மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் - 1
Memory Lane – 35
மீண்டும் சென்னை
வங்கி அனுபவம்
நகரத்திற்குள் நுழைந்ததும் அதிக மாற்றம் தெரியவில்லை!. சத்தமிடச் சொல்லி கேட்டுக்கொள்ளும் ஆட்டோ!. அதனால் ஒலித்த ஹாரன் இரைச்சல்!. ஜன நெரிசல்!. குளிர்ப்பானங்களை கூவி விற்காமல் குடிக்கும் ‘போஸ்சில்’ விற்றுக்கொண்டிருக்கும் ‘புஷ்பா..’!.
ஒரு மாற்றத்திற்கு எப்போதும் தங்கும் ஹோட்டலில் தங்காமல் புதிய ஹோட்டலில் தங்கினேன். ‘First impression’-ஏ ரசிக்கவில்லை. 5 நாட்களில் இரண்டு நாட்களுக்கு மீண்டும் எனது ‘Favourite’ ஹோட்டலுக்கே மாற்றிக்கொண்டேன்.
வந்திறங்கியது சனிக்கிழமையே ஆனாலும் முக்கியமான வங்கி வேலையொன்று இருந்தது. ஆட்டோவை நிறுத்தினால், ‘நெறைய ஒன் வே ஆக்கிடாங்க சார். சாந்தோம் போனா சரியான எடத்தை காட்டுவிங்க இல்லை..’ என்று பொறுப்பை என் தலையில் கட்டினார். நான், ‘வேஸ்’ பாவித்து போகச்சொன்னேன்.
என்னிடம் 2000 ரூபாய் நோட்டுகள் ஒரு தொகை இருந்தது. செப்டம்பர் மாதத்திற்குள் அதை மாற்றிக்கொள்ள வேண்டுமென்று நிர்மலா சீத்தாராமன் வேறு எற்கெனவே ‘NRI’ எல்லாருக்கும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
வங்கியின் முதல் மாடிக்குப் போனேன். நான் போன நேரம், வாடிக்கையாளர்களைவிட ஊழியர்களே அதிகம் இருந்தனர். நான்கு மேசைகள் நீள்வாக்கில் போடப்பட்டு அதன் பின்னால் நான்கு பெண் ஊழியர்களும் அவர்களுக்கு நேர் எதிரே மூன்று மேசைகளில் ஆண் ஊழியர்கள் அமர்ந்திருந்தனர். கழுத்தில் வங்கி ‘TAG’ அணிந்த இன்னும் இரண்டு ஆண் உழியர்கள் அங்கே நின்றுக்கொண்டிருந்தனர்.
உள்ளே நுழைந்த என்னை எல்லோருமே ‘CCTV’ கணக்கில் கண்காணித்தனர். நான் ஒரு நாற்காலியில் அமர்ந்து, ‘Ticket Dispenser’ ஏதும் இருக்கிறதா என்று பார்த்தேன். இல்லை!.
கொஞ்ச நேரத்தில் ஒரு பெண் ஊழியர், தலையசைத்து என்னை அழைத்தார்.
நான் வணக்கம் சொன்னேன். அவர் தலையசைத்து அதை ஏற்றுக்கொண்டார். நான், எனது தேவையை சொன்னேன்.
“ஓரு அக்கவுண்ட் ஹோல்டர் அதிக பட்சம் 20,000 ரூபாய்க்கான 2,000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே மாற்ற முடியும்..” என்று சொல்லி ஆரம்பத்திலேயே என்னை பதற்றத்திற்குள்ளாக்கினார். . (ஏனோ, அருகில் அமர்ந்திருந்த மற்ற ஊழியர்கள் எல்லோருமே ஒன்று எங்களைப் பார்த்தனர் அல்லது எங்கள் சம்பாஷனையை செவி மடுத்தனர். அது, எனக்கு மிகவும் ‘ODD’-ஆக இருந்தது.) நான், எனது ‘NRI’ ஸ்டேட்டஸ் பற்றி சொன்னேன். அவர், ‘RBI’ கட்டுப்பாடைப் பற்றி சொல்லி, ‘டெல்லரிடம்’ அனுப்பிவைத்தார்.
நான், அவரிடமும் எனது தேவையைச் சொல்லி, எனது முழு 2000 ரூபாய் கையிருப்பையும் எனது இந்திய வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும் என்றேன். அவர் , முடியுமென்று சொல்லி எனது பதற்றத்தை குறைத்து வைத்தார். அப்போது, மேசைக்குப் பின்னால் அமர்ந்திருந்த பெண் ஊழியர் ஒருவர் அந்த ‘டெல்லரிடம்’ வந்து, வாடிக்கையாளர் இருப்பதையும் கவனத்தில் கொள்ளாமல் ஒரு கடும் சொல் சொல்லி, தனது ‘Seniority’-யை நிலைநாட்டிவிட்டுச் சென்றார். அதோடு, அந்த இளம் ‘டெல்லரின்’ அன்றைய வேலை ஆர்வம் குன்றிப் போனதை முகத்தில் காண முடிந்தது. அதன் பிறகு, அடிக்கடி அந்த சீனியரைப் பார்த்துக்கொண்டே வேலையைச் செய்தார்.
நான் எனது இரண்டவது கோரிக்கையை வைத்தேன். அவர், இரண்டு நாட்களுக்கு எடுக்கும்படியாக அத்தொகையைப் பிரித்துக்கொள்ளச் சொல்லி, உரிய ஆவணங்களைக் கேட்டார். செக் புக், பாஸ்போர்ட், ‘OCI’ Card ஆகியவற்றைக் காண்பித்தேன். அவற்றையெல்லாம் ஒரு நகல் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று சொன்னார்.
வங்கியின் ‘Coffee Lady’ அக்காவிடம் அவற்றை நகல் எடுக்கச் சொன்னார் ‘டெல்லர்’.
‘Coffee Lady’ அக்கா சொன்னார்.
“பேப்பர் முடிஞ்சி போச்சிமா!..”
‘டெல்லர்’ என்னிடம் சொன்னார்.
“சார், கொஞ்ச நேரம் அங்க உக்காருங்க. பேப்பர் முடிஞ்சி போச்சி. ஆளு வாங்க போயிருக்கு..”
வங்கியின் எல்லா நடவடிக்கையும் எல்லோராலும் கண்காணிக்கப்படுகிறது. இருந்தும், ‘Photostat’ மெஷினில் இருக்கும் பேப்பர் முடிந்துப் போனதை யாருமே கவனத்தில் கொள்ளவில்லை. ‘Stand-by tray’ கூட காலியாகவே இருந்தது.
நான், ஒரு அறை மணி நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது.

Comments
Post a Comment