‘எனக்கென்ன குறைச்சல்?.’

 


பேசாப் பொருள் பேசினேன் – 34

‘எனக்கென்ன குறைச்சல்?.’
மலேசியாவில் 2024-ல் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி ஓர் ஆணின் சராசரி ஆயுட்காலம் 73.0 ஆண்டுகள்.
எனக்கு வயது 72!.
வாசல் திறந்து கிடக்கிறதே என்று உள்ளே புகுந்துவிட்டு திரும்பிப் பார்த்தால், பின்னால் கதவு மூடிக்கிடக்கிறது. சற்று முன்புவரைக்கூட திறந்திருந்ததே!. பாவி, மூடியது யார்?. புரிந்து விட்டது!. அது ஒரு ஒருவழிப் பாதை. இனி, முடிவை நோக்கி முன்னோக்கிப் பயணிக்க வேண்டியதுதான் எஞ்சியிருக்கும் வாழ்க்கைக்கான விதி. அதை வாழ்தல் என்று யார் சொன்னது?. இறத்தலை நோக்கியப் பயணமன்றோ அது!.
கொஞ்சம் இளைப்பாறுவதற்குகூட அவகாசம் இருக்காது போலிருக்கிறதே!.
வாழ்ந்துவிட்டக் காலத்தைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்கிறேன்.
அறத்துடன் தொடங்கியதே அன்றைய வாழ்க்கை. ஒழுக்கத்தை ஊட்டி வளர்த்தவள் தாய் என்றாள், தந்தை எல்லா ஒழுக்கங்களையும் மீறியே அதைப் போதிக்கச் செய்தார்!. ஆசிரியர்களும் கற்ற நூல்களும்கூட அறத்தையே பேணினர்/ன!.. சுற்றி இருந்தோரும்கூட அறக்கவலர்களாகவே இருந்தனர்.
ஆயினும், கையைச் சுட்டுக்கொண்டே நெருப்பின் தன்மையை அறிய நேர்வதாய் வாழ்க்கை அமைந்ததே!.
இன்றைய அறம் சார்ந்த இந்த வாழ்க்கை, இளமையில் பெற்ற எல்லா போதனைகளும்கூட போதாமல் பின்னாளில் சிறியதாய் ஒரு களவும், சில ஒழுக்க மீறல்கள் செய்தே அல்லவா ஞானம் பெறவேண்டி இருந்தது.
எத்தனை நண்பர்கள்?. எத்தனை நம்பிக்கைகள்?. எத்தனை நயவஞ்சகங்கள்?.
வாழ்க்கையைப் போல் ஒரு நல்லாசானும் உண்டோ?.
ஐந்து இலக்க வருமானத்திற்காக எனது சுயமரியாதையை, நேர்மையை சமரசம் செய்ய வேண்டிய நிலை நேர்ந்தபோது, ஒரு குறுந்செய்தியில் (நிறுவனத்தின் ஸ்தாபகர்களில் நானும் ஒருவனாக இருந்தும்) உரிமையை உதறித் துறந்த எனது செய்கை, அந்த ஞானத்தால் பெற்ற பலமல்லவா!.
அச் செயலால் நான் அடைந்த பொருளாதார நஷ்டம் லட்சங்களில்!. என் மகனை அடமானம் வைத்து அந்த லட்சங்கள் அவனைச் சென்றடையச் செய்ய, நானும் ஒரு பங்குதாரர் என்ற முறையில் எனக்கு எல்லா உரிமைகளும் இருக்கவே செய்தன. ஆனால், எதன் பெயராலும் அவனைப் பணையம் வைக்க நான் துணியவில்லை!. பணத்திற்காக தன் சுயமரியாதையை எளிதில் அடகு வைத்துவிடும் இளம் வயதிலல்லவா அவன் இருந்தான்.
எனது 25% சதவிகித உரிமம் 8% சதவிகிதமாக குறைத்துக் காட்டப்பட்டபோது, நட்பின் நயவஞ்சகத்தை நான் கண்டுக்கொண்டேன். ஒரு நட்பை இப்படியெல்லாம்கூட நாசம் செய்யத் துணிந்த ஒருவனுடன் சட்டப்பூர்வமாக போராட எனக்கு வெறுப்பே எஞ்சியது!.
