நான் ஒரு வந்தேறி!


பேசாப் பொருள் பேசினேன் – 1

நான் ஒரு வந்தேறி!

(Immigrant – A Non-Malay who lives in Malaysia. If he was born here and hold a Malaysia Citizenship, still he is an immigrant. Malaysian interpretation of the word ‘Immigrant’)   

19-ம் நூற்றாண்டிலிருந்து தொடங்கும் வரலாற்று பின்னணி என் இனத்திற்குண்டு!. நான், மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்தவன். ஐந்தாவது தலைமுறையையும் கண்டுவிட்ட நாட்டின் பிரஜையும்கூட நான். குடியுரிமைப் பெற்ற மற்றவர்களும் நானும் சம உரிமைக் கொண்டவர்களா? இல்லை! காரணம்,

நான் ஒரு வந்தேறி!..

கடினமாய் உழைக்க இவர்கள் தயங்கியபோது, மலேரியா, காலரா, அம்மை நோய்களுக்கு எனது உறவுகளை பலி கொடுத்து, நான் காட்டை அழித்து நாட்டை   வளப்படுத்தினேன். ஆயினும்,

நான் ஒரு வந்தேறி!.

ஜப்பானிய ஆக்கிரமிப்பின்போது, கொடூரமாய்க் கொல்லப்பட்டு செத்தேன். ‘சயாம் மரண ரயில் பாதையில்’ ஒரு வழிப்பயணம் கொண்டு செல்லப்பட்டு வெறும் பட்டியலாகிப் போனேன். காரணம்,

நான் ஒரு வந்தேறி!..

காம்யூனிஸ்ட் கிளர்ச்சிகாரர்களுக்கு உதவினேன் என்பதற்காக ஜப்பானியர்கள் எனது இடுப்பை ஒடித்து .நிரந்தர ஊனமாக்கிப் போட்டனர், பிரிட்டிஸ் பேரரசு , எனது துணிச்சலைப் பாராட்டி ‘George Medal’ எனும் உயரிய விருதிற்குரிய ஒரே மலாயா பெண்மணியாக என்னைக் கௌரவித்தது. ஆனால், மலேசியாவில் புதிய தலைமுறைக்கு என்னைத் தெரியாது. வரலாற்றுப் பாடத்தில் எனக்கு இடமில்லை!.  ஏனெனில்,

நான் ஒரு வந்தேறி!.

நாட்டின் அசுர பொருளாதார வளர்ச்சிக்கு தலைமுறைக் கணக்கில் வாழ்ந்து வந்த தோட்டப் புறங்கள் பலியானபோது, நான் நடுத்தெருவில் நிறுத்தப்பட்டேன். எனது அடுத்த வேளை உணவைப்பற்றி  யாருக்கும் அக்கறையில்லை!. ஏனெனில்,

நான் ஒரு வந்தேறி!.

வீடில்லை!.. சரியான கல்வியில்லை!.. போதிய வேலை வாய்ப்பில்லை!. வறுமை என்னைக் குண்டர் கும்பல்கள் பக்கம் தள்ளியது. 2018-ன் கணக்கெடுப்பின்படி 4143 பேர் குண்டர் கும்பல் அங்கத்தினர்களாக இருப்பதாக ஆய்வு சொல்கிறது.. இது எனது இனத்திற்கே உரிய பெரும் சமூகப் பிரச்சினை!. எப்படியோ சீரழிந்து போகிறேன். அதனால் என்ன?

நான் ஒரு வந்தேறி!.

போலீஸ் லாக்காப்பில் இருக்கும்போது காரணம் தெரியாமல் இறந்துப் போனது 90% நான்தான் என்று ‘Suaram’ எனும் மனித உரிமைக்குழு ஆணையம் சொல்கிறது. !. நான் எப்படிச் செத்தேன் என்று புலன் விசாரணை செய்து ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டிய அவசியமெல்லாம் யாருக்கும் இல்லை!. காரணம்,

நான் ஒரு வந்தேறி!..

போலீஸ், சுய பாதுகாப்பிற்காக வேண்டி மேற்கொண்ட துப்பாய்க்கிச் சூட்டில் 95% நான்தான் உயிரிழந்தேன்!. காரணம்,

நான் ஒரு வந்தேறி!.

‘The Economist’ சஞ்சிகையின் ஆய்வுபடி நாட்டில் நான் 60% புறம்போக்கு குடிசைவாசியாகவும், 41% பிச்சைக்காரனாகவும் இருக்கின்றேன். காரணம்?

