‘பாய்’ மகாத்மியம்!.
கோலாலம்பூர் குசும்பு – 40
அப்போது, எஸ்டேட்டில் நான் ஒரு சின்ன ‘பாய்’யாக இருந்தபோது இது நடந்தது.
எங்கள் எஸ்டேட்டில் முஸ்லீம் ‘பாய்’ ஒருத்தர் இருந்தார்.
நாங்கள் எல்லோரும் அவரை ‘பாய்..’ ‘பாய்..’ என்று அழைத்தோம். அவரும் என்னை ‘பாய்’ என்றுதான் அன்பாக அழைத்தார்.
அவர் ஒரு ‘பாய்’ வியாபாரி!.
யாராவது அவரிடம், ‘ஏன் ‘பாய்’ விக்கிற வியாபாரம் செய்கிறீங்க ‘பாய்’?’ என்று கேட்டால், அவர் உடனே இந்தப் பாட்டு கேசட்டை போட்டு விடுவார். அந்தப் பாடல்…
‘பாய் விரித்து படுத்தவரும்… வாய் திறந்து தூங்குகிறார்..
பஞ்சனையில் நான் படுத்தும்..
நெஞ்சிலோர் அமைதியில்லை...’
‘பாய்’யில் படுத்தால் நல்ல தூக்கம் வரும் என்பது அவர் சொல்ல வந்த செய்தி.
ஒரு நாள்,
“இந்த ’பாய்’ என்ன விலை ‘பாய்?..” என்று கேட்டேன்.
அவர்,
“இந்த ‘பாய்’யா ‘பாய்..’? அஞ்சி ரூ'பாய்’ 'பாய்'..” என்றார்.
“ரொம்ப வெலயா இருக்கே ‘பாய்’?..” என்றேன்.
“இது, பன மர ஓலீல செஞ்ச ‘பாய்’, ‘பாய்’!. அந்தக் காலத்துல ஜப்பான்கார சிப்’பாய்’ங்க பாவிச்சது..” என்று சொன்னார்.
“இந்த 'பாய்' எனக்கு வேணாம் ‘பாய்’..” என்று சொல்லி நகர்ந்தேன்.
பின்னாலிருந்து அவர்,
“ஏய், ‘பாய்’.. ஏய், ‘பாய்’..” என்று கத்தினார்.
நான் பதிலுக்கு,
“‘பாய்’.. ‘பாய்’..” காட்டிவிட்டு திரும்பிகூட பார்க்காமல் வீறாப்'பாய்' நடந்தேன்.

Comments
Post a Comment