உழலுக்கு எதிராக மக்கள் பேரணி

 


பேசாப் பொருள் பேசினேன் – 24

25/01/2025
இன்று மதியம் 2.30 மணிக்கு உழலுக்கு, எதிராக மக்கள் பேரணி ஒன்று பல்கலைக்கழக மாணவர்களால் தலைநகர், கோலாலம்புரில் நடந்தேறியது. பேரணியில் காணப்பட்ட பதாகை ஒன்று, 20-ற்கும் குறையாதப் பல்கலைக்கழகங்களின் ஆதரவுடன் அப்பேரணி நடப்பதாக தகவல் சொன்னது. ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் ஆயிரங்களில் மாணவர்கள் கல்வி கற்கும் நிலையில் இந்தப் பேரணியில் பங்குகொண்ட மாணவர்கள், - என்னைப் போல் சமூக அக்கறையில் கலந்துகொண்ட பொதுமக்கள் மற்றும் பல்லூடக நண்பர்களையும் சேர்த்து வெறும் 200-க்கும் சற்று அதிகமான எண்ணிக்கையிலேயே இருந்தனர். இதில், சில எதிர்க்கட்சி இளைஞரணி உறுப்பினர்களும் அடக்கம் (அவர்களின் பங்களிப்பு சுயநல அரசியல்பாற் பட்டது. அதற்கு எந்த மதிப்பும் கிடையாது). இந்தப் போக்கு மாணவர்களின் அரசியல் ஆர்வமின்மைக் காட்டுவதாகப் பொருட்கொண்டால் நாடு மேலும் நாசமாகப் போவதை யாராலும் தடுக்க முடியாதே. உழலுக்கெதிரான இந்தக் குறைந்த ஆதரவு சமூக அக்கறையுள்ள யாரையும் கலங்கடிக்கும். அதிகப்பெரும்பான்மை மாணவர்களுக்கு ஊழல் ஏன் தமது அதிருப்தியை, ஆத்திரதைக் காட்டத்தக்க ஒரு சமூகச் சீர்கேடாகத் தோன்றவில்லை?. அரசியல்வாதிகளுக்குத் தேவை மாணவர்களின் இந்த ‘அரசியல் ஆர்வமின்மைதானே!’ மாணவர்களாக இருக்கும்போதே உழல் உறுத்தவில்லையென்றால், இவர்கள் அரசியல்வாதிகளானால் தாம் சார்ந்த எந்த மத நூலிலும் வெட்கமில்லாமல் சத்தியம் செய்து, தமது நேர்மையை நிரூபிக்கிறேன் பேர்வழி என்று சொல்லி மக்களை ஏமாற்றுவார்களே!.
சட்டத்தில் இருக்கும் சில பஹீனங்களைத் தமக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொண்டு,ஒரு அரசியல்வாதி, தன் மேல் 47 குற்றச்சாட்டுகள் மற்றும் தொண்டூழிய நிறுவனத்திற்கு சொந்தமான RM31 மில்லியன் பணமோசடி வழக்கிலிருந்து, DNAA (Discharge not amounting to acquittal) கீழ் விடுதலைச் செய்யப்பட்டுள்ளான். முன்னால் பிரதமரின் மனைவியின் மேல் 17 பணமோசடி வழக்குகள், மற்றும் RM7 மில்லியன் வருமான வரி ஏய்ப்பு வழக்கிலிருந்து ம் முழுமையாகம் விடுவிக்கப்பட்டுள்ளார். அதே போல், 46 ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ள ஒருவன் அந்தக் குற்றங்களிலிருந்து விடுவிக்கப்பட்டு 2025-லிருந்து சபா மாநிலத்தின் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளான். நஜீப் என்ற திருடனின் தண்டனையோ 6 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது மட்டுமல்லாமல் இப்போது வீட்டுக் காவலில் வைக்க எல்லாவிதமான அரசியல் நாடகங்களும் நடத்தப்படுகின்றன. பேரணி இந்த ஊழல்களுக்கு எதிராக குரல் எழுப்பி தமது தீவிர எதிர்ப்பை பதிவு செய்தது.
