என் அம்மா என்ற அபலை!.
Memory Lane – 19
ஒரு நினைவாஞ்சலி
என் அம்மா என்ற அபலை!.
(எனது சந்ததிக்கு நான் விட்டுப் போகும் ஓர் ஆவணம் என்பதால் நீளத்ததைக் கணக்கில் கொள்ளவில்லை)
ஆயிரத்து தொள்ளாயிரத்து இருபதுகளில் ஏதோ ஒரு வருஷம்!.. எனது தாய், எட்டு வயதுச் சிறுமியாய் தனது பன்னிரண்டு வயது அண்ணனுடன் ‘ரத்தாலு கங்காணி’ என்றழைக்கப்பட்ட ‘எல்லப்பு வெங்கட்ட ரத்ணம்’ என்பவரால் மலாயாவிற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். இந்த ‘ரத்தாலு கங்காணி’ என்பவர், என் தாய் மற்றும் அவரின் அண்ணனைப்போல் ‘வெங்குபாளம்’ என்ற ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதாலும்; உறவினர் என்பதாலும் ‘அவரின் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு’ துணிந்து கப்பலேறியிருந்தனர். பின்னாலில், இவரே என் அக்காளின் மாமனாராக ஆனார்.
இந்த ‘Venkupalem’ கிராமம்,‘Visakhapatanam’ மாவட்டம், ஆந்திரா மாகாணத்தில் உள்ளது.
எனது தாயின் பெற்றோர், என் தாய் சிறு பிள்ளையாய் இருந்தபோதே இறந்து போயிருந்ததால் மூத்த அண்ணன், அண்ணியின் பாராமரிப்பில் இவர்களிருவரும் விடப்பட்டனர். ஆனால், வீட்டில் பகிர்ந்துகொள்வதற்கு வறுமையைத் தவிர வேறொன்றுமே இல்லாததால் உடன் பிறந்த அண்ணனேயானாலும் மனைவியை மீறி அவரால் இவர்களை அரவணைத்துக்கொள்ள முடியவில்லை!. என் அம்மாவேனும் பரவாயில்லை. வீட்டிலேயே இருந்ததால், சட்டிப் பானைகளில் மீந்ததை அண்ணிக்குத் தெரியாமல் ‘திருட்டுத்தனமாக’ தின்று, அரை வயிற்றையேனும் நிரைத்துக்கொள்ள முடிந்திருக்கிறது. ஆனால், பாவம் அவளின் அண்ணன்! பல நாட்கள் சாப்பிட ஒன்னும் இல்லாமல் தண்ணீரையும் காற்றையும் கொண்டே வெறும் வயிற்றை நிரப்பிக்கொண்டு படுத்துக்கொள்ள வேண்டியிருந்திருக்கிறது என்று என் தாய் என்னிடம் சொல்லியிருக்கிறாள். அப்போது நான், ஆரம்ப பள்ளி சிறுவனாய் இருந்ததால், இந்தச் செய்தியின் கொடுமை அறியாது போனேன். இந்த நிலையில், பிறந்த கிராமத்தை விட்டு; பழகிய மக்களைப் பிரிந்து; கண்காணாத நாட்டிற்கு போவது வீட்டிலிருந்த கொடுமையைக் காட்டிலும் சமாளிக்கத் தக்கதாகவே இருக்கும் என்று அவர்கள் எண்ணியிருக்க வேண்டும் போலும்.
மலாயாவிற்கு வந்து, அவர்கள் குடியேறியது ரவாங் பட்டணத்திற்கு அருகிலிருந்த, ‘E Block’ எஸ்டேட்!.. இந்த எஸ்டேட்டை ‘Water fall’ எஸ்டேட் என்றும் அழைத்தனர். இந்த எஸ்டேட்டில் நிறைய தெலுங்கு வம்சாவளியினர் குடியேறியிருந்தனர். அந்தக் காலத்தில் இந்த எஸ்டேட்டில் தெலுங்கு பள்ளிக்கூடம் ஒன்றும் இருந்தது.
