வெட்கமில்லை… வெட்கமில்லை… 2

 



வெட்கமில்லை… வெட்கமில்லை…
சில வாரங்களாக மலேசியத் தமிழ்த் தொலைக்காட்சியில் ‘அச்சமில்லை.. அச்சமில்லை…’ என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சி ஒன்று அரங்கேறி வருகிறது. அதன் தொகுப்பாளினி நடிகை கௌதமி. நிகழ்ச்சியின் ஆதரவாளர் ‘Levista Coffee’ என்ற காப்பித் தூள் தயாரிப்பு நிறுவனம்.
இந்த நிகழ்ச்சி, மலேசியத் தொலைக்காட்சியில் இந்நாட்டு இந்தியர்களுக்காக இந்நாட்டு இந்தியர்கள் இரு குழுக்களாக பிரிந்து விவாதம் செய்ய ஒளியேரும் ஒரு நிகழ்ச்சி!. இதற்கு தமிழ் நாட்டிலிருந்து ஒரு நடிகையை இறக்குமதி செய்து நிகழ்ச்சியை நடத்துவது உள்ளூர் திறமைக்கு இழைத்த அப்பட்டமான அவமதிப்பு?. ஏன், உள்ளூர் திறைமைகளை ஊக்குவிப்பதால் வரும் கேடுதான் என்ன?. இந்த ஒரு காரணத்திற்காகவே இந்த நிகழ்ச்சியை நாம் புறக்கணிக்க வேண்டும்.
கௌதமிக்கு இந்த நாட்டினரிடம் இல்லாத சிறப்பு தகுதி என்ன? சினிமா முகமா? அத்தகைய முகமும், திறமையும் இந்த நாட்டில் இல்லையா என்ன? அவர்களுக்கு ஏற்கெனவே தென்னிந்தியா என்ற பெரிய வியாபார சந்தை இருக்கிறது. அதுவும் போதவில்லையென்றால் பி ஜே பி, அ இ அ தி மு க என்று வசதிக்குகந்த அரசியல் மேடைகள் வேறு இருக்கின்றன.
இந்நாட்டு திறமைக்கு இருப்பதெல்லாம் இந்த நாடுதான். எதற்கெடுத்தாலும் இவர்களுக்கு சினிமா முகம்தான் வேண்டுமென்றால் விற்பனையையும் சினிமாக்காரர்களுக்கு மத்தில், கோடம்பாக்கத்தில் வைத்துக்கொள்ள வேண்டியதுதானே? இங்கே எதற்கு?. மேலும், தொகுப்பாளினியை தமிழகத்திலிருந்து கொண்டு வந்தவர்கள், விவாதமேடை பங்கேற்பாளர்களையும் அங்கிருந்தே கொண்டு வந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்குமே!.
கடந்த வாரம், சுயபராமரிப்பு, நிறம், தோற்றம் பற்றி ஒளியேறிய விவாதத்தில் ஒரு சகோதரி பெண், நிறமாக இல்லாததால் வரன் பார்க்க வந்தோர் பெண்ணை நிராகரித்த சம்பவத்தைக் கவனப்படுத்தினார். அதைக் கேட்டதும் கௌதமி ஆச்சரியப்பட்டுப்போய், ‘இன்னும் அப்படியெல்லாம் நடக்கிறதா?.’ என்று கேட்டு அசடு வழிந்தார்.
இவர் எந்த லோகத்தில் இருக்கிறார்?. இவர் சார்ந்த சினிமாவிலேயே படத்திற்கு படம் அப்பட்டமாக அதுதானே நடக்கிறது. இவர் பார்த்ததில்லையா என்ன?. கருப்பாக ஒரு கதாநாயகன் இருப்பான். அவனுக்கு காதலி, மனைவி சிவப்பாகத்தான் இருப்பாள். சுமார் மூஞ்சி சுகுமாருக்குகூட ‘வெள்ளாவி வெச்சு வெளுத்த பொண்ணுதான்’ கேக்கும். ஆங்கிலத்தில் ‘dumb blond’ என்று ரசக்குறைவான பதம் ஒன்று உண்டு. அதை நினைவூட்டும் படியாக நமது ‘வெள்ளாவி நாயகிகளுக்கும்’ ரவுடி, வேலை வெட்டிக்குப் போகாத பொறம்போக்கு, குடிகாரர்களைத்தான் ரொம்பவும் பிடிக்கும். அவர்களெல்லாம் ‘அல்ஃபா மேல்’ ஆம்!.
