இடியட்
Memory Lane – 69
இடியட்
(புதிய மொந்தையில் பழைய கள்)
அப்போதெல்லாம் தொலைத் தொடர்பு வசதியின் அதிகபட்ச ஆடம்பரம், வீடுகளில் டெலிபோன்!. உள்ளூர், உலகச் செய்திகள்; தமிழ்ப் பாடல்களுக்கு ரேடியோ மலேசியா!. அந்த ஆடம்பரங்களும் அதிக வீடுகள் இருந்ததில்லை. ஆனால், பொது மக்களின் உபயோகத்திற்குப் பொது தொலைப் பேசி பூத்துகள் ஆங்காங்கே இருந்தன. ஆயினும் அவை, ‘பொது’ என்பதால் ‘எனக்கும்..’ சொந்தம் என்பதற்கு பதில் ‘யாருக்கோ’ சொந்தம் என்று புரிந்துகொள்ளப்பட்டிருந்தன. அதனால், அதன் பயன்பாடு எப்போதுமே சந்தேகத்திற்குரியதாகவே இருந்தது. ஆபத்து, அவசரத்திற்கு அவை உபயோகிக்கும்படியாக இருந்ததில்லை. இந்த நிலையில், ஒருவருக்கு உடனடியாக செய்தி சொல்வதென்பது அவ்வளவு எளிதான காரியமாய் இருக்கவில்லை.
இந்தப் போதாமை முழு வீச்சுடன் காதலில் உணரப்பட்டது.
ஒரே பணியிடத்தில், குடியிருப்புப் பகுதியில் இருந்தவர்கள் காதல் வயப்பட்டாலும் அவர்கள் சந்தித்துக்கொள்வது அவ்வளவு எளிதாக இருந்ததில்லை!. எல்லோரும் எல்லோராலும் கண்காணிக்கப்பட்டனர். சுற்றியிருந்தவர்களின் அந்தப் போக்கே காதலர்களுக்குக் களவோடு சேர்த்து, கண்களில் மண்ணைத் தூவவும் கற்றுக்கொடுத்தது. ஆளரமற்ற எந்த இடமும் சந்திப்பிற்குகந்த இடம்தான். வெள்ளிக்கிழமைகளில் கோவிலுக்குப் போவது சந்தேகத்தைத் தூண்டாதச் சந்தர்ப்பங்கள்!. இரவும்/இருட்டும் காதலர்களுக்கானது.
இவ்வளவு வசதிகளும் ஏதோ ஒரு வகையில் தகவலைப் பரிமாறிகொள்ள முடிந்தவர்களுக்கு மட்டுமே!..
ஆனால்.. ஆனால்.. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நேசத்தை பரஸ்பரம் காட்டியாகிவிட்டது. ஆனால், மீண்டும் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்போ நிச்சயமில்லை. காதல் வாட்டியது.
நாய் சாப் கின்னஸ் ஸ்டவுட் ஆதரவில் ரேடியோ மலேசியாவில் ஒலியேறிய நேயர் விருப்பம் நிகழ்ச்சியில் நாகரீகமாய் , ‘அன்பே, நீ அங்கே.. நான் இங்கே இருந்தால், இன்பம் காண்பதும் எங்கே..’ என்று பிரிவாற்றாமையைப் பகிர்ந்துக்கள்வதைத் தவிர பலருக்கு வேறு வழி இருந்ததில்லை!.
இந்தக் காலமா?. கைப்பேசியை எடுத்து, யூ டியூப்பில், ‘அருகம் புல்லாகிறேன் இப்போழுது… ஆடு வந்து மேய்வது எப்பொழுது?..’ என்று விரகதாபத்தை ‘ஆட்டிடம்’ சொல்லி, அரற்றுவதற்கு!.
‘அன்று மாலை, இந்த இடத்தில் சந்தித்துக்கொள்வோம்..’ என்ற செய்தியை மத்தியானத்திற்குள் காதலிக்கு சொல்லியாக வேண்டும். வழிதான் பிடிபடவில்லை!. அஞ்சல் வழி செய்தி சொல்லாமென்றால் அன்று மதியத்திற்குள்ளே செய்தி போய்ச் சேரும் சாத்தியமே இல்லை.