1942-ல் மலாயாவில் ஜப்பானிய ஆக்கிரமிப்பு ஆரம்பமாகிறது. சயாம் மரண ரயில் பாதைக்கு பலவந்த ஆட்கொணர்வு செய்யப்பட்டதில் என் அம்மாவின் அண்ணனும் ஆளாகிப் போனார். என் அம்மா தனி மனுசியாகிறார்!. காலமும் கருணையும் ஜப்பானியர்களின் கைகளில்!. தனது பதின்ம வயதில் இருக்கும் இளம் மங்கையான என் அம்மாவிற்கு அவர்களின் கருணைக் கிட்டும் உத்திரவாதம் இல்லாவிட்டாலும் காம இச்சைக்கு பலியாகும் சாத்தியம் நிச்சயமாக இருந்தது. காபந்து செய்ய அண்ணனும் இல்லாத நிராதரவு நிலை!. அவளுக்கு ஒரு பாதுகாப்பு அளித்து ஜப்பானிய அரக்கர்களிடமிருந்து அவளைக் காப்பாற்றும் வழியென்று ஊர் பெரியவர்கள், தனது 50-களில் இருந்த ஒருவருக்கு என் அம்மாவை மணமுடித்து வைக்கின்றனர். அவர் ஏற்கெனவே மணமாகி மனைவியை இழந்தவர்.
‘ஐயோ, அம்மா! இப்படியா தொடங்க வேண்டும் உனது மண வாழ்க்கை?.. அண்ணனும் அருகில்லாத நிலையில் உன் கையறு நிலையை நினைத்து எப்படியெல்லாம் கலங்கியிருப்பாய்? இப்போது நினைத்தாலும் நெஞ்சு பதறுகிறதே!. பதின்ம வயதில், தாம்பத்தியம் என்பதை என்னவாக புரிந்து வைத்திருந்தாய்? ‘கல்லானாலும் கணவன்.. புல்லானாலும் புருஷன்..’ என்றா? பொதுவாக இத்தகைய திருமணங்களில் ‘வன்கொடுமைக்கு’ வாய்பேசாமல் அடங்கிப் போவதே நல்ல மனைவிக்கு அழகு..’ என்று இருந்திருக்குமே!. உனது ‘கணவனின்’ முதல் தாரத்துப் பிள்ளைகளில் ஒருவரின் வயதுதானே உனக்கு இருந்திருக்கும். எப்படி இதையெல்லாம் சகித்துக்கொண்டாய்? அப்படி எல்லா சோகத்தையும் மனதிற்குள்ளேயே போட்டு சகித்துக்கொண்டதாலேயோ பின்னாலில் அவ்வளவு பண்பட்ட சாந்தசொரூபியாய் ஆகிப் போனாய்..’
சில மாதங்களிலேயே ஜப்பானியரிடமிருந்து எப்படியோ தப்பி வந்த அண்ணன், தங்கையின் நிலையைப் பார்த்து அதிர்ச்சிகுள்ளாகிறார். அது, பதிவு செய்யப்படாத ஒரு திருமணம் என்பதால் ஊர் பெரியவர்களுடன் சண்டைப்பிடித்து, தங்கையை தன் வீட்டிற்கு அழைத்து வந்துவிடுகிறார். சில காலங்களுக்குத் தன் பாதுகாப்பிலேயே வைத்துக்கொண்டு பின்னர், ஜொகூர் பக்கம் ஒருவருக்கு முறைப்படி திருமணம் செய்து வைக்கிறார். அவரும், ஏற்கனவே கல்யாணமாகி மனைவியை இழந்தவர். நோயாளி வேறு!.
அண்ணனுக்கும் ஒரு காலத்திற்கு மேல் தங்கையை உடன் வைத்துக்கொள்ள முடியாத சங்கடம்!. அவருக்கும் கல்யாணமாகிவிட்டதால் வந்த இக்கட்டாக இருக்கலாம்!. ஒரு கூட்டுக் குடும்பத்தில் அவருக்கு இரண்டாவது திருமணம். முதல் மனைவியின் வயதுக்கு வந்தப் பிள்ளைகளைப் பராமரிக்கும் பாரமும் என் அம்மாவை வந்து சேருகிறது. சில மாதங்களிலேயே அந்தக் கணவரும் நோவாய்ப்பட்டு மரணிக்க அம்மா விதவையாகிறார்.
