அனுபவம் புதுமை


‘போர்டிங் ஹால்’ பயணிகளால் நிறைந்திருந்தது. காலை 6 மணிக்கு சென்னை விமானம்!. பெரும்பாலோர் நாற்காலிகளில் சரிந்தபடியே தூங்க முயன்றுக் கொண்டிருந்தனர். சிலர், கைப் பேசியைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தனர். மேலும் சிலர், தம்மைச் ‘சார்ஜ்’ செய்துக்கொள்வதுபோல் காதுகளில் செருகிய ஒயர்களுடன் கண்கள் மூடிக் கிடந்தனர்.  

மைலக்காவிற்கு தனியாக இந்தச் சென்னைப் பயணத்தை மேற்கொள்ளவேண்டி வந்த சங்கடத்தை நினைக்க, ஆத்திரமாய் இருந்தது. ‘வாலா கை, ரெண்டு பேரும் ஜாலியா சென்னைக்கி ஒரு டூர் அடிச்சிட்டு வர்லாம்..’ என்று ஆசையைத் தூண்டிவிட்டவனே குமார்தான்!. இவனுக்கும் நீண்ட நாட்களாகவே சென்னைக்குச் சென்றுவர வேண்டுமென்று ஆசை!. நண்பன் பார்த்ததாய்ச் சொன்ன எம் ஜி ஆர் சமாதி; மெரினா பீச்; ரஜனி பங்களா; இரவில் காலேஜ் ‘சரக்கு’ என்ற கதைகளையெல்லாம் கேட்டு வெறி பிடித்துப் போயிருந்தான். சென்னை என்றால் அவனுக்குத் தெரிந்ததெல்லாம் மெரினா பீச், ஜெமினி பாலம், L I C கட்டிடம்!. அதுவும் சினிமாவில் பார்த்ததுதான்.   

விமானக் கட்டணம் சற்று குறைவாக இருந்தபோது, உடனே  தனக்கான டிக்கெட்டை புக் செய்துக்கொண்டு குமாருக்குச் செய்தி சொன்னான். அந்தப் பாவியோ கடைசி நேரத்தில் தான் வரவில்லையென்று காலை வாரிவிட்டான்!. 

‘அவன் வராட்டி போவுட்டம்!. துணிஞ்சவனுக்கு துக்கமில்ல..’ என்று மைலக்கா தன்னைத் தேற்றிக்கொண்டான்.

 அப்போது, மைலக்காவின் அருகில் அமர்ந்திருந்தவனின் கைப்பேசி, ஒரு வித்தியாசமான ரிங்டோனில் இப்படி அலறியது.

“ஏய் மாப்ள, எப்புர்ரா இருக்க?..”

தமிழ் தெரிந்த பயணிகள் சிலர் உடனே அவனைத் திரும்பிப் பார்த்தனர். இன்னும் சிலர், லேசாகச் சிரித்துக்கொண்டனர். அவன் யாரைப் பற்றியும் சட்டை செய்யாமல், 

“ஆ.. சொல்லுரா மாப்ள!. யாரு நானா? நா போர்டிங்காண்டி வந்திருக்கன்டா.. என்னடா மாப்ள சொல்ற?. குடிக்கிற தண்ணீல பீய கரைச்சிட்டாய்களா?.. அவிங்கள சும்மாவா உட்டீங்க?..” என்று உரக்கப் பேசிக்கொண்டே ஹாலுக்கு வெளியே போனான். அரைத் தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு முழித்தவர்கள், வெறுப்புடன் ஒரு காட்டுமிராண்டியைப்போல் அவனைப் பார்த்தனர்.

விமான நிறுவனத்தின் பெயரைத்தவிர வேறு ஒன்றுமே புரியாதப் பாஷையில் ஒலித்த அறிவிப்பைத் தொடர்ந்து, பயணிகள் விமானத்திற்குள் செல்லத் தொடங்கினர். அவரவருக்கான இருக்கைகள் உறுதிபடுத்தப்பட்டுவிட்ட நிலையில் இவர்கள் ஏன் இப்படி தள்ளியடித்துக்கொண்டு ஏறுகின்றனர் என்ற யோசனையில் மைலக்கா பின்தங்கிப் போனான். முடிந்தால், விமான  சன்னல் வழியாகக் ‘கைலாஞ்ஜியை’ இருக்கையில் போட்டு ரிசர்வ் செய்யவும் தயங்க மாட்டார்களோ என்று எண்ணிக்கொண்டான்.     

விமானப் பணிப்பெண்ணின் உதவியுடன் மைலக்கா தன் இருக்கையில் போய் அமர்ந்தான். முதல் விமானப் பயணம்!. அவனுக்கு ஒரே பயமாவும், பதற்றமாகவும் இருந்தது. 

வானில் பறந்த விமானம் என்பதாலோ விமானப் பணிப்பெண்கள், வானுலக தேவதைகள்போல் விமானத்திற்குள் மிதந்தனர். ‘அப்பா, என்னா அழகு!. உடம்பையும் உறுப்புகளையும் பார்த்துதான் வேலைக்கு எடுப்பார்களோ!.’ அவர்களை அவ்வளவு அருகில் பார்த்ததில் அவன் கிளர்ச்சிக்குள்ளாகிப் போனான். அவர்களில், மாஸ்னா என்ற தேவதை, சீருடையின் முதல் புத்தானைத் திறந்துவிட்டு, பயணிகளின் பார்வையுடன் கண்ணாமுச்சி விளையாடிக்கொண்டிருந்தாள். தூக்கம் பிடிக்காத நாட்களில் அந்தத் தேவதைகள் தனது கற்பனைக்கு மிகவும் உதவிகரமாய் இருப்பர் என்று எண்ணி மைலக்கா ரகசியமாக அவர்களைக் கைப்பேசியில் படம்பிடித்து வைத்துக்கொண்டான்.  

விளக்குகள் அணைக்கப்பட்டன. விமானம் புறப்பட்டு, பேரிறைச்சலுடன் தடத்தில் ஓடத் தொடங்கியது. ‘காடிங்க ஓடற ரோட்டவுட கப்ப ஓடற ரோடு ரொம்ப மோசமா இருக்கும்போல..’ என்று எண்ணிக்கொண்டான். வெளியில், பின்னோக்கி ஓடிய காட்சிகள் விமானத்தின் வேகத்தைக் காட்ட, மைலக்கா தன் இருக்கையை இறுகப் பற்றிக்கொண்டான். கால்கள் தாமாகவே விறைத்துக்கொண்டன!. விமானம் மேல் நோக்கி எழும்பியபோது கண்களை இறுக மூடிக்கொண்டான். கடவுளின் அனுக்கிரகத்தை வேண்டிக்கொண்டான். இதயம் படபடத்துத் துடித்தது!. 