அப்படியும் தனது கருப்பு நிறத் தாழ்வுணர்ச்சியால் நாயகன் ஒதுங்கி, ஒதுங்கி போனால் உடனே கதாநாயகி, ‘கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு..’ன்னு பீலா உட்டு அவனை மடக்குவாள். இந்த லட்சணத்தில்தான் கௌதமியின் துறைசார்ந்த புரிதல் இருக்கிறது. நிகழ்ச்சியின் ஆதரவாளர்களுக்கு நிகழ்ச்சியை வழிநடத்த தேவை முகமே தவிர மூளையில்லை போலும்!.
ஒரு காலத்தில் தமிழகத்திலிருந்து மலேசியா வரும் எல்லோருமே விதந்தோதி மெச்சியது இங்கு பேசப்பட்ட ஆங்கிலம் கலவாத அழகிய தமிழ்!. இப்போது அதற்கும் கேடு வந்து நேர்ந்ததுபோல் அந்தச் சுய பராமரிப்பு நிகழ்ச்சி அமைந்தது. அதில் பேசிய சிலர் ‘தங்கிலீசில்’ பேசி அதக்களப்படுத்தினர். ஒருகால், இறக்குமதியானவரின் சகவாசத்தால் கெட்டார்களோ என்னவோ!. ஆயினும், கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி தனது தாய்மொழி ஆற்றலையும், விஷய ஞானத்தையும் வெளிப்படுத்தி பெருமைக் கொள்ள வேண்டாமோ அவர்கள்?.
விவாத மேடைகளில் பங்கெடுப்பவர்களுக்கு இருக்க வேண்டிய சிந்தனைத் தெளிவும், அதை வெளிப்படுத்தத் தேவையான மொழியாற்றலும் இல்லாது போனல் விவாதம் வெறும் வெட்டிப் பேச்சாகிப் போகாதோ?.
ஓ, ஆமாம், நிகழ்ச்சியின் ஆதரவாளர்களுக்கு தேவை இடையிடையே பொருளுக்கு விளப்பர நேரம்!. அவ்வளவுதான்!. விவாத மேடை விவகாரமெல்லாம் யாருக்கு வேண்டும். பங்கேற்பாளர்கள் ‘Levista Coffee’ கேமிராவிற்குத் தெரியும்படி நிகழ்ச்சி முடியும்வரை தலையனையை மடியில் வைத்துக்கொண்டு போஸ் கொடுத்தால் போதுமானது.
இந்தக் காப்பி கொஞ்சக் காலமாகவே THR Raaga வானொலியில் ஒலிபரப்பாகும் கலக்கல் காலை நிகழ்ச்சியின் விளம்பரதாரரும் ஆகும். நமது கலக்கல் காலை பாய்ஸ்சான உதயாவும் மகேனும்கூட காலை 6-லிருந்து 10-வரை இந்தக் காப்பியின் அருமைப் பெருமைகளைக் கூவி, கூவி விளம்பரப் படுத்துவதை கேட்கலாம். அவர்கள் சொல்வதுபடி பார்த்தால், இது சர்வ வல்லமைப் படைத்த ஆற்றல் மிகு பானம். பரீட்சைக்குப் படிக்கும் மாணவரிலிருந்து உயர் பதிவியிலிருக்கும் ஆபீசர்வரை அனைவரும் அருந்தியபின் அங்கீகாரம் செய்து கூவத் துடிப்பது,
‘லெவிஸ்தா குடி… அதையே குடி..’
இனிமேல், மாணவர்கள் எல்லாம் பரீட்சைக்கு படிக்கக்கூட வேண்டாம் இந்த காப்பியைக் குடித்தாலே போதும்..’ என்று நமது கலக்கல் காலை பாய்ஸ் சொல்லாததுதான் பாக்கி!.
