பட்டிக்காட்டு விளையாட்டுகள்
Memory Lane – 16
Illustration – My Grandson Hrithikeshva
விளையாட்டு என்பது உடல்/ஆரோக்கியம் சார்ந்த ஒன்றாக இருந்தபோது, அதை விளையாட இன்னொரு நண்பன்/நண்பர்கள் தேவைப்பட்டான்(னர்). முகத்திற்கு முகம் பார்த்துக்கொள்ளாமல் விளயாடவே முடியாத விளயாட்டுகளாக அவை இருந்தன. ஒரே இடத்தில் உட்கார்ந்துகொண்டு உடல் களைத்துப் போகாமல் விளயாடிய விளையாட்டுகளாக மிகச் சிலவே இருந்தன.
பாப்பா பாட்டில் விளையாடச் சொன்ன பாரதி, ‘ஓய்ந்திருக்காமல் ஓடியாடி விளையாடச் சொன்னான். அது மட்டுமா? பக்கத்திலேயே கவனிப்பாற்றுக் குழந்தைக் கிடக்கிறது! அக்குழந்தையையும் விளையாட்டில் சேர்த்துக் கொள்ளச் சொன்னான். அது குழந்தை!.. விளையாட்டு விதிமுறைகள் தெரியாது. அதற்காக எக்காரணத்தைக் கொண்டும் குழந்தையை வைதுவிடாதே என்று ‘Child Abuse’-சிற்கு எதிராக குரல் கொடுத்து, பாலபாடமும் போதித்தான்.
வாழ்க்கையும், விளையாட்டும் இப்படி இருந்த காலத்தை நினைத்துக் கொள்கிறேன். பட்டிக்காட்டு விளையாட்டுகளின் பட்டியல் கண் முன்னே விரிகிறது… இவை எங்கள் புக்கிட் முஞ்சோங் எஸ்டேட்டில் புழங்கிய வார்த்தைகள்!.. விளையாட்டு விதிகள்!.. மற்ற எஸ்டேட்டுகளில் இவை வேறாக அழைக்கப்பட்டிருக்கலாம்.
பீத்த
ஒரு முப்பது, முப்பத்தைந்து அடிகள் தூரத்தில், ஒரு ‘குண்டு’ (கோலி என்ற வார்த்தை வழக்கத்திலில்லை) புகும் அளவில் சிறியதாய் ‘பீத்த’ குழி ஒன்று நோண்டப்படும். விளையாட்டில் கலந்துகொள்பவர்கள் ஒவ்வொருவராக அக்குழியை நோக்கி தமது குண்டை உருட்டி விடுவர். (அப்படி உருட்டிவிடும் போதே ஒருவனுடைய குண்டு குழிக்குள் புகுந்துவிட்டால், அவன்தான் ‘ஒன்னாவது’) அக்குழிக்கு மிக அருகில் போய் நிற்கும் குண்டுக்குச் சொந்தக்காரன் முதலில் அக்குழிக்குள் தன் குண்டை நுழைத்து, ‘பீத்த’ எடுக்க வேண்டும். பின்னர், மற்ற குண்டுகளை அக்குழியிலிருந்து அடித்து தூரமாய் விரட்டி, அவர்களை ‘பீத்த’ எடுக்க விடாமல் தடுக்க வேண்டும். குறி தவறாமல் மற்ற குண்டுகளை அடித்து விரட்டும் வரை அவன் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்கலாம். ஒரு முறை குறி தவறிவிட்டால், மற்றவர்களின் முறை முடியும்வரை காத்திருக்க வேண்டும். இன்னும் ‘பீத்த’ எடுக்காதவர்கள் ‘பீத்த’ எடுக்கவும்; எடுத்தவர்கள், அவர்களை எடுக்க விடாமல் தடுப்பதும்தான் விளையாட்டு. கடைசியாக ‘பீத்த’ எடுக்க முயலுபவனின் நிலை, ‘இவன் ரொம்ப நல்லவண்டா!.. எவ்ளோ அடிச்சாலும் தாங்கறான்…’ தான்.
