நான்கு பேருக்கு நன்றி



Memory Lane - 30

நான்கு பேருக்கு நன்றி.

Lower Certificate of Education (Sijil Rendah Pelajaran) எனும் 9-ம் வகுப்பு அரசாங்கப் பரீட்சையில் அவன் மலாய் மொழியில் ஃபெயில் ஆகியிருந்தான். அது ஒரு Core subject. கணிதம், தமிழ், சரித்திர பாடங்களில் சிறப்பான தேர்ச்சி பெற்றிருந்தும் பிரயோஜனம் இல்லாமல் போனது. மேல் வகுப்பு செல்ல அரசாங்க அனுமதி இல்லை!.

ஆறு வருட தமிழ்க் கல்வி, Remove class-சோடு சேர்த்து 4 வருட ஆங்கிலக் கல்வி!.  இந்தத் தகுதியை வைத்துக்கொண்டுதான் வேலைத் தேட வேண்டும். அந்தத் தகுதிக்கு உடனடியாக அவனுக்கு எஸ்டேட்டில்தான் ‘வெளிக்காட்டு’ வேலைக் கிடைத்தது. லாலாங் புற்களுக்கு டீசல் எண்ணையைப் பிழிவது, ‘தாசா கத்தியால்’ புல் வெட்டுவது, பாராங் கத்தியால் செடிகள் வெட்டுவது, ஆயில் பால்ம் பூக்களுக்கு ‘பூ தெளிப்பது..’ (அப்போதெல்லாம், ‘கன்னு மரங்களுக்கு’ செயற்கை முறையில்தான் மகரந்தம் தூவப்பட்டது) போன்றவை வெளிக்காட்டு வேலைகளில் அடங்கும்.

எஸ்டேட் நண்பன் சவரிதாஸ், தான் வேலை செய்த மெர்லின் ஹோட்டலில் சிபாரிசு செய்து அவனுக்கு ‘ஆபீஸ் பாய்’ வேலை வாங்கித் தந்தான். ஆனால், 70-களில் ஹோட்டலில் வேலை செய்வதை ஏதோ ‘விபச்சாரம் செய்வதுபோல்’ இழிவாகவேப் பார்த்தனர். ‘ஹோட்டலில் வேலை செய்கிறேன்’ என்பதை எவ்வளவோ தயக்கத்துடனும் சங்கடத்துடனுமே வெளியே சொல்ல வேண்டியிருந்தது. இப்போடெல்லாம் ஹோட்டலில் வேலை என்பது ஒரு ‘Glamorous’  உத்தியோகம்.   

பணியில் அவன் காட்டிய அர்ப்பணிப்பு அதற்குரிய பலனைத் தந்தது. ஆபீஸ் பாயிலிருந்து ‘Restaurant Cashier’, ‘Billing Clerk’, ‘Foreign Exchange Cashier’ என்று படிப்படியாக பதவி உயர்வு பெறலானான். இரவு ஷிஃப்ட்டின் போது, அவன் ‘Night Auditing’ -ஐயும் கற்றுக்கொள்வதில் காட்டிய ஆர்வத்தால் அந்த உயர்வும் கிட்டியது. ஆனால்,  9-வதுகூட தேர்சி பெறாத கல்வித் தகுதி ஒரு குறையாகப் பார்க்கப்பட்டு, பதவி உயர்வைத் தர நிர்வாகம் தயக்கம் காட்டியது. ஆனால், ‘Ng Yoke Seng’ என்ற ‘Senior Night Auditor’-ன் பலமான சிபாரிசால் அவனுக்கு அப்பதவி கொடுக்கப்பட்டது. என்னதான் அவன் வேலையில் ஆர்வமும், அக்கறையும் காட்டினாலும் கல்வித் தகுதிக்கே உரிய குறைப்பாடு  அவ்வப்போது வெளிப்படவே செய்தது.  ‘Debit’,‘Credit’ மற்றும் ‘Trial Balance’ போன்றவற்றைப் புரிந்துக்கொள்ள மிகவும் சிரமப்பட்டான். ‘Ng Yoke Seng’ அவனுடையப் போதாமையைப் புரிந்துகொண்டு பொறுமையாக வேலையைக் கற்றுக் கொடுத்தார். அப்போதுதான், ஹோட்டல் மூடப்படும் இடி வந்து விழுந்தது!.  மலேசியாவிலேயே மிகப் பழமையான ஹோட்டல்களில் ‘மெர்லின்’  ஹோட்டலும் ஒன்று. அங்கே வேலை செய்தவர்களில் பலரும் ஹோட்டல் கட்டப்பட்ட 1959-ம் வருடத்திலிருந்து வேலை செய்து வந்தனர். எனவே, அவர்களுக்கு உரிய முழு நஷ்ட ஈடை தவிர்க்கும் பொருட்டு, உரிமையாளர்கள் ஹோட்டலை ‘Kuala Reman’ என்ற ஒரு 2 வெள்ளி கம்பேனிக்கு கைமாற்றினர். அவர்கள், சில மாதங்களுக்கு ஹோட்டலை நடத்துவதாக நாடகமாடி, நஷ்டமடைந்துவிட்டதாக கணக்குக் காட்டி, தொழிலாளர்களுக்கு ஆகக் குறைந்த பட்ச ‘Termination Benefits’ -சைக் கொடுத்து, 1990-ல் ஹோட்டலை வெற்றிகரமாக மூடி வைத்தனர். இது ஒரு ‘Time tested method to avoid paying full benefits to employees..’ ஒரு குடும்பமாய் மிகவும் தோழமையுடன் வேலை செய்து வந்து தொழிலாளர்கள் அனைவரும் ஒரே வாரத்தில் எங்கெல்லாமோ சிதறிப் போயினர்.