புராதானக் காலமாக இருந்தாலும் பரவாயில்லை!. தூது போகும் வல்லமை புறாக்களுக்கு இருந்தன. நான் வாழ்ந்ததோ ஒரு இரண்டும் கெட்டான் காலம். புறாக்களின் மாமிசமும் ருசி மிக்கதே என்று மனிதன் கண்டுகொண்டதால், புறக்கள் உயிரச்சம் கொண்டு தமது சேவையை நிறுத்திக்கொண்டிருந்தன. எனக்கு இருப்புக்கொள்ளவில்லை!.
பஸ் பிடித்து நேராக காதலியின் ஏரியாவிலிருந்த தபால் நிலையத்திற்குப் போனேன். அப்போது, தபால்துறை இன்னும் மலாய்க்காரர்கள் மயம் ஆக்கப்பட்டிருக்கவில்லை!. ஒர் ஊழியரை அணுகி, ‘எனது உயிர் போகும் அவசரத்தைச்’ சொன்னேன். அவர், அந்த எரியாவைக் ‘கவர்’ பண்ணும் இன்னொரு ஊழியரைக் கைக் காட்டினார். நான், அவரின் கையில் ‘கவர்கூடைக்’ கொடுத்து, அவர் ‘கவர்’ செய்யும் ஏரியாவிலிருக்கும் குறிப்பட்ட எண் கொண்ட வீட்டிலுள்ள குறிப்பட்ட நபரிடம் சேர்ப்பித்துவிடும்படி கெஞ்சினேன்.
தன்னுடைய பணியில் இதுவரை தான் செய்திராத ஒரு சாகச சேவையைச் செய்ய தனக்கொரு வாய்ப்பு வந்திருப்பதாக எண்ணிக்கொண்டாரோ என்னவோ!. உடனே ஒப்புக்கொண்டார்!.
அவரோ இளைஞர். சமாச்சாரமோ காதல் சம்பந்தப்பட்டது!.. ‘ஒரு பாம்பின் காலை இன்னொரு பாம்பு நன்றாகவே அறிந்து வைத்திருந்தது..’
நாங்கள் சந்தித்துக்கொண்டோம்!. எதிரெதிரே இருப்பவரின் கண்களுக்குள் எதை நாங்கள் அப்படி தேடிக்கொண்டோம்?. ஈரப்பசையில்லாததால் வார்த்தைகள் உலர்ந்து போய் வாயிற்குள்லேயே அடங்கிப் போயின.
தமிழ்தான், எங்களுக்கான தொடர்பு மொழி.
‘நா, உன்ன/உங்கள விரும்புறன்..’
- இதைச் சொல்லி காதலைப் பரிமாறிக்கொள்ள வேண்டும். ஆனால், அதைச் சொல்ல அவ்வளவு கஷ்டமாய் இருந்தது. சொல்லவே முடியவில்லை!.
‘ஐ லவ் யூ..’ என்று ஆங்கிலத்தில் சொல்லிவிடுவது இலகுவாய் இருக்கும்போல் தெரிந்தது. ஆனால், சொல்ல வந்த செய்தி காதலாய் இருந்ததால் அந்தத் தலைமுறைக்கு விருப்பத்தை வாய் வார்த்தையில் சொல்லக் கூச்சமாய் இருந்தது. அதனால், நாங்கள் சொல்லிக்கொள்ளவே இல்லை.
கல்யாணமும் முடிந்து, நான்கு பிள்ளைகளையும்; பேரப்பிள்ளைகளையும் பார்த்தாகிவிட்டது. எதுவுமே கூச்சமாய் இருக்கவில்லை!. 44 நீண்ட வருடங்கள்!.
வருடங்கள் எத்தனை ஆனால் என்ன!. சொல்லப்படாத வார்த்தைகள் சொல்லப்படாதவைதானே?. அவை, என்றாவது சொல்லப்பட வேண்டியவை அல்லவா!.
இன்று எனக்கு பிறந்த நாள்!..
சரி, இன்றாவது அந்த வார்த்தகளைச் சொல்லும் தைரியம் வருமா என்று கேட்டேன்.
முகத்திற்கு நேராகவெல்லாம் அதைச் சொல்ல முடியாதாம்..
சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லியிருந்தால் அந்த வார்த்தைகளில் நாணமும், தயக்கமும் மேலோங்கியிருக்கும்!..
ஆனால், இப்போது சொல்ல நேர்ந்ததால் அது இப்படி இருக்குமோ?.
விபரம் வீடியோவில்!.


Comments
Post a Comment