விமலாதித்த மாமல்லனுடம் ஒரு மாலைப் பொழுது!.
Memory Lane – 97
புதன்கிழமை மதியம்போல் நண்பர் தயாஜியிடமிருந்து ஓர் அழைப்பு. தான் அழைத்தக் காரணத்தை என்னால் கணிக்க முடியுமா என்று கேட்டார். நான் ஆர்டர் செய்து நீண்ட நாட்களாகிவிட்ட புத்தகங்கள் வந்திருக்க வேண்டுமென்றேன். இல்லையென்றவர், விமலாதித்த மாமல்லன் தற்போது கோலாலம்பூரில் இருக்கும் விஷயத்தைச் சொன்னார். மாலையில் அவரைச் சந்திக்க இயலுமா என்று கேட்டதற்கு அவர் மறுத்துவிட்டச் செய்தியையும் கூடவே தெரிவித்தார்.
நண்பரோ, மாமல்லனின் நூல்களையும் இங்கே விற்பனைச் செய்திருப்பவர். மனம் சற்றுத் தளர்ந்துத்தான் போனார்.
நான் ஏற்கெனவே அவருடைய ‘புனைவு என்னும் புதிர்’, ‘புனைவு என்னும் புதிர்’ (உலகச் சிறுகதைகள்), ‘புனைவு என்னும் புதிர் (ஷோபாசக்தியின் 12 கதைகள்) போன்ற முக்கியமான நூல்களைப் பெறும் பொருட்டு கைபேசியிலும், வாட்ஸ் ஆப் வழியாகவும் அவருடன் பேசிய அனுபவம் எனக்கிருந்தது.
அப்புத்தகங்களில் தான் கவனத்தில் எடுத்துக்கொண்டக் கதைகளில் புதைந்திருக்கும் நுட்பம், செறிவு, எழுதிய வாக்கியம் சொல்லும் எழுதப்படாதச் செய்தி என்று அவர் விளக்கிச் சொல்லியிருந்த விவரணையைப் படித்து நான் மிகவும் சிலாகித்தேன்.
வண்ணநிலவனின் ‘மிருகம்’ பற்றி அவர் எழுதியிருந்ததைப் படித்துவிட்டு கதையை மீண்டும் படித்தபோது அந்த வாசிப்பு திகைப்பூட்டியது. அதே போல், ஜி. நாகராஜன், கு. ப. ரா,, கு. அழகிரிசாமி, அசோகமித்திரன், சு. ரா., தி. ஜா., புதுமைப் பித்தன், ஷோபாசக்தி, ரேமண்ட் கார்வர், போர்ஹெஸ், பீட்டர் ஹாக்ஸ், கார்சியா மார்க்கேஸ், நபகோவ் மற்றும் பலரின் கதைகளைக் குறித்து அவர் எடுத்துச் சொன்ன நுட்பங்களைப் படித்தறிந்திராவிட்டால் அந்தக் கதைகளின் அழகியல், ஆழம் புரிந்துக்கொள்ளப்படாமலேயே போயிருக்கும்.
வெறும் வாசிப்பால் அந்தப் புரிதல் சாத்தியப்படுமா, நிச்சயமாக இல்லை!. ஆனால், மாமல்லனின் விளக்கம் தரும் பயிற்சி, சிறுகதைத் துறையைத் தீவிரமாக பயில விரும்பும் நண்பர்களுக்கு பேருதவியாக இருக்கும். ‘மினிமலிச’ பாணியில் கதைகள் எழுத்தும் ரேமண்ட் கார்வரின் இரண்டு கதைகளைப் பற்றி அவர் எழுதிய கட்டுரைகள் கார்வரின் கதைகளைப் புரிந்துகொள்ள உதவும் கையேடுகள்.
