ராம்ஜீஸ் எனும் குருஜி!..



Life is funny series – 4

ராம்ஜீஸ் எனும் குருஜி!..
2018 -ல் எனக்கொரு கிறுக்கு பிடித்திருந்தது. அதிகாலையில் 5.00 -லிருந்து 5.30 -குள் எழுந்து ஒரு 20 -லிருந்து 30 நிமிடங்கள் வரை தியானம் செய்ய ஆரம்பித்திருந்தேன். அப்போது, ஜக்கி வாசுதேவின் காணோளிகளை அவ்வப்போது பார்த்துக்கொண்டிருந்தேன். ஆக, பைத்தியம் எப்படி பிடித்தது என்பதை நீங்கள் யூகித்துக்கொள்ளலாம்.
ஆனால், ‘ராம்ஜீஸ்’ என்பது 12 வருடங்களுக்கு முன்னரே எனது ஈமெயில் அடையாளமாக வைத்துக்கொண்ட பெயர். அது எப்படி நடந்தது?. ‘அது அப்படித்தான் நடக்க வேண்டுமென்று’ முன்பே பிரபஞ்ச சக்தியால் தீர்மானிக்கப்பட்டுவிட்ட ஒன்றா?.. இப்போது தீயானத்தில் வேறு நாட்டம் வந்திருக்கிறதே!..
முதல் நாள்!..
முதலில், கொஞ்ச நேரம் மூச்சுப் பயிற்சி.
பின்னர் தேவ பாஷையில் பிரார்த்தனை ஸ்லோகம்.
‘ஓம் சர்வேஷாம் ஸ்வஸ்திர் பவது
ஓம் சர்வேஷாம் ஷாந்திர் பவது
ஓம் சர்வேஷாம் பூர்ணம் பவது
ஓம் சர்வேஷாம் மங்களம் பவது’
‘May there be Well-Being in All
May there be Peace in All
May there be Fulfilment in All
May there be Auspiciousness in All’
ஏன், இந்த ஸ்லோகம்?
இந்த ஸ்லோகத்திலிருந்த ‘சர்வேஷாம்’ என்ற ‘சகலருக்கும்’ -ஆன பிரார்த்தனை எனக்கு பிடித்திருந்தது.
தொடர்ந்து, கூகுலில் தேடியதால் கிடைத்த ‘ஞானத்தின்’ படி, எனது வீட்டு மொட்டை மாடியில், கிழக்கு நோக்கி அமர்ந்து, கைகளை நீட்டி இரண்டு கால் முட்டிகளிலும் வைத்து, ஆட்காட்டி விரலை கட்டை விரலால் தொட்டபடி இமைகள் மூடிக்கொண்ட கண்களால் நெற்றியைப் பார்த்துக்கொண்டு தியானத்தைத் தொடங்கினேன்.
நெற்றியில் காட்சிகள் ஓட ஆரம்பித்தன.
‘நேற்று மனைவிக்கு வந்த மனஸ்தாபம்; ஆட்டு கறியில் காரம் போதாததால் எனக்கு வந்த கடுப்பு; இன்னும் மின்சார கட்டணத்தைச் செலுத்தாதால் வந்த ஒரு வார கெடு நோட்டீஸ்; பீர் குடிக்க ஆரம்பித்திருக்கும் மகனின் போக்கு; காலையில், கார் ஸ்டார்ட் ஆகாமல் செய்த கோளாறு..’ என்று ஏதேதோ எண்ணங்கள்.
‘குறுக்கிடும் எண்ணங்களை பலவந்தமாக கட்டுப்படுத்தப் பார்க்காதீர்கள்.. அதன் போக்கில் விட்டு மனதை ஒரு நிலைப்படுத்தப் பாருங்கள்..’ – கூகுல் சொன்னது நினைவில்!..
‘என்னது, வயித்த ஒரு மாரியா கலக்குறமாரியில்ல இருக்கு!..ஆத்துரத்த வேவும்ன்னா அடக்கலாம்!.’