பேந்தா
‘பீத்த’ குழிக்கு பதில் இங்கே, ஒரு அடிக்கு ஒன்றரை அடி அளவில் ‘பேந்தா’ வரையப்படும். இது, இரண்டு பேர்கள் மட்டுமே விளையாடும் விளையாட்டு. இருவரும் சம எண்ணிக்கையில் தமது குண்டுகளை ‘பேந்தாவின்’ நடுவில் கிழிக்கப்பட்ட கோட்டில் வரிசையாக அடுக்க வேண்டும். பின்னர், ‘வான்.. டூ.. த்திரீ… ஜூஸ்..’ போட்டு, முதலில் யார் தொடங்குவது என்பது முடிவெடுக்கப்படும். இருவரும் வலது கையை முதுகுக்கு பின்னால் வைத்து, வான்.. டூ.. த்திரீ.. ஜூஸ்…’ சொல்லி ஒரு முத்திரையுடன் கையை முன்னுக்கு நீட்டுவர். குருவி, கல், ஆறு மற்றும் துப்பாக்கி முத்திரைகளாக காட்டப்படும். விரல்களைக் குவித்துக் காட்டினால் குருவி. முஷ்டியைக் காட்டினால் கல். கையை விரித்துக் காட்டினால் ஆறு. கட்டை விரலை நிமிர்த்தி ஆட்காட்டி விரலை நீட்டிக் காட்டினால் துப்பாக்கி. ஜெயித்தவன், தன் குண்டை ‘பேந்தாவை’ நோக்கி வேகமாக உருட்டி விடுவான். அந்தக் குண்டு பட்டு ‘பேந்தா’விலிருந்து வெளியாகும் குண்டுகள் அவன் ஜெயித்தாக பொருள் படும். அப்படி உருட்டிவிடும் குண்டு ‘பேந்தா’விற்கு உள்ளேயே மாட்டிக்கொண்டால், அவன் ‘மத்தி’!. (தமிழ் ஆர்வலர்கள் மன்னிக்கவும். ‘செத்தான்!.. மரித்தான்… எல்லாம் பாட புஸ்தகங்கள், ‘வரைத்தான்.’)
முத்திரைகளின் அர்த்த வெளிப்பாடு
குருவி vs ஆறு – குருவி ஜெயித்தாக அர்த்தம். ஆற்றிலுள்ள தண்ணீரையெல்லாம் குருவி குடித்துவிட்டதாம். அது, இந்தியர்கள் வளர்த்த குருவியாக இருக்குமோ!..
குருவி vs கல் – குருவி கல்லடிப்பட்டு செத்தது.
குருவி vs துப்பாக்கி – வேடனின் காலைக் கடிக்க அருகில் எறுப்பு ஏதும் இல்லாததால் துப்பாக்கிக்கு பலி.
குருவி vs முஷ்டி – குருவி குத்துப்பட்டு செத்தது.
ஆறு vs கல் – கல் ஆற்றில் விழுந்தது.
ஆறு vs துப்பாக்கி – துப்பாக்கியும் ஆற்றில் விழுந்தது
ஆறு vs முஷ்டி – முஷ்டி ஆற்றில் மூழ்கியது
முஷ்டி vs கல் – முஷ்டி கல்லடிப்பட்டு உடைந்தது
முஷ்டி vs துப்பாக்கி – மூடியிருந்த முஷ்டி, துப்பாக்கி முன்னால் ‘hands up’ ஆகி தோற்றது
துப்பாக்கி vs கல் – துப்பாக்கி, கல்லால் அடித்து நொறுக்கப்பட்டது. அது, ரவை இல்லாத துப்பாக்கி போல.