சில மாதங்களுக்கு முன்னர் நண்பர் தயாஜி, கூகுள் வழி நடத்திவந்த ‘சிறகுகளின் கதை நேரம்’ நிகழ்ச்சியில் கூட நான் அடிக்கடி மாமல்லனின் ‘புனைவு எனும் புதிர்’ தொகுப்புகளை மேற்கோள் காட்டி பேசியிருக்கிறேன். ஆனால், எழுத வருபவர்களுக்கு எழுதுவதில் இருந்த ஆர்வம் தீவிர வாசிப்பில் இருக்கவில்லை!. பலருக்கும் மாமல்லனும் தெரிந்திருக்கவில்லை; இந்தத் தொகுப்புகளும் தெரிந்திருக்கவில்லை.
தயாஜி மற்றும் எனக்கிருந்த தீவிர வாசிப்பில் தெரிந்துகொண்ட எழுத்தாளர், மாமல்லன். இப்போது கோலாலம்பூரில் இருக்கிறார். அவரை ச் சந்திக்க ஆவலாய் இருந்தோம். ஆனால் அவரோ, தனக்கிருந்த பிற அலுவல்களால் சந்திப்பைத் தவிர்த்தார்.
எனது பங்கிற்கு நான் ஒரு முறை முயன்றுப் பார்ப்பதென்று வாட்ஸ் ஆப்பில் தகவல் அனுப்பினேன். மாலையில் என்னை அழைத்தார். தொலைப்பேசியில் பேசிக்கொள்வதையும் தாண்டி நேரில் பேசிக்கொள்ள ஏதுமில்லையென்றார்.
நான், அருகிக்கொண்டுவரும் ‘human touch’ பற்றி சொன்னேன். வணக்கத்தை, வாழ்த்துகளை, நல விசாரிப்புகளை வாட்ஸ் ஆப்பில் சொல்லிக்கொள்ளும் பழக்கம் இப்போது, இறப்புகளின் துக்கத்தையும் இமோஜிகளின் வழி அனுஷ்டிக்கும் அவலத்தில் வந்து நிற்கிறது என்று சொன்னேன். அவர் சிரித்தார். ‘காலம் இருக்கிறது பார்த்துக்கொள்ளலாம்..’ என்றார். நான், எனது வயதைச் சொல்லி, எனக்கு அதிகமில்லையென்றேன். மீண்டும் சிரித்தார்.
வியாளக்கிழமை காலை, என்னைத் தொடர்பு கொண்டு, மாலை 6.00 மணிக்கு சந்திக்க ஒப்புக்கொண்டார். நான், மேலும் கொஞ்சம் அறிமுகத்திற்காக எனது சிறுகதைகளான ‘நான் ஒரு கொலை செய்தேன்’ மற்றும் ‘எரிதழல்’ இரண்டையும் அவருக்கு அனுப்பி வைத்தேன். அவர், ‘தான் ஏதும் படிப்பதில்லை..’ என்று அனுப்பிவைத்தார். இது, நான் எதிர்ப்பார்த்ததுதான் என்பதால் சங்கடப்படவில்லை. இந்தியாவில் ஏற்கெனவே எனக்கு இந்த அனுபவம் உண்டு. நாம் கேட்பதற்கு முன்பே அதைச் சொல்லி விடுவார்கள்.
மலேசியாவில் இதற்கு முன்னர், நானே வலிந்து சென்று சந்தித்த ஒரே தமிழக எழுத்தாளர், நா. பா. ஒரு அரை நாள் முழுக்க, நாங்கள் இருவர் மட்டுமே மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டே உரையாடிக்கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. எனது வீட்டிற்கும் வந்தார். எனது புத்தக சேகரிப்பைப் பார்வையிட்டார். ஜெயகாந்தனின் ஆக்கிரமிப்பைப் பார்த்திருப்பார். இடையில், பொன் விலங்கும், குறிஞ்சி மலரும் இருந்தன. அவருடைய ‘விமர்சனக் கலை’ என்ற புத்தகத்தை கையொப்பமிட்டு எனக்குப் பரிசளித்தார்.
எனது ஆசான் ஜெயகாந்தன் வந்தபோது, நான் இரண்டு வேலைகள் செய்துக்கொண்டிருந்ததால், அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டாமலேயே போனது.
