார்ந்த உடைகளையெல்லாம் வீட்டோடு விட்டுவிட வேண்டியதுதான். ஆக, இப்படித்தான் ‘அடிமை மலாயா’ என்பது 1957-வரை இருந்தது.
Fast forward to 2025
‘JAKIM’ எனும் (Department of Islamic Development Malaysia) அரசு சார்ந்த நிறுவனம், இஸ்லாம் அல்லாதாரின் வைபவங்களில் கலந்துகொள்ள விரும்பும் இஸ்லாமியர்களுக்கும்/அவர்களை அழைக்கும் இஸ்லாமிய அல்லாதவர்களுக்கும் புதிய வழிகாட்டி முறைகளை பரிந்துரைச் செய்திருக்கிறது. அவையாவன…
- தமது வழிப்பாட்டு ஸ்தலங்களில் நடைப்பெறும் நிகழ்ச்சிக்கு இஸ்லாமியரை அழைக்க விரும்பும் இஸ்லாம் அல்லாதோர், முதலில் உரிய அதிகாரிகள் மற்றும் இஸ்லாமியத் துறையின் முன்னனுமதியைப் பெற வேண்டும். இது, தேவாலயங்களில் நடைப்பெறும் இறுதிச் சடங்குகளுக்கும் பொருந்தும் என்பதைப் புரிந்துகொண்டால் அதன் தாக்கம் என்ன என்பது உங்களுக்கு புரியலாம். ஜார்ஜிற்கு இறுதி மரியாதைச் செய்ய அவரது இஸ்லாமிய சகோதரர்கள் தேவாலயத்திற்கு வருகிறார்கள் என்றால், அவர்களின் பார்வையிலிருந்து தேவமாதா, ஏசுநாதர் மற்றும் சிலைவைச் சின்னங்களெல்லாம் மறைக்கப்பட வேண்டும். தேவாரம், திருவாசகத்திற்கெல்லாம் இடமில்லை. ஒப்பாரியையும் வைக்கமுடியுமோ தெரியவில்லை
- அந்நிகழ்ச்சிகளில் பக்திப் பாடல்கள், சமயப் பிரச்சாரம் மற்றும் முஸ்லீம்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் நிகழ்த்துக் கலைகளைச் செய்விக்கலாகாது.
- இஸ்லாமியர்களின் தொழுகை நேரங்களில் (வெள்ளிக்கிழமை தொழுகை நேரம் உட்பட) அத்தகைய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யலாகாது.
- சம்பவ ஸ்தலம் இஸ்லாமிய வழிப்பாட்டு அரங்கம், மசூதி, இஸ்லாமியர் இடுகாடு, இஸ்லாமிய அறநிலையத்திற்கு சொந்தமான நிலம் ஆகியவற்றின் அருகில் இருக்கக்கூடாது.
- நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் இஸ்லாம் அல்லாத பிறமத சின்னங்கள், சிலைகள் இருக்கக்கூடாது.
இந்தப் பிப்ரவரி மாத இறுதியில் மேற்காணும் பரிந்துரைகளின்பால் ஒரு முடிவு எடுக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது.
நிற்க, நாட்டின் பிரதமர் ஆன்வர் இப்ராஹிம் இந்தப் பரிந்துரைகள் நிராகரித்ததோடு இவை மக்களுக்கிடையே தேவையற்ற பிளவை ஏற்படுத்தும் என்று கருத்துரைத்திருக்கிறார். ஆனால், அவரின் செயல்பாடோ சந்தேகத்திற்குரியதாய் இருக்கிறது.
2023-ல் அவர் தைப்பூசத்தில் கலந்துக்கொள்வதாக இருந்த நிகழ்ச்சி, உடல் நலிவைக் காரணம் காட்டி கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
2024-ம் ஆண்டு அவர் கலந்துக்கொள்ளாததற்கு எந்தக் காரணமும் தெரிவிக்கப்படவில்லை.
இந்த 2025-ம் வருடமோ தைப்பூசத் திருநாளுக்கு 4 நாட்களுக்கு முன்னரே ஆன்வர் இப்ராஹிம் பத்துமலைக்கு வந்துவிட்டுச் சென்றார். அவர் அன்று வந்தபோது, அங்கே மலை மட்டுமே இருந்தது கொண்டாட்டம் இல்லை!.
ஒரு இஸ்லாமிய நாட்டில் இவ்வளவு கோலாகலத்துடன் ஓர் இந்துப் பண்டிகைக் கொண்டாடப்படுவது அவருக்கு ஏற்புடையதாக இல்லையோ?.
எல்லாம் சரி!. இது என்ன நேற்று சுதந்திரம் பெற்ற நாடா ? இப்போதுதான் அரசாங்கக் கொள்கைகளுக்கு ஒரு நடைமுறை வடிவத்தைக் கொடுப்பதற்கு?. 67 வருடங்களாக இந்தப் புதிய கட்டுப்பாடுகளும், வழிக்காட்டிகளும் இல்லாமல் இங்கே மக்கள் தடம் புரண்டு போய்விட்டனரா என்ன?. நாட்டில் ‘pressing issues’ என்று எவ்வளவோ இருக்க இஸ்லாமிய மேம்பாட்டுதுறையின் இந்த ‘Six pense short of a shilling’ பரிந்துரை மத நல்லிணக்கத்திற்கு ஊறு அன்றோ?.
60 மற்றும் 70-களில் காணாத உழல்கள் இப்போது தலைவிரித்தாடுகிறதே?. இது, சமய நிந்தனைக்குள் வராதா?
மலாயா நாட்டின் தொட்டில் மலாக்கா துறைமுகம் ஆகும். அங்கு. 18-ம் நூற்றண்டில் இஸ்லாம், இந்து மற்றும் புத்த மத கோயில்கள் ஒரே சாலையில் வெறும் 200 மீட்டர் தூரத்தில் அருகருகே கட்டப்பட்டிருக்கின்றன. ஒரு மதத்தவரின் கொண்டாட்டம் இன்னொரு மதத்தவருக்கு இடைஞ்சலாகவோ, அச்சுறுத்தலாகவோ இருக்கவேயில்லையே?.
ஆக, இப்போது மேலே உள்ள பரிந்துரைக்குப் பின்னாலிருக்கும் அரசியல்தான் என்ன?.
இங்கே, ஒற்றுமைக்கு இடைஞ்சலாய் இருப்பது எது? எனது மத இன அடையாளங்களா?.
மத, இனத் தீவிரவாதத்தால் உனது சகோதரனே உனக்கு எதிரியாய்த் தெரிகிறானே, நீயா சுதந்திர மனிதன்?.
- மாஸ்ஜிட் கெலிங் மசூதி
- செங் ஹூன் கோயில்
- பொய்யாத விநாயக மூர்த்தி கோயில்
- ஜாகிம் செய்த பரிந்துரையின் பத்திரிக்கைச் செய்தி லிங்கில்.

Comments
Post a Comment