அந்த இளம் வயதிலேயே விதவையாகிவிட்ட தங்கையை அந்தக் கூட்டுக் குடும்பத்தில் விட்டுவைக்க அண்ணனுக்கு மனம் ஒப்பவில்லை. தங்கையை மீண்டும் தன்னுடன் ‘E Block’ எஸ்டேட்டிற்கே அழைத்து வந்து விடுகிறார்.
அந்த இளம் வயதிலேயே இவ்வளவு இன்னல்களுக்கு ஆளான அம்மா, கடவுள் பக்தியில் நிம்மதியைக் காண முயல்கிறார். அவரைப் போன்றே விதவைகளாகிப் போன ‘சிவாலட்சுமி’ மற்றும் ‘பைடம்மா’ மூவரும் கோவில் பஜனைக் குழுவில் இணைந்து நெருங்கிய தோழிகளாகின்றனர். கோவிலில் பஜனைப் பாடல்கள் சொல்லிக் கொடுக்கும் ஆசானாக அப்பளநாயுடு என்பவர் இருக்கிறார். அவருக்கு ஏற்கெனவே திருமணமாகி, மனைவி இறந்து போயிருந்தாள். அவருக்கு இந்தியாவில் ஒரு மகளும், இங்கே அவருடன் ஒரு மகளும், ஒரு மகனும் இருந்தனர்.
ஊர்ப் பெரியவர்கள் மீண்டும் என் அம்மாவிற்கு ஒரு நல்லது செய்ய நினைக்கின்றனர். மனைவியை இழந்த அப்பளநாயுடுவையும், கணவனை இழந்த மல்லம்மாவையும் சேர்த்து வைக்கின்றனர்.
‘என் தாய் இரண்டாம் தாரமாய்தான் வாழ்க்கைப்படக் கடவது..’ என்ற சாபத்தை வாங்கி வந்தவர்போல. அதுவும் ‘கூடி வாழும்’ ஓர் ஏற்பாடாகவே இருக்கிறது. முறைப்படியான திருமண பதிவெல்லாம் அதற்கு இருக்கவில்லை. அந்த ‘கூடி வாழும்’ ஒப்பந்தத்திற்கு பிறந்தவர்கள்தாம், சூரியநாராயணன், மாணிக்கம்மாள், சுப்ரமணியம் மற்றும் ஸ்ரீராமுலு என்ற நாங்கள்!..
என் தாயின் இந்தக் ‘கூடி வாழ்தலை’ பற்றி எனது நினைவுகளில் எஞ்சிக் கிடக்கும் எண்ணங்களை மீட்டெடுக்க முயலும் போது, அவை இப்போதும் வலியைத் தருபவையாகவே இருக்கின்றன. என் அம்மாவின் தாம்பத்திய வாழ்க்கை அவ்வளவு சுமூகமானதாய் இருந்ததில்லை. என் அப்பா ஒரு மது பிரியர். சம்சு வரை அவரின் ருசி மலிந்து போயிருந்தது. ஒவ்வொரு சம்பள நாளையும் மிகுந்த அச்சத்துடனேயே அம்மாவும் நானும் எதிர்நோக்கி இருந்திருக்கிறோம். குடித்துவிட்டால், எதையாவது பேசி, அம்மாவைச் சண்டைக்கு இழுக்க வேண்டும்!. அவரின் சரீர தேவைகளைப் பூர்த்தி செய்வதில் என் தாயிடமிருந்து போதிய ஒத்துழைப்பு இல்லாததே அவரின் சண்டைக்கு காரணமென்று எனக்கு இப்போது தோன்றுகிறது. குடித்துவிட்டால் அவருக்கு மனைவி தேவைப்பட்டாள்!. அவள், கிடைக்காதபோது, ஆத்திரத்திற்குள்ளாகிப் போனார்.
நான் எழுதி, வல்லினத்தில் பிரசூரமான ‘நான்னா’ கதையில் என் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை அப்படியே காட்சி படுத்தியிருப்பேன். அந்தக் காட்சி!...
