ஒர் அப்பாவி

 



Memory Lane – 27
‘ஒரு அப்பாவி, ஏமாறுவதற்கு தயாராய் இருக்கும்போது எங்கிருந்தாவது உடனே ஒரு மோசடிக்காரன் தோன்றுவான்..’ என்ற பொன்மொழியை இதுவரை யாரும் சொல்லாதிருந்தால், அதைச் சொல்லிவைத்த முதல் ஆள் நான் என்ற பெருமை என்னை வந்து சேருவதாகுக!.
பத்து வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் இது.
எனக்கு, ஒரு குங்குமப் பொட்டு ஆசாமியை நான் வேலை செய்த நிறுவனத்தில் அவரின் லாரியும் வாடகைக்கு ஓடியதால் அறிய நேர்ந்தது. அவர், ஒரு ‘Jack of all trades’ வகைப் பேர்வழி!.. அவர் பார்க்காத ‘Petty trade’ இல்லை என்பதுபோல், Car wash’ செய்வது, வேன் ஓட்டுவது, வெளியூர் சுற்றுப் பயணிகளுக்கு கைட் வேலை செய்வது, சண்டித்தனம் செய்வது என்று ஏதேதோ செய்துக்கொண்டிருந்தார். அதோடு, சிக்கிக்கொண்ட இக்கட்டிலிருந்து தைரியமாக ஏதாவது பேசியோ அல்லது செய்தோ தப்பித்துக்கொள்ளும் திறமை இருந்தது. அவர் ஓர் இந்தியப் பிரஜை ஆனால், மலேசியாவில் ‘PR’ status-ல் இருந்தார்.
மதுரை அவரின் பூர்வீகம்!. திருச்சியிலிருந்து அவரின் உறவினர் ஒருவர் மலேசியாவைச் சுற்றிப் பார்க்க வந்திருந்தார். குங்குமப் பொட்டு அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தது. அந்த பேர்வழி திருச்சியில் வாகனங்களை வாடகைக்கு விட்டு பொருளீட்டும் தொழில் செய்துக்கொண்டிருந்தார்.
அன்று, என் நாக்கில் சனி!. திருச்சி பார்ட்டியிடம், அவருக்கு ஏதும் தேவையிருந்தால், எனது வாகனம் ஒன்றையும் அவரிடம் வாடகைக்கு விட்டு, சம்பாரிக்க முடியுமா என்று கேட்டு வைத்தேன். அவரும் தனக்கு ஒரு வாகனம் உடனே தேவைப்படுவதாக தகவல் சொன்னார். மேல் தொடர்ந்த பேச்சுவார்த்தைகளின் முடிவில் குங்குமப் பொட்டின் அக்காள் வீட்டு விஷேசத்தை ஒட்டி அவர் மதுரை பயணமாக அவருடன் நான் திருச்சிக்கு பயணமானேன்.
திருச்சியில், புதிய ‘TATA’ செடான் வாகனமொன்றை 5+ lakhs-சிற்கு வாங்கியதாக நினைவு! வாகனத்திற்கு சில ‘Accessories’ -சை சேர்க்கச் சொல்லி திருச்சி பார்ட்டி கேட்டுக்கொள்ள. நான், அப்படியே செய்துக் கொடுத்தேன். பின்னர், அவருக்குத் தெரிந்த ‘செல்வம்’ என்ற ஒரு நபரிடம் என்னை அழைத்துக்கொண்டுப் போய், அவரின் சாட்சியுடன் ‘Agreement’ ஒன்றைத் தயார் செய்து, மூவரும் கையெழுத்திட்டுக்கொண்டோம்.
மறுநாள், குங்குமப் பொட்டு வந்து ‘Agreement’-டைப் படித்துப் பார்த்துவிட்டு எல்லாம் ‘பக்காவா’ இருப்பதாக சர்ட்டிஃபிகட் கொடுத்தது.
