இந்து அறவாரியமும் அதன் தலைவர் பதவியும்.

 


பேசாப் பொருள் பேசினேன் – 31

இந்து அறவாரியமும் அதன் தலைவர் பதவியும்.
பினாங்கு இந்து அறவரியம் என்பது பினாங்கு மாநில இந்துக்களின் சமய மற்றும் சமூக தேவைகளை நிர்வகிக்க மாநில அரசால் தோற்றுவிக்கப்பட்ட சட்டப்பூர்வமான ஒர் அமைப்பாகும். அதன் முக்கியப் பணிகளாவன, மாநிலத்திலுள்ள இந்து வழிபாட்டுத்தலங்கள், அவைப் பெறும்/கொடுக்கும் நன்கொடைகள், அவற்றின் சொத்துகள், இந்து மயானங்கள் போன்றவற்றை நிர்வகிப்பதாகும். இவற்றைத் தவிர அதன் நிர்வாகத்திற்கு உட்பட்ட மேலும் சில அறக்கட்டளைகள் கீழே.
- Waterfall Endowment
- Queen Street Endowment
- Butterworth Endowment
- Sri Kunj Bihari Endowment (1835-ல் கட்டப்பட்ட கிருஸ்ணர் கோவில்)
- Ranee Dhoby Ghaut Endowment (வண்ணான் துறை. Heritage அந்தஸ்து கொண்ட இடம்.)
ஆறக்கட்டளையின் நிர்வாகத்தினரை மாநில அரசின் சிபாரிசின் பேரில் பினாங்கு கவர்னர் நியமிப்பார். தற்போதைய நிர்வாகத்தின் பதவிகாலம் ஜூலை 2025-ல் முடிவடைகிறது.
புதிய தலைவராக ஜக்ஜீட் சிங் டியோ எனும் சீக்கியர், (இவர் தற்போது பினாங்கின் இரண்டாவது துணை முதலமைச்சரும்கூட) நியமிக்கப்பட உள்ளதாக செய்தி கசிந்துள்ளதால் அவரின் நியமனம் கண்டணத்திற்குள்ளாகி இருக்கிறது.
1906-ல் வரையப்பட்ட இந்து அறக்கட்டளைச் சட்டத்தில் கீழ்க்காணும் சட்டமிருப்பதை முன்னால் அறக்கட்டளைத் தலைவர் ஒருவரே சுட்டிக் காட்டியிருக்கிறார்.
‘The term ‘Hindu’ includes Sikh and any branch or variety of religion professed by the natives of India, except the Christians, Buddhist and Muslim religions.’ (பார்க்க- FMT report)
ஆக, ஒரு சீக்கியரை தலைவராக நியமிப்பதில் எந்தச் சட்ட மீறலும் இல்லையென்பது தெளிவாகிறது.
இந்த நியமனத்தைக் குறித்து இந்து தர்ம மாமன்றம் கருத்துரைக்கையில், ‘இந்து அறக்கட்டளைக்கு நிர்வாக உறுப்பினர்களைத் தேர்வு செய்யும்போது அவர்கள், இந்து கலாச்சார மற்றும் ஆன்மீகப் பாரம்பரியத்தை பிரதிபலிப்பவர்களாக இருத்தல் வேண்டும் என்கிறது.
மாநில அரசு, ஆண்டுதோறும் அறக்கட்டளைக்கு கணிசமான தொகையை மானியமாக வழங்கி வருகிறது. நிர்வாகம் செய்ய வேண்டியதெல்லாம் அந்த நிதி ஒதுக்கீட்டை நேர்மையுடன் கையாண்டு அறக்கட்டளைகளின் தேவைகளைப் பூர்த்திச் செய்துக்கொள்ளவதோடு அதன் நிதி நிலைமையை மேம்படுத்திக்கொள்ள புதிய வழிமுறைகளை கண்டறிவதுதான்.
