தைப்பூசத் திருவிழா

 



Memory Lane – 18
1960-களில் சில கொண்டாட்டங்கள் - 2
தைப்பூசத் திருவிழா
அப்போதெல்லாம் வாகனங்களும் பேரூந்துகளும் மலை அடிவாரம்வரைப் போகும் அனுமதியெல்லாம் கிடையாது. ‘THAIPUSAM’ என்று போர்டு போட்டு ரவாங்கிலிருந்து புறப்படும் ‘Len Bus’, பத்து கிராமத்திலேயே இறக்கிவிட்டு விடும். அங்கிருந்து மலைக்கு நடந்தேதான் போக வேண்டும்.
பஸ்சில் வரும்போது ‘Templer Park’ அருகே, (Now, Templers Park Rain Forest Retreat, Opposite) சுண்ணாம்பு மலை ஒன்று இன்றும் இருக்கிறது. அதைக் கடந்து போகும்போதெல்லாம், சிறுவர்களான நாங்கள் தவறாமல் பரிமாறிக்கொண்ட தகவல், பின்வருமாறு..
‘அந்தக் காலத்துல இந்த மலையிலதான் தைப்பூசத்த கொண்டாடுனாங்களாண்டீ!., இப்பதான் அத பத்து கேப்புக்கு மாத்திட்டாங்க தெரியுமா!..’
‘ஓ.. அப்படியா!. படியெல்லாம் ஒன்னித்தியும் கானோமேடா!. எப்படி மேல ஏறியிருப்பாங்க!.’
‘ஓ.. படியெல்லாம், அந்தப் பக்கம் இருக்குடீ. இங்கேர்ந்து பாத்தா தெரியாது..’
‘ஏன் மாத்திட்டாங்கன்னு..’ சொன்னவனும் விளக்கவில்லை, வாயைப் பிளந்து கேட்டவனும் கேட்கவில்லை!..
காளான்களைப் போல் தைப்பூசத்திற்கு ‘முளைத்த’ கார் பார்க்குகளில், வாட்ட சாட்டமாய், அவர்களின் தோலின் தடிப்பிற்கு ஏற்ப, கழுத்தில் தொங்கும் மொத்தமான தங்கச் சங்கிலி (சிலர் வெள்ளிச் சங்கிலி) அணிந்த குண்டர்களையெல்லாம் அப்போது காண முடியாது.
இப்போது எப்படியோ தெரியவில்லை!. தைப்பூசத்திற்கு மலைக்குப் போய் நாற்பது வருஷங்களுக்கு மேலாகிவிட்டன. தெய்வநிந்தனைக்கு ஆளாகிவிட்டதால் அந்தப் பக்கமெல்லாம் போவதை நிறுத்திக் கொண்டேன். தைப்பூசத்தின் விஷேஷமே முதல் நாளிரவே மலைக்கு போவதுதான். அப்போது, பத்துமலை வளாகத்தில் எல்லாவித கேளிக்கைகளும் இருந்தன. எதுவுமே நமது தெய்வ வழிப்பாட்டை; மத நம்பிக்கையை மாசுபடுத்தவும் இல்லை!.. புண்படுத்தவும் இல்லை!..
ஒரு பக்கம் படம் காண்பிக்கப்படும். தரையெல்லாம் குடும்ப மகா ஜனங்கள் பத்திரிக்கைகளையும் பாய்களையும் விரித்துப்போட்டு ‘கொச்சி’களைச் சாப்பிட்டுக்கொண்டே படம் பார்த்துக்கொண்டும் தூங்கிக்கொண்டும் இருப்பார்கள்!. பக்கத்தில் குழந்தைகள் வேறு!. பார்த்த படங்களெல்லாம் பேசும் படங்கள்தாம். ஆனால், அங்கு நிலவும் இரைச்சலில் அவர்கள் பார்த்ததென்னவோ ஊமைப்படங்கள்தாம்.
இன்னொரு பக்கம் ராட்டினம் சுற்றும். பட்டிக்காட்டு ஜனங்களுக்கு பட்டணம் பார்க்க வந்த வாய்ப்பால் தமது குழந்தைகளின் பேராசையை நிறைவேற்ற தமது முறைக்காக ராட்டின வாசலில் முண்டியடித்துக் கொண்டு காத்திருப்பர். மேலேயிருந்து கீழே பார்ப்பது எப்போதுமே ரசனைக்குரியதுதான். மேலே இருப்பவன் ‘ஒசத்தி!’. கீழே இருப்பவன் ‘மட்டம்!.’ பின்னாலில் அதுவே, பிரிவினைக்குரிய பார்வைக்கு வித்திடும்போது பிரச்சனையாகிப் போகிறது.
