சிறுகதைப் பரிசுப் போட்டி

 


நண்பன், Subra Maniam -த்துடன் ஓர் உரையாடல்.

நண்பா, இதையொட்டி ஒரு பின்னூட்டம் இட்டிருந்தாய். நன்றி. எனது பதில் மிக நீளம் என்று சொல்லி முகநூல் உனக்கு பின்னூட்டமிட மறுத்துவிட்டது. அதனால், தனிப் பதிவாகவே போட்டுவிட்டேன்.
சரி, இந்த சிறுகதைப் பரிசுப் போட்டியை முன்னிட்டு உரையாடுவோம்.
இந்நாட்டின் நவீன தமிழ்ச் சிறுகதைகளை வேற்று மொழிக்கு மொழியாக்கம் செய்யும் சீரிய பணி இதில் இருக்கும் பட்சத்தில் 'தாய் மொழி' என்ற அபிமானத்தில் அவர்களின் தார்மீக நோக்கம் எதுவாக இருக்க வேண்டும்? இந்நாட்டில் தற்போது தமிழில் வந்த சிறந்த படைப்புகள் வேற்று மொழிக்கு செல்ல வேண்டும். எமது இலக்கியத் தரத்தை, எமது படைப்புகள் தொட்டிருக்கும் உச்சத்தை, அதன் தற்போதையப் போக்கை அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதன்றோ மொழிப்பற்று!. . (இங்கே 'எமது' எனும் சுட்டுச் சொல் என்னைக் குறிப்பதாகாது என்பதை நீ அறிவாய்) எமது தரத்தை சிலாகித்து அவர்கள் பாராட்டினால் அந்தப் பெருமை எமது மொழிக்கன்றோ!. ஆக, வந்ததில் சிறந்தது என்று ஒன்றை அந்நிய மொழிக்கு அடையளப்படுத்துவது அவமானமன்றோ?. 🤦 அப்படிப்பட்ட படைப்புகளைத் தேர்ந்தெடுக்க இந்தச் ‘சிறுகதைப் போட்டியல்ல களம்’ என்பதே நான் சொல்ல வரும் செய்தி.
இலக்கியம் எழுதத் தேவை, படைப்பூக்கம். அஃது பரிசுப் பணத்திற்காக வருவதன்று. இந்தகையப் போட்டிகளுக்கென்று சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அவையாவன : 1)குறிப்பிட்ட பக்கங்களுக்குள் இருக்க வேண்டும். 2)அரசாங்கச் செயல்பாடுகளைக் கலாப்பூர்வமாகவெல்லாம் கதைகளாக்கி விமர்சிக்கலாகாது. (House Taken Over போன்ற ஸ்பானீச கதையெல்லாம் சாத்தியமே இல்லை) 3) அரசாங்க துதி பாடி எழுதப்பட்டால் பரிசு பெரும் சாத்தியம் அதிகம். (Adjei-Brenyeh-வின் 'The Finkelstein 5' இங்கே எழுதினால் ஏற்றுக்கொல்வார்களா?) 4) ஜாதிப் பிரச்சினைகளைத் தொட்டால் தீட்டு. 5)பாலியல் சிக்கலைகளை கருப்பொருளாக்கினால் நிராகரிக்கப்படும். 6)நாட்டில் நடக்கும் கட்டாய மதமாற்றத்தைப் பற்றியெல்லாம் கதை எழுதக்கூடாது. (நான் மே 13 கலவரத்தை வைத்து எழுதி, காலச்சுவடில் வெளியான ‘வா அலைக்கும் சலாம்’-மை இங்கே எழுத முடியுமா?) (7)பூர்வகுடி மக்களின் உறைவிட அபகரிப்பை கதைகளில் சொல்லக்கூடாது. இப்படி 1001 கட்டுப்பாடுகள்!. இதற்கெல்லாம் கட்டுப்பட்டால்தான் அந்தப் போட்டியில் பங்குகொள்ள முடியும். இதற்கெல்லாம் கட்டுப்பட்டு ஒருவனை எழுதத்தூண்டுவது எது? படைப்பூக்கமா அல்லது பண முடிப்பா? அங்கே காத்திரமான எழுத்து சாத்தியமா? ஒரு சுதந்திரப் படைப்பாளனுக்கு அது தகுமா?.