இமைகளைத் திறந்துப் பார்த்தால், தியானத்தில் உட்கார்ந்து 10 நிமிடங்கள்கூட ஆகியிருக்கவில்லை!..
இயற்கையின் உபாதையைத் தீர்த்துக்கொண்டு வந்து மீண்டும் தியானத்தை தொடர உட்கார்ந்தால், ‘மொத நாளுதான. இது போதும்..’ என்ற தீர்மானம் மேலோங்கிட அன்றைய தியானம் அத்தோடு முடிந்தது.
எனது மனைவி, பல வருடங்களாகவே ‘Sahaja Yoga’-வில் ஈடுபாடுடன் இருக்கிறார்.
அவர் தனது தியானத்தில் பயன்படுத்தி எனக்குப் பரிச்சயமான சில வார்த்தைகள். ‘Bandan’, ‘Foot Soaking’, ‘Candle Treatment’, ‘Cakra Clearance’, ‘Maka Pot’ மற்றும் ‘Shoe Beating’. ஆக, தியானத்தில் அவருக்கு அனுபவம் அதிகம்.
மறுநாள் சொன்னார்.
“மெடிடேஷன் செய்யறப்ப நீங்க ஏன் வெரலுங்க ரெண்டும் தொடறமாரி மடக்கிகிறீங்க?..” என்று கேட்டார்.
நான், கூகுலில் பார்த்ததைச் சொன்னேன்.
“அக்சுவலி, உள்ளங்கைங்க ரெண்டையும் விரிச்சுதான் வெச்சுக்கனும். அப்பதான், வைப்ரேஷன ‘feel’ பன்ன சின்னாங்கா இருக்கும்..” என்றார்.
“ஏன்னடா இது, ஆரம்பமே இவ்ளோ சிக்கலா இருக்கே?..” நான், மிகவும் குழம்பிப் போனேன். ஆயினும், மனைவி பல வருடங்களாகவே இதில் ஆர்வமாக ஈடுபட்டு வருபவர். அவர் சொல்லவது ‘அனுபவ அறிவு’ நான், அவருடைய பரிந்துரைக்கு மாறிப் போனேன். ‘மனைவி சொல்லே மந்திரம்..’ என்று படித்திருந்தேன் வேறு!..
இப்படியாக எனது தியான அனுபவம் செவ்வனே சென்றுக்கொண்டிருக்க முதல் முறையாக எனது பிள்ளைகளைப் பார்க்க 2018 இறுதியில் ஆஸ்திரேலியா செல்ல வேண்டி வந்தது. அங்கேயும் எனது தியான பயிற்ச்சியை விடாமல் மேற்கொண்டேன். ஆனால், ‘Woden’-லிருந்த மகனின் வீட்டில் செய்வதற்கு பதில், அருகிலேயே இருந்த பொது ‘பார்க்கில்’ செய்ய ஆரம்பித்திருந்தேன்.
செங்கற்கள் பதித்த தரை!. எதிரே குளம்!.. சூரிய உதயத்தைப் பார்க்க அமர்ந்து தியானம் செய்ய அருமையான இடம்!.
நான், தினமும் 7.30 மணிக்கு அங்கே அமர்ந்து தியானிக்கத் தொடங்கினேன்.
அன்று, ஒரு சனிக்கிழமையென்று நினைவு!. நான், தியானத்தில் ஆழ்ந்திருந்தேன். காலத்தின் பிரக்ஞையை இழந்து போயிருந்தேன். எனது வலது புறத்திலிருந்து ஒருவித அரவம். (வைப்ரேஷன்!!)
தியானம் முடிந்து கண்களைத் திறந்து பார்த்தால், பக்கத்தில் அஜானுபாகுவானத் தோற்றத்தில் ஒரு வெள்ளைக்காரர் கண்களை மூடி அமர்ந்திருந்தார்.
