தேனியை நோக்கி..

 



Memory Lane – 81
தேனியை நோக்கி..
இன்று, தேனிக்கு நந்தன் ஸ்ரீதரனைப் பார்க்கப் போவதாக உத்தேசம்.
அவருடன் ஏற்கனவே நான் வாட்ஸ் ஆப்பில் சாட் செய்திருக்கிறேன். அவர் எப்போதுமே பிசியான வேலை கம்மீட்மண்ட்டில் இருப்பவர் என்று தெரிந்து வைத்திருந்தேன். முன் கூட்டியே ஒப்புக்கொண்ட சந்திப்புகள்கூட ’11-th hour’ அலுவல்களால் தள்ளிப்போகக்கூடும் என்று எனக்குத் தோன்றியது. அதோடு, அவரின் வாக்கிய பிரயோகங்கள் சில புன்னகையுடன் கடந்து செல்ல வைத்திருக்கின்றன. எனது ஆதர்ச எழுத்தாளர் ஜெயகாந்தனை அவர் நினைவூட்டுவதாகக்கூடச் சொல்லியிருந்தேன்.
ஆசானுக்கும் அவர் நண்பர்தான் என்பதால், ஒரு கால் செய்து சந்திக்க உகந்த நேரத்தை ஆசான் உறுதி செய்துக்கொண்டார்.
தேனிக்கான பிரயாணம் ‘pleasant’-ஆகவே இருந்தது.
வழியில், ஆசான், தான் மலைவாழ் மக்களுடன் பணியாற்றிய மலையைச் சுட்டிக் காட்டினார். அடுத்த முறை நான் வரும்போது, அந்த மலைக்கு ஏறி பார்க்க முடியுமா என்று கேட்டேன். ஒரு மருத்துவர் என்ற முறையில் என் வயதைக் கருத்தில் கொண்டு அதற்கு என்னை அனுமதிக்கலாகாது என்று மறுத்துவிட்டார்.
தேனியின் மலையும், மழைச்சாரலும் ஒரு வரம்.
ஆயினும், சாலைகள் குறிப்பிட்ட நேரத்திற்குக் குறிப்பிட இடத்தை அடைய முடியாத நிலையிலேயே இருந்தன. நந்தன் சந்திக்க ஒத்துக்கொண்ட நேரத்தையும் கடந்து நேரம் ஆகிக்கொண்டிருந்தது. நந்தன்கூட ஒரு முறை கால் செய்து எங்களின் வருகை நேரத்தை மறு உறுதி செய்துக்கொண்டார்.
வீட்டை அடைந்தபோது, கணவன், மனைவி வாசலிலேயே காத்துக்கொண்டிருந்தனர்.
என்னைப் பார்த்ததும்,
“அப்பா ரோலுக்கு பொறுத்தமா இருப்பாரு..” என்றார். அதன் அர்த்தம், ‘வயசான மாரி இருக்காரே?..’ என்பது. அவரின் உள்குத்து. எனக்கா தெரியாது?.
முகமன் எல்லா முடிந்த பிறகு, உபசரைக்கான தேர்வு கேட்டுக்கொள்ளப்பட்டது.
நந்தன், அனுமதி கேட்டுக்கொண்டு தன் வேலையில் அமர்ந்தார். ஆசான், அவரின் மனைவியுடன் பேசிக்கொண்டிருந்தார்.
நான் சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டிருந்தேன். எனது பின்பக்கச் சுவரில் எம் எஸ் சுப்புலட்சுமி அம்மையாரின் படம் இருந்தது.
கொஞ்ச நேரத்திற்கு பின்னர், எதிரே வந்து அமர்ந்தார் நந்தன். அவருக்கு வலது புறத்தில் ஆசான். எனது பக்கத்தில் ஆசானின் தம்பி விஜய் ஆனந்த். ஆசானுக்குப் பின்னே ஒரு நாற்காலியில் நந்தனின் இணையர்.
மனைவியைப் பார்த்து நந்தன், பாடல் ஒன்று பாடச் சொல்லி கேட்டுக்கொண்டார்.
