ஆங்கிலக் கல்வியும் அணிந்துகொண்ட சீருடையும்
MEMORY LANE – 1
ஆங்கிலக் கல்வியும் அணிந்துகொண்ட சீருடையும்
அது அறுபதுகளின் பிற்பகுதி. ஆனால், ‘69 இனக்கலவரம் தூண்டிவிடப்படுவதற்குச் சில வருடங்களுக்கு முன்னர். ஆறாம் வகுப்போடு தமிழ்க் கல்வி நிறைவுற, REMOVE CLASS ( A transition year for students from Chinese and Tamil medium schools to acquire sufficient proficiency in English which is the medium of instruction in secondary school. From Form 1 to Form 5) -ல் நான் சேர்ந்திருந்த நேரம். எஸ்டேட்டிலிருந்து 10 மைல்கள் (அப்போதெல்லாம் KM பரவலான உபயோகத்திற்கு வந்திருக்கவில்லை) தூரத்திலிருந்த ரவாங் டவுனில் ஆங்கிலப்பள்ளி. அடுப்பங்கரையில் பூனைகள் தூங்கிய காலம். வீட்டிற்குப் பின்னால் மரவள்ளிச் செடிகளும், ‘கொடாப்பில்’ வளர்க்கப்பட்ட கோழிகளும் வீட்டில் நிலவிய வறுமையைக் குறைக்க உதவின. சம்பள நாளன்று மட்டுமே விரல்கள் கரண்சி நோட்டுகளை நக்கி அதன் ருசியை உணர்ந்தன. எனது ஆங்கிலக் கல்வி ஆரம்பமானது. பள்ளிச் சீருடைகள் ‘கஞ்சி மாவு’ போடப்பட்டு மொட மொடவென்று, அணிந்துகொள்ளும் மாணவனைப்போலவே விரைப்பாய் இருக்கவேண்டுமென்பது எந்தப் பள்ளி எழுதி வைத்த சட்டமோ, என் தாய் தவறாமல் அதைக் கடைப்பிடித்தார். பின்னர், வீட்டு வறுமையில் ‘கஞ்சி மாவு’ வாங்க காசு இல்லாத நிலை. ‘Necessity is mother of invention.’ அன்றிலிருந்து வெந்த சாதத்திலிருந்து வடிக்கப்பட்டக் கஞ்சியில் எனது சீருடைகளை முக்கிக் காயவைத்து மொட மொடக்க வைத்தார். எனது வேர்வையிலோ அல்லது மழையிலோ நனைந்து, எனது சீருடையிலிருந்து வெளிப்பட்ட துர்நாற்றத்தை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். அதையெல்லாம் சகித்துக்கொண்டு கொஞ்சமும் முகம் சுளிக்காமல் நட்புப் பாராட்டிய சக மாணவர்கள், தேவர்கள் அன்றோ?. நண்பேன்டா!
நல்ல வேளையாக ‘L C E’ (Lower certificate of education) தேர்வோடு நான் படிக்கத் தகுதியற்றவன் என்று கல்வி அமைச்சுக்குத் தெரிந்து போனது. மேலும் இரண்டு வருடங்களுக்கு சக மாணவர்களின் சகிப்புத் தன்மையைச் சோதனைக்குள்ளாக்க விடாமல் பெருந்தன்மையுடன் எனது பள்ளிப் படிப்பை முடித்து வைத்தது.
‘ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது..’ என்ற பழமொழியை ஏன் தான் தமிழாசிரியர் மனதில் பதியப் படிக்கச் சொன்னாரோ!..

Comments
Post a Comment