எண்ணால் வரும் அதிர்ஸ்டமும், பிடிக்கும் சனியனும்.

 



Memory Lane - 21
எண்ணால் வரும் அதிர்ஸ்டமும், பிடிக்கும் சனியனும்.
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்று செய்யுள் சொல்கிறது. அதில், இந்த ‘எண்’ பெரும்பாலோரின் வாழ்க்கையில் செய்யும் ஆட்சி, பணம் செய்யும் ஆட்சிக்கு ஈடானது. ஒரு காரியத்தை செய்வதற்கான தேதி, நேரம், வாங்கப் போகும் வாகனத்திற்கான எண், குடிப் போகவிருக்கும் வீட்டு எண், குழந்தைப் பிறக்க வேண்டிய திகதி, நேரம்; கல்யாணம் செய்துக்கொள்ளப் போகும் நாள் என்று ‘எண்’ பார்க்கப்படாதா காரியமே இல்லை!. மேல் கூறிய எல்லா வற்றிலும் நமக்கான ‘எண்ணைத்’ தேர்வு செய்துக்கொள்ளும் உரிமை நமக்கிருக்கிறது. அப்படியே அந்த உரிமை கை நழுவிப் போகும்பட்சத்தில் பணத்தைக் கொடுத்தாவது அதைப் பெற்றுக்கொள்ளவும் நாம் தயாராகவே இருக்கின்றோம். CASH IS KING. ஒரு திருட்டு பிரதமரின் பொன்மொழி அது!. எனினும், அப்படியும் ஒரு விஷயத்தில் இருக்கின்ற பணத்தாலும் ஒன்றும் செய்யமுடியாமல் போய்விடும் என்றால் அது, நாம் வாங்கப் போகும் வீட்டிற்கு வீடமைப்பு வாரியத்தால் இடப்படும் வீட்டு ‘எண்’தான்!
மலேசியாவில் வீடமைப்பு நிறுவனம், தான் கட்டும் வீடுகளை லாட் எண்களைக் கொண்டே விற்பனை செய்து, S & P -யிலும் அந்த லாட் எண்ணை வைத்தே அக்ரீமண்ட் தயாரித்துக்கொள்ளும். வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் குடி வரத் தயாராகும் போது, அவை வரிசை வீடுகளாக இருப்பதால் சாலையின் ஒரு பக்கம் இருக்கும் வீடுகள், ஒற்றைப்படை எண்களையும் எதிர்ப்பக்கம் இருக்கும் வீடுகள் இரட்டைப்படை எண்களையும் கொண்டிருக்கும்.
‘எண்’களால் வரும் அதிர்ஸ்டமும், பிடிக்கும் சனியனும் அப்போதுதான் ஆரம்பமாகும். குறிப்பாக, ‘Feng Shui’-யில் நம்பிக்கை உள்ள சீனர்கள், இந்த வீட்டு ‘எண்கள்’ விஷயத்தில் மிகவும் தீவிரமாக இருப்பார்கள். ராசி எண் கிடைத்தவர்கள் சந்தோஷப்படுவார்கள். அல்லாதவர்களுக்கு சங்கடம்தான்.
அவர்களின் சில நம்பிக்கைகள் பின் வருமாறு.
சீனர்களைப் பிடிக்கும் சனியன்
4 - சீனர்கள் மிகவும் வெறுத்து ஒதுக்கும் ‘எண்’, இந்த 4. இந்த எண்ணை கென்தோனீஸ் வட்டார மொழியில் ‘SEI’ என்று உச்சரிக்கின்றனர். அந்த உச்சரிப்பு 4-கைக் குறிக்கும் அதே வேளையில், 'சாவு' என்று பெயர்ச் சொல்லாகவும் வினைச்சொல்லாகவும் பொருள்படும் ஒரு சொல். அதனால், 4 ‘எண்’ கொண்ட வீட்டை சீனர்கள் வெறுக்கின்றனர். அப்படியே அந்த எண் கொண்ட வீடு வாய்த்துவிட்டால் அதை, ‘2A’ என்று மாற்றிக்கொள்கின்றனர்.
14 – சீனர்கள், ராசி இல்லாத ‘எண்’களிலேயே மிகவும் மோசமான எண்ணாக ‘14’ஐ கருதுகின்றனர். அந்த எண், ‘Saph Sei’ என்று உச்சரிக்கப்பட்டது. Saph என்றால் 10. Sei என்றால் 4. ஆனால், அந்த உச்சரிப்பு,’ Sup Sei’ என்ற மற்றொரு உச்சரிப்பையும் ஒத்திருந்தது. அது, ‘நிச்சயமாக மரணம்தான்’ (Sure Die) என்று பொருள்பட்டது. எனவே இந்த எண்ணை வீட்டு எண்ணாகக் கொண்டவர்கள், ‘12A’ என்று அதை மாற்றிக்கொள்ளத் தவறுவதில்லை.
