‘யுகசந்தி’
சென்னையில் எனக்கு எஸ். வாசுதேவன் மற்றும் விஜய் ஆனந்த் சுப்புராஜ் என்று இரண்டு நல்ல நண்பர் கள் இருக்கின்றனர். இலக்கிய, சமூக ஆர்வலர்கள். தீவிர வாசிப்பைக் கொண்டவர்கள். வருடந்தோரும் சென்னைக்கு வரும்போதெல்லாம் எனது பிற அலுவல்களுக்கிடையே இவர்கள் இருவரையும் தவறாமல் சந்திப்பதையும் ஒரு வழக்கமாகக் கொண்டுள்ளேன். ஏதோ ஒரு ஹோட்டல் ரெஸ்டாரண்ட்டில் சில மணி நேரத்திற்கு நல்ல உரையாடலில் அந்தச் சந்திப்பு நிகழும்.
இந்த வருடமும் அதுவே நிகழ்ந்தது.
இந்த முறை விஜய் ஆனந்த்திடம் வைக்க எனக்கொரு கோரிக்கை இருந்தது. சத்தியப்படுமா என்ற சந்தேகத்துடனேயே அதைப் பிரஸ்தாபித்தேன். அவர், அதைச் செய்து முடிப்பதில் எந்தச் சிக்கலுமில்லை யென்று உடனே உறுதியளித்தார்.
1970 - களில் இது நடந்தது!. அன்றைய எஸ்டேட் வாழ்க்கையில் மூன்று பொழுது போக்கு அம்சங்களே பதின்ம வயதிலிருந்த எங்களுக்கு இருந்தன. காற்பந்து, பூப்பந்து, நீச்சல் போன்ற Physical விளையாட்டுகள், சமூக மண்டபத்திலிருந்த கருப்பு வெள்ளையில் மட்டுமே படம் காட்டிய பொது டெலிவிஷன், புத்தக வாசிப்பைச் சொல்லிக்கொடுத்ததோடு இலக்கிய பரிச்சயத்தையும் செய்து வைத்த, முருகு சுப்ரமணியனை ஆசிரியராகக் கொண்ட தமிழ் நேசனும், கோ. சாரங்கபாணியின் தமிழ் முரசும். இளைஞர்களுக்கும் பெரியவர்களுக்கும் மட்டும் கூடுதலாய் ஒரு பொழுது போக்கு இருந்தது. ஆயினும், பதின்ம வயதிலேயே அந்தப் பொழுது போக்கிற்கும் அவசரப் பட்ட சிலர் இருக்கவே செய்தனர்.
எனது வாசிப்பு டாக்டர். மு வ -லிருந்து ஆரம்பமானது. அறவாழி பேசிய ஒழுக்கம் அந்த வயதில் மிகவும் ஈர்ப்புடையதாய் இருந்தது.
பின்னர், அகிலனும், நா. பார்த்தசாரதியும் அறிமுகமாயினர். நா. பா. காதலினூடே பேசிய லட்சியவாதம் என்னைக் கட்டிப் போட்டது. அரவிந்தனும், சத்தியமூர்த்தியும் ஆதர்ச புருஷர்களாயினர். குறிஞ்சி மலர், பொன் விலங்கு பித்துப் பிடித்துப்போய் அலைந்துகொண்டிருந்த காலத்தில்தான் தமிழ் நேசன் என்று ஞாபகம், ஜெயகாந்தனைப் பற்றி அறிய நேர்ந்தது.
நான் படித்த அவரின் முதல் சிறுகதைத் தொகுப்பு, ‘இனிப்பும் கரிப்பும்’ என்று ஞாபகம். டாக்டர். மு வ, அகிலன், நா பா காட்டாத ஒரு புது உலகத்தை அவர் காட்டினார். அங்கே கடைக்கோடி மனிதர்களே கதை மாந்தர்களாய் இருந்தனர். அவர்கள் பேசிய மொழி என்னுடையதாய் இருந்தது. அவர்களின் வாழ்க்கைப்பாடு நான் பட்டது!.