எல்லாம் சரி!. விளம்பரம் என்று வந்துவிட்டால் விவஸ்தை ஏது?. அவர்கள் சொல்வதுதான் வேதவாக்கு!.
கோடிகளில் வருமானம் தர விளம்பரதாரர் தயாராக இருந்தும் ‘தான் பொய் சொல்ல விரும்பவில்லை..’ என்று மறுப்பு சொன்ன சாய் பல்லவியின் சமூக அக்கறை, ‘இது ஒரு பொதுநல அறிவிப்பு..’ என்று அடிக்கடி அறிவிப்பு செய்பவர்களுக்கு வந்துவிடுமா என்ன?
போகட்டும். THR Ragaa என்ற தமிழ் ரேடியோவின் ‘கலக்கல் காலை’ மட்டுமில்லாமல் ‘அச்சமில்லை… அச்சமில்லை..’ என்ற ஆஸ்ட்ரோ தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியும் தமிழ் தெரிந்த உள்நாட்டு இந்தியர்களுக்காக, உள்நாட்டு தமிழர்களைக் கொண்டு, தமிழில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்!. இப்போதைக்கு அந்நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு கொடுத்து அவர்கள் விளம்பரப்படுத்தும் பொருள், ‘லெவிஸ்தா காப்பி’.
ஆக, ஒளிபரப்பு தமிழில்!. இலக்கு உள்நாட்டு இந்தியர்கள்!. ஆனால், விளம்பரப்படுத்தும் பொருளில் தமிழுக்கு இடமில்லை!. ஏன்? கூவி, கூவி விளம்பரம் செய்யும் வானொலி, தொலைக்காட்சி ஊழியர்கள் அதைக் கவனித்திருப்பார்களா?. அப்படியே கவனித்திருந்தாலும் அது அவர்களுக்குப் பிழைப்பு!. ‘தமிழுக்கும் அமிழ்தென்று பேர்.. அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்..’ பாடல் ஒலிபரப்பி தமது மொழிப் பற்றை வேண்டுமானால் காட்டிக்கொள்ளலாம். ஆர்ப்பட்டம் செய்து ‘பிழைப்பை’ கெடுத்துக்கொள்ள வேண்டுமா என்ன?.
பயனீட்டாளர் என்ற முறையில் நம் கைகளிலிருக்கும் ஆற்றல் மிகு அதிகாரம் ஒன்று அவர்களுக்குமானதுதான். அதையாவது செய்வார்களா? அவர்கள் மட்டுமா?. நாமும்தான்!.
ஒரு பொருளை வாங்கி, மொழியின் அப்பட்டமான புறக்கணிப்பிற்குத் துணைப் போவது அவமானமன்றோ!. அவனுக்கு அவனுடைய வியாபாரம் முக்கியமென்றால் நமக்கு நமது மொழி முக்கியமில்லையா?.
நீங்கள் அறிவீர்கள்!. நமது நாட்டில் அடகு கடைகளெல்லாம் சீனர்களாலேயே நடத்தப்படுகிறது. அவர்கள் செய்யும் எந்த வியாபரப் பலகையிலும் தமிழை எழுதாதவர்கள் அடகுக் கடை பலகையில் மட்டும் கட்டாயமாக தமிழில் எழுதுவார்கள். காரணம், அது ஒரு வியாபார யுக்தி!. அவர்களின் அதிகபட்ச வாடிக்கையளர்கள் நாமாகவே இருக்கிறோம். அந்தத் விவஸ்தை ஏன் இந்த ‘லிவிஸ்தா காப்பிக்கு’ இல்லாமல் போனது?.
இது உரைத்தால், ‘லிவிஸ்தா குடி.. அதையே குடி..’ என்றெல்லாம் கூவ மாட்டோம்.
'தமிழன் என்றொரு இனமுண்டு..
தனியே அவர்க்கொரு குணமுண்டு..'
- நாமக்கல் கவிஞர்.
இது ஒரு பொதுநல அறிவிப்பு!. 🤭🤭🤭

Comments

Popular Posts