புள்ளயார் பந்து
இது ஒரு குழு விளையாட்டு. விளையாட்டாளர்கள் இரண்டு குழுவாக பிரிக்கப்படுவர். மைதானத்தின் நடுவில், ஐந்து அல்லது ஆறு ‘டச் பேபி’ குவளைகள் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்படும். நாற்பது அல்லது ஐம்பது அடி தூரத்திலிருந்து அடுக்கி வைக்கப்பட்ட அக்குவளைகளை அடித்து விழவைக்க வேண்டும். இங்கேயும், ‘வான்.. டூ.. த்திரீ… ஜூஸ்..’தான். அப்படி விழுந்துவிடும் பட்சத்தில், எதிர் அணி, அக்குவளைகளை மீண்டும் அடுக்கி வைக்க முயல, முதல் அணியோ குவளைகளை அடுக்கவிடாமல் பந்தால் எதிர் அணியின் முதுகைப் பதம் பார்க்க வேண்டும். சமயத்தில், பலமான பந்துவீச்சுக்கு பலியான நபர், அடிப்பட்ட முதுகைத் தடவிக்கொள்ள முடியாமல் உடலையும் கைகளையும் நெளித்துக்கொண்டு ஊடுவதைப் பார்க்க சிரிப்பு தாங்காது. பந்தடிப்பட்டக் குவளைகள் தமது shape-யை இழந்து நெளிந்துவிட்ட பின்னர், அவற்றை மீண்டும் அடுக்குவது மிகவும் சிரமம். சமயங்களில், பெரிய ‘நாய் சாப் கின்னஸ் ஸ்டவுட் போத்தல்’ குவளைகளுக்கு பதில் பயன்படுத்தப்படுவதும் உண்டு.
காண்டா கவுண்டி
எங்கள் எஸ்டேட்டின் கிட்டிப் புள்.
பம்பரம் விளையாட்டு
அடுத்தவனின் பம்பரத்தை தனது பம்பரத்தால் குத்திப் பிளப்பதே தனி சுகம். இடையிடையே, பம்பரத்தைச் சுழற்றி வீசி, உள்ளங்கையில் பம்பரத்தை விடும் திறமையும் செய்து காட்டப்படும்.
உப்பு குட்டி
பால் பாகுபாடோ; உருவ வித்தியாசமோ இல்லாமல் தோற்றுப் போனால் உப்பு குட்டி தூக்கத்தான் வேண்டுமென்று தோல்வியையும் ‘gracefully’ ஏற்றுக்கொள்ளச் சொல்லித் தந்த விளையாட்டு. நான்கூட கல்மிஷம் எதுவும் இல்லாமல் எத்தகைய ‘பளிங்காய்’ இருந்திருக்கிறேன். என் மேல் உப்பு குட்டி ஏறிக்கொண்ட தோழிகளும்தாம். ம்.. கைபேசி இல்லையோ.. பிழைத்தோமோ…
பெரிய உத்தி
விளயாட்டின் பெயர் ஞாபகத்தில் இருக்கும் அளவிற்கு விளையாட்டு ஞாபகத்தில் இல்லை. இதுவும் ஒரு குழு விளையாட்டே!. விளையாட்டாளர்கள் சம்மனமிட்டு தமது கைகளை பின்னால் வைத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பர். அந்தக் குழுவின் ‘பெரிய உத்தி’ அவர்களின் பின்னால் சென்று யாராவது ஒருவரின் உள்ளங்கைக்குள் ‘ஊக்கை’ வைத்து மூடி விடுவார். பின்னர், எல்லோரும் தமது விரல்கள் மூடிய கைகளை முன்னுக்கு நீட்டுவர். எதிர் அணியின் ‘பெரிய உத்தி’ வந்து, ஒவ்வொருவரின் உச்சந்தலையையும் அழுத்திப் பார்ப்பார். யாருடைய உச்சந்தலை ‘கொழ.. கொழ..’ வென்று இருக்கிறதோ அவரிடம் ‘ஊக்கு’ இருப்பதாக அனுமானித்து கையை காட்டுவார். இந்த அளவிற்கே ஞாபகம் உள்ளது.