நான் ஒரு வந்தேறி!.

2004-லிருந்து 2007-குள் சிலாங்கூர் மாநிலத்தில் மட்டும் பல்வேறு காரணங்களூக்காக 96 எனது வழிப்பாட்டு ஸ்தலங்கள் உடைக்கப்பட்டுள்ளன!. காரணம், பர்மிட் இல்லாமல் அரசு நிலத்தில் கோவில் கட்டிவிட்டேனாம். சரி, பர்மிட் கேட்டு முறையாக விண்ணப்பித்தேன், கிடைக்கவில்லை!. காரணம்,

நான் ஒரு வந்தேறி!..

1957-ல் அரசாங்க பணிகளில் 40% -ஆக இருந்த எனது பங்களிப்பு, 2007-ல் 2% -ஆக குறைந்து போனதாக 2010-ல் மேற்கொண்ட ஆய்வொன்று ஆவணப்படுத்தியுள்ளது. அதற்குக் காரணம்,

நான் ஒரு வந்தேறி!.

62% வீட்டு வாடகை விளம்பரங்கள் எனக்கு வீடு வடகைக்கு விடப்படாது என்று வெளிப்படையாக இனத் துவேஷம் பேசுகிறது. 32% அந்தப் போக்கை ஆதரிக்கவும் செய்கின்றனர். காரணம்,

நான் ஒரு வந்தேறி!.

வேலைத் தேடி விண்ணப்பிக்கும்போது, நேர்முகப் பேட்டிக்கு வரச்சொல்லி நான் அழைக்கப்படும் வாய்ப்பு 3.66% மட்டுமே. சீனர்கள் 32.73% மற்றும் மலாய்க்காரர்கள் 7.86%.  காரணம்,

நான் ஒரு வந்தேறி!.

அரசாங்க பொதுத்துறை டெண்டர், கான்ட்ரக்ட், வியாபார உரிமம் போன்றவை அரசியல்வாதியின் சிபாரிசை விரும்பாத சாதாரணமான (man on the street) நான் எல்லாம் நினைத்துக்கூட பார்க்கலாகாது. வீடமைப்புப் பகுதிகளில் குப்பைகளைப் பொறுக்கி அப்புறப்படுத்தும் கான்ட்ரக்ட்டைப் பெறகூட நான் தகுதி இல்லாதவன்!. காரணம்,

நான் ஒரு வந்தேறி!.

நான், சீனியர் காம்பிரிட்ஜ் பரீட்சையில் ‘ Straight A’ பெற்றாலும் அரசாங்க ஸ்காலர்ஷீப் கிடைக்கப் போவதில்லை!. காரணம்,

நான் ஒரு வந்தேறி!.

டாக்சி பர்மிட், நில ஒதுக்கீடு, பல்கலைகழகத்தில் நான் படிக்க விரும்பும் படிப்பிற்கான இடம்,  எதுவுமே கிடைக்கப் போவதில்லை!. காரணம்,

நான் ஒரு வந்தேறி!.

‘Effirmative Action’ என்று சொல்லி, ‘Meritocracy’-யை காவு கொடுத்தபோது, நான் அங்கே பாதிக்கப்பட்டது யாருக்குமே கவலையைத் தரவில்லை!. காரணம்,

நான் ஒரு வந்தேறி!.

கற்கின்ற கல்வியில் ‘Effirmative Action’ புகுந்தால் என்ன ஆகும்? ஒரு சம்பவம்!. உடம்பிற்கு சுகமில்லையென்று அந்த பிரைவேட் கிளீனிக்கிற்கு சென்ற நோயாளியை அந்த ‘Effirmative Action’-ல் டாக்டரானவர், பென்சில் முனையால் நோயரைத் தொட்டு, ‘Chicken Pox’ என்பதை ‘Chicken Chop’ என்று எழுதி, விடுப்பு கொடுத்தார். எனக்குரிய இடம் மறுக்கப்பட்டு டாக்டரானவராயிற்றே?. நான் கோபம் கொள்ளக்கூடாது!. காரணம்,

நான் ஒரு வந்தேறி!.  