‘ஒரு முறை, நான்னா எத்தனை மணிக்கு வந்தாரோ?.. நான் மிகவும் பயந்தபடியே அம்மாவின் கையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டே தூங்கிப்போனேன். எத்தனை மணிக்கோ; எதனாலோ முழிப்பு வந்து, படுக்கையைத் தடவினேன்!. அம்மாவை காணோம்!.. பீதியுடன்,
“அம்மா… அம்மா… “ என்று அழுதுக்கொண்டே குசினிப் பக்கமாகப் போனேன்.
“பாபு.. பாபு…” என்று கம்மிய குரலில் அம்மா , பதறிக்கொண்டு வருவதற்குள் நான், குசினிக்குப் போயிருந்தேன். நான்னா, தரையில் குப்புறக் கிடந்தது நிலா வெளிச்சத்தில், நன்றாகவே தெரிந்தது. அவர் ‘அம்மணமாகவா படுத்திருந்தார்?... அம்மா, மார்போடு உயர்த்திக் கட்டியிருந்த கைலியோடு ஓடி வந்து, என் முகத்தை தன் மடியோடு சேர்த்து அணைத்துக் கொண்டு, நாங்கள் படுத்திருந்த ‘வாங்கிற்கு’ இழுத்துப்போனாள்.
“லஞ்சு கொடுக்கா..” என்று நான்னா என்னை திட்டுவது குசினியிலிருந்து கேட்டது.
நான் பயந்து நடுங்கியபடியே. அம்மாவின் கைகளை என் தலைக்கடியில் வைத்து இறுகப் பற்றி, படுத்துக்கொண்டேன்.’
குடும்பத்தில் நான் தான் கடைக்குட்டி என்பதால், எப்போதும் என் அம்மாவுடன் நானே இருந்தேன். இரண்டோ அல்லது மூன்றோ வயது வரையிலும்கூட தாய்ப்பால் குடித்ததாக எனக்கு நினைவு! குறிப்பாக இரவு நேரங்களில்!. தன் முலைக் காம்புகளில் வேப்பெண்ணையைத் தடவி வைத்து, எனது பழக்கத்தை முறியடிக்க அவர் மேற்கொண்ட பிரயத்தனங்கள் எல்லாம் இப்போதும் அப்படியே ஞாபகத்தில் இருக்கின்றன. என் அக்காள் திருமணமாகிப் போனபிறகு அம்மாவிற்கு ஒத்தாசையாக வீட்டு வேலைகளைச் செய்யும் பொறுப்பு என்னை வந்து சேர்ந்தது. சமைப்பதைத் தவிர மற்ற எல்லா வேலைகளையுமே நான் செய்திருக்கிறேன்.
என் அம்மா ஒரு ‘Gem of a woman’!.. அதற்கு இந்த சம்பவம் ஓர் உதாரணம். கல்யாண வயதில் எனது மூத்த அண்ணன். அவர், என் அம்மாவின் நிறத்தைக் கொண்டு சிவப்பாக இருப்பார். புத்ர பாக்கியம் இல்லாத என் அப்பாவின் வங்காளி நண்பர், ‘குரையா சிங்’ என்பவர் என் அண்ணனை தத்து எடுத்துக்கொள்ள மிகவும் பியத்தனப்பட்டிருக்கிறார். ‘மலடி’ என்ற அவப்பெயரை நீக்கிக்கொண்டு பிறந்த தலைச்சம் பிள்ளை அவர்!. என் தாய் பிடிவாதமாய் மறுத்து விட்டதால் அது நடக்காமல் போனது. என் அப்பாவின் இறந்து போன முதல் தாரத்து மகளின் மகளும் அப்போது கல்யாணவயதில் இருந்தார். மாற்றாந்தாய் என்பதால்தானே முதல் தாரத்து மகளின் மகளை தன் மகனுக்கு மணமுடித்து வைக்கவில்லை என்ற ஒரு சொல் வரக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் என் அப்பாவின் மறுப்பையும் பொருட்படுத்தாது, ‘அக்கா மகளையே’ என் அண்ணனுக்கு மணமுடித்து வைக்கிறார்.
