சிகப்பு விளக்குகள்

 



RED LIGHTS

மூலம் - அரபிக்

ஆசிரியர் - Talal Abu Shawish

ஆங்கில மொழிபெயர்ப்பு  - Alice Guthrie

தமிழில்  - மலேசியா ஸ்ரீகாந்தன்

சிகப்பு விளக்குகள்.

அவன், என்னுடன் பின்னால் அமர்ந்திருக்கும் சக பயணிகள் தமது கட்டணத்தை செலுத்த வசதியாக   தனது கையைப் பின்னோக்கி நீட்டுகிறான். அவர்கள் கொடுத்த கட்டணத்தை வெறுப்புடன் பெற்று, கொஞ்சமும் உவப்பின்றி டாஸ் போர்ட்டில் வீசியது எனக்கு உறுத்துகிறது. அவனுடன் பேச விரும்பி, நான் கேட்கிறேன்.

“நிலைமை மோசமாகத்தான் இருக்கிறது. ஆயினும் இது தற்காலிகமானதுதான்..”

“சாலையில் பயணிகளைவிட வாகனங்களே அதிகம் இருக்கின்றன.” என்று அவன் சொன்னான்.  “நாங்கள் பெறும் கட்டணம் வெறும் எரிபொருளுக்கே போதுமானதாக இருக்கிறது!..”

கொஞ்ச நேரம் மௌனத்திலாழ்ந்தவன் ‘ரியர் வியு’ கண்ணாடி வழி என்னை எடைப் போடுவதுபோல் பார்த்துவிட்டு, கசப்புடன் தொடர்ந்து சொல்கிறான்.

“ஓரு டாக்சி டிரைவர் என்பவன் நிச்சயமாக ஒரு பிச்சைக்காரனைப் போன்றவன்தான். ஒரே வித்தியாசம், பிச்சைக்காரன் தனது கையை முன்னால் ஏந்துகிறான். டாக்சி டிரைவரோ பின்னால் ஏந்துகிறான்.”

அவன், ‘Firas al-Sha’abi’ மார்கெட்டுக்கு அருகிலிருக்கும் சிவப்பு விளக்கில் நிற்கிறான். நீண்ட பெரு மூச்சொன்றை வெளிப்படுத்திவிட்டு, எரிச்சலுடன் விரல்களால் ‘ஸ்டீரிங்’-கைத் தட்டத் தொடங்கியிருந்தான். அப்போது, அழகிய முகம் ஒன்று அவனை அனுகுகிறது. அந்த அழகிய முகமுடைய சிறுவனுக்கு ஒன்பது வயதுகூட இருக்காது. தனது, சன்னமான குரலில் மெதுவாக அவன் ஏதோ சொல்லுகிறான். வாகனத்தினுள் இருக்கும் எங்களால் அதை அனுமானிக்க முடியவில்லை. டாக்சியோட்டி கண்ணாடியைக் கீழிறக்க, பையனின் குரல் காரை நிரப்புகிறது. அவனுடைய கை இரண்டு சாக்கலட்டுகளை ஏந்திகொண்டு காரினுள் நீள்கிறது.

“ஒரு வெள்ளிதான்!. இரண்டுமே ஒரு வெள்ளிக்கு..“

டிரைவர், ஒரு வெள்ளியைக் கொடுத்துவிட்டு ஒரு சாக்லட்டை மட்டும் எடுத்துக்கொள்கிறான். பின்னுக்கு திரும்பி, ‘உங்களுக்கு வேண்டுமா?’ என்று கேட்க, நாங்கள் அனைவருமே மறுக்க, அதை ‘டாஸ் போர்ட்டில்’ வீசிவிட்டு. பச்சை விளக்கு வந்திருப்பதைப் பார்த்து பயணத்தைத் தொடர்கிறான்.

டேப் ரிக்கார்டரை இயக்க எதையோ திருக, ‘Oum Kalthoum’ -மின் குரல் உடனே அலறத் தொடங்குகிறது. ‘உனக்கு தோதான நேரமில்லை!.’ என்று முணுமுணுத்துக்கொண்டே டேப்பை எடுத்துவிட்டு, ரேடியோவை முடுக்கி விடுகிறான். செய்தி அறிவிப்பாளரின் நடுங்கும் குரல் போர்ச் சூழல், உக்கிரமாகும் போர், முற்றுகை, படுகொலை மற்றும் தடுப்புக் காவல் பற்றிய செய்திகளைக் காருக்குள்லேயே கொண்டுவந்து சேர்க்கிறது.

