தமிழ்ப்பள்ளிகளும் மாணவர் எண்ணிக்கையும்.
பேசாப் பொருள் பேசினேன் – 28
தமிழ்ப்பள்ளிகளும் மாணவர் எண்ணிக்கையும்.
சமீப காலமாக ஒவ்வொரு கல்வியாண்டின் ஆரம்பத்திலும் தமிழ்ப்பள்ளிகளில் முதலாமாண்டு மாணவர்களின் பதிவு எண்ணிக்கை அஞ்சத்தக்க வகையில் குறைந்துகொண்டே வருவதைத் தமிழ்ப்பத்திரிக்கைகள் தலைப்புச் செய்தியாய் அச்சிட்டு எச்சரிக்கத் தவறுவதேயில்லை.
பட்டணங்கள், அவற்றையொட்டி வாழ்ந்தவர்கள், ஆங்கிலக் கல்வி பெற்றிருந்த பெற்றோர், தோட்டத்து கிராணிமார்கள் போன்றோரின் பிள்ளைகள் ஆங்கிலக் கல்வியையே ஆரம்பக்கல்வியாகத் தேர்ந்தெடுத்தனர். இரண்டாம் உலகப் போருக்கு முன்னர், நாட்டின் மொத்த மாணவர் எண்ணிக்கையில் 78% சதவிகிதத்தினர் மிஸ்ஷனரி பள்ளிகளில் ஆங்கிலக் கல்வி கற்றனர் என்பது வரலாறு. எஸ்டேட்டுகள், சிறு பட்டணங்களில் வாழ்ந்த இந்தியப் பிள்ளைகளே தமிழ்ப் பள்ளிகளுக்குச் சென்றனர். தெலுங்கைத் தாய் மொழியாக கொண்டவர், தெலுங்கு பள்ளிகள் இருக்கும்பட்சத்தில் அவர்களின் தாய் மொழியில் ஆரம்பக் கல்வியைக் கற்றனர். ஆக, அப்போதிருந்த எஸ்டேட் வாழ்க்கை முறையே தாய் மொழிக்கல்வி செழிக்க ஆதாரமாக இருந்தது. ஆயினும் கற்றத் தமிழ்மொழிக் கல்வியால்தான் பின்னாளில் அவர்கள் மேல்தட்டு மக்களாக உயர்ந்தனர் என்று அவ்வளவு எளிதாக அதைப் பொதுமைப்படுத்துவது ஏற்புடையப் பார்வையாகாது.
அந்தக் காலத்தில் அரசாங்க உத்தியோகத்திற்கு ஆட்கள் எடுப்பதில் இனத்தின் அடையாளம் இரண்டாம் பட்சமாகவும், கல்வித் தகுதி முக்கியத் தேர்வாகவும் இருந்ததைக் கவனத்தில் கொள்ளவேண்டும். பேராக், கெடா போன்றவை தெலுங்கு மொழியினர் அதிகம் வாழ்ந்த மாணிலங்கலாதலால் அப்பகுதி நீதிமன்றங்களில் தெலுங்கு வம்சாவளியினர் அதிகம் மொழிப்பெயர்ப்பாளர்களாக இருந்தது, அவர்களின் ஜனத்தொகை விகிதாசாரத்தால் வாய்த்த வாப்பாகவே இருக்ககூடும். அப்படியே இங்கு கிள்ளான் பக்கம் வந்தால், தமிழர்களே அதிகம் பொழிப்பெயர்ப்பாளர்களாக இருப்பார்கள்.
நிற்க, ஊதியம் என்று கணக்கிட்டாலும் குறைந்த ஊதியமே அரசாங்க ஊழியர்கள் பெறுவது. அரசாங்க உத்தியோகத்தின் ஒரே கவர்ச்சி ஓய்வூதியமே. ஆக, பெற்ற சொற்ப ஊதியத்தில் அவர்கள் மேல்தட்டு மக்களாக உயர்ந்துவிட்டனர் என்பதையெல்லாம் ஏற்றுக்கொள்ளத் தயக்கமாகவே இருக்கிறது..
