இரண்டு வழிபாட்டு தலங்கள் – ஒரு பிரச்சினை – இரு வேறு நியாயங்கள்.

 


பேசாப் பொருள் பேசினேன் – 30

இரண்டு வழிபாட்டு தலங்கள் – ஒரு பிரச்சினை – இரு வேறு நியாயங்கள்.
வழிபாட்டு தலம் 1 (மசூதி)
ராமரின் ஜென்ம பூமியாக கருதப்படும் அயோத்தியாவில் இருக்கும் பப்ரி மசூதி, 16-ம் நூற்றாண்டில் (1528/1529) கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. அதைக் கட்டியவன் பாபர் மன்னன். ராம்கோட் என்ற மலையில் அமைந்திருக்கும் அந்த மசூதி, ஏற்கெனவே அங்கிருந்த ராமர் கோவில் ஒன்றை இடித்து அதன்மேல் எழுப்பப்பட்டிருக்கிறது என்று சில தீவிரவாதிகள் நம்பியதால் 19-ம் நூற்றாண்டிலிருந்தே இந்து, முஸ்லீம் சகோதரர்களுக்கிடையே கருத்து வேற்றுமை மூழ்கிறது.
டிசம்பர் 1992-ல் அது உச்சம் பெற்று, ‘கர சேவகர்களால்’ மசூதி தாக்கப்பட்டு, சேதத்திற்குள்ளாகிறது.
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையின் பெயரில் மசூதி தொல்லியல் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படுகிறது. வெறும் 15-தே நாட்கள் கள ஆய்விற்கு பின்னர் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் கீழ்காணும் ஆய்வரிக்கையைச் சமர்ப்பிகிறது.
The report of the excavation concluded that there were ruins of "a massive structure" beneath the ruins of the mosque which was "indicative of remains which are distinctive features found associated with the temples of north India", but found no evidence that the structure was specifically demolished for the construction of the Babri Masjid.
இந்த ஆய்வறிக்கை மிகுந்த பாராட்டிற்குள்ளான அதே நேரத்தில் பலத்த எதிர்ப்பிற்கும் உள்ளாகிறது.
பல மேல்முறையீட்டிற்கு பின்னர், இந்திய சுப்ரீம் கோர்ட், பிரச்சினைக்குரிய தலத்தில் ராமர் கோவில் கட்ட தீர்ப்பளிப்பதோடு, அங்கிருந்து 19 மைல் தொலைவில் டன்னிபூர் எனும் இடத்தில் மசூதி கட்டிக்கொள்ள 5 ஏக்கர் நிலம் வழங்குகிறது.
ஜனவரி 26, 2021-ல் மசூதி கட்ட அடிக்கல் நாட்டப்பட்டப் பின்னர், செப்டம்பர் 2024 வரை போதிய நிதி வசதியில்லாமல் மசூதி கட்டப்படாமலேயே இருக்கிறது.
வழிப்பாட்டுத் தலம் – 2 (கோயில்)
ஆண்டு 1893!.
சஞ்சிக்கூலிகளாக மலாயா வந்த இந்திய வம்சாவளியினர் ‘கோவிலில்லா ஊரில் குடியிருக்காதே’ என்ற பழமொழிக்குப் பழகிப் போனவர்கள். நாள் முழுக்க முது ஒடிய வேலைச் செய்த வேதனையைச் சொல்லி அழ, அவர்களுக்கு ஒரு ஸ்தலமும், ஒரு ரட்சகரும் தேவைப்பட்டிருக்க வேண்டும்.