வெளியே பார்த்தான். கொஞ்ச நேரத்திலேயே தரையில் இருந்த பிருமாண்டங்களேல்லாம் கடுகாய்ச் சிறுத்துக் காணாமல் போயின. விமானம் ஒரு உயரத்தைத் தொட்டதும், விளக்குகள் மீண்டும் எரியத் தொடங்கின. தேவதைகள் குறிப்பிட்ட தூரத்திற்கு ஒருவராய் நின்றுக்கொண்டு, பாதுகாப்பு அம்சங்களைச் சைகையில் காட்டி விளக்கிக்கொண்டிருந்தனர்.

பிரயாணம் தொடங்கிய உடனேயே அவர்கள் விபத்தைப் பற்றிப் பேசியது அவனுக்கு அபசகுனமாய்ப் பட்டது. அப்படி ஏதும் நடந்துவிடும் பட்சத்தில் யார் இந்தப் பாதுகாப்பு அம்சங்களையெல்லாம் கடைப்பிடிக்கும் நிதானத்தில் இருப்பார்கள் என்று யோசித்தான். அத்தகைய அசம்பாவிதம் ஏதும் நேர்ந்தால் மாஸ்னா தேவதையை கட்டியணைத்துக்கொண்டே செத்துப் போகவேண்டும் என்று விரும்பினான்.  

கொஞ்ச நேரத்தில்,

“எக்ஸ் கியூஸ் மீ சார். யூ வண்ட் எனி டிரிங்க்?.” 

‘தேவதைகளின் குரலுக்கு இவ்வளவு இனிமையா!..’  

மைலக்கா திரும்பிப் பார்த்தான். மாஸ்னாதான் இவனைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டிருந்தாள்!. மைலக்கா கிறங்கிப் போனான்.

“யா. நெஸ்காப்பி சத்து!..” என்றான்.

“மௌ சுசு தாக்?..” என்றாள்.

அதை கேட்டதும் உதடுகளைக் கவ்வி, சிரிப்பைக் காஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு தலையை மட்டும் அசைத்துக் காட்டி, ‘வேண்டும்’ என்றான். 

தேவதை, ‘இடைச்சி மார்க்’ (மில்க் மேய்டு) பால் பாக்கெட் ஒன்றை எடுத்து, அதிலிருந்த பாலைக் காப்பியில் ஊற்றிக் கொடுத்தாள். இந்த முறை அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை!. தலையைக் குனிந்து குலுங்கிக் குலுங்கிச் சிரித்துக்கொண்டே காப்பியிலிந்து பாலை மட்டும் தனியாகப் பிரித்துக் குடிப்பதுபோல் கண்களை மூடி உறிஞ்சிக் குடித்து, உதடுகளை நக்கிக்கொண்டான். தேவதை, நெற்றிச் சுருங்க இவனைப் பார்த்துக்கொண்டே அடுத்த இருக்கைக்குச் சென்றாள்!.

விமானம், சென்னை அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கப் போகும் அறிவிப்புக் கேட்டது. 

மைலக்கா, கண்ணாடி வழியாக வெளியே பார்த்தான். 

முதலில் கடல் தெரிந்தது; பின்னர் பெரிய கப்பல்கள் தெரிந்தன; கட்டிடங்கள்; மரங்கள் தெரிந்தன. வீடுகள் எல்லாம் கூரைகள் இல்லாமல் மொட்டை மாடிகள் கொண்டு தட்டையாய் இருப்பதைப் பார்க்க வியப்பாய் இருந்தது. சாலைகள் தெரிந்தன; ரயில் ஓடியது. கடைசியாக, இவற்றையெல்லாம் ஆட்டிப் படைத்த மனிதர்களும் சிறு புள்ளிகளாய்த் தெரியத் தொடங்கினர். 

சுங்கப் பரிசோதனைகள் முடிந்து வெளியே வந்தபோது கூடியிருந்த மக்களைப் பார்த்ததும் மைலக்கா மலைத்துப் போனான். எங்கும் மக்கள் கூட்டம்!. கூடியிருந்தோரின் தேசிய உடையோ என்பதுபோல் பலரும் வெள்ளை நிற சட்டையும் வேட்டியுமே உடுத்தியிருந்தனர். சிலர், கூடுதலாக தோளில் துண்டு போட்டிருந்தனர். அவர்கள், யாரையோ அடையாளம் காண ஒவ்வொருவரையும் கண்காணித்துக் கொண்டிருந்தனர். சிலர், கைகளில் பெயர்ப் பலகைகளை ஏந்திக்கொண்டு நின்றனர்.

 “எங்கன சார் போய்க்கீனும்?. வாங்க சார் நம்ம வண்டி ரெடியா கீது சார்!.. நம்மள்து ஏசி வண்டி சார்.. கம்மியான ரேட்டு போட்டுக்கறன் சார்.. எங்கன தி நகருக்கா? போய்க்கிலாம் சார்?..”  என்று கேள்வியால் அவனை முற்றுகையிட்டனர். இன்னும் சிலர், அவனுடைய லக்கேஜை பிடுங்காத குறையாகக் கையை நீட்டினர். ஆனால், தனக்குப் பின்னால் வந்த ஒரு சில பயணிகளை அவர்கள் அணுகாதது ஏனென்று அவனுக்குப் புரியவில்லை!. 

முற்றுகையிட்டவர்களில் ஒருவர் நடுத்தர வயதுத் தோற்றத்தில், செம்மண் நிற சீறுடையுடன், நெற்றியில் சந்தனமும் குங்குமமும் துலங்கத் காட்சியளித்தார். தயக்கத்துடனேயே அவர் தன்னை அணுகுவது தெரிந்தது. மைலக்கா நேராக அவரிடம் போனான். மற்ற ஓட்டுனர்கள் எல்லோருமே அவர்கள் பேசுவதைக் கேட்க விரும்புவதுபோல் சுற்றி வளைத்துக்கொண்டு நின்றனர். குங்குமப் பொட்டு, ‘வாப்பு, வந்து ஆட்டோல ஏறுப்பு. மத்ததெல்லாம் அப்பறம் பேசிக்கிலாம்ப்பு..’ என்று லக்கேஜைத் தூக்கிக்கொண்டு ஆட்டோவை நோக்கி நடந்தார்.     