நான், மலேசியாவிற்கு புறப்பட்டுப் போனேன்.
பூர்வாங்க பேச்சு வார்த்தைகளின் போது காணாத ஒரு முகத்தை உடனே திருச்சி பார்ட்டியிடம் காண நேர்ந்தது. மாதாந்திர வாடகையைப் பெறுவது பெரிய இழுபறியாக ஆனது. செய்யப்பட்ட கைப்பேசி அழைப்புகள் பதிலளிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டன. எப்போதாவது ஒரு முறை பதிலளிக்க நேர்ந்தால், வேலைப்பளு காரணமாகச் சொல்லப்பட்டது. நான், அறிமுகமற்ற அந்நியனேயானாலும் ஒருவரின் நல்லியல்புகளில் நம்பிக்கையை கொள்ளவே விரும்பினேன். ஆனால், அத்தகைய நம்பிக்கைக்கு திருச்சி பார்ட்டி ஆளில்லைபோல் தோன்றியது. அவரை அடுத்து அங்கு எனக்குத் அறிமுகம் இருந்த ஒரே நபர், செல்வம் சார்தான். நான் அவரின் உதவியை நாடினேன். அவர் ஒரு ஆபத்பாந்தவர். அவரே எனக்கொரு யோசனையைத் தந்தார். அவரிடம் திருச்சி பார்ட்டியின் வாகனங்களும் சில வாடகைக்கு ஓடின. அவரே எனது வாகனத்துக்கான வாடகையை திருச்சி பார்ட்டியிடமிருந்து பிடித்துக்கொண்டு எனது ஐசிஐசியை வங்கியில் வரவு வைத்துவிடுவதாக சொன்னார். நான், மனிதர்கள் மேல் வைக்கும் நம்பிக்கையைத் திருச்சி பார்ட்டி கேள்விக்குள்ளாக்கி என்னை ஏமாளியாக்கிக்கொண்டிருந்த போது, செல்வம் சார், ‘நான் இருக்கிறேன்..’ என்று மீண்டும் என்னை மனிதன்(ம்) மேல் நம்பிக்கை கொள்ள வைத்தார்.
இரண்டு வருடங்கள் கடந்தன.
ஒரு நாள், இந்திய எண்ணிலிருந்து ஒர் அழைப்பு!.. திரு. செல்வம்தான் அழைத்திருந்தார். அவர் சொன்ன செய்தி…
“நமஸ்காரம் (இந்த வார்த்தை அவரின் ‘manarism’. மற்றொன்று, ‘சொல்லுங்கோ..’) ராமு சார். கொஞ்ச நாளாவே உங்களோட கார், திருச்சீல உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில ‘abandoned’ ஆயி கெடக்குறதா என் டிரைவரு சொன்னாரு. நீங்க திருச்சி பார்ட்டிக்கிட்ட சொல்லி, காடி சாவிய ஏங்கிட்ட கொடுக்க சொல்லுங்க. நான், மொத காடிய கொண்டாந்து என்னோட செட்டுல வைக்கிறேன். பிறகு, என்ன செய்லாம்ன்னு யோசிப்போம்.”
நான், திருச்சி பார்ட்டிக்கு பல முறை போன் செய்தும் அழைப்பு எடுக்கப் படவேயில்லை. எப்படி இவரால் இந்த அளவிற்கு கொஞ்சமும் ஒரு ‘Basic courtesy’ கூட இல்லாமல் இருக்க முடிகிறது என்று ஆத்திரமாகவும், வருத்தமாகவும் இருந்தது. குங்குமப் பொட்டோ அவர் நெற்றியில் இல்லாத ராமத்தை என் நெற்றியில் போடப் பார்த்தார்.
வாகனத்தின் ‘Physical exterior and interior condition’-னைப் பார்த்துவிட்டு செல்வம் சார் சொன்னார்.
