செந்தூல் – பகுதி 2

 



Memory Lane – 45
செந்தூல் – பகுதி 2
செந்தூல் மார்கெட்
இங்கு, ரயில்வே வோர்க் ஷாப்பிற்கு அடுத்து காலணித்துவ ஆட்சியின் சின்னமாக இப்போதும் இருக்கும் கட்டிடம் இந்த செந்தூல் மார்க்கெட்!. நாட்டில் கட்டப்பட்ட மார்கெட்டுகளில் இரண்டாவது பழைய மார்க்கெட் இது. முதலாவது, புடுவில் இருக்கும் புடு மார்க்கெட்!. கோலாலம்பூர் முனிசிபால்டியில் பணி செய்த ‘Eric Taylor’ என்ற கட்டிட வடிவமைப்பாளரால் வடிவமைக்கப்பட்ட இது, 1950-களில் கட்டப் பட்டது.
எற்கெனவே, பலமுறை மாற்று இடத்திற்கு போகவேண்டிய நேரம் வந்துவிட்ட வதந்தியில் இருப்பது. இங்கு கிடைக்கும் வருமானம் புதிய இடத்தில் கிடைப்பதற்கான உத்திரவாதம் இல்லாததால் இன்னும் பேச்சுவார்த்தை நடந்துக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
இடமோ YTL என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானது!. அந்த ஏரியாவே பெரிய ‘Transformation’-குள்ளாகி வருகிறது. இந்த நிலையில், செந்தூல் மார்க்கெட்டும் புதிய வளர்ச்சியின் நிர்பந்தத்திற்கு தாக்குப் பிடிக்க முடியாமல், தனது காலணித்துவ வரலாற்றை இழந்து வேறு இடத்திற்கு மாற்றலாகி, ‘இன்னுமொரு கட்டிடமாக’ அடையாளம் இல்லாமல் போக வேண்டியது காலத்தின் கட்டாயம்.
செந்தூல் மார்க்கெட் நான் வசிக்கும் ஸ்ரீ கெம்பாங்கானிலிருந்து 30KM தூரத்தில் இருக்கிறது. ஞாயிற்றுக் கிழமைகளில் அங்கு செல்ல 30 நிமிடங்கள் ஆகும். என் மனைவி செந்தூலில் பிறந்து வளர்ந்தவராதலால் இன்றுவரை மாதத்திற்கு இரண்டு முறை அங்கு போய்தான் மார்க்கெட்டிங் செய்துக்கொண்டு வருகிறார். இவ்வளவிற்கும் எனது வீட்டிலிருந்து 5 நிமிடங்கள் தூரத்திலேயே ‘Pasar Borong’ என்றழைக்கப்படும் மொத்த வியாபார மார்க்கெட் இருக்கிறது. இருந்தாலும் மனைவிக்கு அங்கு போய் வாங்கினால்தான் திருப்தி!. ஆணைக்கு உட்பட்டு, ‘Chauffeur driven’ செய்ய நான் வேறு பக்கத்திலேயே இருக்கிறேன். வேறு வழியில்லை!.. ‘Some good habbits die hard..’ என்று மனதைத் தேற்றிக்கொள்கிறேன்.
செந்தூலில் இந்தியர்களால் மறக்க முடியாத இன்னுமொரு இடம், ‘செந்தூல் கள்ளுக் கடை’. ரயில்வே பட்டறை தனது உச்சத்தில் இருந்தபோது, அங்கு வேலையிலிருந்த இந்தியத் தொழிலார்களின் ‘தாக சாந்தி மையம்’. எனது தந்தை ஒவ்வொரு சம்பள நாளுக்கும் ரவாங்கிலிருந்து இங்கு கள் குடிக்க வந்திருக்கிறார்.
அந்த இடத்தில் இப்போது, மலாய்க்காரர்களின் கடைகள் இருக்கின்றன. இந்த இடமும் விரைவிலேயே காணமல் போகும் கட்டாயத்திலேயே இருக்கிறது.