ஒரு தொகையைக் கொடுத்து ஐந்து மூங்கில் வளையங்களை வாங்கி, எதிரே அடுக்கப்பட்டிருக்கும் பொருட்களின் மேலிருக்கும் சிறிய, முக்கோண கட்டையில் மாலைப் போல் போட்டால், அந்தப் பொருள் போட்டவருக்கு உரியதாகும். வழக்கம்போல், விலை மலிவான பொம்மைகள், போத்தலில் அடைக்கப்பட்ட சுவை பாணங்கள், திண்பண்டங்கள், விளையாட்டுப் பொருட்கள் போன்றவை எளிதாகக் கிடைக்கக்கூடியவனவாய் இருந்தன. ரேடியோக்கள் போன்றவை கிடைக்க முடியாதவையாய் இருந்தன.
வேறு ஸ்டால்களில் மூங்கில் வளையங்களுக்கு பதில் வெள்ளை நிற ‘Ping Pong’ பந்துகள் உபயோகிக்கப்பட்டன. மற்ற ஸ்டாலில், ‘Dart’ விளையாட்டு ஈட்டிகளைக் கொண்டு எதிரே உள்ள எண்களைக் குத்தி அந்த எண்ணிற்கான பொருளைப் பெறுவது. ஆமாம், இப்போது ஒரு ‘Fun Fare’ கேளிக்கையில் இருக்கும் எல்லா பொழுதுபோக்கு அம்சங்களும் தைப்பூசத்தில் இருந்தன.
‘மலைப் பாம்புடன் மங்கை’ என்ற விளம்பரத்துடன் ஒரு கூடாரம் இருக்கும். உள்ளே மங்கை ஒருத்தி, (பார்க்க மலாய் அல்லது இந்தோனிசிய அல்லது தாய்லாந்துகாரியைப் போல்) மலைப் பாம்புடன் படுத்திருப்பாள். அதற்கு ஒரு கட்டணத்தைக் கொடுத்துப் பார்த்துவிட்டு, உடல் சிலிர்த்துக்கொண்டு வெளியே வர வேண்டியிருக்கும்.
கடைசியாக, ‘Attraction Of Thaipusam’, -மாக வர்ண விளக்குகளில் மின்னும் ‘டான்ஸ் மேடை’!.. அதைச் சுற்றி வயது வித்தியாசம் இல்லாமல் ஒரே ஆண்கள் கூட்டம்!. மேடையில் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் 19-லிருந்து 35 வயதிற்குள் உட்பட்ட பெண்கள், ஒரு ஆறு பேர்கள்வரை அமர்ந்திருப்பார்கள்!. அவர்களுடைய மார்பில் அவர்களுக்கான எண் குத்தப்பட்டிருக்கும்!. அவர்கள் பெரும்பாலும் உடலைக் கவ்விப் பிடித்து, தமது பிருஸ்டம் மற்றும் முலைகளின் வடிவங்களை எடுத்துக்காட்டிக் கொண்டிருக்கும் ‘கெபாயா’ அல்லது ‘ஸ்கேர்ட்’ அணிந்திருப்பார்கள்!. முகமெல்லாம் கனமான ‘மேக் ஆப்’பில் கவர்ச்சி வடியும். (அவர்களும் பார்க்க, மலாய் அல்லது இந்தோனிசிய அல்லது தாய்லாந்துகாரிகளைப் போல இருப்பர்) ‘முட்டி செத்து’ இயாலமையில் இருந்தவர்கள் நாட்டியக்காரிகளின் அவயங்களையே வாயைப் பிளந்துகொண்டுப் பார்த்து, அதரங்களை நனைத்துக்கொண்டனர்!. சிறுவர்களோ, ஏதோ இது இன்னுமொரு கேளிக்கை என்று, ஆனால் தனக்குத் தெரிந்த அண்ணன்கள் அவர்களுடன் டான்ஸ் ஆடும் போது கைத்தட்டி ஆர்ப்பரித்து மகிழ்ந்தனர். ஆனால், தினமும் யாரையோ நினைத்து, தலையணையை அணைத்தபடி கைலியை நனைத்துக் கொண்டிருந்த வாலிபர்களோ, தம்மைக் கவர்ந்த பெண்களின் எண்களைத் தேர்வு செய்து, அருகிலிருந்த அதிகாரியிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு, அவர்களுடன் டான்ஸ் ஆடினர். கையைப் பிடித்தெல்லாம் ஆட அனுமதியில்லை. பெரும்பாலும், ‘ஜொகெட்’ அல்லது ‘டுவிஸ்ட்’ நடனங்களே அனுமதிக்கப்பட்டன. வாலிபர்களின் தேர்வுக்கு நடனக்காரிகளின் முகம்; முலைகள் அல்லது பிருஸ்டங்களே முக்கிய காரணங்களாக இருந்தன.