மைலக்கா ஆட்டோவைப் பார்த்தான். பின்புற கண்ணாடியில், ‘ஹாரனை அழுத்தவும்’ என்ற ஸ்டிக்கர் ஒரு புறமும், ‘துணிவே துணை’ என்ற ஸ்டிக்கர் இன்னொரு புறமும் ஒட்டப்பட்டிருந்தன. முன்பக்க கண்ணாடியில் எம் ஜி ஆர் ரிக்க்ஷா ஒட்டும் படம் இடது பக்கமும், நடுவில் ‘பாதையைத் தேடாதே, உருவாக்கு..’ என்ற பொன்மொழியும் ஒட்டப்பட்டிருந்தன. 

“மொதல்ல ஹோட்டலுக்கு போயி குளிக்கனும் பாங்!. ஒடம்பெல்லாம் ஒரே கசகசன்னு இருக்கு..” 

“சரிப்பு!. ரூமு எங்கனப்பு போட்டிருக்காப்ல?.” 

“இனிமேதான் போடனும். உங்களுக்கு ஏதாவதும் எடம் தெரியுமா பாங்?..” நெற்றியில் துலங்கிய மஞ்சலும், குங்குமமும் டிரைவர் மேல் இவனுக்கு ஒரு நல்லெண்ணத்தை ஏற்படுத்தியிருந்தன. 

“ப்பு, இப்ப போய் ரூம் போட்டம்ன்னாக்கா சும்மா நசநசன்னுவாய்ங்கப்பு!.  12 மணிக்கி மேலதான் ரூம ரெடி பண்ணுவாய்ங்க. காலீலியே செய்யிற வேல ஏதாச்சும் இருந்துச்சின்னா மொத அத செஞ்சிருங்கப்பு. ரூம் போடறத பத்தி அப்பறமா பாத்துக்குவோம்!.” என்றார் ஆட்டோ. அவர் மேல் வைத்த நல்லெண்ணம் வீண் போகவில்லையென்று மைலக்காவிற்குத் தோன்றியது. 

“அப்படின்னா மொதல்ல பசியாற கூட்டிட்டு போங்க பாங். பேய் பசீல இருக்கன்”  

இவனுடையப் பசி உடனே டிரைவருக்குப் பிடித்துக்கொண்டதுபோல் ஆட்டோ பறந்தது. சென்னையின் நெரிசலைக் காட்டிலும் விடாத ஹாரன் ஒலி மைலக்காவிற்கு மிகவும் தொந்தரவாய் இருந்தது. மலேசியாவில் இரண்டு டிரைவர்களுக்கிடையே ‘அடி தடி’ சண்டையையே தூண்டிவிடும் ஹாரன் ஒலி, இங்கே, சீரானப் போக்குவரத்துக்கு வழிசெய்துக்கொண்டிருப்பதைக் காண வியப்பாக இருந்தது. சாலையில், வாகனங்களுக்கிடையே கிடைத்த எவ்வளவு சிறிய இடைவெளியும் ஆக்கிரமித்துக்கொண்டு முன்னேறும் வாய்ப்பாகவே பார்க்கப்பட்டதால் ஹாரனின் எச்சரிக்கை ஓயவேயில்லை!. 

வழியில் ஆட்டோ கேட்டார். “பாங்.. பாங்..ன்னு சொல்றீங்களே, அப்படின்னா இன்னா அங்கிளா?”

“இல்ல பாங். மலாய்ல ‘அபாங்’ன்னா அண்ணன்..”  

எவ்வளவு அழைத்தும் டிரைவர் வர விரும்பாததால் மைலக்கா மட்டும் பசியாறுவதற்குப் போனான். நடுத்தரவயது மாது ஒருத்தி, மேசைமேல் கவிழ்ந்து கிடந்த வெள்ளித் தம்ளரை நிமிர்த்தி, தண்ணீரை ஊற்றிவிட்டுச் சென்றாள். தொடர்ந்து வந்த வெயிட்டர், ஆர்டர் கேட்டு நின்றான்.

“ரொட்டி சானை ஒன்னு. புரூ காப்பி கூராங் மானீஸ் ஒன்னு..” என்றான் மைலக்கா. 

“நீ இன்னா சார் சொல்ற? ஒன்னுமே புரியிலியே! எங்கேர்ந்து சார் வாரீங்க?” என்றான் வெயிட்டர். இவன், தன் நாட்டைச் சொன்னான். அவன் ‘ஓ’ என்று ஆமோதித்துவிட்டு, ஒரு பச்சை நிற தாளைக் கொடுத்து, அதிலிருக்கும் ஐடங்கள்தாம் இருப்பதாகச் சொன்னான். இவன், தன் தவறை எண்ணி  சிரித்துக்கொண்டான்.

மைலக்கா, பரோட்டாவிற்கும் பசும்பால் புரூ காப்பிக்கும் ஆர்டர் கொடுத்துவிட்டு பசியாறிக் கொண்டிருந்த மற்றவர்களை ஒரு நோட்டம் விட்டான். அவர்கள் தோசை, இட்லி என்று என்ன சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும் தட்டில் இரண்டு வடைகள் கட்டாயம் இருப்பதைக் கண்டான். ஆனால், அவர்களுடைய மேசைகளில் தம்ளரில் தண்ணீர் மட்டுமே வைக்கப்பட்டிருந்தது. தேநீரோ, காப்பியோ காணப்படவில்லை!. பசியாறி முடித்தவர்கள் மட்டுமே டவராவில் வந்த காப்பியை ஆற்றிக் குடித்துக்கொண்டிருந்தனர்.           

 அவனுடைய பரோட்டாக்கள் இரண்டும், சாம்பார் மற்றும் காய்கறி குருமாவுடன் வந்து சேர்ந்தன. 

“கோழி கறி ஏதும் கெடைக்காதா?..” 

வெயிட்டரோடு அந்தக் கோரிக்கையைச் செவிமடுத்த பக்கத்திலிருந்தவர்களும் அவனைத் திரும்பிப் பார்த்தனர்.