அதற்குத் தேவை நல்ல, நேர்மையான நிர்வாகத்திறன் மிக்க accountable administrators. அவ்வளவுதான்!. ஏதும் ‘misappropriation of funds’ நடந்திருப்பதாகக் கணக்கறிக்கையில் சந்தேகம் எழுப்பப்பட்டிருந்தால் உடனே பதவி விலகி, தமது நேர்மையை நிலைநாட்டும் ‘திமிர்’ இருக்கவேண்டும். அந்தத் ‘திமிர்’ ஒரு சீக்கியருக்கு இருக்குமானால் அவர் ஏன் தலைவராக வரக்கூடாது. மேலும், துணைத் தலைவர் மற்றும் 11 ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தேவைப்படும் நிர்வாகத்தில் மற்ற 12 பேர்களையும் கலாச்சார மற்றும் ஆன்மீக பாரம்பரியமிக்கவர்களாக தேர்ந்தெடுத்துவிட்டுப் போகட்டும். அவர்கள் அந்தச் சீக்கியத் தலைவருக்கு சமய மேம்பாட்டிற்கான வழிமுறைகளைச் சொல்லட்டுமே?. என்ன குறை வந்துவிடப் போகிறது.
ஆக, ஆட்சிகுழுத் தலைவர் பக்கா இந்துவாக இருக்க வேண்டிய அவசியம்தான் என்ன? இந்துப் பிரச்சார சபா பீரங்கிகளாக இருந்து சமயப் பரப்புரையா செய்யப் போகிறார்?.
பினாங்கில் சமீப காலம் வரை ஒரு தமிழ்ப் பேராசிரியரே இரண்டாவது துணை முதலமைச்சராக இருந்தார். பினாங்கில் இன்னும் பல தமிழ் பேரறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் இருக்கவே செய்வார்கள்.
பன்னாட்டு சுற்றுப்பயணிகள் வந்து போகும் இடத்திலுள்ள பெயர்ப் பலகைகளில் தமிழ் இப்படி எழுதப்பட்டுள்ளது. அதனால் என்ன? நமக்குத் தேவை தலைமைப் பதவியில் ஒரு தமிழன்!. ஒரு இந்து!. இந்த லட்சணத்தில் முதல் தமிழாராய்ச்சி மாநாடு நடத்திய நாடு என்ற பெருமை வேறு!🤦
அறக்கட்டளையின் ஆட்சிக் குழுவில் இடம்பெறத் துடிக்கும் சமூக ஆர்வலர்களின் கலாச்சார மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தின் லட்சணத்தை நீங்கள் கண்டறிய வேண்டுமா? அடுத்த வருடமே பினாங்கு அரசு, அறக்கட்டளைக்கான மானியத்தை நிறுத்திவிட்டு, நிர்வாகமே சுயமாகவே அதைத் தேடிக்கொள்ளச் சொல்ல வேண்டும் என்று ஒரு சட்டத் திருத்தத்தை கொண்டு வந்தாலே போதும். இவர்கள் சமயத்தின்பால் காட்டும் மெனக்கெடல் என்னவென்று அடுத்தக் கணமே தெரிந்துப் போகும்.
எந்தத் தலைவருக்கும் தேவை மூன்று அடிப்படைத் தகுதிகள்.
நிர்வாகத்திறன், Accountability மற்றும் தூர நோக்குப் பார்வை.
இவை எதுவும் இல்லாமல் வெறும் அரசியல் செல்வாக்கால் மட்டுமே தலைவனாக வருபவன், ஒரு நாள், தான் சார்ந்த கட்சியையும் மக்களையும் நட்டாற்றில் விடுவான் என்பது வரலாறு.
அவன், மக்களின் பார்வையில் ‘அரசியல் செல்வாக்கு’ என்ற மண்ணைத் தூவி, தனது இயலாமையை நோக்கியே பயணிப்பான். இதைத்தான், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்,
‘நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்.’ என்று சாடினார். இதற்கு உதாரணம் சொல்லத்தக்க தலைவர்கள் நம்மிடம் எண்ணிலடங்கா பேர் இருக்கிறார்கள்.
