மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்க சிறுகதைக் கருத்தரங்கு.


Memory Lane – 8

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்க சிறுகதைக் கருத்தரங்கு.
எங்கள் ஊரான ரவாங், ஒரு சிறு பட்டணம்! பெயரைச் சொன்ன உடனேயே இரண்டு விஷயங்கள் மட்டுமே கவனத்திற்கு வரும். ஒன்று, APMC என்று அழைக்கப்பட்ட சிமெண்ட் ஆலை. மற்றொன்று, ரெக்ஸ் தியேட்டர் அருகே ஒரு முதிய வங்காளி அன்பர் சுடச் சுட கிண்டி, விற்றுக்கொண்டிருந்த பால்கோவா! மற்ற விஷயங்கள் எதிலும் பிரசித்தம் கிடையாது. அதிலும், இலக்கியம் சம்பந்தப்பட் விஷயங்களில் எனக்குத் தெரிந்து ஒரு கை எண்ணிக்கையில்கூட இருக்கவில்லை!. கே. பி. முத்தமிழ்செல்வன் மற்றும் ஏகாம்பரம் மாரிமுத்து என்று இருவர் பிறருக்கு அறிமுகமான நிலையில் இருந்தனர். அதிலும், குறிப்பாக கே. பி. முத்தமிழ்ச்செல்வனின் கதைகளைப் பத்திரிக்கையில் பார்த்த ஞாபகம். அப்போது நான், ஆரம்பப்பள்ளியில் பயிலும் வயதினன் என்று நினைக்கிறேன். ஆக, தைப்பிங், பேராக், மற்றும் கெடா பகுதிகளில் இருந்த இலக்கிய படைப்புகளையும்; செயல்பாடுகளையும் ஒப்பிடும்போது எங்கள் பகுதி ஓர் அநாமதேயம்!
அது 1970 -களின் ஆரம்பகால வருஷங்கள். இப்போது நினைவில் இல்லாத ஒரு காரணத்திற்காக எனது நண்பன் பால் சின்னப்பனும்; நானும் எங்கள் தோட்டத்து இளைஞர் குழுவுடன் முரண்பட்டு அதிலிருந்து வெளியாகி இருந்தோம். அப்போது, சிவாஜி படம் ஒன்று வெளியாகி அதில் இடம்பெற்ற வசனம் பிரபலமாகியிருந்தது. அதை அப்படியே அந்தச் சூழ்நிலைக்கு ஏற்றதாக மாற்றி, வெளியாகும் கூட்டத்தில் நான் இப்படி சொன்னேன். ‘பணி தேடி செய்யமட்டும் உரிமை உண்டாம்!.. ஞாயத்தைக் கேட்க வரம்பிட்டுத் தடைச் செய்வாராம்!...’
இருவருமே வேலையில்லாமல் சுற்றிக்கொண்டிருந்தோம். இளைஞர் குழுவினருக்கு எதையோ நிரூபிக்க நினைத்தோம் போல!. ஒரு முடிவுக்கு வந்தோம். அந்த மாதத்து ‘மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்க சிறுகதைக் கருத்தரங்கை’ எங்கள் எஸ்டேட்டில் நடத்துவதாக முடிவெடுத்தோம். எழுத்தாளர் சங்க வரலாற்றிலேயே முதலாவதாக சிறுகதைக் கருத்தரங்கு ஒன்று, ஒரு எஸ்டேட்டில் நடைப்பெற்றதென்றால் அது, நாங்கள் நடத்தியச் சிறுகதைக் கருத்தரங்குதான்!.
இருவருக்குமே வேலையில்லை!. சிறந்த சிறுகதைக்கான பணமுடிப்பு; கருந்தரங்கில் கலந்து கொள்பவர்களுக்கு மதிய உணவு; அதற்கான சைவ, அசைவப் பொருட்கள்; சமைப்பவர்களுக்கு ஊதியம் மற்றும் தேனீர் என்று அத்தியாவசியச் செலவுகள் சில இருந்தன. பணத்தைத் தேடியாக வேண்டும்! வீட்டிலேயே கையை வைக்கலாமென்றால் ஏற்கனவே அடுப்பில் பூனைகள் தூங்கிக்கொண்டிருந்தன. அதோடு, களவு இருவருக்குமே கை வராத கலை!. எனக்காவது ஒரு சட்டையைத் திருடிய அனுபவம் இருந்தது. அதிலும் அது ஒரு ‘Failed Attempt’ வேறு! நாங்கள் இருந்தது புக்கிட் முஞ்சோங் தோட்டம். எங்கள் எஸ்டேட்டோடு சேர்த்து பத்து கேவ்ஸ் மற்றும் உலுயாம் என்று இன்னும் இரண்டு டிவிஷன்கள் இருந்தன. கடைசியில், மூன்று டிவிஷன்களிலும் வீடு வீடாகச் சென்று நன்கொடை வசூலிப்பது என்று தீர்மானித்துக்கொண்டோம்.
