கோயம்புத்தூர் டைரி - நாள் 2

 


அன்று இரண்டாவது நாளாக எனது கோயம்புத்தூர் - மதுரைப் பிரயாணத்தைத் தள்ளிப் போட்டிருந்தேன். முதல் நாள், நண்பர் Suresh Venkatadri -யைச் சந்தித்ததால், அவர் இந்தச் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

மாலை 6.30-க்கு ரேஸ் கோர்ஸ் வேலன் காப்பியில் ஆரம்பமான இந்தச் சந்திப்பு பின்னர், ரேஸ் கோர்ஸ் பார்க்கில் தொடர்ந்தது. மெல்ல நடந்துகொண்டே அரசியல், இலக்கியம் என்று அந்த விணாடியில் தோன்றிய அனைத்து விஷயங்களைப் பற்றியும் பேசிக்கொண்டு சென்றோம். அவரிடம் நான் மிகவும் சிலாகித்து ரசித்த ஒரு குணம், அவரின் 'sense of humor'. அது அச்சந்திப்பிலும் தொடர்ந்தது. நானும் அவரைக் கொஞ்சம் இம்பிரஸ் செய்ய முயன்றேன். சிரித்தார்!..
எங்களுக்கிடையே ஒரு நல்ல கெமிஸ்ட்ரி இருபதாக எனக்குப் பட்டது. மாலை 6.30-க்கு ஆரம்பித்த உரையாடல் இரவு 9.15-வரை நீண்டதில் அது தெரிந்தது.
பார்க்கில் ஓர் அன்பர், ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குட்பட்ட சுவரில் குறள்களை எழுதிக்கொண்டிருந்தார். எங்களின் நடைத் தொடர்ந்தது.
அப்போது, பின்னாலிருந்து ஒரு பெண் குரல்.
"சார், நீங்கள் போகன் சங்கரா?."
நாங்கள் நின்றோம்.
"ஆமாம்.." என்று சொன்ன போகன் சங்கர், அவரைப் பற்றி கேட்டார். அம்மாது போகனின் எழுத்துகளைப் படித்திருப்பதாக முகம் மலரச் சொல்லிவிட்டு, தன்னைப் பற்றி அறிமுகம் செய்துக்கொண்டார்.
போகன், என்னைக் காட்டி மலேசியாவிலிருந்து வந்திருப்பதைத் தெரிவித்துவிட்டு, என்னிடம் சுய அறிமுகம் செய்துக்கொள்ளச் சொன்னார். நான், எனது எழுத்துலகப் பெயரச் சொன்னேன். அம்மாதுக்கு என்னைத் தெரிந்திருக்கவில்லை. அதனால் என்ன?. எல்லோரும் எல்லோரையும் படிப்பது சாத்தியமில்லையே!..
நான், அப்போது சுவரில் இன்னும் எழுதப்படாத அந்தக் குறளை நினைத்துக்கொண்டேன்.
'தோன்றின் புகலோடு தோன்றுக அஃதிலார்,
தோன்றலின் தோன்றாமை நன்று.' 🤭🤭

Comments

Popular Posts