டிரைவர், எதிரே பச்சை நிறத்தில் இருக்கும் டிரஃபிக் லைட்டை கடக்க வாகனத்தை விரைவாக ஓட்டுகிறான். ஆனால், டிரஃபிக் லைட்டை அடைவதற்குள் மஞ்சள் நீறம் சிகப்பிற்கு மாற, அவன் பலவந்தமாக நிற்க வேண்டி வருகிறது. ரேடியோவை சலிப்புடன் அடைத்துவிட்டு, விரல்களால் மீண்டும் பதற்றத்துடன் ஸ்டீரிங்கின் மேல் தாளத்தை தட்டத் தொடங்குகிறான். இன்னொரு அழகிய முகம் டாக்சியின் அருகில் வருகிறது. இந்தப் பையனுக்கு வயது பன்னிரண்டு இருக்கும். டிரைவர், சீற்றமிக்க சீற்றொலியை வெளிப்படுத்தியபடி, கார் கண்ணாடியை இறக்குகிறான். மீண்டும் ஒரு முறை ஒரு சிறுவனின் குரல் காரினுள் நிரம்புகிறது. –‘கடையைக் காட்டிலும் பாதி விலைதான்..’ என்று ஒரு பாக்கெட் ‘சூவிங் கம்மை’ அச்சிறுவனின் கரம் கண்ணாடியின் வழியாக எங்களை நோக்கி நீள்கிறது. டிரைவர் ‘ரியர் வியூ’ கண்ணாடியில் பயணிகளின் முகங்களைப் பார்க்கிறான். எங்கள் முகங்களில் எந்த அசைவும் இருக்கவில்லை. அவன், ஒரு நாணயத்தை எடுத்து பையனிடம் கொடுத்துவிட்டு, சூவிங் கம்மை வாங்கி சாக்லட் அருகில் வீசுகிறான். விளக்கு பச்சை நிறத்திற்கு மாறுகிறது. சட்டென்று, மற்ற பயணிகள் தமது கட்டணத்தைக் கொடுத்தபோது நான் கொடுக்காதது ஞாபகத்திற்கு வருகிறது. எனக்கு நேரடியாக டிரைவரிடம் கட்டணத்தைச் செலுத்தப் பிடிக்கவில்லை. – அவன் தன் கையை பின்னுக்கு நீட்டி ஏந்துவதைக் காண எனக்கு விருப்பமில்லை. டிரைவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருக்கும் பயணியிடம் எனது கட்டணத்தை நீட்ட, அவன் அதை டிரைவரிடம் தருகிறான். டிரைவர், ரியர் வியூ கண்ணாடியில் என்னைப் பார்த்து புன்னகைக்கிறான். நாங்கள் இப்போது ‘முகம் தெரியாத சிப்பாய்களின் பூங்கா’-வைக் கடந்துகொண்டிருக்க, சில கனிந்த முகங்கள் புற்தரையில் சோம்பலுடன் படுத்துக்கொண்டும், மற்றவர்கள் காப்பி கடையில் உட்கார்ந்து ஹூக்கா புகையை வானத்தை நோக்கி ஊதிக்கொண்டும் இருக்கின்றனர். இரண்டு இளைஞர்கள், தளுக்குக் காட்டி மினுக்கிக்கொண்டு அவ்விடத்தையே வட்டமடித்துக் கொண்டிருந்த பெண்களின் பின்னால் சுற்றிக்கொண்டிருந்தனர். அவர்கள் எல்லோருமே தப்பிக்கப்  பார்த்துக் கொண்டிருந்தனர்.  

டாக்சி, இடது பக்கம் ‘Rashad al-Shawa’ சந்திப்பை நோக்கித் திரும்புகிறது. டிரபிக் லைட் வழக்கம்போல் சிகப்பு நிறத்தில்!.. டிரைவர் ஹண்ட் பிரேக்கை இழுத்து காரை நிறுத்திவிட்டு, ஒரு சிகரெட் பாக்கெட்டை எடுக்கிறான். பாக்கெட்டைத் திறந்து, ‘நாங்கள் யாரும் புகைக்க விரும்பக்கூடும்..’ என்று எண்ணி பின்னால் கேட்கிறான். நாங்கள் எல்லோரும் உபசரிப்புக்கு நன்றி சொல்லி, ‘வேண்டாம்’ என்று மறுக்க, அவன் ஒரு சிகரெட்டை எடுத்து புகைக்கத் தொடங்குகிறான்.

ஓர் இளவயது சிறுவன் ஈரக் கந்தலைத் தூக்கிக்கொண்டு காருக்கு அருகில் வருகிறான். அவனுக்கு பதினைந்து வயதிற்கு மேல் இருக்கலாம். வாகனத்தின் பின்புற கண்ணாடியைத் துரிதமாக துடைத்துவிட்டு, டிரைவர் பக்கக் கண்ணாடியைத் துடைக்க வருகிறான். டிரைவர், நெஞ்சு நிறைய சுவாசத்தை இழுத்துவிட்டு, அந்த இளைஞனைக் கவனமாகப் பார்க்கிறான். பின்னர், கண்ணாடியைத் துடைப்பதை நிறுத்தச் சொல்கிறான். அவன் உடனே காரினின்று விலகி நிற்க, அவனுடைய கண்களில் தெரிந்த பார்வை கெஞ்சி, மன்றாடிப் பணிகிறது. டிரைவர், அவனை அழைத்து ஒரு நாணயத்தை நீட்டுகிறான். அச்சிறுவன், நம்பமுடியாத ஆச்சரியத்துடன் உடனே அந்த நாணயத்தைப் பறித்துக்கொள்கிறான். ‘இந்தத் திடீர் வருமானம் கிடைக்க நீண்ட நாட்கள் ஆகிவிட்டன!..’ அவன் அடுத்த வாகனத்தை நோக்கி சில அடிகளே எடுத்து வைத்திருப்பான், எங்கள் டிரைவர் மீண்டும் அவனை அழைக்க, அவன் தயக்கத்துடன் அருகில் வருகிறான். டிரைவர், சாக்லெட்டையும், சூவிங் கம்மையும் அவனிடம் கொடுத்து சொல்கிறான்.

“இவற்றையும் விற்று காசாக்கிக் கொள்!.”   

பச்சை விளக்கு எரிய, டாக்சி அங்கிருந்து நகர்கிறது. இடது பக்கம் திரும்பி, ‘al-Azhar University’ சந்திப்பை நோக்கி டாக்சி விரைய, வழியில் மேலும் சிகப்பு விளக்குகள் எங்களுக்காகக் காத்திருக்கின்றன.   

* * *                      


Comments

Popular Posts