Resale என்று வரும் போது, இந்த எண் வீடுகள் விற்கப்படுவதற்கு சற்று சிரமமும், விலைக் குறைக்கப்படும் சாத்தியமும் ஏற்படுவதுண்டு.
சீனர்களுக்கு வரும் அதிர்ஸ்டம்.
8 – சீனர்கள் மிகவும் விரும்பும் ‘எண்.’ 8-ஐ வீட்டு எண்ணாக அமையப்பெற்றவர்கள் சந்தோஷத்தில் திளைத்துப் போவர். 8-ன் கெந்தனீஷ் உச்சரிப்பு, ‘Ba’. அதற்கு ‘சுபீட்சம் மற்றும் செல்வம்’ என்று பொருள். எவ்வளவுக்கு எவ்வளவு 8 எண் அவர்களுடன் சம்பந்தப்படுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு செல்வம் கொழிக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை. உ-ம் – வீட்டு எண் 8. சாலை எண் 8. வாகனத்தின் எண் 8. Single 8 எண் கிடைக்காதவர்கள் கூட்டு எண் 8 வரும்படி தமது தேர்வை வைத்துக்கொள்கின்றனர்.
18 – சீனர்களுக்கு மிகவும் பிடித்த இன்னுமொரு ராசி எண். இதன் உச்சரிப்பு ‘Shi Ba’. பொருள் – ‘நிச்சயமாக பணக்காரன் ஆவாய். (Definitely get rich, sure get rich.)
28 – இந்த எண் ‘Yih Baat’ என்று உச்சரிக்கப்பட்டது. அது, ‘Yih Faat’ என்ற உச்சரிப்பை ஒத்திருந்தது. அப்படியென்றால் ‘எளிதாக வளம் பெறுவாய்’. ஆங்கிலத்தில், ‘Easy Prosper.’
Resale என்று வரும்போது, மேற்கானும் எண்களைக் கொண்ட வீடுகளுக்கான Demand-ஏ வேறாக இருக்கும்.
நாட்டின் பெரும்பான்மை இனமான மலாய்க்காரர்களின் நிலைப்பாடு இதில் எப்படி இருக்கிறது?. இத்தகைய நம்பிக்கை எல்லாம் அவர்களிடம் குறைவாகவே காணப்படுகிறது. அவர்களின் மத நம்பிக்கை அதற்கு காரணமாக இருக்கலாம் என்பது என் எண்ணம்.
மலாய்க்காரர்களுக்கு வரும் அதிர்ஸ்டம்
4 – சீனர்களால் மிகவும் துர்திருஸ்டமான எண்ணாக கருதப்படும் இந்த எண், மலாய்க்காரர்களுக்கு மிகவும் பிடித்த ஒரே எண்ணாக இருக்கிறது. காரணம், அந்த எண்ணின் அமைப்பு அவர்களுக்கு, ‘கால் மேல் கால்’ போட்டுக்கொண்டிருக்கும் தோற்றத்தை ஒத்திருப்பதாகத் தோன்றுவதுதான். ஆக, ஒரு வீட்டிற்கு குடி போனால், ஒருவருக்குத் தேவைப்படுவதெல்லாம் என்ன? ‘கால் மேல் கால்’ போட்டுக்கொண்டு கால் பாதத்தை ஆட்டிக்கொண்டே ‘ஹாய்’யாக இருக்கும் ஒரு வாழ்க்கைதானே!.. அத்தகைய ஒரு வாழ்க்கை, உழைத்துதான் வரவேண்டுமென்று அவசியமில்லையே. ஊழல் செய்து வந்தாலும் பாதகமில்லைதான்.
இதற்கு உதாரணம்..
நஜீப் (முன்னால் பிரதமர்) – 42 ஊழல் குற்றச்சாட்டுகள். முதல் ஒன்றில் (SRC வழக்கு) குற்றம் நிரூபனமாகி 12 வருட சிறத்தண்டனையை அனுபவித்துக்கொண்டிருக்கிறான். 1MDB வழக்கு (4.5 மில்லியன் அமெரிக்க டாலர் ஊழல்) தற்போது நடந்துக்கொண்டிருக்கிறது. இப்படி, 42 வழக்குகள்.
