செந்தூல் – பகுதி 1

 



Memory Lane – 44
செந்தூல் – பகுதி 1
செந்தூல், 1896-ல் ரயில்வே ‘Repair & Maintainance’ கிடங்கு ஒன்று கட்டப்பட்ட இடம். உலகிலுள்ள மிகப் பெரிய மற்றும் மிக நேர்த்தியான ரயில்வே பொறியியல் ‘Workshops’-களில் ஒன்றாக அது அப்போது விளங்கியது.
அந்த வோர்க் ஷாப்பில் உடல் உழைப்பு வேலை செய்தவர்கள் இந்திய வம்சாவளியினராகவும் வெள்ளைக்காரர்களுக்கு உதவியாக அலுவலக வேலையில் இருந்தவர்கள் சிலோன் தமிழர்களாகவும் இருந்தனர்.
ஆக, காலணித்துவ கோலாலம்பூரில் இந்தியர்கள் அதிகமாக வாழ்ந்த இடங்களில் ஒன்றாக செந்தூல் விளங்கியது. இந்த ரயில்வே கிடங்குகளில் கிடைத்த வேலை வாய்ப்புகள் அதிகமான இந்தியர்கள் இங்கே குடியேற காரணமானது. ரயில் இஞ்ஜின்கள், பெட்டிகள் பழுதுப் பார்க்கப்பட்டதோடு, ரயில் தண்டவாளங்களும் (Slippers) அங்கே செய்யப்பட்டன.
இந்தக் கிடங்கு தனது உச்சத்தில் இருந்தபோது, 5000 பேர்கள் வரை இங்கு வேலை செய்ததாக வரலாறு.
இரண்டாவது உலகப் போரின்போது, கூட்டணி படையினரால் (Allied Force) கடைசியாகவும், மிகவும் தீவிரமாகவும் தாக்கப்பட்ட பட்டணங்களில் செந்தூலும் ஒன்றாக இருந்திருக்கிறது. எத்தகைய முன்னறிவிப்பும் இன்றி நடந்த இந்தத் திடீர்த் தாக்குதலுக்கு காரணம், ஜப்பானியர்கள் ‘Merai Tedsudo’ என்று பெயர் மாற்றம் செய்திருந்த, ‘Federated Malay States Railway’ யின் இரண்டு முக்கிய ரயில்வே வளாகங்கள் இங்கு இருந்ததுதான்.
இந்தத் தாக்குதல் 19-ம் திகதி பிப்ரவரி மாதம் 1945-ல் நடக்கிறது. 1945-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ம் திகதி ஜப்பான் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு சரணாகதியடைகிறது.
110 வருட வரலாற்றைக் கொண்ட, முழுக்க முழுக்க நீராவி மற்றும் டீசலால் மட்டுமே இயங்கக்கூடிய இந்த ரயில் எஞ்ஜிங்கள் மின்சார ரயில்களின் வருகையால் தனது பொலிவை இழந்து, முற்றாக சேவையிலிருந்து நிறுத்தப்பட்டுவிட்டன.
‘YTL’ என்ற ஒரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமாகிவிட்ட 200,000 சதுர அடிகளைக் கொண்ட இந்த ‘Railway Depot’ இப்போது, ‘Meat Packing District of New York’ மற்றும் ‘Xintiandi of Shangghai’ எனும் ‘Lifestyle Destination’ பாணி கேளிக்கை வளாகங்களாக பொலிவேற்றம் கண்டுவிட்டன.
ஆயினும், மொத்த செந்தூல் இடமே அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. அந்த இடத்தில் காலணித்துவ காலத்தைச் சேர்ந்த சில இடங்கள் எந்த வித மாற்றங்களுக்கும் உட்படாமல் முரண்டு பிடித்துக்கொண்டு இன்னும் அப்படியே இருக்கின்றன.
ஆயினும், ‘காலத்தால் காணாமல் போகப் போகின்ற’ இவற்றின் நாட்கள் கவனமாய் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன….
இந்தப் பதிவு, ‘காணாமல் போகப் போகின்ற’ வரலாற்றை ஆவணப்படுத்தும் ஒரு சிறு முயற்சி!.
- மலாயன் ரயில்வேயின் GM
- நீராவி எஞ்ஜின்
- டீசல் எஞ்ஜின்
- பராமரிப்பில் பெட்டிகள்
-அசுர வளர்ச்சியில் செந்தூல்
- கேளிக்கை வளாகம்
- காலத்தால் காணாமல் போகும் அபாயத்தில்









Comments

Popular Posts