“இது வெஜிடேரியன் ரெஸ்டாரண்ட் சார்..” என்று வெட்யிட்டர் சலிப்புடன் சொல்லிவிட்டுச் சென்றான். 

வேறு வழியில்லாமல் சிறியதாய் ஒரு கையகலமே இருந்த பரோட்டா இரண்டின் மேலும் சாம்பாரைத் தாராளமாய் ஊற்றி, ‘பஞ்ஜீர்’ செய்தான். அவனுக்கு முதலில் புரூ காப்பி தேவைப்பட்டது. ஆனால், காப்பி இன்னும் வந்திருக்கவில்லை!. வெயிட்டரைக் கூப்பிட்டு காப்பியைக் கேட்டான். வெயிட்டர் இவனை ஒரு மாதிரியாகப் பார்த்துக்கொண்டே,

“இப்பியே வேணுமா சார்?..” என்று மீண்டும் உறுதிப் படுத்திக்கொண்டு சென்றான்.

சின்ன டவராவில் வந்த காப்பி, அவனுடைய நாக்கை நனைக்கக்கூட போதவில்லை. கூடவே அந்த டவாரை ஏந்தி காப்பியை ஆற்றுவது பெரும் பாடாய் இருந்தது. வெயிட்டரிடமே காப்பியை ஆற்றிக் கொடுக்கச் சொன்னான். தனது நாட்டில் பிடியுள்ள பெரிய கிளாஸ்களில் குடித்துப் பழக்கப் பட்டவன். இன்னும் இரண்டு காப்பிக்கு ஆர்டர் கொடுத்து, அதையும் உடனடியாக கொண்டு வரச்சொன்னான். உள்ளே போன வெயிட்டர், தனது சகாக்களிடம் ஏதோ சொல்ல, எல்லோரும் இவனை ஒரு தடவை எட்டிப் பார்த்தனர். 

அடுத்து, ஹோட்டல் தேடும் படலம் ஆரம்பமானபோது, ஆட்டோ, இவனுடைய நாட்டைப் பற்றிக் கேட்டார். 

“நா மலேசியாலேர்ந்து வர்றன். ஆமா, அத ஏன் கேக்குறீங்க பாங்?.” 

மலேசியா, சிங்கப்பூரிலிருந்து வருபவர்கள் ஷாப்பிங் செய்ய வசதியாக இருக்குமென்று தி நகரிலேயே ரூம் போடுவதைப் பற்றிச் சொன்னார். 

மைலக்காவும் அங்கேயே ரூம் போட்டுக்கொண்டான். விடைப் பெறும் முன், வேறு எங்கும் போவதாக இருந்தால் தானே காத்திருப்பதாக ஆட்டோ சொன்னார். மைலக்காவிற்கு அவரைப் பிடித்திருந்தது. மிகவும் உதவிகரமாகவும் இருந்தார். கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு, குளித்துவிட்டு வர கொஞ்சம் தாமதமாகும் என்றான். தான் காத்திருப்பதாகவும் வெயிட்டிங் சார்ஜ் எதுவும் கிடையாது என்று சொல்லி மேலும் அவனின் நன்மதிப்பைப் பெற்றுக்கொண்டார்.

பயண அலுப்புத் தீர குளித்துக்கொண்டிருந்தபோது, திடீரென்று ‘மில்க் மேய்டு’ தேவதை நினைவுக்கு வர, உடனே உடல் சிலிர்த்துக்கொண்டது. சவர்க்காரம் இருந்த தடுப்பில் கைப்பேசியை வைத்து, அவளுடைய போட்டோவைத் திறந்து வைத்தான். செக்கச் சிவந்த இதழ்களும், மதர்த்து நிமிர்ந்த முலைகளும் அவனைக் கிளர்ச்சிக்குள்ளாக்கின!. சிறிது நேரம் கண்கள் மூடிக்கொண்டு நின்றான். இஸ்ட தேவதை, அவனுடைய எல்லா கற்பனைகளுக்கும் உற்சாகத்துடன் ஒத்துழைப்பு நல்கினாள்!.  

மைலக்கா, பிரயாண அலுப்புத் தீர்ந்து போய், புதிதாக உடல் அசதி வந்து சேர்ந்ததுபோல் உணர்ந்தான். கொஞ்ச நேரம் கண்களை மூடிக் கிடப்பதாக எடுத்த ஓய்வு, முழிப்பு வந்து பார்த்தபோது ஒரு மணி நேரத்திற்குமேல் தூங்கிப் போயிருந்தது தெரிந்தது. அவசரமாக ஆட்டோவைத் தேடி கீழே வந்தபோது, அவனுக்காகவே காத்திருந்ததுபோல் ஒரு ‘டேர்ன்’ அடித்துக்கொண்டு வந்து முன்னே நின்றார் டிரைவர். அதில் ஏறிக்கொண்டே மைலக்கா சொன்னான்.

“ரஜனி வீட்ட பாக்கப் போங்க பாங்”

டிரைவர், ஒரு முன்னூறு மீட்டருக்கு ஹாரனை அடித்தபடியே பாதையை உருவாக்கிக்கொண்டு போனார். 

“டிராஃபிக்கல எல்லாம் போய்க்கினு இருந்தோம்ன்னா மண்ட காஞ்சிரும்ப்பு. அதாம்ப்பு இப்புடி.” என்று தனது ட்ராஃபிக் குற்றத்திற்கு ஒரு நியாயத்தைக் தேடிக் கொண்டார் ஆட்டோ.

வழியில், ரோட்டோர மர நிழலில் சில ஆட்டோக்கள் வரிசையாக நின்றுக்கொண்டிருந்தன. சில டிரைவர்கள் பசன்ஞ்ஜர் ‘சீட்டியில்’ தூங்கிக்கொண்டோ, கைப் பேசியைப் பார்த்துக்கொண்டோ இருந்தனர். இன்னும் சிலர், கும்பலாக நின்று பேசிக்கொண்டிருந்தனர். 

“இந்தக் கைங்கல்லாம் ஏன் சவாரிக்கு போவாம இப்படி ரோட்டோரத்தில ‘லேபாக்’ பன்னுதுங்க ?..” என்று மைலக்கா கேட்டான்.

