மகளுக்குப் பிறந்தநாள்
Memory Lane – 96
முதல் மகன் பிறந்து 17 ஆண்டுகளும் மூன்றாவதாக ஒரு மகன் பிறந்து 7 வருடங்கள் ஆகியிருந்தன. இருவருக்கிடையே ஒரு மகள் வேறு பிறந்து 10 வருட இடைவெளியில் இருந்தாள். இது, சுற்றத்தாரின் புருவங்களைச் சுருங்கவைத்தது. அதன் அர்த்தம், ‘தோளுக்கு ஒசந்த புள்ள இருக்க, இதுன்னா கொஞ்சம்கூட வெக்கம் இல்லாம?..’ முதலாவது வரை பாக்கியமாகப் பார்க்கப்பட்ட பிரசவம், 17 வருட இடைவெளியால் அசிங்கமாகிப் போனது.
மனைவி, 4-வது குழந்தைக்கு கருவுற்றிருந்தார். 40 வயதிற்குமேல் பெண் கருவுறுவது அவ்வளவு ஆரோக்கியமானது அல்ல என்று மருத்துவரீதியாகவே ஆலோசனைக் கூறப்பட்டிருந்த அனுபவம் இருந்தது. குழந்தை, குறையுடன் பிறப்பதற்கான எல்லா சத்தியங்களும் அதிகமிருக்கும் ஆபத்து வேறு.
ஆலோசனைச் சொன்னவர்களெல்லாம் தவறாமல் உபயோகித்த வார்த்தை, ஆட்டீசம்!. கேட்கவே கலக்கமூட்டும் வார்த்தை. ஆயினும், அப்போது அந்தக் குறைப்பாடு குழந்தைகளை நாங்கள் அவ்வளவு பரவலாகப் பார்த்திருக்கவில்லை!. பாரத்தைக் கடவுள்மேல் போடலாமென்றால் அவரை வேறு நான் நிராகரித்திருந்ததால், நான் நிச்சயமாக பலி வாங்கப்படும் சாத்தியமே அதிகமிருந்தது. உடனே ஒரு முடிவெடுத்தாக வேண்டிய நிர்பந்தத்தில் நாங்கள்!. பிறப்பது பெண் பிள்ளையாக இருந்தால், இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள் என்று அவர்களுக்குள் நட்புடன் இருப்பார்கள் என்று மனைவி அபிப்பிராயப்பட்டார். நான்காவது குழந்தைக்கு தயாரானோம்.
நாங்கள் எதிப்பார்த்தபடி பெண் பிள்ளைப் பிறந்தது. எனது மற்ற பிள்ளைகளுக்குச் செய்தது போலவே முன்கூட்டியே இரண்டு பெயர்களைத் தேர்வு செய்து வைத்திருந்தேன். ஒன்று, சாஹித்யா!. மற்றொன்று, சாதனா!. முதலாவதைத் தேர்வு செய்து, பிறந்த பத்திரத்தில் பதிவு செய்ய, மருத்துவமனைக்குச் சென்றேன். உள்ளே நுழைவதற்குமுன், தேர்வு செய்திருந்த பெயரில் ஒரு தயக்கம் எழுந்தது. ‘சாஹித்யா’வை ரத்து செய்துவிட்டு, ‘சாதனா’வை தேர்வுச் செய்து பதிந்தேன்.
எனது பிள்ளைகளில் ஆரம்ப கல்வியைத் தமிழில் படித்த ஒரே பிள்ளை. ஆரம்ப கல்வியை காஜாங் தமிழ்ப் பள்ளியிலும், இடைநிலைக் கல்வியை தானாராத்தா தனியார்ப் பள்ளியிலும், மேற் கல்வியை இண்ட்டீ காலேஜிலும் படித்தப் பின்னர், யுனிவர்சிட்டி அஃப் கான்பராவில் தனது பட்டப் படிப்பை முடித்தாள்.
இப்போது, ஆஸ்திரேலியாவின் அரசாங்க இலாகா ஒன்றில் EL2 பதவியில் பணியாற்றுகிறாள்.
29 மார்ச் 2025!.
இன்று அவளுக்கு பிறந்த நாள்.
அதையொட்டி குடும்பத்துடன் ஒரு கொண்டாட்டம்!.
நாளை, அவள் மீண்டும் ஆஸ்திரேலியா பயணமாகிறாள். தனியாகவே வந்தவள் திரும்பி போகும்போது மட்டும் தாயையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டுமாம்!. தாயின் கையில் ஒரு வருட விசா தயாராக இருக்கிறது.
‘உங்களின் பிள்ளைகள் நாங்கள், தோளுக்கு மேல் வளர்ந்துவிட்டோம். நீங்கள், பேரப்பிள்ளைகளையும் எடுத்துவிட்டீர்கள். உங்களுக்குத் துணையாக நாங்கள் இருக்கிறோம்.’
‘அம்மா, இனி அப்பாவிற்கு எதற்கு உங்களின் துணை?.’
45 வருட அன்னியோன்னியத்தின் பிரிவாற்றாமையை அவ்வளவு எளிதில் இந்தத் தலைமுறையால் புரிந்து கொள்ள முடியுமா என்ன?.
- நேற்று நீ சின்ன பப்பா
- முதல் தடைவையாக ஆஸ்திரேலியாவிற்கு பயணமாகும்போது.
- ஆஸ்திரேலிய குடியுரிமை கிடைத்த போது
- இன்று பிறந்த நாள்
- குடும்பத்துடன்
- தந்தையுடன் ஒரு கிளிக்
- பிறந்த நாளைக் கொண்டாடிய ரெஸ்டாரண்ட்
- பேரனுடன்
- 45 வருட அன்னியோன்னியம்
- நாளையிலிருந்து நான் பழகிக்கொள்ள வேண்டிய தனிமை.

Comments
Post a Comment