நான், இதிலெல்லாம் ஈடுபட்டதுண்டா? நீங்கள் நினைப்பது எனக்கு தெரிகிறது!. நீங்கள் நம்ப வேண்டும்!. சத்தியமாக இல்லை!.. ஏனெனில், ‘I Don’t Believe in Minor Vices and Cheap Thrills!..’
Fast forward to 21-ம் நூற்றாண்டு!. இப்போது, இத்தகைய கேளிக்கைகளெல்லாம் தைப்பூசத்தில் நினைத்துக்கூட பார்க்க முடியாதவை. ஏனெனில், நாம் இப்போது மிகவும் தெய்வசிந்தனை மிக்கவர்கள்!. மதத்தில் இதற்கெல்லாம் இடமே கிடையாது. இவையாவும் சமயத்தை கேவலப்படுத்தும் பாவச் செயல்கள்!. நாமெல்லாம் ஒழுக்கச் சீலர்கள் அன்றோ!.. மெத்த சரி!..
1. பத்துமலை தைப்பூச கோவில் நிர்வாகத்தின் உயரதிகாரி ஒருவனின் வீட்டில் 05/03/2019 -ல் உழல் தடுப்பு அதிகாரிகள் சோதனையிட்ட போது, கத்தை கத்தையாக கரண்சி நோட்டுகள் மற்றும் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன.
2. 18/05/2018 -ல் மலேசியாவின் முன்னால் பிரதமர் வீட்டில் உழல் தடுப்பு வாரியம் மேற்கொண்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட கரண்சி நோட்டுகள்; ஆடம்பர நகைகள் மற்றும் ஒவ்வொன்று 50 ஆயிரம் வெள்ளி பெறுமானமுள்ள ‘Bijan Custom Made Hand bags’!..
இவ்வளவு தடையங்களுக்கு மத்தியிலும் அந்த முன்னால் பிரதமர், மசூதி ஒன்றில் ஒரு வெள்ளிக்கிழமை மறைநூலில் கையை வைத்து ‘Sumpah Laknat (Mubahalah in Arabic) !..’ சத்தியம் செய்கிறான். அதாவது, ‘நான் பொய் சத்தியம் செய்யும் பட்சத்தில் இறைவனால் சபிக்கப் படுவேனாக.. (Divine retribution in the form of a curse against the other party if the latter is lying.) இவ்வுலகில் செய்யும் குற்றத்திற்கு அவ்வுலகில் சபிக்கப்பட கடவதாம்!.
அவனின் குற்றம் நிரூபிக்கப் பட்டு 12 வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுவிட்டது. இப்போது இன்னும் உள்ள 30 மேற்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு சிறையிலிருந்து சொகுசு காரில் விசாரணைக்கு வந்து போய்க் கொண்டிருக்கிறான்.
ஆக இங்கே, கேளிக்கை நிகழ்ச்சிகளும்; எதிர் பாலருடன் நடனம் ஆடுவதும் தான் தெய்வ நிந்தனைக்கும்; சமய சீர்க்கேட்டிற்கும் உரிய விஷயங்கள். திருடு; ஊழல்; பொது சொத்தை கொள்ளையடிப்பது; அதையும் சமய அறங்காவலனாக இருந்துக்கொண்டே செய்வதெல்லாம் தெய்வத் திருப்பணிகளில் அடக்கம்.
காசேதான் கடவுளடா!..
1. சிறுவர்கள் பேசிக்கொண்ட முதல் பத்துமலை
2. காவடி எடுப்பதற்கு முன் குளித்த ஆறு
3. பத்துமலை தைப்பூச காட்சிகள் அன்றும் இன்றும்
4. கோவில் அதிகாரி வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் நகைகள் (3 படங்கள்)
5. அடுத்த மூன்றும் முன்னால் பிரதமர் வீட்டில்





Comments

Popular Posts