“இதெல்லாம் ஸ்டேண்டிங்ல நிக்கிற வண்டிங்கப்பு!. ஆளுக்காவ நிக்கிறாய்ங்க. வீணா பெட்ரோல எதுக்குப்பு வேஸ்ட் பண்ணிக்கிட்டு. அதான் வண்டிய ஆஃப் பண்ணி வெச்சிருக்காய்ங்க.” என்றார்.

அப்போது, ஒரு முச்சந்தியின் சாலையோரத்தில் செக்கியூரிட்டி பூத் போல் ஒரு கொட்டாய் தெரிந்தது. அதன் தகரக் கூரைகள் வளைந்து நெளிந்து புறக்கணிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. அதன் கீழே இரும்பினாலான சாலைத் தடுப்பு வேலிகள் கைவிடப்பட்டு, துரு பிடித்துக்கொண்டிருந்தன. அந்தக் கொட்டாயைக் காட்டி, 

“பாருப்பு!. அந்தம்மா இருக்கீல எப்பிடி இருந்துச்சி தெரியுங்களா? சும்மா தரமா இருந்துச்சி!. இந்த மாறில்லாம் அசால்ட்டா வந்துட்டு போயிட்டு இருக்க மிடியாது. சும்மா தோ அந்த முக்குலியே நிப்பாட்டி ‘பத்திவுட்டுருவாய்ங்கப்பு’!. அந்த அம்மா போச்சி. எல்லாமே போச்சி..” டிரைவர் சொன்னார். 

மைலக்கா, அந்தச் சாலையின் சுவரில் ‘போயஸ் கார்டன்’  என்று நீலநிற பிளாஸ்டிக் பலகையில் வெள்ளை நிறத்தில் எழுதப்பட்ட பெயர்ப் பலகையைப் பார்த்தான்.  

“யாரு பாங் அந்த அம்மா?..”  இவனுக்குத் தெரியவில்லை.

“ஆதாம்ப்பு நம்ம அம்மா,  ஜெயலலிதா!. தெரியாதா  உங்களுக்கு?.”  

எதிரே, சுவரில் கருப்பு வர்ணத்தில் ‘வேத நிலையம்’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த வீட்டைக் காட்டி, ‘இதுதாம்ப்பூ அந்த அம்மா வூடு..’ என்றார். பாக்க அம்சமாகவே இருந்தது.

மைலக்கா, ரஜனியின் வீட்டைத் தெரிந்துக்கொள்ளவே ஆவலாய் இருந்தான். ஆட்டோ காட்டிய ரஜனி வீட்டைப் பார்த்ததும் அவனுக்கு ஏமாற்றமாய்ப் போனது. பங்களாவைப் போல் இல்லாமல் வீடு கவிழ்த்துப் போட்ட ஒரு நீண்ட சதுரப் பெட்டியைப்போல் இருந்தது. வீட்டிற்கு எதிரே பூந்தோட்டம் இல்லை. வேலிக்குப் பதில் சிறையைப்போல் சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டிருந்தது. யாரையும் அண்டவிட விரும்பாததுபோல் வீட்டின் அமைப்பு இருந்தது. அம்மாவின் பங்களா, ரஜனியின் வீடு இரண்டிற்கும் இடையே ஒரே சாலை!. தூரத்தில், ரஜனி வீட்டு பக்கமாய் ஒரு கூர்க்கா உட்கார்ந்திருந்தான். சாலையின் இறுதியில், வேறு யாருடைய பங்களாக்களோ இருப்பதுபோல் தெரிந்தன.  அவ்வளவு பெரிய சினிமா நட்சத்திரம் இப்படி, மற்றவர்களின் வீடுகளுக்கிடையே வாழ்வதைப் பார்க்க ஆச்சரியமாய் இருந்தது. 

மலேசியாவில் இத்தகைய வி ஐ பி -க்கள் எல்லாம் தனித்தனி பங்களாக்களைக் கொண்ட ‘கன்ட்ரி ஹோம்’-களில் ஏரிகளைப் பார்த்தபடி வாழ்வதும், யாருமே அவர்களுடைய பங்களாக்களுக்குப் போக முடியாதபடிக்கு நுழைவாயிலிலேயே தடுக்கப்படுவதையும் நினைத்துக்கொண்டான். 

அடுத்து, எம் ஜி ஆரின் சமாதிக்குப் போனான். அப்பாவின் பழைய வீட்டில் சுவரேல்லாம் ஒட்டப்பட்டிருந்த எம் ஜி ஆர் பட சுவரொட்டிகளும், இந்தியன் மூவி நியூஸ் நடுப்பக்க வர்ணப் படங்களும் நினைவில் மீண்டன. அவரின் ஆத்மாவே மேலெழுந்து வந்து தன்னை ஆட்கொண்டதுபோல் இவன், மௌன அஞ்சலியில் ஆழ்ந்தான். எம் ஜி ஆர் உபயோகித்த ஜடப் பொருட்கள் அவரின் நினைவைத் தூண்டி பார்வையாளர்களின் கண்களைக் கலங்க வைத்துக்கொண்டிருந்தன. சமாதியில் காது வைத்துக் கேட்டால் அவருடைய ‘Rado’ கடிகாரத்தின் ‘டி.. டிக்..’ சத்தம் இன்னும் கேட்கிறது என்று நண்பன் சொன்னது ஞாபகம் வர, இவனும் காதை வைத்துக் கேட்டான். சூனியத்தின் நிசப்தமே அவனுக்குக் கேட்டது!. 

உடம்பிற்குள் இருந்த உயிரியல் கடிகாரம் இன்னும் மலேசிய நேரத்திலேயே இயங்கிக் கொண்டிருந்ததால் அவனுக்குப் பசி எடுத்தது. நல்ல ‘நாட்டாடு கறி’ சப்பிட வேண்டும்போல் இருப்பதாக டிரைவரிடம் சொன்னான். அவர் அழைத்துக்கொண்டு போன வழியில் நிறைய அரசியல் சுவரொட்டிகளைப் பார்த்தான்.ஒரு சுவரொட்டியில் எழுச்சித் தமிழர் என்று ஒரு பத்து பேரின் முகங்கள் தலைவரின் படத்திற்கு கீழே இருந்தன. இன்னொன்றில், வீரத் தமிழர் என்று ஒரு பதினைந்து பேர், தமது தலைவரின் பிறந்த நாளுக்கு வீர வாழ்த்து சொல்லியிருந்தனர். மைலக்கா, வீர வாழ்த்து என்றால் எப்படியிருக்கும் என்று யோசித்தான். ‘கையை உயர்த்தி, முஸ்டியை மடக்கிக்கொண்டு வாழ்த்து சொல்வதாக இருக்குமோ..’ என்று நினைத்துக்கொண்டான். இன்னொரு சுவரொட்டி மானத் தமிழருக்கானது!.. அதில் ஒரு பத்து முகங்கள். அடுத்தச் சுவரொட்டியில் புரட்சித் தமிழர்களின் முகங்கள் இரண்டு வரிசையில் இருபது இருந்தன. 

