1MDB Famous Najib Abdul Razak

 


பேசப் பொருள் பேசினேன் - 26

அது ஒரு 200.27 கோடி மலேசிய வெள்ளிகள் மதிப்புடைய பணமோசடி வழக்கு.
மோசடி செய்தவனின் பெயர் நஜிப் அப்துல் ரசாக். அந்த மோசடிக்காரன் நாட்டின் முன்னாள் பிரதமர் என்பது, நாட்டிற்கு அவனால் நேர்ந்த கூடுதல் அவமானம். அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பணமோசடி வழக்குகளில் அவன் குற்றம் சாட்டப்பட்டிருந்தான்.
அந்தப் பணமோசடியைப் பற்றி கூறுகையில் அது சவுதி அரேபிய இளவரசர்களால் தனது தனிப்பட்ட வங்கி கணக்கில், தான் மீண்டும் பதவிக்கு வர நன்கொடையாக வரவு வைக்கப்பட்ட நிதி என்று கண்ணைச் சிமிட்டாமல் ‘lying through his teeth’.
அவன் சொன்ன கூற்றை உறுதி செய்வதற்காகவும், சம்பந்தப்பட்ட இளவரசர்களின் வாக்குமூலங்களை ஒலிப்பதிவு செய்வதற்காகவும் மலேசிய ஊழல் எதிர்ப்பு வாரியத்திலிருந்து, சில உயர்நிலை அதிகாரிகள் சவுதி அரேபியாவிற்கு பயணமாகின்றனர்.
அவர்கள் சாதாரண அரசு ஊழியர்கள் கிடையாது. ஊழல் எதிர்ப்பு வாரியத்தின் முகங்கள். அவர்கள் நாட்டிற்காக உச்சபட்ச நாணயத்துடன் ஒரு பணியைச் செய்து முடிக்க வேண்டிய தார்மீகக் கடமையில் இருப்பவர்கள். மாதக் கடைசியில் பெறும் ஊதியத்திற்காக அவர்கள் போட வேண்டிய உழைப்பு அது.
ஆனால், சமீபத்தில் நீதிமன்றத்தில் அந்த அதிகாரிகள் அந்தப் பயணத்தைக் குறித்துச் சாட்சி சொல்லும் போது, பயண தொடக்கத்திலிருந்து முடிவு வரை முன்கூட்டியே தயார் செய்யப்பட்ட ‘கதையை’ சவுதிக்குச் சென்று முழுமை செய்துவிட்டு வந்ததாக ஒப்புகின்றனர்.
அரசு தரப்பு வழக்குறைஞரின் கேள்வி : அப்படியாயின் நீங்கள் சவுதி சென்று எந்த நன்கொடையாளரையும் சந்தித்து வாக்குமூலம் பெறவில்லை. ஆக, இங்கேயே தயார் செய்யப்பட்ட கதையுடன் சவுதி போய், தங்கி இருந்த நாட்களுக்கு நன்றாக சாப்பிட்டுவிட்டு மீண்டும் மலேசியா வந்துவிட்டீர்கள்.
அதிகாரியின் பதில்: ஆமாம், சரிதான்.
அரசு தரப்பு வழக்குறைஞர் : அப்படியாயின், நீங்கள் தயாரித்து வைத்திருந்த கதையுடன் சவுதி போய் சேருவதற்கு முன்பே உங்கள் கதைக்கு இடையே செருகுவதற்கு வசதியாக (cut & paste) நான்கரைப் பக்க அறிக்கையொன்று முன்கூட்டியே தயாரிக்கப்பட்டு உங்களுக்காக ரெடியாக இருந்தது என்கிறீர்களா?
அதிகாரியின் பதில்: ஆமாம்.
இது சாதாரணமாக கடந்து செல்லத்தக்க ஒரு வாக்குமூலம் அல்ல. ஊழல் எதிர்ப்பு வாரிய உயர் அதிகாரிகள் இருவரின் திறமையின்மையை, பொறுப்பின்மையைக் காட்டும் இந்த அலட்சியப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.
To add insult to injury, அதே அதிகாரி, Tan Kim Loong என்று அழைக்கப்பட்டவனின் (இந்தப் பணமோசடியின் சூத்திரதாரியான Jho Low-வின் கூட்டாளி) வாக்குமூலத்தை ரியாட்டில் பதிவு செய்யும்போது இதே ‘cut & paste’ முறையையே பயன்படுத்தியதாக ஒப்புக்கொண்டுள்ளான்.
ஆக, சாட்சியங்களிடமிருந்து இந்த அதிகாரிகள் இப்படி ‘cut & paste’ செய்த ஒப்புதல் வாக்குமூலங்களையே நீதிமன்றங்களில் ஒப்படைத்திருக்கின்றனர் என்பது அதிர்ச்சிக்குரிய விஷயமாகும்.
இதே ஒழுங்கீனம் தனியார்த்துறையில் நடந்திருந்தால் அவர்கள் இருவரும் உடனடியாக் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பார்கள். ஆனால், அரசாங்கத்துறையில் என்ன நடக்கும்? விபரம் கீழே..
இந்த பணமோசடியை விசாரிக்க சவுதி சென்ற கோமாளிகளில் ஒருவன் தற்போதைய ஊழல் எதிர்ப்பு வாரியத்தின் தலைவன். இன்னொருவன், 2016 -லிருந்து 2018 -வரை உழல் எதிர்ப்பு வாரியத்தின் முன்னாள் தலைவனாக இருந்தவன். இப்படிப்பட்டவர்கள்தாம் இந்த வாரியத்தை வழிநடத்துகிறார்கள் என்றால், ஒருவனுக்கானத் தண்டனையை அவனுக்கிருக்கும் அரசியல் தொடர்பு, அவன் சார்ந்த இனம், அவனுக்குத் தெரிந்த உயர்மட்ட அரசியவாதிகளே தீர்மானிக்கக்கூடும்.
மேற்கண்ட அதிகாரிகளில் ஒருவனுக்கு *Tan Sri Dato Sri** விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. மற்றொருவனுக்கு *Tan Sri Datuk*** விருதுகள்.
ஆமாம், அவர்கள் செய்த தில்லு முல்லும் இங்கே நாட்டிற்கு ஆற்றிய சேவையின் கீழ்தான் வருகிறது.
ஊழலும் உயர்வதற்கான வழிதான், அதில் அரசியலைக் கலந்து செய்தால்!.
* Tan Sri – ஒருவன் ஆற்றிய சேவையை கௌரவித்து மத்திய அரசு வழங்கும் உயரிய விருது
** Dato Sri - ஒருவன் ஆற்றிய சேவையை கௌரவித்து மாநில அரசு வழங்கும் உயரிய விருது
* * * Datuk - ஒருவன் ஆற்றிய சேவையை கௌரவித்து மாநில அரசு வழங்கும் உயரிய விருது

Comments

Popular Posts