இந்தச் சிறுகதைப் போட்டியின் நோக்கமென்ன? நமது படைப்புகளை அந்நிய மொழிக்கு அடையாளப்படுத்துவது. நமது ‘மானத்தைக்’ காக்க வேண்டிய பெரும் தார்மீகப் பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது என்பதை அவர்கள் உணர்வார்களேயானால், இன்று இயங்கலையில் சிறுகதைப் பயிலரங்கு நடத்தி, நாளை சிறுகதைகளை எழுதத்தூண்டி, மூன்றாவது நாள் பரிசளித்து, நாங்காவது நாள் மொழிப்பெயர்க்கும் கோமாளித்தனத்தைச் செய்யத் துணிவார்களா?. இலக்கியம் படைப்பதென்பது உற்பத்திக்கூடத்தில் செய்யப்பட்டு கன்வேயர் பெல்ட்டு வழியாக வெளியே வந்து விழும் சமாச்சாரம் கிடையாது. எழுத்திற்குப் பின்னே பல வருட வாசிப்பு, அயராத உழைப்பு, ஆழ்ந்த சிந்தனையென்று தீராத அர்ப்பணிப்பு இருக்கிறது. அது வெறும் ஒரு நாள் பயிலரங்கிலும், ஒரு சில பணமுடிப்பிலும் வருவதில்லை.
‘தமிழ் வாழ்க..’ என்று பதாகைகளை ஏந்தி கூச்சல் போடுவதால் தமிழ் பெருமையுருமா என்ன?
‘உலக இலக்கியம் வரை தெரிந்தவர்கள் இதைத் தானாகவே முன்னெடுக்கலாம். ஓர் அமைப்பு என்ன செய்ய வேண்டும் என்பதை அறிவுறுத்தத் தேவையில்லை..’ எனும் பொருளில் சகோதரி பொன் கோகிலம் ஒரு பார்வையை முன்வைத்தார்.
மின்னல் பண்பலை ஓர் அரசு நிறுவனமேயானாலும் மக்களின் வரிப் பணத்தில் இயங்கும் ஒரு ஸ்தாபனம். எனவே, அது ஒரு மொழியின் மேம்பாட்டிற்கு என்று முன்னெடுக்கும் ஒரு செயல்பாட்டில் ஒரு மூத்த எழுத்தாளர் மற்றும் சக பிரஜை என்ற முறையில் கோ. புண்ணியவான் சில ஆலோசனைகள் சொல்வது உரிமையின்பாற் பட்டதே. அதை ஒரு குறுக்கீடாக கருதலாகாது.
இறுதியாக நண்பா, நாமிருவரும் ஒன்றிலிருந்து ஆறாம் வகுப்புவரை ஒன்றாகவே தமிழ் படித்த வகுப்பு தோழர்கள். படிப்பில் உனக்கிருந்த தேர்ச்சியால் நீ பல படிகள் மேலே சென்றாய். அந்தத் தேர்ச்சி எனக்கில்லாததால் நான் பின் தங்கிப் போனேன். ஆயினும் என்னை நீ, ‘நீங்கள்’ என்று உயர்வு நவிழ்ச்சி செய்வது எனக்குக் கூச்சத்தைத் தருகிறது. அதே போல், நான் உன்னை ‘நீங்கள்’ என்று அழைப்பது எனக்குப் போலியாய்ப் படுகிறது. இதில், நமது மரியாதை ஏதும் பங்கமுறுவதாக எனக்குத் தோன்றவில்லை. ஆகவே, மன்னித்துக்கொள்!. என்னைத் தவறாக எடுத்துக்கொள்ளாதே!.

Comments

Popular Posts