ஊர் வம்பு - 1

 


Memory Lane – 49

ஊர் வம்பு - 1
சில வாரங்களாகவே மாலையில் கனத்த மழைப் பெய்துக்கொண்டிருக்கிறது. உடற் பயிற்சிக்குப் போவது சாத்தியமில்லாமல் போனது.
காலையில் நல்ல வெயில்.
‘தூரத்து நெருப்பிலிருந்து சாரமாய் வந்த ஒளி’ இதமாய் இருந்தது. வைட்டமீன் D பற்றாக்குறைத் தீர நின்றேன்.
பேரப்பிள்ளைகளுக்கு ஒரு வார தீபாவளி விடுமுறை கிடைத்ததால் இன்று, காலையில் உடற் பயிற்சியை வைத்துக்கொண்டேன். மாலையைக் காட்டிலும் காலையில் பலர் பயிற்சியில் இருப்பது தெரிந்தது.
நடைப் பயிற்சியின்போது ஒரு சீன அன்பரைச் சந்தித்தேன். ரொம்ப Fit-ஆக இருந்தார். அறிமுகம் செய்துக்கொண்டதில் அவரின் பெயர் Mr. Wong என்றார். சீனர்களில் பெண்களுக்கும் ஒரே ‘Surname’ இருப்பதால் அவர்கள் தம்முடைய பெயர்களுக்கு முன் ‘Mister’ அல்லது ‘Miss’ சேர்த்துக்கொள்வது வழக்கம்.
எனது வயதைக் கேட்டவர், தனது வயதும் அதுவே என்றார். எந்த வருடம் பிறந்தீர்கள் என்று கேட்டதற்கு 1945 என்றார். அப்படியாயின் வயது 78 அல்லவா ஆகியிருக்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால், கேட்கவில்லை. மொழியில் ஒரு தடுமாற்றம் தெரிந்தது. ஆங்கிலம் அவ்வளவாக தெரியாதோ என்னவோ? அதோடு, சிலர் முதல் அறிமுகத்தில் உண்மையை சொல்ல விரும்பாததைப் பார்த்திருக்கிறேன். அவர் அத்தகைய பேர்வழியோ என்னவோ.
இங்கே. ஒர் இடைச் செருகல்.
அன்று, சைபர் ஜயாவில் எனது ஃபேவரிட் கடையில் பாசியறிக்கொண்டிருந்தேன். என் எதிரே கடை முதலாளி தன் மானேஜர் மற்றும் டிரைவருடன் உட்கார்ந்திருந்தார். அவர் ஒரு ‘பாய்’ என்பதும் கடையின் முதலாளி என்பதும் நான் ஏற்கெனவே அறிந்திருந்த தகவல்தான்.
எனது மேசையிலிருந்த புத்தகத்தைப் பார்த்து என்ன புத்தகம் என்றார். நான், முகப்பைக் காட்டினேன். ‘ஜெயகாந்தன் முன்னுரைகள்’!.
“ஜெயகாந்தன் யார் தெரியுமா?” என்று மானேஜரைக் கேட்டார். மானேஜர் அப்படி முழித்து நான் அன்றுதான் பார்த்தேன்.
பாய் சொன்னார்.
“மெட்ராஸ்ல பிரியா தெரியுமில்ல!. அவளோட தாத்தா..”
பாயே தொடர்ந்து மானேஜரிடம் அளந்தார்.
“ஜெகாந்தன், பிராமின்!” என்றார்.
அக்ரஹாரத்தைப் பற்றி கதைகள் எழுதினால் இந்த வசதி இருப்பதை அன்றுதான் தெரிந்துக் கொண்டேன். பிறகு ஏன்தான் பிரம்மாவின் தலையிலிருந்து பிறக்க பிரயத்தனப்பட வேண்டுமோ தெரியவில்லை.
நான் எழுந்து கை கழுவப் போனேன். பாய் என் காலணிகளைப் பார்த்து மானேஜரிடம் ஏதோ சொன்னார். அவரும் ஒரு பார்வைப் பார்த்துக்கொண்டார்.
“எக்ஸசைஸ் போயிட்டு வர்றீங்களா? என்ன வேல செய்ரீங்க?” என்று பாய்தான் கேட்டார்.
“இல்ல!. ரிடையர்ட் ஆயிட்டன். ஆனா, உன்னும் பசிக்குது!. அதான்..”என்றேன். அவர் சிரித்தார்.
“உங்க பேரு?” என்றேன். அவர், “ராஜா..” என்றார். நான் நம்பவில்லை.
பின்னர், கடையில் எனக்கிருந்த ஒற்றன் மூலம் நான் தெரிந்துகொண்ட அவரின் பெயர்,
“அப்துல் சலீம்!.”
‘எண்ணத்தில் நலம் இருந்தால் இன்பமே எல்லோர்க்கும்..
அன்புள்ள தோழர்களே!.. அஸ்ஸலாமு அலைக்கும்!..
ஓன்றே சொல்வான் நன்றே செய்வான்
அவனே அப்துல் ரஹ்மானாம்..’
ஓ.. அது அப்துல் ரஹ்மானில்ல!..
சாரி, பாய்!..
- மாலையில் பெய்யும் மழை
- முற்றத்தில் பெய்யும் மழை
- மிஸ்டர் வொங்
- பாய் கேட்ட புத்தகம்
- பாயைக் கவர்ந்த காலணிகள்
- ரிப்போர்ட் கார்ட்
-After a hard day's exercise.









Comments

Popular Posts