பதின்ம வயது பராக்கிரமம்

 








Memory Lane – 20

உதிரியாய் சில நினைவுகள் - 1
பதின்ம வயது பராக்கிரமம்
அப்போது, நாட்டிற்குள் தருவிக்கப்பட்ட புத்தகங்கள்; நாளிதழ்கள்; வார, மாத இதழ்கள் யாவும் அவ்வளவு கடுமையான தணிக்கைக்கு இலக்காகாத கால கட்டம். ரசனை என்பது சம்பந்தப்பட்டவரின் தனிப்பட்ட தேர்வுக்குரிய விஷயமாக இருந்தது. ஆட்சி செய்தோருக்கும்; மத போதகர்களுக்கும் தமது முதுகின் லட்சணம் தெரிந்திருந்த நேர்மை இருந்ததால் மக்களுக்கு நல்லொழுக்க போதனையெல்லாம் செய்யத் துணியவில்லை. முக்கியமாக மதத்திற்கு மதம் பிடிக்காமல் பார்த்துக் கொண்டனர். நம்பிக்கை என்பது அவரவர் வீட்டுக்குள்ளும்; பிரார்த்தனைக் கூடங்களுக்குள்ளேயுமே அடங்கிப் போயிருந்தது.
‘இனையம் என்ற ஒன்று இல்லாமலேயே உங்கள் இளமைப் பருவம் பாழாகப் போகக் கடவது!..’ என்ற பெரும் சாபத்திற்காளான பாபாத்மாக்கள் நாங்கள்!.
ஆயினும், காதலுக்கும்; காமத்திற்கும்; கள்ளக் காதலுக்கும்; ஒழுக்கத்திற்கப்பால் ‘One step beyond’-னும் போய் வருவதற்கான போதிய சந்தர்ப்பங்கள் எங்களுக்கும் இருக்கவே செய்தன.
‘Stare’, ‘Gaze’ என்ற பெயர்களில் ‘Soft Porn Megazines’-கள் எந்தவித தணிக்கைக்கும் உட்படுத்தப்படாமல் தாராளமாகக் கிடைத்தன. அதனால், நாங்களும் எங்களின் தீராத் தாகத்தை/எதிர்ப் பாலினரின் சரீர சங்கதிகளை ஓரளவிற்கேனும் தணித்து/தெரிந்து கொள்ளவே செய்தோம்.
ரவாங் டவுனில் ஆர். அப்பாராவ் என்ற ஒரு ‘நியூஸ் ஏஜண்ட்’ கடை இருந்தது. ஒரு காலத்து இளைஞர்களின் பாலியல் தேவைகளுக்கு வியாபாரம் என்ற பெயரில் ஒரு போக்கிடம் செய்துக்கொடுத்த மகான்!. (இப்போதும் இருக்கிறது. ஆனால், பழைய பொலிவும், கவர்ச்சியும் போய் முதுமைத் தட்டிக் கிடக்கிறது. நாட்டில் எல்லோருக்கும் ஆன்மீக நாட்டம் அதிகமாகிவிட்டதால் ஆர். அப்பாராவ் கடையும் தன்னை மாற்றி, ஸ்வர்க்கலோக சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டது) அங்கே, சகல விதமான அச்சு இதழ்களும் கிடைத்தன. தமிழில், ஆனந்த விகடன், குமுதம், பேசும் படம்… ஆங்கிலத்தில், மார்வெல் காமிக்ஸ், ‘Stare’, ‘Gaze’, ‘Shoot’,‘Sexology’ மற்றும் இன்னும் பிற… ‘ ‘Playboy & Penhouse’ எல்லாம் ‘Luxury Items’. ‘Port Swettenham’-ல் (இப்போது Port Klang) வேலை செய்தவர்களுக்கு வேண்டுமானால் எளிதில் கிடைக்க ஆசீர்வதிக்கப்பட்டிருந்தனர்.