“பேசாம காடிய வித்துருங்க. காடிய கண்ட மாரி ஓட்டி, துவம்சம் பண்ணிடாங்க சார்!.”
நான், அதன் ரிப்பேர் பணியை அவரிடமே ஒப்படைத்து, ஒரு ‘Buyer’-யும் உடனே பார்க்கச் சொன்னேன். வாகனத்தைப் பழுது பார்க்க மட்டும் 50 ஆயிரம் ரூபாய்களுக்கு மேல் செலவு வந்தது. நான்கு டையர்களையுமே மாற்ற வேண்டி இருந்தது.
இறுதியில், 3 lakhs ரூபாய்களுக்கு அந்த வாகனம் விற்கப்பட்டதோடு எனது திருச்சி முதலீடு செவ்வனே ஒரு முடிவிற்கு வந்தது.
மிகவும் நஷ்டகரமான ஒரு முதலீடுதான். சில மனிதர்கள், மிகவும் நீசத்தனமாக நடந்து கொள்ளக்கூடியவர்கள்தாம்!. மனிதாபிமானத்தின் மேல் நமக்குள்ள நம்பிக்கையையே சிதைத்து விடக்கூடியவர்களும்கூட!. அதனால் என்ன?
‘Agreement’-டில் கையெழுத்திடும்போது சந்திக்க நேர்ந்த அரைமணி நேரத்திற்கும் குறைவான பழக்கமே. ஆயினும், தானாகவே என்னைத் தொடர்பு கொண்டு, ஒரு ‘Junk’-கைப் போல் கைவிடப்பட்டுக் கிடந்த வாகனத்தை கொண்டு வந்து, சீர் செய்து, ஒரு ‘Buyer’-யும் பார்த்து, எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் அதை விற்றும் கொடுத்த அந்த மனிதாபிமானம், எவ்வளவு உன்னதமானது. அந்த மாமனிதனை அறிமுகம் கொள்ள வாய்த்த அந்த சந்தர்ப்பத்திற்காக எந்த மோசடியையும் ஒரு ‘Blessing in disguise’ -ஆக ஏற்று, சந்தோஷமாகவே கடந்து போகலாம்.
கடந்த மாதத்தில் எனது மகள், தனது கணவனுடன் தமிழ் நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகாவிற்கு சுற்றும் பயணம் மேற்கொண்டபோது, நாணயமான சேவைக்கு உத்திரவாதம் என்று சொல்லி நான், ‘தாயார் கேப்ஸ்’சைதான் பரிந்துரை செய்தேன். மலேசியாவிலிருந்து வரும் பலரும் மிகவும் சலிப்புற்று, சுற்றுப்பயண அனுபவமே கெட்டுப்போய் கொந்தளித்துப் போவற்கு காரணம் நாணயமற்ற பல வாடகைக் கார் ஓட்டுனர்கள்/நிறுவனங்கள். பிரயாணத்தின் போது அவர்கள் செய்யும் ‘Hagling’ அப்பா, சொல்லி மாளாது!.
இப்போது, செல்வம் சாரின் குடும்பம் எனக்கு ஒரு ‘Extended family’. அவரின் தாயாரிடம் நான், எனது தாயைப் பார்க்கிறேன். அத்தாயின் தோற்றமும் அதற்கொரு காரணம். முதல் தடவையாக ஸ்ரீரங்கத்தில் இருக்கும் அவருடைய வீட்டிற்கு எனது மனைவியும் நானும் சென்ற போது செல்வம் சார், அவரின் மனைவி மற்றும் தாய் காட்டியது, மனிதத்தில் தோய்ந்த உபசரிப்பு!. அது ஒரு ஆசீர்வாதம்.
ஆக, இவர்களே எனக்கான மனிதர்கள்.
1. திருச்சியில் வாடகைக்கு விட்ட வாகனம்
2. My extended family
3. செல்வம் சாரின் நிறுவனம்
4. மானிடம் வெல்லும்






Comments

Popular Posts