சரியாக 6.00 மணிக்கு மாமல்லனை ஏற்றிக்கொண்டு பங்சாரிலிருக்கும் ‘Idly only café’ போனேன். எவ்வளவு கேட்டுக்கொண்டும் காப்பிக்கு மட்டுமே ஆர்டர் செய்தார்.
ஹாரன் ஒலியில்லாத பயண அனுபவத்தைச் சிலாகித்தார். எங்கும் காணும் பசுமை அவரைக் கவர்ந்திருந்தது. ‘மெட்ராஸ் பேப்பரில்’ எழுதும் தொடரைப் பற்றி கொஞ்சம் பேசினார். தனது பள்ளித் தோழர் ஒருவரின் சினிமா அனுபவங்களைப் பற்றிப் பேச நிறைய விஷயங்கள் இருந்தன.
சில எழுத்தாளர்களைப் பற்றிய அவரின் மதிப்பீடு ஆச்சரியமும், அதிர்ச்சியும் தரத் தக்கவை. இதே மாதிரியானதொரு மதிப்பீட்டை தமிழகத்தில் இன்னொரு எழுத்தாளர் வேறு சில எழுத்தாளர்களைப் பற்றிக் கூறியதும் எனக்கு நினைவிற்கு வந்தது. அக்கரையில் இருக்கும் எங்களுக்குதான் எல்லா வழிபாடும்!.
வேலை முடிந்த மனைவியை வீட்டில் போய் விட்டு விட்டு வருவதற்கு நேரம் ஆகிவிடுமென்பதால் தயாஜி மனைவியுடனேயெ மாமல்லனைப் பார்க்க ஆர்வத்துடன் வந்திருந்தார். தான் வாங்கி வைத்திருந்த மாமல்லனின் நூல்கள் சிலவற்றை அவரிடம் கொடுத்துக் கையொப்பத்தைப் பெற்றுக்கொண்டார். பின்னர், தனது கவிதைப் புத்தகமொன்றை அவரிடம் கொடுத்தார். அவர், ‘தான் புத்தகங்கள் படிப்பதில்லை..’ என்று அதை மறுத்துவிட்டார். உடனே தயாஜி, தனது அன்பளிப்பாக வைத்துக்கொள்ளுங்கள் என்று சொன்ன போது, மாமல்லன் சொன்ன பதில், இன்னும் புத்தகம் போடாத எனக்கு நல்ல அறிவுரையாகப் பட்டது.
“உங்களின் எழுத்தை நீங்களே இப்படி குறைத்து மதிப்பிடாதீர்கள். எந்தக் காலத்திலும் எழுதியதை இனாமாகக் கொடுக்காதீர்கள். பின்னாலில் அதை நினைத்து நாணவேண்டி வரும்..”
அரைமணி நேரம் மட்டுமே என்று எதிர்ப்பார்த்தச் சந்திப்பு, நிறைவுபெற்றப் போது மூன்று மணி நேரம் முடிந்திருந்தது. மாமல்லன் ஓர் எழுத்தாளர்!. இந்நாட்டு இலக்கியப் போக்கைப் பற்றித் தெரிந்துகொள்ள அவரிடம் எந்தக் கேள்வியும் இருக்கவில்லை!. ஒரு வேலை ஏற்கெனவே தெரிந்து வைத்திருப்பாரோ என்னவோ?.
மூன்றுமணி நேர உரையாடலை ‘சம்மரைஸ்’ செய்ய வேண்டி யோசித்தபோது, மேற்காணும் அறிவுரையே எஞ்சி நின்றது.
சரவணன் மாணிக்கவாசகம் தனது பதிவொன்றில் R. P. ராஜநாயஹத்துடன் ‘புயலிலே ஒரு தோணி’ எழுதிய ப. சிங்காரத்தைப் பார்க்கப் போன அனுபவத்தை எழுதியிருப்பார். எனக்கு அது நினைவிற்கு வந்தது.

Comments
Post a Comment