ரோஸ்மா மன்சோர் (நஜீப்பின் மனைவி) – சரவாக் கிராமப்புற பள்ளிகளின் ‘Hybrid Solar Energy’ ஊழல்சம்பந்தமாக 3 அவதூறு வழக்குகளில் (Graft) குற்றம் நிரூபனமாகி 30 வருட தண்டனை வழங்கப்பட்டு, வழக்கு மேல் முறையீட்டில் இருக்கிறது.
அமாட் ஜஹிட் ஹமிடி (முன்னால் துணைப் பிரதமர்) – 80+ வழக்குகள் இவன் மேல் உள்ளன. அந்த வழக்குகளிலிருந்து தப்பிப்பதற்காகவே ஆளும் கட்சிக்கு அரசியல் நெருக்கடி கொடுத்து நாட்டின் 15-வது தேர்தலுக்கு வழிவகுத்தவன். இவன் மேல் இருக்கும் சில விமர்சனங்கள்.
1. 2006-ல் ஒரு தொழில் முனைவரை முகத்தில் குத்தி, மூக்கை உடைத்தது. அப்போது இவன் ஒரு துணை அமைச்சர்.
2. 2013 தேர்தலின் போது, நாட்டின் அரசியல்
சிஸ்டத்தில் திருப்தி இல்லாதவர்கள் இந்த நாட்டை விட்டு ‘Get Lost’ என்று சொன்னான்.
3. மலாக்காவில் ஒரு கூட்டத்தி, பயங்கரமான கிரிமினல்களை கண்ட இடத்திலேயே ‘Shoot to kill’ என்று பிதற்றியவன். அப்போது, இவன் நாட்டின் உள்துறை அமைச்சர்
4. நாட்டின் 13-வது தேர்தலின் போது, அரசாங்கம் இந்தியர்களுக்கு ஏதும் உதவி செய்வதில்லை..’ என்று மக்கள் குறைபட்டுக்கொண்டபோது, ‘வேண்டுமானால் நான் உங்களுக்கு சவப்பெட்டி அனுப்பிவைக்கிறேன்..’ என்று கிண்டல் செய்த ஒரு கிராதகன்.
எனினும், உண்மையாய் உழைத்து வசதியாய் வாழும் நல்ல மனிதர்களும் இருக்கவே செய்கின்றனர்.
சரி, எனது நம்பிக்கையைப் பற்றி, வீட்டு எண்ணைப்பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே என்று நீங்கள் கேட்பது தெரிகிறது. எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. ஆயினும், 1-ம் எண்ணின் ஆதிக்கம் என் வாழ்நாள் முழுக்க தொடர்ந்திருக்கிறது.
நான் பிறந்தது, 24 – 4 – 1953. 2+4+4+1+9+5+3 = 28 = 2+8 = 10 = 1+0 = 1
நான் குடியிருக்கும் வீட்டை வாங்கும் போது, நான் தேர்ந்தெடுத்த லாட் எண், 46 = 4+6 =10 =1+0 =1
வீடு கட்டி முடிக்கப்பட்டு வீட்டிற்கு கிடைத்த எண் 18. சாலை எண் 6/4. 1+8+6+4 = 19 = 1+9 = 10 = 1+0 = 1 மீண்டும் இன்னொரு 1.
என்ன, என் வீட்டு எண் 18 என்றா சொன்னேன்? சீனர்களின் ‘Feng Shui’-ல் 18-ஐ ‘Shi Ba’ என்றா சொல்கிறார்கள்!. அதன் அர்த்தம் என்ன? (Definitely get rich, sure get rich!.) நீங்கள் நம்புகிறீர்கள்?. அப்படியெல்லம் ஒன்றுமே கிடையாது. ஒருகால், உங்களின் நம்பிக்கை உங்களுக்கொரு Vibe-ஐ கொடுக்கலாம். மற்றபடி, உழைத்தால்தான் வயிற்றுக்கு ‘புவ்வா..’
‘UNDERSTAND THAT WEALTH IS A CONSEQUENCE, NOT REWARD’ – Richard Templer
இந்த நம்பிக்கையை வைத்து நான் எழுதிய கதையின் லிக்ன்க் கீழே.
1. 14-ம் எண் வீடு 12A ஆனது
2. 24-ம் எண் வீடு 22A ஆனது
3. ஒரு 14-ம் எண் வீடு கட்டிமுடிக்கப்பட்ட காலத்திலிருந்தே யாரும் குடிவராமல் இருக்கும் தோற்றம்.
4. எனது வீட்டு 18-ம் எண்
5. எங்கள் குடியிருப்பில் இடது புறம் இரட்டைப்படை எண்களும் வலது புறம் ஒற்றைப்படை எண்களும் கொண்ட ஒரு வீதி.








Comments

Popular Posts