எஸ்டேட்டில் பெரும்பாலோருக்கு வாழ்வதே பெரும் பாடு! இதில், இலக்கியம் எல்லாம் ‘வேலையில்லாத பரியாரி செய்யும் வேலை!..’ ஆயினும், இலக்கியத்திற்காக இல்லாவிட்டாலும்கூட ‘இன்னாரின் பிள்ளைகள்’ என்ற அடையாளத்திற்கு அவர்களால் முடிந்த ஒரு ‘Monetary value’-வை கொடுத்து உதவினர். இன்னும் சிலருக்கு உதவிட மனசார ஆசை இருந்தது, ஆனால் வந்த வருமானமோ அதற்கு இடம் கொடுக்கவில்லை! அந்த இயலாமையை காட்ட முடியாமல் பாவம், அவர்கள் பட்ட அவஸ்தை!.. அந்த இம்சையை பார்க்க நேர்ந்த தருணங்கள், நாங்கள் தேடிக்கொண்ட சாபம்!
இறுதியில், வசூலித்ததை வரவு வைத்தபோது, நிதர்சனம் எங்களைத் திடுக்குற வைத்தது. நல்ல வேளையாக, சின்னப்பன் கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த தங்கத்திலான ஏசுநாதர் எங்களை ரட்சிக்க வந்தார்!. ஆயினும், அவராலும் எங்களை முழுமையாக மீட்க முடியவில்லை. நாங்கள் பதற்றத்திற்கு உள்ளானோம். Desperate-ஆன வழிகளைப் பற்றியெல்லாம் யோசிக்கலானோம். எங்களின் போதாமை எப்படியோ இளைஞர் குழுவின் கவனத்திற்கு வந்தது. அங்கே அவமானப் படவிருந்தது நாங்களல்ல, எங்கள் எஸ்டேட்!. அந்த எஸ்டேட் அபிமானமெல்லாம் எஸ்டேட்டில் வாழ்ந்திருந்தால் மட்டுமே உணரச் சாத்தியம். இளைஞர் குழு எங்களுடன் தோள் சேர்ந்தது.
பத்து கேவ்ஸைச் சேர்ந்த மணியம், இளைஞர் குழுவைச் சேர்ந்த லூர்துசாமி, என் அண்ணன் சுப்ரமணியம், கே. பி. முத்தமிழ்ச்செல்வன், சின்னப்பன் மற்றும் நான் கருத்தரங்கில் பங்கேற்று அம்மாதத்திய சிறுகதைகள் குறித்து எங்களின் கருத்துகளைப் பரிமாறினோம். எழுத்தாளர் சங்கத்திலிருந்து சாமி மூர்த்தி, மு.அன்புச்செல்வன், காரைக்கிழாரோ, பரிதா மணாளனோ (சரியாக ஞாபகம் இல்லை,) மற்றும் இன்னும் ஒரு சிலர் கலந்து சிறப்பித்தனர்.
எங்கள் எஸ்டேட்டைச் சேர்ந்த வேம்புலி மற்றும் செல்லப்பன் ஆகிய இருவரின் அசைவ உணவின் ருசியில் வந்தவர்கள் மண்டை வேர்த்துப்போக சாப்பிட்டு மகிழ்ந்தனர். பிற்பகல் மூன்று மணியளவில் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.
இது ஆவணப்படுத்தப்பட்டிருக்க வேண்டிய ஒரு நிகழ்வு. ம. த. எ. சங்கத்தால் ஆவணப்படுத்தப்பட்டிருந்தால் மகிழ்ச்சி!.. பாராட்டுதலும் கூட!. இல்லையாயின், ஆச்சரியப்படுவதற்கில்லை!.. தலைமைத்துவ பண்பு என்பது ஒரு திறன். பதவியில் இருப்பதால் மட்டுமே அது, தானாகவே வந்தடைந்துவிடும் என்று நினைப்பவன் முட்டாள்!..
ஒர் இலக்கிய நிகழ்ச்சிக்காக என் நண்பன் சின்னப்பன், எங்கள் எஸ்டேட் இளைஞர் குழு மற்றும் நான் இப்படியெல்லாம் மெனக்கெட்டதைப் புரிந்துக்கொள்ள பதவிப் பித்தும்; அரசியல்வாதியின் அனுசரணையும் வேண்டி பல்லிளிக்கும் பதர்களுக்குச் சாத்தியமே இல்லை!
இங்கே, இலக்கிய செயல்பாடென்பது ஊர் சுற்றுலா போய்வரும் WINDOW SHOPPING என்று ஆகிவிட்டது! Bon Voyage!..
A.
குழு படத்தில் (இளைஞர் குழு நிர்வாகத்தினர்)
(Standing. L - R))
1. சுப்ரமணியம் (என் அண்ணன்)
2. மாரிமுத்து
3. கோவிந்தன்
(Seated. L - R)
1. லூர்துசாமி
2. நான் (Not an office bearer)
3. கணேசன்
B.
1. சின்னப்பன்



Comments

Popular Posts