கற்கோவில் எழுப்பித் தெய்வ வழிபாடு செய்யும் சக்தியெல்லாம் அந்த அடிமைகளுக்கு இருக்கவில்லை. கிராமத்தில், மரத்தடியில் சிலையைச் சாற்றி வழிப்பட்ட அனுபவம் இருந்தது. அந்தச் சிலைக்கும் தம்மை காப்பாற்றும் வல்லமை இருப்பதாக அவர்கள் நம்பவும் செய்தனர்.
காலணித்துவ அரக்கர்களின், கங்காணிகள் என்ற கருப்பு துரைகளின் அட்டூழியங்கள் பொறுக்கும்படி இல்லை. நெஞ்சமெல்லாம் ஆத்திரம் கொந்தளிக்கிறது. அவர்களைக் காலால் மிதித்து, கையிலிருக்கும் ‘சூலாயுதத்தால்’ மார்பைப் பிளந்து போட்டால்தான் என்ன?. ஆத்திரம் இருந்த அளவிற்கு தைரியமில்லை!.
அதையெல்லாம் கொட்டித் தீர்க்க மூர்க்கமிக்க ஓர் அம்மன் வேண்டும். அரக்கர்களான அம்பன் மற்றும் அம்பரனை துவம்சம் செய்த ஸ்ரீபத்ர காளியம்மன்தான் அதற்குத் தகுந்தவள்.
அவர்களின் வாழ்விடத்திலேயே ஒரு மரம் இருந்தது. வேலைச் செய்து ஓய்ந்து போனவர்களுக்கு நிழலைத் தந்து ஆசுவாசம் படுத்தும் மரம், அரக்கர்களின் ஆபத்திலிருந்து அவர்களைக் காப்பாற்றாதா என்ன?.
ஸ்ரீபத்ர காளியம்மனின் சிலையொன்று மரத்தடியில் பிரஷ்டம் செய்யப்படுகிறது.
நாடு சுதந்திரம் பெற்றிராத காலமது. அந்த ஸ்தலத்தில் சிறியதாய் ஒரு குடிசைக் கோயிலை அம்மக்கள் கட்டிக்கொள்கின்றனர். சிலாங்கூர் அரசாங்கத்தின் 1800 மற்றும் 1900-ம் ஆண்டு அதிகாரப்பூர்வ பதிவேட்டில், இரண்டு வருட ஒப்பந்த கூலி நிபந்தனையைப் பூர்த்தி செய்தவர்கள் தமக்கான வழிபாட்டு தலங்களும் வாழ்விடங்களும் கட்டிக்கொள்ள ஊக்குவிக்கப்படுவதாக குறிப்பு கூறுகிறது.
ஆக, இந்தக் கோயில் அப்படியான ஒரு புரிந்துணர்வில் கட்டப்பட்டிருக்கும் சாத்தியமே அதிகம் இருக்கிறது. இப்போது அதை ஓர் அத்துமீறலாகப் பார்ப்பது, இன, மத அரசியல்.
117 வருடங்களுக்குப் பின்னர், 2010-ல் கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் கோவிலிருந்த இடத்தைக் கையப்படுத்துகிறது. 117 வருடங்களில் கோயில் பலவாறான மாற்றங்களுக்குள்ளாகி, ஆறடி அம்மன் சிலையுடன் தற்போதையத் தோற்றத்தைப் பெறுகிறது. நவம்பர் 15 2012-ல் நிர்வாகம் அந்தக் கோயில் நிலத்தை இஸ்லாம் அல்லாதாரின் வழிபாட்டுத் தலமாக அடையாளப்படுத்தி, மாநகர் நில மேலாண்மையில் உரிய மாற்றங்களைச் செய்யக்கோரி விண்ணப்பம் செய்கிறது. ஆனால், 2014-ல் அதே நிலம் மூன்றாம் நபருக்குத் தெரியாமல் ‘Jakel’ என்ற ஜவுளி நிறுவனதிற்கு விற்கப்படுகிறது.
2012-ல் செய்யப்பட்டிருந்த விண்னப்பம் என்ன ஆனது? கோவில் நிர்வாகத்தினருக்கு ஏன் முன்னுரிமை வழங்கப்படவில்லை? தெரியாது!.. அந்த விற்பனை விவகாரம் 2016-யே கோவில் நிர்வாகத்தின் கவனத்திற்கு வருகிறது.
கோயில், சட்டத்திற்கு புறம்பாக தனியார் நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதாகவும் எனவே குறிப்பிட்ட காலக்கெடுக்குள் காலி செய்யாதப்படாதபட்சத்தில் கோயில் அடித்து நொறுக்கப்படும் என்று 2025-ல் மாநகராட்டி ஆணைப் பிறப்பிக்கிறது.