‘Stare’ & ‘Gaze’ இரண்டும் ‘சொஃட் போர்ன்’ வகை குமுதம் சைஸ் மெகஸீன்கள். வெள்ளைக்கார மாடல்கள் தமது ‘தன பாக்கியத்தை’ பலவித கோணங்களில் கவர்ச்சியாய்க் காட்டிக்கொண்டிருப்பார்கள். இன்றைய கூகுள், ‘Stare’ -க்கு ‘முறைத்துப் பார்’ என்றும் ‘Gaze’-க்கு ‘உற்றுப் பார்’ என்றும் அர்த்தம் சொல்கிறது. ‘உற்றுப் பார்..’ ஓகெ!. ஆனால், ‘Stare’-க்கு பாவி! ‘முறைத்துப் பார்..’ என்றா அர்த்தம் தருவான். அப்படி முறைத்துப் பார்க்க வேண்டிய அவயங்களா அவை!. நாங்கள் அப்படியெல்லாம் பார்த்து அவற்றை அசிங்கப்படுத்தவில்லை. ஆனால், அவ்வளவு ஆர்வத்துடன் விழிப்பிதுங்கிப் போகும் அளவிற்கு பார்த்து, ‘ம்ஹும்..’ ஆதங்கப்பட்டுக்கொண்டது மட்டும் உண்மையோ உண்மை. இந்த லட்சணத்தில்‘Big is beautiful’ என்று ஞானோபதேசம் செய்த ‘சீனியர்கள் வேறு!. அதற்கேற்றார் போல் மாடல்கள் யாருக்குமே அதிசயமாய் ஸ்தனங்கள் அடக்கமாய் இருக்கவே இல்லை. ஆயினும், ‘சிறியதே அழகு!..’ என்ற அனுபவம் சொல்லும் பாடம், அனைவருக்கும் கிட்டுவது துர்லபமே!.
எங்கள் எஸ்டேட்டிற்கு போகும் பஸ் வர இன்னும் நேரம் இருந்தது. நான், ஆர். அப்பாராவ் கடையில் ‘ரேக்கில்’ தொங்கிய ‘Stare’ & ‘Gaze’ -சை ‘முறைத்துப்’ பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் ஒன்றை வாங்கிக்கொள்ளாமென்றால், கடைக்காரர் எங்களின் உறவினராக இருந்தார். அப்படியே வாங்கியிருந்தால் L C E பரீட்சைக்குப் பின்னரே எனக்கு தெரிய வந்த விஷயம் அப்போதே அவருக்குத் தெரிந்துப் போயிருக்கும். ‘இவன் உருப்பட்ட மாரிதான்!..’
‘மெகஸீங்களின்’ அட்டையில் இருந்த ‘Big is beautiful’ ஆண்டிகள், ‘ஆங்..இப்பிடி என்னியே பார்த்துக்கிட்டிருந்தா எப்பிடியாம்?.. உள்ளுக்கு இன்னும் நெறைய இருக்கே..’ என்று சிணுங்குவதுபோல் தோன்றியது. எனக்கோ இளகிய மனசு!. ‘ரேக்’ வாசப்படியில் இருந்தது. கடைக்காரரோ கடையினுள் இருந்தார். ‘ரேக்’கின் இந்தப் பக்கம் நான் மட்டுமே இருந்தேன். அந்தப் பக்கம் யாரும் இருப்பதாகத் தோன்றவில்லை. அட்டைப்பட ‘ஆண்டிகள்’ எனது பொறுமையைச் சோதித்துக் கொண்டிருந்தனர். அது, எங்களுக்கு தினமும் தேவைப்படும் ‘பொக்கிஷம் வேறு!.’ நான் சரணாகதி அடைந்து கொண்டிருந்தேன். ‘துணிந்தவனுக்கு துக்கம் இல்லை!..’
நான், உடனே ஒரு புத்தகத்தை உருவி, ஏற்கெனவே தயாராக புத்தான்களைத் திறந்து வைத்திருந்த என் சட்டைக்குள் திணித்து, ‘பேக்’கால் அணைத்து மறைத்துக்கொண்டேன். ‘பள்ளியறை’ சமாச்சாரம் சம்பந்தப்பட்ட புத்தகம். ‘பள்ளிச் சீருடை’க்குள்ளேதானே பதுக்கி வைக்க வேண்டும்!.. புத்தகத்தை உருவியதால் எற்பட்ட ‘சந்தின்’ அந்தப் பக்கம், ‘லட்சணா’ என்ற பெயரைக்கொண்ட என் தாய்வழி உறவினர் நின்றுக்கொண்டிருந்தார். ‘அவர் என் பராக்கிரமத்தைப் பார்த்திருப்பாரோ?..’ நான் கலவரத்திற்குள்ளானேன். ஆனால், அவர் பார்த்தாகவே காட்டிக்கொள்ளவில்லை. பார்த்திருக்கக்கூடும் என்றே எனக்குப் பட்டது. பார்த்தும் பார்க்காததுபோல் இருந்தால் அவர், Growing process அறிந்த ஒரு ‘Gentleman!.’ அந்தப் பட்டப்பகல் கொள்ளையை பார்க்காமலேயே இருந்திருந்தால், பாவம், அவர் ஒரு அப்பாவி!.. (என் தாய், முதலாவதாக மணமுடித்து வைக்கப்பட்ட 50 வயது முதியவரின் மகன் இவர்.)