1969 இனக்கலவரத்திற்கு பிறகு வறுமையை ஒழித்தல் மற்றும் சமுதாயத்தை மறுசீரமைப்பு செய்தல் என்று கூப்பாடு போட்டு 1970-ல் மலாய் இனத்திற்கு சாதகமாக புதிய பொருளாதார கொள்கை ஒன்று 20 வருட தவணைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், 20 வருடங்களுக்குப் பின்னரோ அவர்களின் வறுமை இன்னும் மோசமானது. ஆக, அந்த ‘Effirmative Action’-ஆல் பயனடைந்தது யார்? அதை நான் கேட்கலாகாது? காரணம்,

நான் ஒரு வந்தேறி!.   

இந்த நாட்டிலேயே பிறந்திருந்தாலும், ஏதோ சில காரணங்ககளால் பிறந்த சூரா எடுக்காமல் விட்டுவிட்டேன். இப்போது நான் ஒரு நாடற்ற அநாதை. மனிதாபிமான முறையில் அந்தப் பிரசினைகளை அனுகி, எனக்கு மற்றும் என்னைப் போன்றோருக்கு ஒரு தீர்வை நல்குவது ஒரு பெரிய சவால் மிக்க காரியம் கிடையாது. சபா மாநிலத்தில் கிருஸ்துவர்களின் ஜனத்தொகை முஸ்லீம்களைவிட அதிகமாக இருக்கிறதென்று ‘Project I C’ என்ற ஒரு ரகசிய புரோக்ராம் வழி அந்நிய நாட்டு முஸ்லீம்களுக்கு அடையாளக்கார்டு கொடுத்து அவர்களை நாட்டின் பிரஜைகளாக்கிய அந்த மாகாணத்தின் இன, மத விகிதாச்சாரத்தையே மாற்றிப் போட்ட நாடுதான் இது!. ஆனால், எனக்கு அது முடியாது. காரணம்,

நான் ஒரு வந்தேறி!.

இஸ்லாத்திற்கு மதம் மாறிப் போன என் கணவன் என் மகளைக் கடத்திக்கொண்டுபோய் 13 வருடங்கள் ஆகிவிட்டன. அதைக் கண்டுப் பிடித்துக் கொடுக்க ஆர்வம் காட்டாத காவல்துறை, சமீபத்தில் நாட்டைப் பகடி செய்து வீடியோ வெளியிட்ட ஜொசிலீன் சியாவைப் பிடிக்க ‘Interpol’-லின் உதவியை நாடுகிறது. காரணம்,

நான் ஒரு வந்தேறி!.

நாட்டின் பிரஜை என்ற முறையில் எனது தார்மீக உரிமைகளைக் கேட்பதுகூட அவர்களின் சலுகைகளைக் கேள்விக்குள்ளாக்கும் காரியமாகப் பார்க்கப்படும்!. காரணம்,

நான் ஒரு வந்தேறி!.

ஆக,

நான், இவ்வளவு சவால்களுக்கிடையேதான் என்னை மேம்படுத்திக்கொண்டு எனது சுய முயற்ச்சியில் ஒரு நிலைக்கு வந்து, பெறும் வருமானத்திற்கு  உரிய வருமான வரியைத் தவறாமல் கட்டுவேன். ஆனால், இவர்கள், எனது வருமான வரியால் பெற்ற ஊதியத்தில், கொஞ்சமும் வெட்கமில்லாமல் எல்லாவித ஊழல்களையும் செய்துக்கொண்டு, எனக்குரிய நியாமான உரிமைகளை நான் கேட்டால்,

நான் ஒரு வந்தேறி!..        

எஸ்டேட்டில் எமது வாழ்க்கை    

எஸ்டேட்டில் எமது வாழ்விடம் 

எஸ்டேட்டில் எமது சுற்றத்தார் 

மலாயாவில் ஜப்பானியரின் ஆக்கிரமிப்பு

சியாம் மரண ரயில்பாதை 

சியாம் மரண ரயில்பாதை

சியாம் மரண ரயில்பாதை

புறம்போக்கு நிலத்தில் எமது வாழ்விடம்

தனது போர்க்காலத் துணிச்சலுக்காக 'GEORGE MEDAL' என்ற உயரிய விருது கொடுத்து கௌரவிக்கப்பட்ட சிபில் கார்த்திகாசு.

PERAK எனும் மாநிலத்திலுள்ள 'PAPAN' எனும் இடத்தில் பாழடைந்துக் கொண்டிருக்கும் ஸ்பில் கார்த்திகாசுவின் போர்க்காலத்திய வீடு. இந்த வீட்டிலிருந்துக்கொண்டுதான் அவர் கம்யூனிச போராளிகளுக்கு பாதுகாப்பு மற்றும் சிகிச்சை அளித்தார்.   


Comments

Popular Posts