2021 ஜூன் 05 -ல் இலங்கையிலிருந்து வெளிவரும் ‘வனம்’ இதழில் ‘பிறந்தநாள் பரிசு’ என்ற எனது சிறுகதை பிரசுரமானது. அக்கதையில், இப்படியொரு பத்தியில் இந்தக் கள்ளுக்கடையைப் பற்றி இப்படி பதிவு செய்திருப்பேன்!.
“ரிடையர் ஆகிவிட்ட வேதனயை செந்தூல் கள்ளுக்கடையில் உட்கார்ந்தே அப்பாவால் தாங்கிக் கொள்ள முடிந்தது. ஆயினும், நாற்பது வருடங்களாக குடியிருந்த குவார்ட்டர்ஸை காலி செய்யவேண்டிய நிர்ப்பந்தம் வந்தபோதுதான் அவர் பாவம், நிலைக்குழைந்து போனார். காலி செய்த நாளன்று, கலையிலேயே செந்தூல் கள்ளுக்கடைக்குப் போய் நிதானத்தைக் கள்ளுக்குள் கரைத்துக்கொண்டு வந்தே குவார்ட்டர்ஸை அவரால் பிரிய முடிந்தது.”
ரயில்வேயில் நிறைய இந்தியர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் வேலை செய்ததின் அடையாளமாக இங்கு பல கோயில்கள் இருப்பதை இப்போதும் காண முடியும்.
இலங்கைத் தமிழர்களின் செல்வாக்காலோ என்னவோ ஒரு கான்வெண்ட் பள்ளியும் இருக்கிறது. என் மனைவி இங்கு படித்தக் காலத்தில் வெள்ளை உடைத்தரித்த கன்னிஸ்திரிகளே ஆசிரியர்களாக இருந்தனர் என்று பதிவு செய்திருக்கிறார். 'Head gear' இன்னும் அணியப்படுகிறது. அணிபவர்கள்தாம் மாறிவிட்டனர்.
செந்தூல், துரிதமாய் மாற்றமடைந்து கொண்டிருக்கும் ஒரு நகர்ப்பகுதி!. வருங்காலங்களில் மார்க்கெட்டும், கள்ளுக் கடையும் காணாமல் போகப் போவது நிச்சயம். அதற்குள் இந்தப் பதிவு.
- செந்தூல் மார்க்கெட் படங்க்கள்
- 35 வருடங்களுக்கும் மேலாக அங்கே 'kacang Putih' எனும் Nuts மற்றும் கார வகை நொறுக்கு தீனிகளை விற்றுவரும் அன்பர். அந்த இடத்தின்/வாடிக்கையாளர்களின் Data-க்களின் சேகரிப்பு மையம். அவர் சொன்ன ஒரு செய்தி. 'ஒரு அன்பர் கடந்த 25 வருடங்களாக தனது இஞ்ஜினியர் மகனுக்கு வரன் தேடிக்கொண்டிருக்கிறார். நல்ல சிகப்பாக, உத்தியோகம் பார்க்கும் பெண்தான் வேண்டுமாம். மகனுக்கு இப்போது வயது 47.'
இவருக்குப் பின்னர் இந்த வியாபாரம் இல்லாமல் போகும் சாவுமணி அடிக்கப்பட்டுவிட்டது என்று வேதனைப் பொங்க சொல்கிறார்.
- மார்கெட்டை ஒட்டியிருக்கும் கோவில் ஒன்றைக் காவல் காக்கும் காவல் தெய்வங்கள்.
- மனைவி படித்த கான்வெண்ட் பள்ளியும், வகுப்பறைகளும்.
- சிவன் கோவிலும், புத்த விகாரும்
- மலாய்க்காரர்களின் கைகளில் கள்ளுக் கடைகள் இருந்த இடம்.
- Transformation-னின் வானுயர்ந்த அச்சுறுத்தல்





























Comments

Popular Posts