Laurence J. Peter என்ற கனடியக் கல்வியாளர் ‘Peter Principle’ என்ற நூலை எழுதி, புதிய நிர்வாகக் கருத்தாக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தினார். அதன் நிதர்சன நிரூபனங்கள், நமது இந்திய சமய மற்றும் அரசியல் தலைவர்கள்.
சமீப காலமாக நாட்டில் இந்துக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளிலிருந்து நூலாசிரியர் சொல்லும் கூற்றை நீங்கள் புரிந்துகொள்ளலாம்.
கேஸ் 1.
கோலாலம்பூர் மையப் பகுதியில் இருக்கும் நாட்டின் பழமையான ஆலயமான ஸ்ரீ மாகாமாரியம்மன் ஆலயம் 1873-ல் கட்டப்பட்டு இந்த 2025-தோடு 152 ஆண்டுகள் ஆகின்றன. இந்தக் கோவிலின் ஸ்தாபகர், கெ. தம்புசாமி பிள்ளை.
காலணித்துவ மலாயாவில் தமிழர்களின்/இந்தியர்களின் தலைவராக அறியப்பட்டவர். வணிகர், செல்வந்தர், லேவா தேவி வியாபாரி மற்றும் அரசாங்க குத்தகையாளர். கொடை வள்ளல்.
ஆலயம், ஆரம்பத்தில் பிள்ளை அவர்களின் குடும்ப கோவிலாக மட்டுமே இருந்தது. 1920 இறுதி வாக்கிலேயே ஆலயம் பொதுஜன பிரவேசத்திற்கு அனுமதிக்கப்பட்டது. பின்னர், கோவிலின் நிர்வாகப் பொறுப்பு ஸ்ரீமகா மாரியம்மன் தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்படுகிறது.
பத்துமலையில் இருக்கும் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி ஆலையமும் இவரால் நிருவப்பட்டதுதான்.
பிள்ளை அவர்களின் தனிப்பட்ட ஆலயமேயானலும் 1885-லேயே அதற்கான உரிமத்தைப் பெற்று ஆலயத்திற்கு அரசு ஆங்கீகாரத்தையும் சாசுவாதப்படுத்தி வைத்திருக்கிறார்.
இதைத்தான் தலைமைத்துவ பண்பு, தூர நோக்கு சிந்தனை என்பது.
கேஸ் 2.
இப்போது, விமர்சனத்திற்குள்ளகியிருக்கும் தேவி ஸ்ரீபத்ர காளியம்மன் ஆலய விவகாரத்திற்கு வருவோம்.
130 ஆண்டுகால புராதனப் பெருமையெல்லாம் சரி!. ஒரு காலத்தில் அவ்விடம் காடாக இருந்ததும் உண்மையே.
152 கால கூரைக் கோவிலேயானாலும் பட்டா இல்லாத நிலத்தில் இருக்கும் ஆபத்தை அறிந்த ஒரு தலைவர் அதை முறைப்படி சாசனப்படுத்துகிறார். ஆனால், அதே கோலாலம்பூரில் இருக்கும் இந்த தேவிஸ்ரீ பத்ர காளியம்மன் கோவில் நிர்வாகமோ 2012-ம் ஆண்டு வாக்கிலேயே நில பட்டா வேண்டி கோரிக்கை வைக்கிறது. 1895-ம் ஆண்டில் கட்டப்பட்ட கோயில் 2012-ம் ஆண்டு வரை ஆவணப்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லையா என்ற கேள்விக்கு யாரிடம் பதில் இருக்குமோ தெரியவில்லை.
1946-ல் நாட்டிலுள்ள இந்தியர்களின் நலம் காக்க மலேசிய இந்திய காங்கிரஸ் தோற்றுவிக்கப்படுகிறது.
கடந்த 68 ஆண்டுகளாக இரண்டு பிரதானக் கட்சிகளுடன் சேர்ந்து நாட்டை ஆட்சி செய்து வரும் கட்சி ம இ கா!. இந்தக் கோவில் விவகாரமெல்லாம் ம இ காவின் ‘இந்தியர்களின் நலம் காக்கும்’ கோஷத்தின் கீழ் வருகிறதா தெரியாது?.