அவன், மெர்லின் ஹோட்டலிருந்து சிதறி அடுத்து விழுந்த இடம், ‘Federal Hotel’. இதுதான் மலேசியாவிலேயே மிகப் பழையான நட்சத்திர ஹோட்டல். இது, 1957-ல் கட்டி முடிக்கப்பட்டு மலேசிய சுதந்திர தினமான ஆகஸ்ட் 31 1957 திகதிக்கு 3 நாட்கள் முன்னரே திறப்புவிழா கண்டது. சுதந்திர தினத்தில் கலந்துக்கொள்ள வந்து பல வெளிநாட்டு பிரமுகர்களும் இந்த ஹோட்டலில் தான் தங்கினர். அவன், அப்போதுதான் ‘Night Auditing’ -ஐப் பற்றி கற்றுக்கொள்ள ஆரம்பித்திருந்தான். அதற்குள், புதிய இடத்தில் வேலை!. அங்கே, அவனுடைய சீனியர் இன்னொரு சீனரான, ‘Tony Teh!’. அவருக்கு நிச்சயமாக அவனுடைய பலஹீனம் தெரிந்திருக்கும். ஆயினும், அது எதையுமே பொருட்படுத்தாமலும் அவனைச் சிறுமைப்படுத்தாமலும் அவரும் அவனுக்கு மிகவும் பொறுமையுடன் ‘Night Auditing’-ஐ சொல்லிக் கொடுத்தார். அவர், இரவில் ‘Night Auditor’-ஆகவும் பகலில், ரெஸ்டாரண்டுகளுக்கு ‘ஐஸ் கட்டிகள்’ வினியோகிக்கும் வியாபாரமும் செய்துக்கொண்டிருந்தார். அவரைப் பார்த்துதான் அவனும் பின்னாலில் இரண்டு வேலைகள் செய்ய ஆரம்பித்தான். சில வருடங்களுக்குப் பின்னர், தனது வியாபாரத்தை முழுநேரமாக கவனிக்கும் பொருட்டு Tony Teh, ஆடிட்டிங் வேலையை ராஜினாமா செய்தபோது, அவன் ‘Senior Night Auditor’ ஆக பதவி உயர்வு பெற்றான். ‘Night Auditing’ ஒரு நிரந்தர இரவு ஷிஃட் வேலை என்பதால்  அவனுக்கு ஒரு அசிஸ்டண்ட் கிடைக்காமல் மூன்று மாதங்களுக்கு விடுமுறை இல்லாமலேயே அவன் வேலை செய்ய வேண்டி வந்தது. பகலில் இன்னொரு வேலை வேறு!. 15 வருடங்களுக்கு எப்படி இரண்டு வேலைகள் செய்ய முடிந்தது என்பதை நினைக்கும் போது இப்போது அவனுக்குப் பெரும் புதிராகவே இருக்கிறது. அவன், எத்தனை மணிக்கு, எவ்வளவு நேரந்தான் தூங்கினான்?  அவனிடமே அதற்கு கணக்கு இல்லை! ராத்திரியில், ‘Tea Time’-ற்கு‘Duty Manager’-ஐயும் அவனையும் ‘Pastry Kitchen’-க்கு வரச்சொல்லி தான் தயாரித்த ‘Pastries’-ஐ கொடுத்து உபசரித்தவர், இன்று சமையல் துறையில் மிகப் பிரபலமாகவும், ‘Telivision Celibrity’-ஆகவும்  விளங்கும், ‘Chef Wan’.        