எனக்குப் பிடித்திருந்த பித்து விலகிப்போய், ஜெயகாந்தனின் வெறிக்கு ஆட்பட்டுப் போனேன். மீனாட்சி புத்தக நிலையம் வெளியிட்ட எல்லா ஜெயகாந்தனின் நூல்களையும் வாங்கிச் சேகரித்தேன்.
எங்களுக்கிடையே இன்னொரு ஆச்சரியமும் இருந்தது. ஜெயகாந்தன் பிறந்த ஏப்ரல் 24-ம் திகதியே நானும் பிறந்திருந்தேன். 
நா பா மலேசியா வந்த போது நான் பணியிலிருந்த ஹோட்டலில் தங்கியதால் ஏற்பட்ட பழக்கத்தில் என் வீட்டிற்கு வந்தார். தனது ‘விமர்சனக் கலை’ என்ற நூலை எனக்குப் பரிசளித்தார். நான். எனது ‘ஜெயகாந்தன் சேகரிப்பை’ அவருக்குக் காட்டினேன். என்ன நினைத்துக்கொண்டாரோ?.
ஜெயகாந்தன் மலேசியா வந்தார். நான் அப்போது இரண்டு வேலைகள் செய்துக்கொண்டிருந்ததால் அவரைப் பார்க்க முடியாமலேயே போனது. அந்த ஏக்கம் எப்போதுமே என்னுள் இருந்துகொண்டே இருந்தது.
அப்போதுதான், அந்த நூல் வெளியீட்டைப் பற்றி அறிய நேர்ந்தது. நூலை அந்த நூலாசிரியரிமிருந்தே நேரடியாகப் பெற்று எனது ஏக்கத்தைத் தீர்த்துக்கொள்ள முடிவெடுத்தேன்.
நண்பர் விஜய் ஆனந்த் நூலாசிரின் நட்பிலிருந்தார் போல. அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.
அசோக் நகர், ஆனந்த பவனில் சந்திப்பதாக ஏற்பாடு.
நூலாசிரியர் வந்தார். நண்பர் எங்களை அறிமுகம் செய்து வைத்தார். நான், எனது ‘ஜெயகாந்தன் கிறுக்கு’ பிடித்து ‘ஸ்ரீகாந்தன்’ ஆன கதையைச் சொன்னேன். அவர் புன்னகைத்துக்கொண்டார்.
நான், எனது கைப் பேசியிலிருந்த ஒரு படத்தை அவருக்குக் காண்பித்தேன். சில விநாடிகள் அதைப் பார்த்தவர் கண்கள் கலங்க ஆரம்பித்துவிட்டர். தந்தையின் நினைவு அவரை வாட்டியது போல. டிஸ்சு காகிதத்தை எடுத்து கண்களை ஒற்றிக்கொண்டார்.
அவர் எழுதிய இரண்டு தொகுதிகளையும் அவரிடமிருந்து பெற்றுக்கொண்டேன்.
‘தோழமையுடன் ஜெ. தீபலட்சுமி’ என்று கையொப்பமிட்டுக் கொடுத்தார்.
நான், ஜெயகாந்தன் எழுதிய ‘யுகசந்தி’ என்ற சிறுகதையில் வரும் இந்த வாக்கியத்தை நினைத்துக்கொண்டேன்.
“கௌரிப் பாட்டி தனது இறந்த காலத்தின் நிகழ் காலப் பிரதிநிதியாய் தன்னையே அவளிள் கண்டாள்.”
நான் கண்டதும் ஜெயகாந்தனைத்தான்!.
- நூலாசிரியருடன் நான்
- இந்தச் சந்திப்பை சாத்தியப்படுத்திய தோழர் விஜய் ஆனந்த்துடன் நாங்கள்.

Comments
Post a Comment