மைலக்கா, ‘ நான் எந்தத் தமிழன்?..’ என்று கேட்டுக்கொண்டு குழப்பத்தில் ஆழ்ந்தான்!. ‘இந்த ஆட்டோ டிரைவர், தன்மானத் தமிழராக இருப்பாரோ?.’

டிரைவர், அழைத்து வந்திருந்த கடையின் வெளியே தரையெல்லாம் மஞ்சள் தெளிக்கப்பட்டிருந்தது. மரங்களும்கூட மஞ்சள் பூசிக்கொண்டிருந்தன. பெயரைக் கொடுத்துவிட்டு இருக்கைக்குக் காத்திருக்க வேண்டும்!. காத்திருந்தான்!. காஷியருக்குப் பக்கத்தில் சுவரில், தொங்கிய மெனுவிலிருந்து ‘ஆட்டு மூளை வறுவல்’ ஆர்டர்  கொடுப்பதென்று தீர்மானித்துக்கொண்டான்.

அப்போது, இரண்டு வர்ண கொடியை ஏந்திகொண்டு வெள்ளை நிற ‘தாதா சுமோ’ வாகனம் ஒன்று கடையின் எதிரே ஆக்கிரமிப்புடன் வந்து நின்றது. அதிலிருந்து வெடித்துவிடும் வயிறுடன் ஒரு பிரமுகர் இறக்கினார். அவர் அணிந்திருந்த வெள்ளை உடையைப் போலவே அவரும் விறைப்புடன் இருந்தார். நேற்றியில் மஞ்சள், குங்குமம்! உடனே கடைக்கார அதிகாரி ஒருவர் ஓடி வந்து அவரை மரியாதையுடன் உள்ளே அழைத்துக்கொண்டுப் போனார்.    

மைலக்கா, இடம் கிடைத்து உட்கார்ந்தபோது இன்னொரு நபருடன் மேசையைப் பகிர்ந்துகொள்ள வேண்டியே இருந்தது. பிறந்ததிலிருந்தே அவர்மேல் வெயில் பட்டிருக்காததுபோல் வெளுத்துப் போயிருந்தார். சைவ சாப்பாட்டிற்கு ஆர்டர் கொடுத்தார். மைலக்கா, ‘ஆட்டு மூளை வறுவல்’ -க்கு ஆர்டர் கொடுத்ததும் அவர் அவனை ஒரு முறை ஏறெடுத்துப் பார்த்துவிட்டு தலையைக் குனிந்துகொண்டார்.

சைவப் பேர்வழி இலையில் தண்ணீர்த் தெளித்து, ‘ஈஸ்வரோ ரக்ஷ்து..’ என்றோ ஏதோ முணுமுணுத்துக் கொண்டார். வெயிட்டர், அவரின் இலையில் சோற்றுக் குவியல் ஒன்றைக் கொட்டினான். அவர், உடனே அதை மூன்றாகப் பாகப்பிரிவினைச் செய்துக்கொண்டார். அதே போல், இவனுடைய இலையிலும் கொட்டப் போனபோது, அதில் கால் பங்கை வைத்தால் போதும் என்று அவன் கேட்டுக்கொண்டான். வெயிட்டர், அவனை ஒரு மாதிரியாகப் பார்த்து, ஊரைக் கேட்டுத் தெரிந்துக்கொண்டு போனான்.

இவன் சாப்பிட ஆரம்பித்தான். எங்கே மட்டன் கறி ஏதும் தெறித்துவிடுமோ என்று சைவம் தனது இலையைத் தூக்கிப் பிடித்துக்கொண்டே சாப்பிட்டது. மேலும் சாதம் கேட்டு ரசம் ஊற்றிச் சாப்பிட்டது. மூன்றாவதாக ஒரு ரவுண்டு தயிர் ஊற்றிச் சாப்பிட்டுவிட்டு, வாயைப் பொத்திக்கொண்டு ஏப்பம் விட்டது. 

மைலக்கா, இறுதியாக கோலிசோடா ஒன்றுக்கு ஆர்டர் கொடுத்துக் குடித்துவிட்டுக் கிளம்பினான். 

தி.நகரில் ஜீன்ஸ் வாங்கலாமென்று கடைக் கடையாக அலைந்துகொண்டிருந்தபோது, இடுப்பில் குழந்தையுடன் ஒரு பிச்சைக்காரி அவனை ஒட்டிக்கொண்டாள். 

“காலீலேர்ந்து புள்ளியும் நானும் ஒன்னுமே சாப்படலண்ணா. ஏதாவது கொடுங்கண்ணா..” என்று கையேந்தினாள். தாய், வாயல் கேட்ட யாசிப்பை குழந்தை, பார்வையில் காட்டியது. பிரசவத்திற்கு பின்னர் பாரம், இடம் மட்டுமே மாறியிருந்தது!. மைலக்கா, ஒரு இருநூறு ரூபாய் நோட்டை எடுத்து அவளிடம் நீட்டினான். அவள், ஆச்சரியத்தில் வாயடைத்துப் போய் அவசரமாய் ரூபாயை வாங்கி ரவிக்கையில் செருகிக்கொண்டு குழந்தையின் கைகளைக் கொண்டு கூப்பினாள். 

மணி ஏழாகியிருந்தது. நாளெல்லாம் அலைந்ததில் ஒரே அசதியாக இருந்தது. ஆட்டோவிடம் ஹோட்டலுக்கு அழைத்துப் போகச் சொன்னான். நாளையும் வரவேண்டுமா என்று ஆட்டோ கேட்டதற்கு காலையில் சொல்வதாகச் சொன்னான். 

ஹோட்டலில் இறக்கிவிடும்போது ஆட்டோ டிரைவர் தயங்கித் தயங்கி ஆங்கிலத்தில் கேட்டார். 