பொதுவாக இத்தகைய தருணங்களில் பாடுபவர் ஒரு கூச்சம், தயக்கம் காட்டுவதே நான் பார்த்த அனுபவம். விஜய் ஆனந்தும், நானும் அறிமுகமே இல்லாதவர்கள். அவர், உடனே கேட்டார்.
“குறை ஒன்றும் இல்லை பாடட்டா?.”
நந்தன் ‘பாடு..’ என்று தலையசைக்க, அவர் பாடத் தொடங்கினார்.
“குறை ஒன்றும் இல்லை..
மறைமூர்த்தி கண்ணா..”
ஆசான், கண்களை மூடிக்கொண்டார். நந்தனும் கண்களை மூடியிருந்தார். தலைத் தானாகவே தாள லயத்தில் ஆடத் தொடங்கியது.முகம், பல்வேறு பாவனைக் காட்டி ரசித்தது. நான், நந்தனையே பார்த்துக்கொண்டிருந்தேன். அந்தப் பாடலில் அவர் காட்டிய லயிப்பு, கண்ட தரிசனம் எனக்குப் புரியவில்லை!. அவர் மெய் மறந்து அந்தப் பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தார். சில சமயங்களின் மனைவியின் பக்கம் இமைகளைத் திறக்காமலேயே ‘மனைவியைப் பார்ப்பதுபோல்’ திரும்பினார். எனக்கு அந்த மானசீக தொடர்பைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. அந்தச் சில கணங்களுக்கு அவர் ‘அங்கே’ இல்லையென்றே எனக்குத் தோன்றியது.
இந்த ஞானமெல்லாம் எனக்கு இல்லையே என்று வருத்தமாகவும் இருந்தது.
பின்னர், என்னையும் ஆசானையும் தன் அறைக்குள் அழைத்தார்.
தரையில் அமர்ந்துதான் கணினியில் மணிக்கணக்கில் வேலைச் செய்கிறார் போல!. பக்கத்திலேயே கட்டிலும் இருந்தது. அப்போது, ஒரு நாடகக் காட்சிக்குத் தான் எழுத்துக்கொண்டிருக்கும் ஸ்கிரிட்டை காட்டி விளக்கினார்.
நான் சீரியல் பார்ப்பது கிடையாது. நான், கடைசியாகப் பார்த்த சீரியல் ‘சித்தி’!. அந்தச் சீரியலால் நேர்ந்த ‘addictiveness’-சைக் கண்டு பயந்துப் போனேன். இனி, எந்தச் சீரியலும் பார்க்கலாகாது என்று தீர்மானித்துக்கொண்டேன்.
நந்தன், தான் பணிபுரிந்த சில சீரியல்களின் பெயரைச் சொன்னதைக் கேட்டதும் விஜய் ஆனந்த் மிரண்டுப் போனார். அதில் ஒன்று, கோலங்கள்!. அது 3 வருடங்களுக்கு ஒளிபரப்பானதாக விஜய் சொன்னதை கேட்டு நான் ஆச்சரிப்பட்டுப் போனேன்.
யாரிந்த நந்தன் ஸ்ரீதரன்?.
அவரின் ஆளுமைத் தெரியாமலேயே இவ்வளவு சகஜமாகப் பழகியிருக்கிறேனே என்று புதிய தயக்கம் வந்து சேர்ந்தது. ஆனால், அவரோ அந்த பந்தா எதையும் காட்டாமல் அப்படி நெருக்கமாய்ப் பழகி, தன்னை இன்னும் ஒரு படி மேலே உயர்த்திக்கொண்டார்.
இனி எனக்கு ‘தேனி’ என்றால் நந்தன் ஸ்ரீதரன்தான்.
- உயர்ந்தவர்களுடன் நான்
- ஸ்கிரிப்ட் ஒன்றைப் படித்துகொண்டு நாங்கள்
- நந்தன் சொன்ன ஜோக்கின் பிரதிபலிப்பு
- எம் எஸ் சுப்புலட்சுமி அம்மையாரின் ஓவியம். நந்தனினந்நண்பர் தாயுமானவர் வரைந்தது.






Comments

Popular Posts