இன்றைய நமது இளையத் தலைமுறையினர் சரளமாகவே மலாய் பேசக்கூடியவர்களாக இருக்கையில் இப்போது எனக்கு இந்தத் தாய்மொழி அனுகூலமும்கூட இல்லாமல் போய்விட்டதே. இந்த நிலையில் நான் தமிழைக் கற்றுக்கொண்டு இன்னொரு தமிழனுடன்தான் வேலைக்குப் போட்டியிட வேண்டும்.
நான், தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவன் என்பது, வெறும் ‘ஸ்ரீராமுலு’ என்ற பெயரால் வரு அடையாளமன்று. அது எனது மொழியாலும் கலாச்சாரத்தாலும் வரும் அடையாளமாகும். அந்த அடையாளத்தைப் பேண குறைந்த பட்சம் எனக்கு எனது மொழியில் பேசவாவது தெரிந்திரிக்க வேண்டும். இப்போது, அந்தக் குறைந்தப்பட்சமே எனது அடையாளம்!. என் மொழியைப் பள்ளியில் கற்றுக்கொள்ளும் காலமும் இல்லையென்றாகிவிட்ட நிலையில், வேறு வழிமுறைகளைத் தேடிப் போய் முதலில் எனது அடையாளத்தை நான் மீட்டெடுத்துக்கொள்வதே எனக்கானத் தீர்வு.
நாம் வாழ்ந்த எஸ்டேட்டுகள் எல்லாம் தூண்டாடப்பட்டு பட்டணங்களை நோக்கி நாம் புலம் பெயர்ந்ததில் தமிழ்ப்பள்ளிகளின் வீழ்ச்சி ஆரம்பமானது. ஒரு குடும்பமாய் வாழ்ந்த நாம் எங்கெல்லாமோ சிதறுண்டு போனோம். தமிழ்ப்பள்ளிகளின் பக்கத்திலிருந்தவர்கள் தமது தாய்மொழிக் கல்வியைக் காப்பாற்றிக்கொண்டனர். இல்லாதவர்கள், மலாய்ப் பள்ளிகளில் ஒதுங்கினர்.
தமது பங்கிற்கு இனத்தின் நலம் பேணவே தாம் இருப்பதாக அரசியல் பேசியவர்கள், மொழிக்கு நேர்ந்த ஆபத்தைக் கண்டுக்கொண்டதாகவே தெரியவில்லை. தேர்தல் காலங்களில் உறுதியளிக்கப்பட்ட தமிழ்ப்பள்ளிகள் பின்னர் கட்டப்படவேயில்லை.
தமது கட்சியில் ஆள்பலம், அணிபலம், பணபலம் என எல்லா பலமும் இருந்தும் இந்த மாணவர் எண்ணிக்கைச் சரிவைச் சரி செய்ய எந்த விழிப்புணர்வு பிரச்சாரமும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. இந்த நிலையில் கோ. புண்ணியவான் போன்ற தனிமனிதர்கள் தமது ஆதங்கத்தைக் காணோளியாக வெளியிட்டுக்கொண்டிருக்கின்றனர்.
தமிழ்ப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைச் சரிவிற்கு அடுத்த முக்கிய காரணமாக, குறைந்துகொண்டிருக்கும் மலேசிய இந்திய ஜனத்தொகையைக் கூறவேண்டும்.
கூகுள் சொல்லும் புள்ளியல் விபரப்படி மலேசிய இந்திய மக்களின் ஜனத்தொகை கணக்கீடு கீழ் வருமாறு.
வருஷம் சதவிகிதம்
1957 15%
1970 9%
1980 6.7%
1990. 6.7%
2000 7.20%
2010 7.1%
2020 6.6%
2024 6.5%
நிலமை இப்படி இருக்க ஒவ்வொரு வருடமும் பள்ளியில் படிக்க போதிய மாணவர்கள் இல்லாமல் போவதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்.
உலகில் எந்த மொழியிமே அழிந்துவிடாமல் காப்பாற்றபட வேண்டியதுதான். இதில் எனது, உனது என்ற சுயநலத்திற்கெல்லாம் இடமில்லை.

Comments
Post a Comment