மகனின் பிறந்தநாள்
Memory Lane – 94
அது ஒரு தைப்புசத் திருநாள்!.
இன்றுபோல் அன்று, அந்நாள் ஒரு பொது விடுமுறை தினம் கிடையாது. வேண்டியவர்கள் தமது ஆண்டு விடுமுறைக்கு எழுதிப்போட்டு விடுமுறை எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.
1957 நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து நாட்டை ஆட்சி செய்த கூட்டணி அரசாங்கத்தில் அங்கம் வகித்த பிரதான கட்சிகளில் மலேசிய இந்தியர் காங்கிரஸ் ஒன்று. 60 ஆண்டுகள் ஆட்சியில் அங்கம் வகித்துக்கொண்டு இந்தியர்களின் நலன் பேணும் கட்சியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருந்தது. ஆனால், உலகப் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்றாகக் கருதப்படும் மலேசியத் தைப்பூசத் திருவிழாவிற்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட விடுமுறைகளில் ஒன்றாகப் பெற்றுத்தர நமது இனத் தலைவர்களுக்கு 51 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது என்பதில் இருக்கிறது இவர்கள் கட்சியின் லட்சணம், bargaining power.
வெளியில் இவர்கள் 1001 பிரகடணங்களை முழங்கி ஆர்ப்பரிக்கலாம். பெரியவன், கொடுக்கலாம் என்று நினைத்தால்தான் எதுவுமே நடக்கும். இவர்களால் எந்த அழுத்தத்தையும் கொடுக்க முடியாது. தனிப்பட்ட முறையில் சில பல சகாயங்களைப் பெற்றுக்கொண்டு தன்னிறைவு பெற்றுக்கொண்டிருக்க வேண்டியதுதான்.
ஆக, அன்று தைப்பூசத் திருநாளேயானாலும் எனக்கு மற்றுமொரு வேலை நாளே!. எனது மனைவி, மூன்றாவது குழந்தைக்கு கருவுற்று, நிறைமாதத்திலிருந்தார்.
அப்போது நான், செராஸ் ஈகான் எமாஸ் என்று பகுதியில் குடியிருந்தேன். வீட்டு பக்கத்திலேயே இருந்த வசதிக்காக ‘Pertama clinic’ என்ற தனியார் கிளீனிக்கில் பிரசவத்தை வைத்துக்கொள்ளப் பதிந்திருந்தேன். பிறப்பின் ஆச்சரியத்தை முன்கூட்டியே அறிந்துகொள்வதால் ஆவப்போவது ஒன்றுமில்லையென்பதால் அதைத் தெரிந்துகொள்ள விரும்பியதேயில்லை!. அதோடு ஏற்கனவே எனக்கு ஒரு மகனும், மகளுமிருந்தனர்.
பத்து வருடங்களுக்குப் பின்னர் பிறக்கப்போகும் குழந்தை. மனைவிக்கு வலி கண்டது. பதற்றத்துடன் கிளீனிக்கில் சேர்த்தேன். டாக்டர், ‘induce’சிற்குப் பரிந்துரைத்தார். நான், சம்மதித்தேன். பிரசவ அறையில் நானும் இருக்க, நான் பார்க்க மீண்டும் ஒரு மகன் பிறந்தான்.
அவனுக்குப் பெயர் சித்தார்த்தா!.
இன்று அவனுக்குப் பிறந்த நாள்!.
அவனுக்கு எங்களின் பிறந்தநாள் வாழ்த்துகள்.
முத்த மகன் அரவிந்த்துக்கு வயது 45!. இரண்டாவது மகள் திவ்யாவிற்கு 40!. சித்தார்த்தாவிற்கு 35!. முதல் மகன் பிறந்து 17 வருடங்களுக்குப் பிறகு பிறந்த கடைசி மகள் சாதனாவிற்கு வயது 28!.
எங்களுக்கு இவ்வளவு பெரிய பிள்ளைகள் இருக்கின்றனர் என்றால் நீங்கள் ஏன் நம்ப மறுக்குறீர்கள்?. 

Comments
Post a Comment