எல்லாம் முடிந்தது.
Memory Lane – 102
நண்பா,
சரியாக ஒரு மாத காலம் எந்த உணர்சியுமே இல்லாமல் மானிட்டர் திரையில் ஏறி இறங்கும் கோடுகளில் உனது உயிர்வதையைச் சொல்லி, ‘சல சலவென்று மலசலம் வந்து, கால்வழி மேல்வழி சார நடந்து..’ இறப்பதற்கு நீ ஊசலாடிக்கொண்டிருந்தாய்!.
பக்கவாதத் தாக்குதலுக்குள்ளாகும்வரை உனது இயக்கத்திற்கு எந்தத் தடங்களும் இல்லைதான்!. உனது தேவைகளை உன்னால் சுதந்திரமாகவே செய்துக்கொள்ள முடிந்தது. என்ன, ஏதோ சில நினைவுகளில் அடிக்கடி உறைந்துபோய் மீண்டு வரத்தெரியாமல் தொலைந்து போவாய்!. ஆனால் இப்போது, இந்தக் கோமா நிலையிலிருந்து நீ பெறும் மீட்சி உன்னைப் படுக்கையிலேயே முடக்கிப் போடுமோ?. டாக்டரேகூட அப்படித்தானே அபிப்பிராயப்பட்டார். அது மீட்சியா?... தண்டனை?..
அதற்கு… அதற்கு…
கடந்த ஞாயிறன்று நான் உன்னைப் பார்க்க வந்தேன்.
“லிங்கம், நான் ராம்லு வந்திருக்கம்ப்பா!.”
என்று அழைத்தபோது, உனது ரப்பைகள் அசைந்தன ஆனால், திறக்கவில்லை. ஆழ்ந்த மயக்கத்திலிருந்தாயோ?.. இல்லை எங்கோ தொலைந்து போயிருந்தாயோ?..
பொருளாதார பற்றாக்குறை, பிள்ளைகளைப் பற்றிய கவலை போன்ற எந்தச் சிக்கலும் உனக்கில்லை. பிள்ளைகள் எல்லோருமே நல்ல உத்தியோகத்தில் மிகவும் வசதியாகவே இருக்கின்றனர். எல்லோரும் பெருமைப்படத் தக்கவே நீ வாழ்ந்தாய்!. ஆயினும், நீ ஏன்தான் இப்படி நலிந்து போனாய்?.
1975-ல் ஆண்டில் நாம் நண்பர்களானதிலிருந்து நீ கலந்துகொள்ளாதக் கொண்டாட்டமென்று எனக்கேதும் இருந்ததேயில்லை. அதுபோலவே உனக்கும்!. நமது திருமணங்கள், பிள்ளைகளின் பிறந்தநாட்கள், தீபாவளிப் பண்டிகைகள், பிள்ளைகளின் திருமணங்கள் என்று நாம் பரஸ்பரம் கலந்துக்கொள்ளாமல் எந்த நல்ல காரியங்களும் நமது குடும்பங்களில் நடந்ததேயில்லை!. நமது அன்னையரின் மரணங்களும் அப்படியே. பெற்றால்தான் பிள்ளையா என்ன?.
50 வருட நட்பாயிற்றே!.. இதே கால அவகாச நட்பில் பலரும் இன்னும் அருகிலேயே இருக்கின்றனர். எத்தகைய இழப்பும் ஒரு ‘RIP’ சொல்லில், ஒரு இமோஜியில் கடந்துபோகக்கூடியதாகிவிட்டது அவர்களுக்கு. இருந்தும் இல்லாத வாழ்க்கைதான் இப்போது. நேர்முக அஞ்சலிக்கெல்லாம் நேரமில்லை!. அதனால், இரண்டு சொட்டுக் கண்ணீர்கூட மிச்சமாகிப் போனது. ஆறாய் ஓடும் கண்ணீரையெல்லாம் இமோஜியோடு நிருத்திக்கொள்வோம்.
வாழ்க்கை அநித்தியமானது!.. புரிந்துகொண்ட ஞானியர்கள் அவர்கள்!.
ம்.. என்ன நட்பு?.. என்ன வாழ்க்கை?.. ச்சே!..
05/05/25 அதிகாலை மணி 1.35-திற்கு உன் மூத்த மகளிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி!.
12.50மணிக்கு நீ உயிர் நீத்திருந்தாய்.
What a relief!. உனக்குமட்டுமா?..
அந்த ‘relief’-க்கு மத்தியில்தான் பிரிவாற்றாமையையும் அழுத்துத் தீர்க்க வேண்டும்.
நீ புத்திசாலி. சற்றே முந்திக்கொண்டு பெருமைத் தேடிக்கொண்டாய்.
நான் தனித்து நிற்கிறேன், சாபத்திற்காளாகி!..
‘ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதுவிட்டோம்..
பேரினை நீக்கிப் பிணமென்று சொல்லிவிட்டோம்..
சூரையங்க் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டும் எரித்துவிட்டோம்..
இனி. நீரினில் மூழ்கி நினைப்பையும் ஒழிக்க வேண்டியதுதான் பாக்கி!..’
இதற்கிடையே,
‘செத்தும் கொடுத்தான் சீதக்காதி’ என்ற நம்பிக்கையில், உனது ஆறு இலக்க நோயாளி எண்ணையும், நான்கு இலக்க சவ ஊர்தி எண்ணையும் லாட்டரிச் சீட்டு எழுதி யாரும் உனது மரணத்தைக் அவமானப்படுத்தாமல் இருப்பார்களாக?.
உனக்கு எனது பிரார்த்தனைகள்.
- எனது கல்யாணத்தில்
- மிகச் சமீபத்திய சந்திப்பில்
- துக்கச் செய்தி
- அவனுக்கு எனது இறுதி மரியாதை.

Comments
Post a Comment