“சார், யு வண்ட் எனி கேர்ஸ்? பியூட்டிபுல் அயிட்டம் சார்..”

அதைக்கேட்டதும் மைலக்கா ஒரு கணம் தயங்கி நின்றான். ‘திறந்துவிட்டிருந்த இடைவெளியில்,திருட்டுத் தனமாய்ப் பார்த்துக்கொள்..’ என்று சில்மிஷம் செய்த ‘மில்க் மேய்டு’ தேவதை, இன்னும் கண்களுக்குள்ளேயே இருந்தாள். 

“யாரு பாங் அது? காலேஜ் ஸ்டூடண்ட்டா?..” 

“டி வி சீரியல்லாம் ஆக்ட் குடுத்துருக்கிற பொண்ணுப்பு. நல்ல சிங்கரும்கூட. ஃபேமிலி பொண்ணு சார். அதுக்கு இது பொழப்பு கெடையாது!.  புருஷன் ஒரு சீக்காளி!. அதான்!. உங்கள போல டீசண்ட் ஆன வெளியூர் பார்ட்டி யாரும் வந்தா அந்த பொண்ணுக்கிட்ட ஒரு வார்த்த கேப்பன். அது சரீன்னு சொன்னாதான் பேசி உடுவேன். வேணாட்டி உட்றுவேன்.  வர்றவன் எவ்ளோ குடுகறன்னு சொன்னாலும் முடிதுன்னா முடியாதுதாம்ப்பு. அதுல ரொம்ப ஸ்டிரிக்ட் சார் அந்தப் பொண்ணு!. லோக்கல் பார்ட்டிக்கெல்லாம் பேசி வுடறது இல்ல. பேரு கெட்டு போயிரும் சார்.”.     

மலேசியாவில் கொச்சியைக் கொறித்துக்கொண்டே, ‘ஏய், செப்பாட்லா!. லூ ஈங்காட் அப்பா? மௌ புவாட் பேபிக்கா? செப்பாட் காசி கோசோங் தெம்பாட்லா..’  என்று விபச்சாரிகள் விரட்டியடிப்பார்கள் என்று நண்பர்கள் சொல்லக்  கேள்விப்பட்டிருந்தான். அதனாலேயே மலேசியாவில் விபச்சாரிகளிடம் அவன் போனதேயில்லை!. 

மைலக்கா, ஆட்டோவின் சிபாரிசில் கரைந்துகொண்டிருந்தான். மலேசியாவில் நண்பனிடம் அளக்க அனுபவம் வேண்டுமே!. 

“ஏம்ப்பு, இதுக்கு முன்னாடி இந்தமாரி எங்கியும் போனதில்லியாப்பு?..” 

“இல்ல, போனதில்ல பாங்!” 

“சும்மா சொல்லாதப்பு!.. போனதில்லியா?. ‘ஜாரீ கீரீ’ ஏதும் பாத்ததில்லியாய்யாப்பூ நீயீ? மலேசியாவுல அந்த மாரி எடமெல்லாம் ஏதும் கெடையாதா என்ன?” 

“ஏன் இல்ல.. கோலாலம்பூர்ல ‘பிலகாங் மத்தி’ன்னு ஒரு எடமே இருக்கே!..” என்றான். 

அவனுக்கு வயது 25-குள்ளாகவே இருக்கும் என்று ஆட்டோ நிதானித்துக்கொண்டான். 

“சரி, அத உட்டுத் தள்ளுப்பூ!. ஒனக்கு அந்த ‘டைவா’தான் கரிக்ட்டான ஆளுப்பு” – ஆசையை மூட்டினார்.

“ஏன் அப்படி?..”

“ஏன்னா, நீயோ பாவம் இன்னோரு தேசத்துலேர்ந்து வந்திருக்க. காசு வந்தா போதும்ன்னு நா முன்னபின்ன பாக்காம பேசிவுட்டேன்னு வெச்சிக்கோ!. பின்னாடி எங்க ஊரயும், என்னியும் காறித் துப்பீற மாட்டியா?. அதான்!. அதே சமயத்துல பொண்ணு கொஞ்சம் ராயலா இருந்துட்டா அதோட சோலியே வேற இல்லியாப்பு!. உன்னிய பதமா கவனிச்சிக்கும். ஒனக்கோ முன் அனுவவம் இல்லேன்னு வேற சொல்ற?”

மைலக்கா சரணாகதியானான். ‘அவள், நாடக நடிகை வேறு!. அது ஒன்றே போதும்!.’ குமாரிடம் தனது பரக்கிராக்கிரமங்களைச் சொல்லி, வயிறேரிந்துபோக வைக்க!. அவள் நடித்த நாடகங்களின் பெயரை மறக்காமல் தெரிந்துக்கொள்வதென்று தீர்மானித்துகொண்டான்.   

ஆட்டோ, அவளின் சேவைக்கு 100 வெள்ளி கொடுத்தால் ரொம்ப சந்தோஷம்படுமென்று இழுத்தார். மைலக்கா, காசைக் கணக்குப் பார்க்கும் நிதானத்தையெல்லாம் எப்போதோ இழந்துவிட்டிருந்தான். 

“காச யாருகிட்ட பாங் கொடுக்கனும். உங்ககிட்டியா?.. அந்தப் பொண்ணு கிட்டியா?.” 

“ஐயய்யே, இன்னாப்பு நீ வேற?. காச ஏங்கிட்டியே குடுத்திருப்பூ. நான் பாத்துக்கிறன். அதாண்ட குடுத்தா ரொம்ப கோவிச்சுக்கும்ப்பூ. நாந்தான் சொன்னேனே அது, ராயல்ன்னு..”   

மலேசிய 100 வெள்ளியை வாங்கிக்கொண்டதும் டிரைவர், ஒரு முறை முன்னும் பின்னும் பார்த்து, நெஞ்சார முகர்ந்து கொண்டு,

“என்ன இருந்தாலும் ஃபாரீன் காசு ஃபாரீன் காசுதாம்ப்பு!.” என்று சிலாகித்துவிட்டு, ரூபாய்க்கான பெறுமானத்தைத் தெரிந்துகொண்டு, சந்தோஷத்துடன் சட்டைப் பைக்குள் வைத்துக்கொண்டார். 