கூட்டரசு பிரதேச ம இ கா-வின் தலைவர்களாக இதுவரை எத்தனையோ பேர் வந்து போயிருப்பர். ஆனால், அந்தத் தலைவன்களில் ஒருவனுக்குக்கூட இந்தக் கோவில் விவகாரத்தில் அக்கறை இல்லாமல் / தீர்த்துவைக்க முடியாமல் போனதுதான் அவர்களின் தலைமைத்துவ Incompetency-யின் பல்லிளிக்கும் அடையாளமாகும்.
பட்டா இல்லாத இடத்தில் ஆலயம் இருக்கிறது!. என்னதான் அரசாங்கத்தால் தண்ணீர் மற்றும் மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தாலும் அது பட்டா கிடைப்பதற்கான அங்கீகாரம் என்று அரசியல் மூடர்களே எண்ணுவர்.
துங்கு அப்துல் ரஹ்மான், துன் ரசாக், ஹுசேய்ன் ஓன், அப்துல்லா அமாட் படாவி, நஜீப் ரசாக், மொஹிடின் யாசின், இஸ்மாயில் சப்ரி யாக்கோப், என்று 7 பிரதமர்களுடன் ம இ கா இணைந்து பணியாற்றியிருக்கிறது. அந்த ஏழு பிரதமர்களும் அவரவர் பாணியில் இன தீவிரவாதிகளேயானாலும் அவர்களில் சிலர், நமது நியாயமான கோரிக்கைகளுக்குச் செவி சாய்கக்கூடிய இளகிய மனதுடையவர்களே. அந்தச் சந்தர்ப்பங்களை ஏன் எந்த ஒரு ம இ கா தலைவனாவது பயன்படுத்திக்கொண்டு இத்தகைய விவகாரங்களைத் தீர்த்துவைக்கவில்லை?. அதுவன்றோ தலைமைத்துவப் பண்பு!.
அவர்கள் எல்லோருமே தூர நோக்கு சிந்தனையேதும் இல்லாமல் பதவில் தூங்கி வழிந்த குருடர்கள்!.
இப்போது கூப்பாடு போட்டு என்ன பயன்? பிரச்சினை சுமூகமாக தீர்க்கப்பட்டுவிட்டதாக ‘photo shoot’-க்கு வேண்டுமானால் கும்பலோடு நின்று போட்டோ எடுத்து குதூகளிக்கலாம்.
பதவியில் இருப்பதால் மட்டும் ஒருவன் தலைவனாகிவிட முடியாது. அந்தப் பண்பு இல்லாதவன் எந்தக் காலத்திலும் ‘அஸ்தமனத்தில் சூர்ய நமஸ்காரம்’ செய்ய எத்தனிக்கும் மூடனாகவே இருப்பான்.
ஆக, தலைமைத்துவ பண்பு, நேர்மை, தூரநோக்குப் பார்வை யாரிடமிருந்தாலும் அவன் உடனே பயன்படுத்திக்கொள்ளத்தக்க தலைவனே!. இல்லை, நமக்கு நமது சமய,மொழி அடையாளம்தான் முக்கியமென்றால் பினாங்கு இந்து அறக்கட்டளையின் மேல் மலேசிய உழல் தடுப்பு ஆணையம் மேற்கொண்ட கடந்த கால சம்பவங்களை மறு வாசிப்பிற்கு உட்படுத்திக் கொள்ளலாம்.
- இதனை இதனால் இவன்முடிக்கும் என்று ஆய்ந்து
அவனை அவன்கண் விடல்.
- செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்.
மேற்காணும் குறள்களின் பொருளை நமது தலைவர்கள் தெரிந்துணர்ந்தால் நமது இனத்தின் சாபக்கேடு யார் என்பது அவர்களுக்குத் தெரிந்து போகும்.
- தம்புசாமி பிள்ளை
- ஸ்ரீ மாரியம்மன் ஆலயம்
- தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம்
- முதல் தமிழாராய்ச்சி மாநாட்டை எடுத்து நடத்திய நாட்டில் தமிழ்



Comments

Popular Posts