‘அம்மா, உனக்குதான் எத்தனை இன்னல்கள்!. இதையெல்லாம் யாரிடமாவது சொல்லி சோகத்தை ஆற்றிக்கொள்ள வேண்டுமென்று எப்படி தவித்திருப்பாயோ?. ஆனால், விபரம் தெரிந்த வயதில் நாங்கள் நான்கு பிள்ளைகள் அருகில் இருந்தும் ஆறுதல் சொல்லத் தெரியாத அப்பாவிகளாக இருந்திருக்கிறோமே.. உன் வாழ்க்கையில் இப்படியெல்லாம்கூட நடந்திருக்கும் என்று ஒரு சந்தேகமாககூட எங்களுக்கு ஏதும் தோன்றவில்லையே!.
* * *
‘அம்மா, நீ கனவிலும் நினைத்துப் பார்த்திராத வாழ்க்கையை நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நீதான் அருகிலிருந்து அனைத்தையும் அனுபவிக்க வேண்டியவள். ஆனால், உனக்கல்ல எனக்குத்தான் அதற்கு கொடுத்து வைக்கவில்லை. அம்மா, நீ மட்டும் இன்னும் உயிரோடிருந்திருந்தால் எப்படியெல்லாம் உன்னை ஆராதித்திருப்பேன்!.. இந்த வாழ்வு; இந்த வசதி; இந்த ஆரோக்கியம் எல்லாமும் உன்னுடைய கொடையன்றோ.’.
‘அம்மா, இரண்டு சம்பவங்கள்!.. எனது பௌதீக அறிவுக்கு கொஞ்சமும் புரியவே இல்லை? அது, எப்படி சாத்தியம்?.. நீயா இறந்துவிட்டாய்?..’
சம்பவம் 1 : உனக்கு மிகவும் பிரியமான எனது மூத்த மகன், அரவிந்தனுக்கு முதலில் பார்த்தப் பெண்ணுடன் நிச்சயதார்த்தம் முடிந்திருந்தது. ஆனால், சில காரணங்களால் அந்த நிச்சயதார்த்தத்தை ரத்து செய்ய வேண்டி வந்தது. நிச்சயதார்த்தத்தன்று அவன் உன் படத்தின் முன் உன்னை வணங்கி நின்றபோது, நீ கண்ணீர் விட்டழுதது போல் அவன் உணர்ந்ததாக சொன்னானே!.. அதனால்தான் அந்த ஏற்பாடு ரத்தானதோ?.. அந்த வரன் அமைந்திருந்தால் இருவருக்குமே வாழ்க்கை நரமாகியிருக்கும் என்று நீதான் அவனைக் காப்பாற்றினாயா?..
சம்பவம் 2 : மகள் திவ்யா, கடந்த ஆகஸ்ட் மாதம் தனது கணவன், கிருஷ்ணா மற்றும் பிள்ளைகளுடன் தீவு ஒன்றுக்கு விடுமுறையைக் கழிக்க போயிருக்கிறாள். போவதற்கு முன்னர், உன் படத்திற்கு முன்னால் நின்று, ‘எந்தவிதமான அசம்பாவிதமும் நடக்காமல் நீங்கள்தான் மாம்மா பார்த்துக்கொள்ள வேண்டு.’ என்று வேண்டிக்கொண்டாள். மகள், தன் பிள்ளைகளுடன் கடற்கரையிலேயே நின்றுக்கொண்டு, கூப்பிடும் தூரத்திலேயே கணவன் நீந்திக் கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.. அப்போது, திடீரென்று அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டு கணவன் நீந்தமுடியாமல் தத்தளிப்பது தெரிந்தது. மகள் கூச்சல் போட்டு, உதவி கேட்டு கதறுகிறாள். ஹிரிதிக், பரிதாபமாய் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு, “நான்னா… நான்னா.. பதறி அழுகிறான்! கிருஷ்ணாவின் பக்கத்திலேயே நீந்திக்கொண்டிருந்த ஆடவர்கள் யவருமே கண்டுக்கொள்ளவே இல்லை. இப்போது, கிருஷ்ணா நீரினுள் மூழ்கிக்கொண்டிருக்கிறார். அப்போது, அருகில் நீந்திக்கொண்டிருந்த பெண்னொருத்தி, அவரை ‘Nick of Time’-மில் காப்பாற்றி கரைக்கு கொண்டுவந்து சேர்க்கிறார். அவ்வளவு ஆடவர்களுக்கு மத்தியில், யாருமே சட்டை செய்யாத நிலையில், ஒரு பெண், கிருஷ்ணாவின் உயிரைக் காப்பாற்றினாரே!.. யார் அந்தப் பெண்?.. ‘அம்மா, நீயா!?..’