தக்க
சுவை பாணங்களின் தகர மூடிகளைச் சேகரித்து, அவற்றை பணயம் வைத்து விளையாடுவது ஒரு காலகட்ட விளையாட்டாகிப் போனது. வீட்டிலிருந்த ஒரு தடித்தப், பெரும்பாலும் பள்ளித் தமிழ்ப் வாசிப்பு புத்தகமே பயன்படுத்தப்பட்டது. விளையாட்டாளர்கள் ஆள் மாரி ஆள், ‘Randomly’ புத்தகத்தின் பக்கங்களைத் திருப்ப வேண்டும். திருப்பிய பக்கத்தில் காணப்படும் எண்ணின் கூட்டுத்தொகை திருப்பியவரின் எண்ணாகக் கருதப்படும். அதிக மதிப்பெண் கொண்ட நபர், வெற்றி பெற்றவர் ஆவார். வெற்றிப் பரிசு, பணயம் வைக்கப்பட்டத் ’தக்க’. பின்னர், ‘கித்தா’ (Rubber band) ஜெயிக்கவும் இந்த முறையே பயன்பட்டது.
அம்மா அப்பா விளையாட்டு
எஸ்டேட்டில் குடும்பம் என்பது சண்டை, சச்சரவுகள் மிக்க ஒரு உறவாகவே பிள்ளைகளுக்கு அறிமுகமானது. சம்பள நாட்களில் அது இன்னும் அசிங்கமாக, பச்சைப் பச்சையாகப் பேசப்பட்ட மொழியில் புருஷன் பெண்டாட்டியின் பேச்சு மொழி பரிட்சயம் செய்யப்பட்டது. பெண்களின் உறுப்பு, துவேஷத்திற்குரிய ஒன்றாகச் சபிக்கப்பட்டது. யாருக்கோ பிறந்த மகன், அரிப்பெடுத்த உறுப்பிற்கு பிறந்த மகனாய் கேவலப்படுத்தப் பட்டான். அதனால், மனைவி என்பவள் அடக்கி, எதிர்த்தால் கையிலுள்ளதைக் கொண்டு அடித்து நொறுக்கப்பட வேண்டியவளாகவே கருதப்பட்டாள். பெரும்பாலும் கையிலுள்ள பொருட்கள் ‘வெளக்குமாறு’, ‘சப்பாத்து’ போன்றவைகளாகவே இருந்தன. கைகள் பேசமுடியாத இடங்களில் கால்கள் பேசின. அப்படியே எங்கள் விளையாட்டும் இருந்தன.
‘கணவன்’ வந்து சாப்பிட உட்காருவான்.
“ஏய் பிள்ள, என்னடி கரி இன்னிக்கி?..”
“ம்ம்.. நல்லா வருது வாயில.. என்னத்த வாங்கிப் போட்ட சமைக்க!.. அடுப்பு கரிதான் இருக்கு..”
“ஏய், பாத்து பேசுடி. ரெண்டு வச்சனா பல்லு கில்லெல்லாம் பேந்திரும் தெரிஞ்சிக்க..”
“ஆங்… நீ ரெண்டு வெக்கிற வரிக்கும் ஏங் கையி சும்மா பூ பரிச்சுட்சு இருக்கும் பாரு..”
‘கணவன்’, காலடியிலிருந்து பிளாஸ்டிக் பொருட்களை எட்டி உதைக்க, அவை ஒரு பக்கமாய் உருண்டோடுகின்றன.
‘மனைவி’
“ஐயோ, கொல்றானே பாவி..” என்று கண்களைக் கசக்க, விளையாட்டு நிறைவு பெறுகிறது.
‘அம்மா அப்பா’ விளையாட்டை இந்த அளவிலேயே புரிந்துகொண்டிருந்த ‘வெளக்கெண்ணெய்’ களாகவே நாங்கள் இருந்திருக்கின்றோம். ஆனால், இப்போதைய தலைமுறை கொடுத்து வைத்தவர்கள். கைக்குள்ளேயே தகவல் களஞ்சியம்!. அப்படியும் அவர்களுக்குத் தெரியவில்லையென்றால், வீட்டில் இருக்கவே இருக்கிறார்கள், சில ‘அப்பாக்களும்’, சில தாத்தாக்களும்.’

Comments
Post a Comment