பேரணி, அரசாங்க ஊழலை வேரறுக்க மூன்று கோரிக்கைகளை முன் வைத்தனர். அவை,
1. பிரதமரின் அதிகாரத்திலிருந்து சட்டத்துறைத் தலைவரின் அலுவலகத்தை விடுவித்து பார்லிமெண்ட்டின் அதிகாரத்தின் கீழ் கொண்டுவருதல்.
2. ஊழல் தடுப்பு கமிஷனை அரசாங்க பிடியிலிருந்து விடுவித்து பார்லிமெண்டின் ஆணையின் கீழ் உட்படுத்துதல்.
3. அரசியல் நன்கொடைக்கு சட்டத்தை உருவாக்குதல்.
ஒவ்வொரு தேர்தலிலும் நான் வாக்களித்த கட்சிதான் இப்போது அட்சி செய்கிறது. ஊழல் எதிர்ப்பு பிரச்சாரம் செய்தே ஆட்சியைப் பிடித்தது. அறுதிப் பெரும்பான்மை இல்லாத காரணத்தால் ஆட்சியில் நீடிக்க வேண்டி பலவிதமான அரசியல் சமரசங்களுக்கு விட்டுக்கொடுக்க வேண்டியுள்ளது. அப்படியே இந்த ஆட்சி கவிழ்ந்தால் அடுத்து வரக் காத்திருக்கும் கட்சிகளோ, ஒன்று இனவாதக் கட்சி. மற்றொன்று சமய தீவிரவாதக் கட்சி. ஐயோ, சர்வ நாசமே அல்லவா நிச்சயம்!.
பேரணியில் மலாய், ஆங்கிலம், சீனம் என்று பல மொழிகளிலும் பாதகைகள் எழுதப்பட்டிருந்தன. ஆனால், தமிழில் ஒரு பதாகையில்லை!. நாமெல்லாம் உழல் செய்யவே செய்யாத உத்தமர்களோ?. நமக்கெல்லாம் உழல் எச்சரிக்கை தேவையில்லையோ?. நாம் கையூட்டு வாங்காத கொடுக்காத கொள்கைச் சீலர்கள்?. ஊழல் தடுப்பு ஆணையம் வீட்டை முற்றிகையிட்டபோது, வீட்டில் பதுக்கிவைத்த பன்னாட்டு பணத்தையும் எரித்து சாம்பலாக்க முயன்று பிடிப்பட்ட கோயில் அறங்காவலரெல்லாம் நமது இனமில்லையோ?. எதிலெல்லாமோ தமிழில்லை என்று கொடி தூக்குகிறோமே?. ஊழலுக்கு ஏன் தூக்கவில்லை?. ஒரு வேளை, சமூக அக்கறையைக் கோரும் பதாகைகள் நமக்கு தமிழில் எழுதத் தெரியாதோ?.
‘சரி, அது இருக்கட்டும். பாட்டில் ராஜா படம் வந்துருச்சாலா? எங்க வெளாடுது?..’
பின் குறிப்பு – நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவித்தக் குற்றச்சாட்டின் பெயரில் நான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டால் எனக்கு, மணி அடித்தால் சாப்பாடு நிச்சயம். ஆயினும், தீவிர சமூக ஆர்வலர்கள் என்ற முறையில் Dev Anand Veluchamy மற்றும் Vijaianand Subbaraj இருவரும் எனது விடுதலைக்காக சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கத் துணிவார்கள். ஆகவே, எனது நந்தன் புதிய ஸ்ரீதரன் போன்ற பிற இந்திய முகநூல் நண்பர்கள், அவர்களிருவரும் அப்படியொரு ‘drastic measure’ எடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டுகிறேன்.
போட்டோ விபரம்
- பேரணிப் படங்கள்
- பதாகை முழக்கங்கள்
- தமிழில் பதாகை இல்லாததால் சீனப் பதாகையை ஏந்திக்கொண்டு பதிவர்.
- மலேசிய சோசலீச கட்சியின் பொதுச் செயலாளருடன்
- Fahmi Reza என்ற புகழ் பெற்ற மலேசிய கேளிக்கைச் சித்திர கலைஞருடன்.
- சில காணோளிகள்






Comments

Popular Posts