‘இப்போதெல்லாம் நீ யாருடைய கனவிலும் வருவதில்லை!. ஆனால், அன்றிரவு மகள் திவ்யாவின் கனவில் வந்து, அறைக் கதவைத் தட்டுகிறாய். கிருஷ்ணா கதவைத் திறக்கிறார். நீ, புன்னகைத்தபடி திவ்யாவிடம் போய், அவளைக் கட்டியணைத்து நெற்றியில் முத்தமிட்டுவிட்டு மறைந்துப் போகிறாய்.
அம்மா, இதெல்லாம் என்ன? எனக்கு புரியவில்லை!.. கடவுளைக்கூட நம்பாதவன் நான்!. மறுநாள், திவ்யா கண்கள் கலங்க இந்தக் கனவைக் என்னிடம் சொன்னபோது, என்னால் அழாமல் கேட்க முடியவில்லையே!.. அம்மா, உன்னைத் தாயாக நானும், பாட்டியாக என் பிள்ளைகளும் பெற என்ன தவம் செய்தோமோ!..’
‘எனக்காக மடை திறந்த வெள்ளத்தைப்போல் உன் ‘உதிரத்தைச்’ சுரந்த தாயே, உன்னைக் கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக்கொள்வதற்குள் கண்ணை மூடி, தீர்க்கமுடியா கடனுக்குள் என்னை தள்ளிவிட்டாயே!.. போகட்டும்!, தாய் மகனுக்கிடையே அது என்ன கணக்கு? ஆயினும், கோரிக்கை ஒன்று இருக்கிறது எனக்கு.. ஒரு நாள் வரும். நானும் உன்னிடம் வந்து சேருவேன். மீண்டும் உன் உதிரத்தை எனக்குப் பாலாக்கித் தரவேண்டும். எத்தனை வயது, நமக்கு ஆனால்தான் என்ன?.. என்றென்றும் நான் உனக்கு மகன்!.. நீ எனக்கு தாய்!. அங்கு எப்படியோ தெரியாது?.. இங்கு, இதை நான் வெளியில் சொல்லலாகாது!.. சொன்னால், ‘Oedipus Complex’ என்று கொச்சைப் படுத்திவிடுவார்கள்.
அதுவரை, தீராத் தாகத்துடன் நான்.
படங்களின் விபரம்
1. என் பிள்ளைகள் வேண்டி நின்ற என் தாயின் படம்
2. என் அப்பா (என் கிரீடம் பரிபோன காரணம் படத்தில்)
3. ஆந்திராவில் என் அப்பாவின் வீடு
4. எனது அக்காள். மூத்த தாரத்து மகள்
5. கிராமத்தில் ராமாராவ் சதுக்கம்
6. ஊரில் எங்கள் நிலம்.
7. எனது தாய் பின்னாலில்
8. தாயுடன் நான்
9. அரவிந்தன், திவ்யா என் தாயுடன்
10. இன்று என் அண்ணன்களுடன் என் தாய்க்கு படையல் வைக்கையில்
11. நான்காவது தலைமுறையைக் கண்டுவிட்ட என் தாய் தந்தையரின் சந்ததி
12. ஆஸ்திரேலியாவில் கிளைவிட்டிருக்கும் எங்கள் சந்ததி.
13. Dhaatubajana-ல் என் தந்தை ஆற்றிய சேவை பற்றி ஆந்திரா சங்கத்தின் குறிப்பு. மேலே கணப்படுபவர்தான் என் பெற்றோரை மலாயாவிற்கு அழைத்து வந்தவர்.

Comments
Post a Comment