எனது இந்தப் பராக்கிரம செயலால், எனது பள்ளி தோழர்களான தம்பியா, சந்திரன், த. சுப்பிரமணியம், சின்னப்பன் எல்லோரும் ஜென்ம சாபல்யம் அடைந்தனர்.
* * *
அரசியலாகிப் போன ‘அண்ணா!.’
உதிரியாய் சில நினைவுகள் - 2
1966 -ம் ஆண்டு எம் ஜி ஆர் நடித்த ‘பெற்றால்தான் பிள்ளையா’ என்ற படம் வெளிவந்திருந்தது. எம் ஜி ஆருக்கு சண்டைப் படங்களைத் தவிர சமூக படங்களில் நடிக்க முடியாது; நடிக்கவும் வராது என்ற ஒரு விமர்சனம் இருந்த போது அதைப் பொய்யாக்கும் விதமாக வெளிவந்து, அமோக வெற்றியைக் கண்ட படம் அது.
அதில், தொப்பி ஒன்றை அணிந்துக்கொண்டு வெள்ளந்தியான தோற்றத்துடன் அவர் காட்டிய நடிப்பு மிகவும் ரசிக்கும் படியாக இருக்கும்!.
எம் ஜி ஆர் என்றால் அவ்வளவு ஆர்வம் காட்டாதவர்கள்கூட மிகவும் ரசித்த படமாக அதைக் கூறலாம். அதில், 6 அருமையான பாடல்கள் இடம் பெற்றன. அவை,
1. சக்கரகட்டி ராசாத்தி..
2. செல்லக்கிளியே மெல்லப் பேசு..T M S
3. செல்லக்கிளியே மெல்லப் பேசு..P. Susheela
4. கண்ணன் பிறந்தான்..
5. நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி… P. Susheela & Sirkazhi
6. நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி… T M S
பாடல்கள் வெளிவந்த புதிதில் ‘நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி..’ பாடலின் இறுதி நான்கு வரிகள் இப்படி ஒலித்தன. ரேடியோ மலேசியா என்ற மலேசிய அரசங்க வானொலியிலும் இப்படியே ஒலியாயின. ‘அண்ணா’வின் பெயரைக் கேட்கும்போது உடல் அப்படி சிலிர்த்துப் போனது.
‘அறிவுக்கு இணங்கு வள்ளுவரைப் போல்…
அன்புக்கு வணங்கு வள்ளலாரைப் போல்…
கவிதைகள் வழங்கு பாரதியைப் போல்…
மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்..’
ஆனால், கொஞ்ச நாட்களிலேயே யாருக்கோ ‘அண்ணா..’ என்ற பெயரே இங்கு அலர்ஜிக்குரியதாய் ஆனது. உடனே, அப்பாடல் வேறு வடிவம் கொண்டு இப்படி ஒலிக்க ஆரம்பித்தது. அது,
‘அறிவுக்கு இணங்கு வள்ளுவரைப் போல்…
அன்புக்கு வணங்கு வள்ளலாரைப் போல்…
கவிதைகள் வழங்கு பாரதியைப் போல்…
மேடையில் முழங்கு திரு. வி. க. போல்..
அந்த பதின்ம வயதில் எனக்கெல்லாம் தி மு க பிடித்தற்கு காரணம் எம் ஜி ஆர். தான். பாடலில் ‘அண்ணா’ பெயரைக் கேட்ட போது அடைந்த சிலிர்ப்பு பின்னர் திரு. வி க பெயரைக் கேட்டபோது, இல்லாமலேயே போனது.
லின்ங்கின் முதல் பாடல் - அண்ணா
இரண்டாவது - திரு. வி. க.
- பாபத்தைப் பங்கிட்டுக்கொண்ட பங்காளிகள்
தம்பியா
சின்னப்பனுடன் நான்.
இருவருமே இப்போது உயிருடன் இல்லை. 😥😥😥








Comments

Popular Posts