பின்னர், அவனும் இரவு வேலையை விட்டுவிட்டு, பகலில் செய்து வந்த பேட்டரி கம்பேனியில் அறிமுகமான சில நண்பர்களுடன் சேர்ந்து சொந்த வியாபாரத்தில் ஈடுபட்டான். அவர்கள் மூன்று பேர் கம்பேனியின் ‘Founding Members’. பாட்டரி கம்பேனியின் அக்கவுண்ட்சைப் பார்த்துக்கொண்ட திரு. லியூக் மற்றும் அவரின் தம்பி திரு. வில்லியம் இருவரையுமே தமது கம்பேனியின் அக்கவுண்ட்டையும் பார்த்துக்கொள்ள அவர்கள் நியமித்துக்கொண்டனர். கம்பேனி அசுர வளர்ச்சி கண்டது. கூடவே, நிறுவனம் சிறியதாக இருக்கும் போது, எல்லோருமே ‘Equal Partners’, ‘All three partners’ contributions are equally important’ எல்லாம் தடம் புரண்டுபோய், ‘எனது பங்களிப்பு உங்களின் பங்களிப்பைவிட முக்கியமானது/அதிகமானது’ என்று பேதம் பார்க்கப்பட்டது. மாதாந்திர ஐந்து இலக்க வருமானத்திற்காக அவன் தனது சுய மரியாதையை இலக்க வேண்டி வருவதை உணரத் தொடங்கினான். ஒரு குறுஞ்செய்தியில் உடனடியாகவும் பின்னர் முறையான கடிதம் மூலமாகவும் ராஜினாமா செய்து, தனது பங்குகளை விற்று வெளியேறினான். (இதுவெல்லாம் இன்னொரு பதிவிற்கான material. அது பின்னர் ஒரு நாள் பதிவு பெரும். இப்போதைக்கு அதன் தலைப்பு மட்டும். ‘நண்பன் எனும் நயவஞ்சகன்’.

இப்போது அவன், இன்னொரு திறமையை வளர்த்துக்கொள்ள ஆரம்பித்தான். திரு. லியூக் ஒரு Freelance Accountant. 40-ற்கும் மேலான கம்பேனிகளின் அக்கவுடண்களை அவர் பார்த்துக் கொண்டிருந்தார். அதில் சிறிய கம்பேனிகள் சிலவற்றை அவனுக்கு ‘Outsource’ செய்து, வேலையும் சொல்லிக்கொடுத்து, வருமானமும் கொடுத்தார். Cash flow, Trial Balance, Balance Sheet, Fix Asset, Bank Recon, V Look-up & Team Viewer என்று அக்கவுண்ட் மற்றும் கணினி  நுணுக்கங்களைச் சொல்லிக்கொடுத்தார். அவன், Finalise செய்து தரும் அக்கவுண்ட்சை அவர் Review செய்து ஆடிட்டருக்கு அனுப்பி வைத்தார். அவர் ஒரு ப்ரக்டிகல் அக்கௌண்டன்ட், நேர்மையை விட்டுக்கொடுக்காத அதே சமயத்தில், மனிதாபிமானத்துடனும் நடந்துகொள்ளும் ஒரு பண்பாளர். ஒரு கம்பேனி உரிமையாளருக்கு புற்று நோய் கண்டிருப்பதால், அவருடைய அக்கவுண்டை இப்போதுவரை இனாமாக செய்து கொடுத்துக் கொண்டு வருகின்றனர். அந்த மனிதாபமானம் அவர்களின் பொது அடையாளம்.     

அவருடைய தம்பி, வில்லியம் ஒரு ஆடிட்டர்/டெக்ஸ் அக்கவுண்டண்ட். அவரின் பார்வைக்கு போகும் அவனது அக்கவுண்சில் காணப்படும் Audit Queries-ஐ எப்படி கலைவது போன்ற நுணுக்கங்களை அவர் சொல்லிக் கொடுத்தார். அவர் ஒரு Professional Tax Agent. ‘Meticulous’ என்பதற்கு அவரின் பணி ஒரு சான்று.

அவனுக்குக் கல்வித் தேர்ச்சி போதாது!. வேற்று இனத்தவன் வேறு!. ஆனால், இவை யாவுமே அந்த நால்வருக்கும் ஒரு தடையாகவே இருக்கவில்லை. அவன் மேலிருந்த நல்லெண்ணம், அவனது முன்னேற்றத்தில் இருந்த அக்கறை அவர்களைப் பொறுமையுடன் அவனுக்குத் தமது துறைசார்ந்த அறிவையும், நுட்பங்களையும் கற்றுக்கொடுத்து, அவனை  ஆளாக்கிவிட வைத்தது. அவர்களுக்கு அவன் ஏதாவது செய்தே ஆகவேண்டும்.

தனது ஆத்மார்த்தமான நன்றியைத் தவிர அவனால், பாவம் வேறேன்ன செய்துவிட முடியும்.   

1. Merlin Hotel

2. Federal Hotel

3. Senior Night Auditor Promotion

4. Mr. Ng Yoke Seng-ம் அவனும்

5. Mr. Tony Teh-ம் அவனும்

6. Mr. William & Mr. Luke 











Comments

Popular Posts