கொஞ்ச நேரத்திலேயே என் பக்கம் திரும்பி ஸ்நேகபாவத்துடன் புன்னகைத்தார். நானும், எப்போதும்போல் புன்னகைத்தேன். தெய்வீகமாய் இருந்திருக்குமோ?.. அவர்,
“தியானிக்கும் போது எங்கு ‘Concentrate’ செய்வீர்கள்?.” என்று கேட்டு, “நெற்றியா!..” என்று அவரே ஒரு விடையும் சொன்னார்.
“நான், சுவாசத்தில் ‘Focus’ செய்வேன்..” என்று சொன்னேன். பிறகு, எனது ஊர் மற்றும் வேறு சில விஷயங்களைக் கேட்டுவிட்டு அவர் விடைப் பெற்றார்.
அவர் போன கொஞ்ச நேரத்திலேயே எனக்கு திடீரென்று ஓர் எண்ணம் உதயமானது.
‘நான், தியானத்திலிருக்கும்போது அவர், என் தலைக்குப் பின்னால் ஒளிவட்டம் ஏதும் பார்த்திருப்பாரோ?’
உரிய நேரம் வரும்போது, சிஸ்யன் தனக்கான குருவை தானே கண்டடைவான் என்று சொல்வார்களே?.. அப்படி ஏதும் இருக்குமோ?
நான், குழப்பத்தில் ஆழ்ந்தேன். ‘இல்லை.. பிறரின் குழப்பத்தை தீர்க்கும் குருவே குழப்பத்தில் ஆழ்ந்துவிடலாது..’ நான், சுதாகரித்துக்கொண்டேன்.
ஏற்கெனவே, ஜப்பான்காரன் எனது பெயரில் ‘Ramu Bottle’ என்று தீர்த்தத்தை வேறு தயாரிக்கத் தொடங்கிவிட்டிருந்தான்.
அந்தத் தீர்த்தத்திற்கு ‘ED’ குறை நீக்கும் மந்திரத்தை ஆண்களுக்கும் ‘Multiple O’ அருளும் மந்திரத்தை பெண்களுக்கும் ஓதி ஜபிக்க வேண்டும்.
தேவை, இனி இது நிறுவனமயமாக்கப்பட வேண்டியதுதான்!.
பிரதம சிஸ்யன் வேறு என்னை அடையாளம் கண்டுக்கொண்டான்!.. ‘Product’-ம் ரெடி!.
சந்தைப்படுத்துவதற்கு முன் எனக்கு ஒரு நடிகையோ அல்லது ஒரு தொலைக்காட்சி புகழ் தொகுப்பாளினியோ சிஷ்ருசை செய்ய கிடைத்தால் வெகு உசிதம்.
உடனடியாகப் புகழ் உச்சியை எட்டிவிடலாம்!..
ஆனால், சாபம்!.
பிரபல்யத்திற்கு காத்திருந்த காலத்தில் தியானத்தின்மேல் எனக்கிருந்த ‘கிறுக்கு’ தீர்ந்துப் போக, எனது ஆரோக்கியம் கருதி இப்போதெல்லம் நான் உடற்பயிற்ச்சியில் இறங்கிவிட்டேன்.
தியானம் தந்த ஞானம்
பின் குறிப்பு – அஜானுபாகுவான வெள்ளைக்காரரைப் பற்றி சொன்னது அனைத்தும் உண்மை. I, SWEAR!.
1. என் வீட்டு தியான ஸ்தலம்
2. Woden பார்க் செங்க்கல் தரை தியான ஸ்தலம்
3. முதல் நாள் எனது தியானத் தோற்றம்
4. மனைவியின் அறிவுரைக்குப் பின்னான தோற்றம்
5. என் பெயரில் வெளியான 'தீர்த்தம்'

6. தியானம் தந்த ஞானம் 













Comments

Popular Posts