கோவில் இருந்த அதே இடத்தில் ‘மடானி மசூதி’ என்ற பெயரில் இஸ்லாமிய வழிப்பாட்டு ஸ்தலத்தின் அடிக்கல் நாட்டு விழா மார்ச் 27-ல் நடைப்பெறவிருக்கும் செய்தி வெளியாகிறது.
கோவில் பிரச்சினை இனப் பிரச்சினையாக மாறுகிறது. கோவிலினின்று 50 மீட்டர் தள்ளியிருந்த காலி நிலத்தில் மசூதியைக் கட்ட ஆலோசனைக் கூறப்படுகிறது. ஆனால், அதை ஏற்றுக்கொள்ள பிரதமரும் மதவாதிகளும் தயாராக இல்லை. ஏனெனில், அது சம்பந்தப்பட மதத்தின் கௌரவப் பிரச்சினையாகிப் போகும். இஸ்லாம் இன்னொரு மதத்திடம் தோற்றுப் போனதாகப் பார்க்கப்படும்.
மத நல்லிணக்கம், மானிட இரக்கம் என்பதெல்லாம் எந்த மதத்திற்கும் விளம்பரத்திற்கு தேவையான வார்த்தைப் பிரயோகங்கள் மட்டுமே. கடைப்பிடிக்க வேண்டிய கொள்கைகள் ஆகா!.
பிரதமர் ஆன்வர் இப்ராமிற்கு அடையாளச் சிக்கல் ஒன்றுள்ளது. அவர் தோற்றுவித்தக் கட்சியின் பெயர், ‘நீதிக் கட்சி’. அவர் போட்ட கோஷம் ‘சீர்திருத்தம்’. ஆட்சியைப் பிடிக்கும்வரை எல்லாம் சரி!. ஆனால், பதவியில் நீடிக்க, நீதிமான் என்பதைவிட மதத்தின்பால் காட்டும் தீவிரவாத அடையாளமே வெற்றிக்கு உத்திரவாதம்.
130 வருடங்கள் பழமையான கோயில். இப்போது இதன் தலைவிதியை நிர்ணயிக்கும் எந்த கொம்பனும் இன்னும் பிறந்திருக்கக்கூட மாட்டான்!.
கோவில், நாட்டின் இன, மத நல்லிணக்கத்தின் பெருமைமிகு சின்னமன்றோ!. அது, பெரும்பான்மையினரின் மதத்திற்கு விடும் அச்சுறுத்தலாகுமா என்ன?.
கோவில் என்னதான் வேறொரு இடத்தில் பெரியதாகவும், பிரமாதமாகவும் கட்டப்பட்டாலும் அசலுக்கிருந்த புராதனம் வந்து சேருமா?.
இந்தியாவில் பப்ரி மசூதிக்கு இழக்கப்பட்டது எவ்வளவு பெரிய அநியாயமோ, கொடுமையோ அதற்குச் சற்றும் குறையாத அநியாயமே இங்கு, ஸ்ரீபத்ர காளியம்மன் கோவிலுக்கு இழைக்கப்படுவதும்.
பிரதமரே, நாளை அந்தக் கோவிலிலிருந்து ஒலிக்கப்போகும் மணியோசை, பூசைக்கான அழைப்பாகவா உங்கள் செவிகளில் ஒலிக்கப் போகிறது?.
130 வருட வரலாற்றை இழந்து, ஒப்பாரி வைக்கும் ஓலமன்றோ அது!.
அது உங்களுக்குத் தெரியவில்லையாயின் உங்கள் கட்சியின் பெயரிலுள்ள ‘நீதி’க்கு என்னதான் பொருள்.?.
எந்த மதத்திற்கும் நியாய அநியாயங்கள் ஒரு பொருட்டே அல்ல!. தீவிரவாதமே அதன் ஜீவன். ஒருவனைக் கொல்வதால் மதக் கீர்த்தி பெருகுமெனில், அவனைக் கொல்வதே மதத்திற்குப் பெருமை!.
ரோஹிங்கா, காசா, குஜராத் மற்றும் இலங்கை தேவாலய படுகொலைகள் யாவும் கூறும் செய்தி அதுவன்றி வேறென்ன?.
ஜெய் ஸ்ரீராம்!. அல்லா கூ அக்பர்!.. அல்லேலூயா!. புத்தம் சரணம் கச்சாமி!.
- எங்களின் ஆரம்பம் இங்கே இப்படித்தான் இருந்தது.



Comments

Popular Posts