போகும் வழியில் பெட்ரோல் பங்க்கில் ஆட்டோவிற்கு எண்ணை ஊற்றிக்கொள்ள நிறுத்தினார். எதிரே இருந்த பம்பில் தன் காருக்கு எண்ணைப் பிடித்துக்கொண்டிருந்த காரோட்டி ஒருவனின் போக்கைப் பார்க்க  மைலக்காவிற்கு விநோதமாய் இருந்தது. கண்களை இடுக்கிக்கொண்டு எண்ணை டாங்க்கியினுள் பார்த்துவிட்டு, டாங்கி பக்கமாக காரைப் பிடித்து ஆட்டிக் குலுக்கினான். பிறகு பெட்ரோல் ஊற்றினான். மீண்டும் காரைப் போட்டு குலுக்கினான். மீண்டும் எண்ணையைப் பிடித்தான். மீண்டும் டாங்கியினுள் பார்த்து திருப்தியடைந்தவனாய்க் காசைக் கொடுத்துவிட்டு கிளம்பினான். இவனுக்கு காரோட்டியின் செய்கைப் புரியவில்லை!. இவன், வேறொரு பதற்றத்தில் இருந்ததால் அதைப் பற்றி ஆட்டோவிடம் கேட்கத் தோன்றவில்லை!.  

ஆட்டோ, ஹாரன் ஒலியுடன் ஒரு பலகை வீட்டின் முன் போய் நின்றது!. ஹால், காமத்தின் நிறத்தைப்போல்  மஞ்சள் ஒளியில் மூழ்கிக் கிடந்தது.  ஹாலைக் கடந்து போய் வலது புறமாக திரும்பும்படி இவனிடம் சொல்லிவிட்டு டிரைவர் ஆட்டோவை எங்கோ தள்ளிக்கொண்டு போனான். 

மைலக்கா தயக்கத்துடனேயே உள்ளே போனான். வலது புறமாக திரும்பினான்.  ஹாலில் தெரிந்த வறுமையை பழைய சேலை ஒன்று போர்த்தியிருந்தது.

“வாங்க..” என்று புன்முறுவலுடன் ஒருத்தி அறைக்குள் அழைத்தாள். அப்போதுதான் குளித்திருப்பாள் போல!. கைலி நனைந்து பிருஷ்டத்தோடு ஒட்டிக்கிடந்தது. விமானத் தேவதையைப் பின்னாலிருந்து பார்த்தபோது அடைந்த அதே பரவசத்தை உடனே அடைந்தான். வெளிச்சத்தில் முழுமையாக அவளப் பார்த்தபோது, ஒரு நடிகைக்குரிய கவர்ச்சி இருப்பதாகவே தெரிந்தது. குளியலுக்குப் பின்னர் அது மேலும் பிரகாசிக்க அவளின் நிறம் உடன்பட்டது. வயது அப்பட்டமாய்த் தெரிந்தது. அண்ணி, அக்கா வேடங்களில் நடித்திருப்பாள் என்று எண்ணிக்கொண்டான் . வயிறு, வரிகள் போட்டுத் தடித்திருந்தது.

“நீங்க?..” என்று ஏதோ கேட்க நினைத்து நிறுத்திக்கொண்டான்.      

“நா ஒரு டி வி ஆர்ட்டிஸ்ட்டின்னு சொல்லியிருப்பாரே?..” என்று கேட்டாள்.

மைலக்காவின் பார்வையில் அவள் தனக்கான பதிலைத் தெரிந்துகொண்டாள்.

“ஒன்னு ரெண்டு சீரியல்ல மூனாவது வாரத்தோட செத்துப் பொற கேரக்டர்ல நடிச்சிருக்கன். அவ்ளோதான்! நடிக்ககிற ஆசீல வந்து இந்த ஆள நம்பி மோசம் போனதுனாலதான் இப்படி அசிங்கம்பட்டுக் கெடக்கிறன்..”

“இது உங்க பொழப்பு கெடையாதுன்னு சொன்னாரே!. “ 

“அந்த மனுஷன் எந்த பொய்யத்தான் சொல்லமாட்டாரு?.. உங்கள மாரி டீசண்ட்டான பார்ட்டிக்குதான் பேசி உடுவேன்னு வேற சொல்லியிருப்பாரே!. அந்த ஆளுக்கு தேவ காசு!. அதுக்காவ நரிய நனையாம குளிப்பாட்டீருவாரு..” 

மைலக்கா அனுதாபத்துடன் அவளைப் பார்த்தான். 

அப்போது, திடீரென்று அவனுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. உடனே அவளிடம் கேட்டு விடவும் எண்ணினான். ஆனால், தைரியம் வரவில்லை. கலையில் ஆட்டோ, ‘அபாங்’கிற்கு அர்த்தம் கேட்டது நினைவிற்கு வர தர்மசங்கடமாய் இருந்தது. அதுவரை இருந்த கிளர்ச்சியெல்லாம் அப்படியே தணிந்து போயின. உயிரிற்ற வார்த்தைகளில் எதையோ சொல்லி இப்படி உளறினான்.  

“மன்னிச்சிக்கிங்க!.. எனக்கென்னமோ மனசு ஒரு மாரியா இருக்கு!. நா கெளம்பறன். ஆனா, நீங்க ஒன்னும் கவல பட வேணா!. உங்க காச நா முன்னாடியே ஆட்டோகாரர்கிட்ட கொடுத்துட்டன்.” 

அவள், அவனை நெருங்கி வந்திருந்தாள்!. ‘அவள் எப்போது அம்மணமானாள்!.’ 

மைலக்கா, முதல்தடைவையாக ஒரு பெண்ணை அம்மணமாகப் பார்க்கிறான். 

அனுபவமில்லா கண்களின் ஆர்வத்தைப் பார்க்க அவளுக்கு ஆச்சரியமாய் இருந்தது. 

“நீங்க கொடுத்த காசு அந்த மனுசனுக்கு..” என்று சொல்லி, தனது குரல் மட்டுமல்ல அதரங்களும் இனிமையானவையே என்பதுபோல் அவள், அவனை ஆர்வத்துடன் முத்தமிட்டாள். முதல்தடவையாக, தனது விருப்பங்களே அங்கு பிரதானமாகிப்போன அனுபவம் அவளுக்குப் புதுமையாக  இருந்தது.. 

* * *

எழுத்து

மலேசியா ஸ்ரீகாந்தன்

ramjees.sa@gmail.com

Comments

Popular Posts