ஒரு சொல்லுக்கு இல்லாத சத்தியமா?. அந்த வார்த்தைக்குப் பின்னால் நம்பிக்கை என்ற ஒரு பிடிமானம் இருந்ததே?. அதைச் சிதைத்தல் துரோகமன்றோ?. துரோகத்தை இழைத்தவன் நிம்மதியாக வாழ்வான்?.
போகட்டும்!.
பணத்திற்காக தன்மானத்தை அடகு வைக்காமல் வாழ்ந்துவிட்ட இந்த வாழ்க்கை, ஒரு வரம்தான்!.
என்னைவிட மூத்தவர்களை, சக வயதினரை, இளையவர்களை (சிலரை எதிர்ப்பார்த்தது போலவும், பலரைச் சற்றும் எதிர்ப்பார்க்காத நிலையிலும்) ஒவ்வொருவராக இழந்துகொண்டு வருகிறேன்.
எங்கோ தூரத்தில் இருப்பதாய் நினைத்துக்கொண்டிருக்கும் மரணம், அருகில் வந்துக்கொண்டிருக்கும் செய்தியை இந்த மரணங்கள் ஏந்தி வருகின்றன.
நேற்று இருந்த நண்பன் இன்று இல்லை!. அவ்வளவு அருகில் மரணம் வந்துவிட்டது.
‘வயதிற்கே உரிய உபாதைகள் எதுவுமே அண்டாமல் இருக்கக் கடவது’ என்ற பெற்றோரின் நல்லாசிகளுக்கு உரியவன் நான். கூடவே அம்மாவை, அண்ணனைப் போல் நெடிய போராட்டமேதும் இல்லாமல் உயிர் போகும் வரமும் வாய்த்துவிட்டால் நானும் ஆசீர்வதிக்கப்பட்டவனே!.
அதனால், திடீரென்று விபரீத ஆசை ஒன்று எழுகிறது.
ஆமாம், எனது மரணத்தை நண்பர்கள் நீங்கள் எப்படியெல்லாம் எதிர்க்கொள்வீர்கள்?.
எப்போதும்போல், அனுதாபம் சொல்லக்கூட அவகாசம் இல்லாத நண்பர்களைப்பற்றி கவலை இல்லை. அவர்களின் ஆனுதாபங்கள் உயரடுக்கு ‘elitist’, மற்றும் பிரபலங்களுக்கானவை!. ‘The man on the street’-ஆன நான் அதற்கு அருகதையில்லை!.
நினைத்துப் பார்க்கவே முடியாத நண்பர்களைப் பெற்ற அதிர்ஷ்டசாலி நான்!. நாடுகள் தாண்டி, கடலையும் கடந்து நட்பில் இணைந்த நண்பர்கள்!. எவ்வளவு அற்புதமான மனிதர்கள் நீங்கள்!.
இந்த சமூக ஊடகங்களின் மேல் ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். ஆயினும், ‘யாதும் ஊரே, யாவரும் கேளீர்..’-ரை சாத்தியப்படுத்திய அதிசயம் இதனாலன்றோ நிகழ்ந்தது.
ஓர் ஒத்திகை!.
இறந்த பின்னர் சொல்லப் போகும் அனைத்து வாழ்த்துகளையும், வசைவுகளையும் இருக்கும்போதே சொன்னால் அவற்றையும் கேட்டுவிட்ட திருப்தி, என் வாழ்க்கையை நிறைவு செய்ததாகுமல்லவா!.
எங்கே, சொல்லுங்களேன், கேட்டுக்கொள்கிறேன்..
ம்ம்ம்……
ம்ம்ம்……
ம்ம்ம்…..
அது சரி,
ஏனிந்த ஆர்ப்பாட்டம்?..
எதற்கு இந்த ஒப்பாரி?..
அட, ஒரு மரணத்தை எப்படி ஆராதிப்பது.. ஒரு துக்கத்தை எப்படி அனுசரிப்பது.. என்பதுகூட தெரியாத உங்களை எல்லாம் நம்பி எப்படி மரணிப்பது?
எப்போதும் தேர்தர் முடிவுகளைச் சரியாகவே கணிக்காத வாக்கெடுப்பைப்போல், மனிதர்களின் ஆயுட்காலத்தையும் எந்தக் கணக்கெடுப்புதான் சரியாக சொன்னது?.
அதனால்,
நான், இன்னும் சில வருடங்கள் வாழ்ந்துவிட்டுத்தான் போகிறேனே!.
‘எனக்கென்ன குறைச்சல்?.
நான் ஒரு ராஜா!..’

Comments

Popular Posts